19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்

16744

சிந்தனையின் முடிவான முடிவே, “சித்தம்+அந்தம்” எனும் சித்தாந்தம். சிவத்தைப் பற்றிய சிந்தனையின் முடிவான முடிவே சித்தாந்த சைவம் எனப்படுகின்றது. இச்சித்தாந்த சைவம் சிவ ஆகமங்களையும் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. சிவ ஆகமங்களும் திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும் திருமூலர் போன்ற  அடியார்களுக்கு இறைவனே ஆசானாக வந்தும் தடுத்து ஆட்கொண்டும் அருளியவை ஆகும். சிவ ஆகமங்களும் திருமுறைகளும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள்தாம் சீர்மிகு செந்தமிழர் பின்பற்ற வேண்டிய ஒருநெறி, திருநெறி, பெருநெறி, அருநெறி என்பதனைத் திருஞானசம்பந்தர், “தோடுடைய செவியன்” எனும் திருப்பதிகத்தில் குறிப்பிடுவார்.

ஒன்பது சிவாகமங்களை ஒன்பது தந்திரங்களாக அன்னைத் தமிழில் எடுத்து இயம்பும் திருமந்திரம், “பதிபலவாய் அது பண்டு இவ்வுலகம், விதிபலசெய்து ஒன்றும் மெய்மை உணரார், துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும், மதியிலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே” என்று குறிப்பிடுகின்றது. உண்மை நெறியினை உணராதவர்கள், தெளிவு உணர்வு இல்லாதவர்கள் கடவுளைப் பலவாக எண்ணி வழிபடுகிறார்கள். இது உலக மக்களின் நீண்ட கால அறியாமையாக இருந்து வருகிறது. முழு முதலான ஒரு கடவுளை வழிபடுவதனை விடுத்துப் பல நெறிகளை வகுத்துப் பலவகையான வழிபாடுகளைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் சமய அறிவும் மெய்யுணர்வும் இல்லாமையாம். பரம்பொருளை வழிபடுவதனை விட்டு ஏனைய உயிரினங்களையும் தேவர்களையும் அறியாமையால் போற்றி வழிபட்டு, இதனால் பிறப்பு இறப்பு நீங்காது துன்புற்று உள்ளம் வாடுகின்றனர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சமய அறிவும் ஆராய்ச்சியும் பெருமளவும் சிறந்தோங்காத சூழலில் பண்டைத்தமிழர் தங்கள் அன்றாட வாழ்விற்குத் துணை நின்ற இயற்கைக் கூறுகளைச் சிறு தெய்வம் என்றும் மரபு வழி வந்த தொழிலைக் குல தெய்வம் என்றும் தாங்கள் வாழ்ந்த நிலத்தைக் காத்து மறைந்த தலைவர்களையும் வீரர்களையும் காவல் தெய்வங்கள் என்றும் நடுகல் தெய்வங்கள் என்றும் எல்லைத் தெய்வங்கள் என்றும் மரியாதையாலும் பயத்தாலும் வணங்கினர். பலியிட்டும் பொங்கலிட்டும் திருவிழாக்களை நடத்தி அச்சிறுதெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்தினர். ஆரியர் வருகை பஞ்சபூதங்களையும் தாவரங்களையும் மிருகங்களையும் பறவைகளையும் தேவர்களையும் வழிபடும் வழக்கத்தினையும் கொலை வேள்வியினையும் தமிழரிடையே புகுத்தியது. இதனால் பல தெய்வக் கொள்கை தமிழரிடையே பரவியது. எனினும் பண்டைக் காலந்தொட்டே அறிவுசால் நம் முன்னோர் திருமூலர் குறிப்பிடும் ஒரு கடவுள் கொள்கையினைத் தவறாது பின்பற்றி வந்துள்ளனர் என்பதனை இலக்கண நூல்களும் சங்க கால நூல்களும் நீதி நூல்களும் திருமுறைகளும் பிரபந்தங்களும் மெய்கண்ட நூல்களும் பறைசாற்றுகின்றன. சமய அறிவும் ஆராய்ச்சியும் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் இன்னும் அறியா காலத்தில் செய்ததைப் பின்பற்றி பலரும் தவறு செய்வது அறியாமை என்பதே திருமூலரின் காலத்தை வென்ற குறிப்பாகும்.

“சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்” என்பது திருநாவுக்கரசு அடிகளின் வாக்கு. “புற்றில் வாழ் அரவும் அஞ்சேன், பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன், கற்றைவார் சடை எம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி, மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டென, நினைத்து எம் பெம்மாற், கற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே” என்று திருவாசக அச்சப்பதிகத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். புற்றிலே உள்ள கொடிய பாம்பிற்கு அஞ்சமாட்டேன். பொய்யர்களது மெய்போன்ற சொற்களுக்கும் அஞ்சமாட்டேன். திரட்சியான நீண்ட சடையை உடைய, முழுமுதலான நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானைப் பற்றி அறிந்தும் வேறொரு தெய்வத்தை இருப்பதாக எண்ணி, எம் பெருமானைப் போற்றாதாரைக் கண்டால், ஐயோ! நான் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவுடையது அன்று, என்று மணிவாசகர் திருமூலர் குறிப்பிடும் செய்தியினையே குறிப்பிடுகின்றார்.

பெருநெறியாகிய சித்தாந்த சைவ உண்மை நெறியினைப் பின்பற்றாது அவரவர் விரும்பும் நெறியினைப் பின்பற்றியும் அயல் நெறிகளைச் சைவத்திற்குள்ளே நுழைத்தும் புதுப்புது வழிபாடுகளை வருமானத்திற்காக ஏற்படுத்தியும் தமிழர்தம் இறைக்கொள்கையைச் சிலர் பாழ்படுத்துகின்றனர். இதனால் ஏற்றமிகு சித்தாந்த சைவத்தின் தோற்றமும் அதன் மாண்பும் அதன் உள்ளிருக்கும் சீரிய உண்மைகளும் வெளிப்படாது இறுதியில் தமிழர்தம் இறைக்கொள்கை புறக்கணிக்கப்பட்டுத் தமிழர்தம் அன்றாட வாழ்வில் இடம்பெறாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

அவரவர் விரும்பும் சிறு தெய்வங்களை முழுமுதல் கடவுள் போன்று எண்ணி வழிபடுவதனால் தான் இன்று வீட்டிற்கு ஒரு கோயில் என்றும் தெருவிற்கு ஒரு கோயில் என்றும் கோயில் அமைக்கும் ஆகம முறைக்கு மாறான கோயில் அமைப்புக்களும் மலிந்துவிட்டன. மேலும் தமிழர்தம் கோயில்களில் சீனர் வழிபாட்டுத் தேவதைகளும் கடல் நாகங்களும் பேய்களின் வடிவங்களும் இடம்பெறுவது இயல்பாகி வருகின்றது. சிறு தெய்வங்களின் வழிபாடு பெருகியமையினால்தான் வாரத்திற்கு ஒருமுறை நூற்றுக்கணக்கில் ஆட்டுக்கிடாய்களைப் பலியிடுவதும் அவற்றின் குறுதியில் பத்தர்களைக் குளிப்பாட்டுவதும் அருள் வந்ததாகக் கூறுபவர் மது அருந்துவதும் சுருட்டு புகைப்பதும் சாட்டையால் அடிப்பதும் அரிவாளை வீசி ஆடுவதும் பெருகிவிட்டது. சீர்மிகு செந்தமிழரின் சைவ நெறிக்குப் புறம்பான இவை தெய்வங்கள் என்ற பெயரால் செய்யப்படுவதனால் இளைய தலைமுறையினருக்குப் பின்பற்றுதலாய்  அமைந்து அவர்கள் நெஞ்சில் தீய பழக்கங்களையும் வன்முறை என்ற நஞ்சையும் விதைக்கின்றது. சிறு தெய்வங்களைப் போன்று வேடமிட்டு கோரமான தோற்றத்துடன் மது, புலால், சுருட்டு, அரிவாள், வெறியாடுதல் என்பவற்றை மேற்கொண்டு நகரங்களின் நடு வீதிகளில் திருவிழா என்ற பெயரில் ஊர்வலம் வருதல் பிற இனத்தவரிடையே தமிழர் தம் மாண்பையும் அவர்தம் சமயத்தின் நன்மதிப்பையும் சிதைக்கின்றது.

மரத்திற்குச் சேலை அணிவித்தும் வேர்களுக்கு மஞ்சள் பூசியும் புற்றுக்களுக்குக் குங்குமம் இட்டும் அதிலுள்ள பாம்புகளைக் காட்டிப் புதுப்புது வழிபாடுகளை அறிமுகப்படுத்திச் சிலர் பணம் தேடுவதனால்தான் அதிலுள்ள அறியாமையையும் அறிவுக்குப் பொருந்தாத செயலையும் கண்டு நம் படித்த இளைஞர்கள் சோர்வு அடைந்து நம் சமயத்தில் நாட்டமின்றி இருக்கின்றனர். உண்மை சமயத்தை அறியாமலும் முழுமுதலான பரம்பொருளைப் பற்றிய உயர்ந்த சமய நூல்களைக் கற்காமலும் பிற சமையத்தார் முன்னிலையில் வாயடத்து நிற்கின்றனர். நீண்ட காலமாய் அறியாமல் செய்த ஒன்றினை, இன்றும் அது எங்கள் வழக்கம் என்று கூறாமல் நம் இளைய குமுகாயத்தினரின் சமய அறிவு வளர்ச்சியினைக் கருதியும் நம் உயிர் வளர்ச்சியின் முதன்மையைக் கருதியும் பெருநெறிகளைப் பின்பற்றி முழுமுதல் வழிபாட்டிற்குள் வந்துவிட வேண்டும் என்பதே திருமூலரின் வாக்கு. உணர்ச்சி வயப்படாது திருமூலரின் மந்திர வாக்கினை அமைதியாக எண்ணிப்பார்த்து உண்மையான அமைதியான அருமையான உயர்ந்த தமிழருக்கே உரிய சைவ வழிபாட்டு நெறியினை பின்பற்றுவோமாக!

மேன்மைகொள் சைவநீதி விலங்குக உலகமெல்லாம்!