30. புகழுமாறு ஒன்று அறியேன்

1427

30. புகழுமாறு ஒன்று அறியேன்

கரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள் என்று தமிழர்களின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். இதனால் ஒரு தாயின் கருவில் தங்கிப் பிறந்து தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கடவுள் இல்லை என்று புலனாகிறது. விலங்குகளின் வயிற்றில் கருவாய் இருந்து வரும் பசு, சிங்கம், எலி, குரங்கு, ஆடு, நாய் போன்றவை கடவுள் இல்லை என்பது அறிவில்படுகின்றது. விதையிலிருந்து தோன்றும் ஆலமரம், அரசமரம், மாமரம், வில்வம், வேப்பிலை, துளசி, அருகம்புல், எலுமிச்சை போன்ற மூலிகைத் தன்மை உடைய தாவர வகைகளும் கடவுள் இல்லை என்றுத் தெளிவாகின்றது. வியர்வையிலிருந்து தோன்றும் கிருமிகள், பேண் போன்ற உயிரினங்களும் கடவுள் இல்லை என்று உறுதியாகிறது. முட்டையிலிருந்து தோன்றும் பாம்பு, மயில், சேவல், கழுகு, தவளை, பல்லி, போன்றவையும் கடவுள் இல்லை என்று உண்மையாகின்றது.

நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்புக்கும் உட்படாத பரம்பொருளைச் சித்தாந்த சைவம் முழுமுதல் என்று குறிப்பிடுகின்றது. அதனைச் சிவம் என்று திருமூலரும் திருமுறை ஆசிரியர்களும் மெய்கண்ட நூலாசிரியர்களும் சுட்டுவர். முழுமுதல் ஆகிய சிவத்தினை, “முன்னை ஒப்பாயுள்ள மூவருக்கு மூத்தவன், தன்னைஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்” என்று திருமூலர் தமது திருமந்திரத்தில் உணர்த்துகின்றார். நான்முகன் படைத்தல், திருமால் காத்தல், அரன் அழித்தல் என்ற ஒவ்வொரு தொழிலே உடையவர் என்றும் அந்தந்த தொழில் ஒன்றினையே அடிப்படையாகக் கொண்டு தமக்குள் ஒருவருக்கு ஒருவர் ஒப்பானவர்கள் என்பார். இம்மூவருக்கும் முழுமுதலாய், அவர்களினும் மேலானவனாய் விளங்கும் சிவன், படைத்தல், காத்தல், அழித்தல் எனும் தொழில்களை மேற்கூறிய மூவருக்கும் பணித்து அதற்கு மேல் மறைத்தல், அருளல் எனும் தொழில்களைச் செய்து, முடிந்த முதலாய்த் தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகனாய் விளங்குபவன் என்பார் திருமூலர்.

“என்னால் தொழப்படும் எம்இறை மற்றுஅவன் தன்னால் தொழப்படுவார் இல்லைதானே” என்பார் திருமூலர். அடியேனால் தொழப்படும் எம் தலைவன் சிவன், யாரையும் தொழ வேண்டுவது என்பது இல்லாதவன். நற்பேறு வேண்டி அவனையே எல்லோரும் தொழுவர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இது பற்றியே திருவாசகம் அருளிய மணிவாசகரும், திருஅம்மானையில், “சேர்ந்தறியாக் கையானை” என்று பெருமானைப் போற்றுகின்றார். முழுமுதல் பரம்பொருளே பிறவா ஆக்கைப் பெரியோன், அவன் பிறப்பு இறப்பு அற்றவன். மற்ற உயிர்களூக்குப் பிறப்பையும் இறப்பையும் அளிப்பவன். அவன் பிறரை வழிபட வேண்டுவது இல்லை என்பார் திருமூலர்.

  

சீர்காழியில் முழுமுதலான சிவனை நான்முகன் வழிபட்டு உய்ந்தான் என்ற செய்தியினைத் திருஞானசம்பந்தப் பெருமானின், “தோடுடைய செவியன்” எனத்தொடங்கும் பிரமபுரத் திருப்பதிகம் உறுதி செய்கின்றது. சிறந்த சிவ அடியாராகிய இராவணனைக் கொன்றப் பழி நீங்க, இராமேசுவரத்தில் இராமபிரான் முழுமுதல் சிவனை வழிபட்டுப் பழி நீங்கினார் என்று திருமுறைகள் சுட்டுகின்றன. திருமாற்பேறு எனும் தலத்தில் திருமால் சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்றான் என்று திருநாவுக்கரசு அடிகளின் ஐந்தாம் திருமுறையான திருக்குறுந்தொகை குறிப்பிடுகின்றது. ஆயிரம் மலர்களைக் கொண்டு பெருமானை வழிபட்டத் திருமால், ஆயிரம் மலர்களில் ஒரு மலர் குறைய, தன் கண்ணைப் பிடுங்கி மலராகச் சாற்றிச், சுதர்சனம் என்ற சக்கரத்தினைப் பரிசாகப் பெறும் பேற்றினைப் பெற்றான் எனும் குறிப்பைச் சேந்தனார் தமது திருப்பல்லாண்டில் குறிப்பிடுவார்.

சூரியன், சந்திரன், வாயு, வருணன், அக்கினி, குபேரன், எமன், இந்திரன் போன்ற வானவர்களும், புதன், வியாழன், சனி, ராகு, கேது போன்ற கோள்களும், வியாசர், பிரிங்கி, தக்கன், அகத்தியர், ஜைமினி, சுகர், கௌதமர் போன்ற முனிவர்களும் சீதை, இலக்குவன், அனுமன், வாலி, சுக்ரீவன், சடாயு, சம்பாதி, தருமன், வீமன், அர்ச்சுனன், முதலிய புராண இதிகாச அடியார்களும் முழுமுதலான சிவனை வழிபட்டே பழி நீங்கினமையும் பேறு பெற்றமையும் திருமுறைகளில் காணக்கிடக்கின்றது.

தவிர, இறைத்தமிழ் மந்திரங்களான பன்னிரண்டு திருமுறைகளை அருளிய இருபத்து ஏழு திருமுறை ஆசிரியர்களூம், அறுபத்து மூன்று நாயன்மார்களும், பதினான்கு சைவ சித்தாந்த மெய்கண்ட நூல்களை அருளிய மெய்கண்டார் முதலாய மெய்கண்ட ஆசான்களும் தாயுமானார், வள்ளல்பிரான், சைவ மடங்களின் ஆதீனத் தலைவர்கள் போன்ற பிற்கால அடியார்களும் சிவனையே முழுமுதலாகக் கொண்டு பேறு பெற்றிருக்கின்றனர்.

பெருமானிடம் நடனப் போட்டியில் தோல்வியுற்றுத் தன் ஆணவம் நீங்கும் பேற்றினைப் பெற்றுத் தில்லைக் காளி என்று வீற்றிருக்கும் காளியும், குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளும் எல்லைக்குள்ளும் தங்கள் ஆட்சியையும் காவலையும் உடைய மதுரை வீரன், ஜடாமுனி, சங்கிலி கருப்பன், கருப்புச்சாமி, முனியாண்டி, சடையாண்டி, ஐயனார் போன்ற காவல் தெய்வங்களும் எல்லைத் தெய்வங்களும் குல தெய்வங்களும், மாரியம்மன், பேச்சியம்மன், கூனி, இசக்கியம்மன், காத்தாயி போன்ற கிராமத் தேவதைகளும் நீலி, காட்டேறி, பிடாரி போன்ற பேய்களும் பிறப்பு இறப்புக்கு உட்படுபவை. இவை நம்மைப் போன்று விருப்பு வெறுப்புக்கு ஆளாகின்றவை என்பதனால் இவற்றின் வாழுங்காலத்தினையும் நற்பேற்றினையும் முழுமுதலான சிவனே அளிக்கின்றான் என்பது திருமூலரின் குறிப்பு.

தமிழர்களின் அக்கறையின்மையினாலும் சமயக் கல்வியை முயன்று கற்காமையினாலும் தமிழருக்கே உரிய சைவ சமயமும் அதன் உயர்ந்த கொள்கைகளும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. தமிழர் அவர்தம் உண்மைச் சமயத்தை மறந்து பல தவறான கொள்கைகளிலும் அறியாமையிலும் உழன்று கொண்டு இருக்கின்றனர். இதன் விளைவாகதப் பழைமையும் சிறப்பும் அருள் நிகழ்ச்சிகளும் நிகழ்ந்த பெரும் சிவன்கோயில்கள் பாழடைந்தும் முறையான பூசனைகள் நடைபெறாமலும் முடங்கிக் கிடக்கின்றன. நாயன்மார்களும் திருமுறை ஆசிரியர்களும் பணி செய்த, திருமுறைப் பாடல்கள் அருளிய பாடல் பெற்றத் திருக்கோயில்கள் பேணப்படாமல் கிடக்கின்றன. தனக்கு ஒப்பு இல்லாத் தலைவனான சிவபெருமானை வழிபடுதலே தமிழ்ச் சைவர்களின் முறையான வழிபாடு என்பதனைத் தமிழர்கள் அறியாது இருப்பதனால் சிவவழிபாடு நலிந்து, காவல் தெய்வ வழிபாடுகளும் சிறுதெய்வ வழிபாடுகளும் மலிந்து கிடக்கின்றன. தமிழ்ச் சைவர்கள் வேறு சமயங்களைத் தழுவுதலும் புதுப்புது சமயங்களை உருவாக்குதலும் தனி மாந்தரைக் கடவுளாக எண்ணி வழிபடுதலும் ஏமாறுதலும் மலிந்து கிடக்கின்றன.

உலக ஒடுக்கத்தின் போதும் மீளவும் அதனைத் தோற்றுவிக்கும் போதும் நிற்கின்ற தனி ஒருவனைத், தன்னை ஒப்பாய் இல்லாத் தலைவனை, இயலும் பெரும்தெய்வமான அவனை வழிபட்டால், தீமை ஏற்படும், கைப்பொருள் செலவாகிவிடும், குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்று யாரோ கூறுவதைக் கேட்டு அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்ற நமக்குப் பெருமானின் புகழை விளங்கிக் கொள்ளுங்கள் எனும் வகையில், அப்பெருமானின் புகழைச் சொல்லும் வழியினைச் சிறிதும் அறியேன் என்று சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சீர்மிகு செந்தமிழராகிய நாம் சிந்திக்க வேண்டும். இறந்தவரின் உயிர் அமைதி பெறுவதற்கு மட்டும் சிவன் கோயில்களைத் தேடுகின்ற நாம், திருமணம், காதணிவிழா, புதுமனைப் புகுவிழா, பிறந்த நாள் விழா என்று எல்லா வேளைகளிலும் சிவத்தின் சிறப்பினை உணர்ந்து வழிபட வேண்டும் என்பதனை, “புகழுமாறு ஒன்று அறியேன்” என்று தம் அறிவுறுத்தலையும் இயலாமையையும் மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!