114. அருள் வீழ்ச்சி

1771

இறைவனை அடைகின்ற அறிவு வழிபாட்டின் வாயில்களாக விளங்கும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றின் பயனாய்ப் பெருமானிடத்தில் உறவும் உணர்வும் ஏற்பட, அதன் விளைவாய் விளைவது இறைவனின் திருவருள் வீழ்ச்சியாகும். இத்திருவருள் வீழ்ச்சியே உயிர் அறிவினைச் சிவ அறிவு மயமாக மாற்றுவிக்கும் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமானின் அருள் வீழ்ச்சி பதிதலைச் சத்தி நிபாதம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். சத்தி என்றால் திருவருள். நிபாதம் என்றால் வீழ்ச்சி. உயிர்களுக்கு அருள் வீழ்ச்சி பதிதலைத் திருமூலரும் குறிப்பிடுகின்றார். இறைவனது திருவருளானது உயிர்கள் பிறவிக்கு வந்து விட்ட நிலையில் உயிர்களைப் பற்றியுள்ள பற்றுக்களுக்குத் துணை நின்று, அப்பற்றுக்களின் வழியாக உயிர்களை அன்றாட வாழ்க்கையின் இன்ப துன்பங்களில் ஆழ்த்துகின்றது. இவ்வாறு உயிருக்கு உதவும் பெருமானின் திருவருளுக்கு இந்நிலையில் மறைப்பாற்றல் என்பது பெயர். இது பெருமானின் திருவருளுக்குரிய செயற்கையான தன்மை என்றும் இதுவும் உயிரைச் செவ்வியடையச் செய்வதற்குப் பெருமான் இயற்றும் உதவியே என்றும் சைவமெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

உயிர்கள் இயற்றும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் பயிற்சியால் இறைவனிடத்தில் உறவும் உணர்வும் ஏற்பட உயிரின் அறிவு தெளிவுற்றுப் பெருமானின் திருவருளை உணர நேரிடும் போது உயிரைப் பற்றியுள்ள பற்றுக்கள் உயிரை விட்டு நீங்குவதற்குத் தயாராகி விட்ட நிலையில் இதுவரை மறைப்பாற்றலாய் நின்ற பெருமானின் திருவருள் அதனின் உண்மையான இயல்புடன் வனப்பாற்றலாய் வெளிப்பட்டு உதவும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இவ்வாறான பெருமானின் வனப்பாற்றல் அல்லது இயற்கைத் திருவருள் உயிர்களின் மீது பதிதலையே அருள்வீழ்ச்சி என்கின்றார் திருமூலர். மணிவாசக அடிகளுக்கு இறைவனே ஆசானாக வெளிப்பட்டு அருளியது போல் உயிர்களுக்கு இறைவனே சிவஆசான் வடிவில் வெளிப்பட்டு இவ்வருள் வீழ்ச்சியினைப் பதிப்பிப்பான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.


உயிர்கள் இயற்றிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் பயிற்சியால் இறைவனிடத்தில் உறவும் உணர்வும் ஏற்பட உயிரின் அறிவு தெளிவுற்று இவை இன்பம் அளிக்கக் கூடிய செயல்கள் இவை துன்பம் அளிக்கக் கூடிய செயல்கள் என்ற வேறுபாடு இன்றி (இருவினை ஒப்பு) எல்லாச் செயல்களும் சிவன் அருளால் செய்யப்படும் செயல்கள் என்று ஒரு தன்மையாகவே ஒத்து நிற்கும் காலத்தில் உயிர்களைப் பற்றியுள்ள பற்றுக்கள் அல்லது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள், உயிர்களை விட்டு நீங்குவதற்குத் தளர்ச்சியுற்று இருக்கின்ற நிலை ஏற்படும் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்நிலையினை மலபரிபாகம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். உயிர்களைப் பற்றியுள்ள மும்மலங்கள் நீங்குவதற்குத் தளர்ச்சியுற்று நிற்கும் நிலையினை நான்காக வேறுபடுத்திக் கூறுவர். இவ்வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டே இறைவனின் அருள்வீழ்ச்சி உயிர்களின் மீது விழும் வேகம் அல்லது விரைவும் குறிப்பிடப்படுகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அருள் வீழ்ச்சி விழும் நிலையினை மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் என்று வடமொழியில் குறிப்பிடுவர்.

இறைவனின் அருள்வீழ்ச்சி வரப்பெற்றவர்கள் சிவபெருமானை நுகரும் இன்ப உணர்வில் வேட்கை உடையவர்களாக இருப்பர் என்கின்றார் திருமூலர். அருள்வீழ்ச்சி வரப்பெற்றவர்கள், உண்மை அறிவு இன்பப் பொருளாய் உள்ள சிவனை அறிந்து அவனை உணரும் வழியைக் கண்டு விட்டமையால், சிவன் ஒருவனே அவர்களுக்கு இன்பப் பொருளாய்த் தோன்றி நிற்பான் என்கின்றார். நல்ல நீரும் நல்ல புல்லும் நல்ல நிழலும் உள்ள இடம் யாது என்பதனைத் தேடித் திரிந்த பசுக்கள், அவ்வாறே உள்ள நல்ல மேய்ச்சல் நிலம் கிடைத்து விட்டால் எல்லையில்லாத இன்பம் அடைந்து, அவ்விடத்தை விட்டு அகலாது நிற்பது போல, அருள்வீழ்ச்சி கிடைக்கப் பெற்றவர்கள், பெருமானை உணர்ந்து நிற்கும் இன்பத்தையே மீண்டும் மீண்டும் விரும்பி நிற்பர் என்பதனைத், “தீம்புலன் ஆன திசையது சிந்திக்கில், ஆம் புலனாய் அறிவார்க்கு அமுதாய்நிற்கும் தேம் புலனான தெளிவு அறிவார்கட்குக், கோம்புலன் நாடிய கொல்லையும் ஆமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

பெருமானின் அருள்வீழ்ச்சி வரப்பெற்றவர்களின் நிலையானது, இருள் சூழ்திருந்த அறையில் உள்ள பொருளை ஒளிமிக்க விளக்கு ஒன்று உள்ளே சென்றவுடன் தெளிவுபட விளக்கிக் காட்டுவது போல, அறியாமை எனும் இருள் மலம் சூழ்ந்து இருந்ததினால் மயக்கம் பொருந்தித் தெளிவு பெறாமல் இருந்த உள்ளத்திலே அப்பனும் அம்மையுமாய் இறைவனும் அவனது திருவருளும் புகுந்து நிற்க, உள்ளம் மருள் நீங்கி உண்மையை உணர்ந்து உலகப்பற்றை விட்டு நீங்கி, இறைவனைப் பற்றாகப் பற்றிக் கொண்டிருக்கும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

பெருமானின் அருள்வீழ்ச்சியானது உயிரைத் தன்வயமாக்கிப் பின்பு உயிரின் மயக்க உணர்வை முற்றிலும் நீக்கி, மனம், வாக்கு, காயத்தினால் செயல் செய்ய வேண்டும் என்ற உயிரின் விருப்பினைப் போக்கி, செயல்கள் செய்வதனால் ஏற்படுகின்ற இன்ப துன்பத் தடுமாற்றங்களையும் போக்கி, உயிருக்கு அமைதியை உணர்த்தி, சிவனை உணரமாட்டாது இருந்த அந்நிலையைப் மாற்றிப் பெருமானின் அருளும் திறங்கள் பலவற்றையும் உணரச் செய்து, அவனது அருளில் விளங்கி நிற்கும் உணர்வைக் கொடுப்பான் என்பதனை, “மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி, வெருட்டி வினைஅறுத்து இன்பம் விளைத்துக், குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி, அருள் திகழ் ஞானம் அது புரிந்தாளே” என்கின்றார் திருமூலர்.

அருள்வீழ்ச்சி வரப் பெற்ற உயிரானது அத்திருவருள் வீழ்ச்சியில் மூழ்கிச் சிவனது திருவடியை நோக்கிச் செல்வதற்கு வேட்கை உற்று நிற்கும் என்கின்றார் திருமூலர். இதனால் அருள்வீழ்ச்சி வரப்பெற்றவருக்கு மேலும் பிறவி உண்டாகாமல், பிறவி அறுதல் வாய்க்கப் பெறும் என்றும் குறிப்பிடுகின்றார். சிவனை அடையும் வேட்கை உண்டாகப் பெற்றவரே சிவனைச் சிவப்பன், கறுப்பன், வெளுப்பன் என்றோ பச்சையன் என்றோ அவன் இன்ன தன்மையன் என்றோ நன்கு உணர இயலும் என்கின்றார் திருமூலர். பெருமானின் அருள் தன்மைகளையும் அவன் உயிர்களுக்குச் செய்யும் உதவிகளையும் திருமுறைகள் வழியும் அடியார்களின் வரலாறுகளின் வழியும் கேட்டும் கற்றும் அறிய அறிய, அவ்வறிவானது அவனிடத்தில் காதலை ஏற்படுத்தும் எனவும் அக்காதலே இறை அருள்வீழ்ச்சிக்குத் துணை நின்று சிவனை அடைதற்கு இட்டுச் செல்லும் என்கின்றார் திருமூலர். இதனைச், “செய்யன் கரியன் வெளியன் பசியன்என்று, எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை” என்று குறிப்பிடுகின்றார்.

உயிர்களுக்குச் செய்யும் தொண்டும் இறைத் தொண்டும் திருமுறைகள் ஓதுதலும் மெய்கண்ட நூல்களை கற்றலும் அடியார் வரலாறுகளைக் கற்றலும் உண்மைச் சைவப் புராணங்கள் போன்றவற்றைப் படிப்பதும் படித்தவர்களிடமிருந்து கேட்பதும் என்று மட்டும் அல்லாமல் இறைவனைச் செயல் முறைகளில் வழிபட்டு அன்பு பாராட்டுகின்ற வழியாக இருக்கின்ற பூசனை முறைகளைச் சிவ ஆகம முறை வழுவாமலும் அவற்றின் பொருளை அறிந்து அப்பூசனை முறைகளைச் செய்வதனால் அறிவும் சிவனின்பால் அன்பும் ஏற்படுமானால் அதுவும் பற்றுக்களாகிய மலம் நீங்குவதற்கும் இறைவனின் அருள்வீழ்ச்சி வரப்பெறுவதற்கும் துணை நிற்கும் என்கின்றார் திருமூலர். சிவச் செறிவு படிநிலைகளின் வழிச் சிவனின் இயல்புகளைக் கற்று அவன்பால் வேட்கை கொண்டு, உயிர்ப்புக் காற்றைத் தன் வயப்படுத்தி, மனதை அடக்கி, அதில் இடைவிடாது சிவனை அன்போடு வைத்து எண்ணுகின்றவர்களுக்கு அவர்களின் மலமாகிய பற்று நீங்குவதற்கான நிலை ஏற்படும். இவர்களின் நிலையை உணர்ந்து, இவர்கள்பால் தனது அருள் வீழ்ச்சியை விழச் செய்து, இவர்களின் மனதில் நிலையாக நின்று இவர்களின் அறியாமை இருளினைச் சிவ பெருமான் போக்குவான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

உயிர்த் தொண்டுகளாலும் இறைத் தொண்டுகளாலும் சிவ பூசனைகளாலும் சிவச் செறிவுகளாலும் விளைந்த இறைவனின் அருள் வீழ்ச்சியானது, இறைவனைச் சிவ அறிவால் கண்டு மகிழ்ந்து கொண்டு இருக்கின்றவர்களுக்கு அருள்வீழ்ச்சி மேலும் முதிர்ந்து இறைவனின் திருவடியைக் கூட்டுவிக்கும் என்கின்றார். அருள்வீழ்ச்சியின் துணைக்கொண்டு அறிவால் இறைவனை வழிபட்டு அவ்வின்பத்தில் அழுந்தி இருக்கின்றவருக்குச் சிவனை மறக்கும் மறதியாகிய அறியாமையை இறைவன் நீக்கி அருளுவான் என்கின்றார் திருமூலர். உடம்பில் பொருந்தியுள்ள கருவி கரணங்களால் ஏற்படுகின்ற விருப்பு வெறுப்புக்களில் ஈடுபாடு இல்லாத அருள் வீழ்ச்சி வரப் பெற்றவர், தன்னை யார் அணுகினாலும் அவர்களுக்கு முதிர்ந்த அறிவை மட்டுமே உணர்த்துவர்; அன்பே வடிவாய சிவமாம் தன்மைப் பெற்று விளங்குவர் என்கின்றார் திருமூலர். இன்பமே எந்நாளும் துன்பமில்லை!