1. குழந்தைப் பிறப்பு

7858

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கரணங்களைத் தங்கள் வாழ்வில் கொண்டுள்ளனர். கரணங்களைச் சடங்குகள் என்று வடமொழியில் குறிப்பிடுவர். தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்கள், அறிவுக்கு உணர்த்த வேண்டியவற்றைச் சில செயல்முறைகள் அல்லது கரணங்கள் மூலம் அறிவிப்பதாக உள்ளன. இக்கரணங்கள் உடலுக்கும் உயிருக்கும் நன்மை பயப்பதாய்த் தமிழர் பண்பாட்டோடு தொடர்பு உடையதாய் உள்ளன.

தமிழ்ச் சைவர்களின் அறிவில் உதித்த அறிவார்ந்த கரணங்களின் பயனை, நோக்கத்தினை, முறையினை அறியாது வெறுமனே எல்லோரும் செய்கின்றார்கள் என்று செய்வதனால் பயன் ஒன்றுமில்லை! இவ்வாறு கரணங்களின் நோக்கமும் பயன்பாடும் அறியாது செய்வதாவது மூட நம்பிக்கைகளுக்கு வழி வகுப்பதோடு அல்லாமல் வீண் அச்சத்திற்கும் அறியாமைக்கும் வழி வகுத்து விடுகின்றது. அவ்வகையில் குழந்தைப் பிறப்பின் போது பின்பற்றப்பட வேண்டிய சில அரிய கரணங்களைக் காண்போம்.

தமிழ்ச் சைவர்களைப் பொருத்த மட்டில் குழந்தைப் பேறு என்பது மங்கலமான ஒன்றாகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகவும் கொள்ளப்படுகின்றது. எனவேதான் திருவள்ளுவப் பேராசானும் மக்கள் பேற்றிற்கு ஒரு முழு அதிகாரமே செய்துள்ளார். ஒருவருக்கு அவரின் பிள்ளைகளே அவருடைய பொருள் அல்லது செல்வம் எனவும் அத்தகைய பிள்ளைகள் அவர் அவர் செய்த வினையின் பயனால் வந்து சேரும் என்றும் பிள்ளைகள் பெறுவதனை உயர்த்திக் கூறுவார். தமிழர் பண்பாட்டில் ஒரு பெண் தாய்மை பேறு அடைவது மிகச் சிறந்த ஒன்று எனவும் அப்பேற்றினை அவள் அடையும் போது அவள் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்பதனை, “ஈன்றபோதின் பெரிது உவக்கும்” என்று திருவள்ளுவப் பேராசான் குறிப்பிடுவார்.

தமிழ்ச் சைவர்களைப் பொருத்த மட்டில் குழந்தையாகப் பிறப்பது சென்ற பிறவியின் தொடர்ச்சி ஆகும். புதிய உடம்புடன் குழந்தையாகப் பிறந்துள்ள உயிருக்குச் சென்ற பிறவியின் தொடர்ச்சியை நினைவூட்டச் செய்ய வேண்டிய கரணத்தைத் தமிழர்கள் கடைபிடித்து உள்ளனர். அவ்வகையில் குழந்தைப் பிறந்து தாயின் கையில் கொடுக்கப்பட்டவுடன் தாய், குழந்தையின் காதில் ‘நமசிவய’ என்ற திருவைந்து எழுத்து மந்திரத்தை மூன்று முறை சொல்லி நெற்றியில் திருநீறு அணிவிக்க வேண்டும் என்ற கரணம் தமிழ்ச் சைவர்களுக்குக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைப் பிறந்த தாயையும் சேயையும் முதல் முறையாகப் பார்க்கச் செல்கின்ற கணவன் மற்றும் இல்லத்தைச் சர்ந்த பெரியோர், திருக்கோவிலிலோ அல்லது இல்லத்திலோ வழிபாடு செய்து திருநீற்றினைக் கொண்டுச் சென்று தாய்க்கும் சேய்க்கும் அணிவித்துக் குழந்தையின் காதில் திருவைந்து எழுத்து மந்திரத்தைச் சொல்ல வேண்டும். சிறிது நேரம் குழந்தையின் அருகில் இருந்து திருமுறைகளை ஓதுவது முதன்மையானதாகும். இவ்வாறு செய்வதானது தாயையும் சேயையும் காத்து அருளிய பெருமானுக்கு நன்றி அறிவிப்பதோடு குழந்தைக்கு அதன் பிறவியின் நோக்கத்தை அறிவிக்கும் செயல் ஆகும்.

குழந்தையின் பிறப்பு இறை சிந்தனையோடு தொடங்கப்பட வேண்டும் என்று நம் கரணம் இருக்கையில் குழந்தைப் பிறப்பு தீட்டு என்ற வழக்கு மக்கள் நடுவே விரவிக் கிடக்கின்றது. அவர் அவர் வினைக்கேற்ப இறைவனே குழந்தையைக் கொடுக்கின்றான் என்று வள்ளுவப் பேராசான் கூற, பிறப்பு என்பது சென்ற பிறவியின் தொடர்ச்சி என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் கூற, குழந்தை பிறப்பு தீட்டு என்று ஆகி நிற்கின்றது. குழந்தைப் பிறந்த வீட்டில் திருவிளக்கு ஏற்றக் கூடாது, வழிபாடு இயற்றக் கூடாது, குழந்தைப் பிறந்தவர் இல்லத்தில் இருந்து திருக்கோவிலுக்குச் செல்லக் கூடாது என்ற வழக்கம் தோன்றியிருப்பது ஏற்புடையதா என்று சிந்திப்பது நலம்.

தமிழ்ச் சைவர்களின் வழிபாட்டு முறையாவது பெண்கள் ஐந்து உறுப்புக்கள் நிலத்தில் படும்படியாக வணங்கும் முறையாக உள்ளது. குழந்தைப் பெற்றப் பெண் ஐந்து உறுப்புக்கள் நிலத்தில் பொருந்துமாறு மண்டியிட்டு வழிபாடு செய்தால் அவள் உடலுக்குத் தீங்கு ஏற்படும் என்று கருதி அவளைத் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுவதனைத் தவிர்க்க வேண்டும் என்றனர். திருக்கோவில் சுற்றுக்கள் பெரிதாக இருப்பதால் குழந்தைப் பெற்றப் பெண் நீண்ட தூரம் நீண்ட நேரம் நடப்பதால் அவளுக்குத் துன்பம் ஏற்படும் என்றும் திருக்கோவில் வழிபாட்டினைத் தவிர்க்கச் செய்தனர்.

திருக்கோவில் பொது மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் தூய்மையைக் கருதியும் நோய் பாதுகாப்புக் கருதியும் குழந்தைப் பெற்றத் தாயையும் சேயையும் திருக்கோவிலுக்குச் சிறிது காலம் செல்வதனைத் தவிர்க்கச் செய்தனர். குழந்தைப் பெற்றப் பெண் இல்லத்தில் இயன்ற அளவில் வழிபாடு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதனைத் தெளிதல் வேண்டும். குழந்தை பெற்றத் தாய் திருமுறைகளை ஓதுவதும் திருவைந்து எழுத்து மந்திரத்தைச் சொல்லி அகவழிபாடு செய்வதும் எந்த வகையிலும் இறைக் குற்றம் ஆகாது. மாறாகக் குழந்தைக்கும் தாய்க்கும் தீய சத்திகளை விலக்கும் பாதுகாப்பாகவும் நல்லருளாகவும் விளங்கும் என்பதனைத் தெளிதல் வேண்டும்.

குழந்தைப் பிறந்த இல்லத்தில் திருவிளக்கினை ஏற்றித் தாயும் சேயும் நலம்பெற நாளும் வழிபாடு செய்வது நன்மையையே கொண்டு வரும். இதன்வழி இல்லம் திருவருள் நிறைந்துள்ள இடமாக மாறும், மங்கலகரமாகும். குழந்தைப் பிறந்த இல்லத்தில் உள்ளவர்கள் திருக்கோவிலுக்குச் சென்று தாய்க்காகவும் சேய்க்காகவும் இறைவழிபாடு செய்வது சாலச் சிறந்தது. அதை விடுத்துப் பெயர் சூட்டு விழா வரையிலும் இல்லத்தில் உள்ளவர்களும் திருவிளக்கு ஏற்றாமலும் வழிபாடு இயற்றாமலும் திருக்கோவிலுக்குச் செல்லாமலும் இருப்பது நம் சைவ நெறிக்கும் தமிழர் கரணங்களின் உயர்வுக்கும் ஏற்பட்ட இழுக்கு என்பதனைத் தெளிதல் நலம். இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!