113. நன்னெறி நான்கின் பேறு

1187

சிவ சிவ

பரம்பொருளான சிவத்தினை அடையும் நன்னெறி நான்காகச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றைத் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. இந்நன்னெறி நான்கும் இறைவனிடத்தே உயிர்கள் அன்பு பாராட்டும் வழி முறைகளைக் குறிப்பிடுகின்றன. இறைவனிடத்திலே அன்பு ஏற்படுவதற்கு மேற்கூறிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பனவற்றால் முறையே மகமை, பணியாள், தோழமை, ஆசான் எனும் உறவு முறையை நிலைநாட்டி, அதன் வழி இறைவனைப் பற்றிய உணர்வு ஏற்பட, அதனால் இறைவனின் திருவருள் நமக்குச் சிவஅறிவினைக் கூட்டுவிக்கும் என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. இறைவனே ஆசானாக வந்து கூட்டுவிக்கும் இச்சிவஅறிவினால் கிட்டும் பேறுகள் யாவை என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது.

மகமைநெறி, தொண்டுநெறி, தோழமைநெறி, ஆசான்நெறி என்ற சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நன்னெறி நான்கும் சிறப்புடையதே எனினும் உயிர்கள் சிவஅறிவு பெறும் படிமமுறையில் சீலத்தை விடவும் நோன்புநெறி மேம்பட்டதாகவும், நோன்பைவிட செறிவுநெறி மேம்பட்டதாகவும் முடிந்த நிலை அறிவுநெறியாகவும் இறைவனின் திருவடிப் பேற்றினை அடையும் முறைமையினைத் திருமந்திரம் அருளிய திருமூலர் குறிப்பிடுகின்றார். சீலம் என்கின்ற தொண்டுநெறியில் தொடங்கிய இறைவனை அடைய முயலும் நெறியானது அறிவு என்ற ஆசான்நெறியில் முற்றுப் பெறுவதே முழுமையான இறையின்பப் பேற்றினை அளிக்கும் என்று குறிப்பிடுகின்றார் திருமூலர். நாயன்மார்களில் திருநாவுக்கரசு அடிகள் தொண்டுநெறிக்கு உரியவர் என்றும் திருஞானசம்பந்தப் பெருமான் மகமைநெறிக்கு உரியவர் என்றும் சுந்தரமூர்த்தி அடிகள் தோழமைநெறிக்கு உரியவர் என்றும் மணிவாசக அடிகள் ஆசான்நெறிக்கு உரியவர் என்றும் ஒருபுடை உவமானமாகக் குறிப்பிடினும், அப்பெரியோர்கள் தொண்டுநெறி முதலாக அறிவுநெறி வரையிலுமான அனைத்து நெறிகளையும் உறைப்புடன் பின்பற்றியவர்கள் என்பதனைச் சைவமெய்கண்டநூல்கள் பகர்கின்றன.

நன்னெறி நான்கினில் அறிவுநெறிக்கு வாயில்களாக இருக்கும் இதர மூன்று நெறிகளில் ஏதாவது ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு அதற்கு மேற்செல்லாது நிற்பதனால் இறைவனின் திருவடிப்பேறு கிட்டும் நிலைகளில் உள்ள வேறுபாட்டினைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். தொண்டுநெறி எனப்படும் சீலநெறியில் பெருமான் தொண்டினையும் அவன் உறையும் திருக்கோயில் தொண்டினையும் அவன் வாழும் நடமாடும் கோயில்களான உலக உயிர்களுக்குச் செய்யும் தொண்டினையும் மட்டுமே உறைப்புடன் செய்து செவ்வியுற்ற உயிர்களுக்குச் சிவஅறிவுக் கிட்டி, அதனால் கிட்டும் பேறானது சிவ உலகத்தை அடைதலாகும் என்கின்றார் திருமூலர். இதனைச் சிவலோகப் பதவி என்று வடமொழியில் குறிப்பிடுவர். சிவ உலக வாழ்வினைப் பெற்றுச் சிவ உலகில் எவ்விடத்தும் செல்லும் உரிமையைப் பெறுவர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சீலம் எனும் தொண்டுநெறியில் உறைப்புடன் நின்றதனால் சிவ உலகை அடைந்து, அங்கு எல்லா இடங்களுக்கும் செல்லும் உரிமை கிட்டவும் அவ்வுரிமையால் நோன்புநெறியால் கிட்டும் சிவன் அருகில் இருக்கின்ற பேறும் தோழமைநெறியால் சிவனைப் போன்ற வடிவம் பெறுதலும் ஆசான்நெறி எனும் அறிவு நெறியால் சிவனோடு இரண்டடு அற கலத்தல் எனும் பேறும் கிட்டும் என்பதனைச், “சாலோகம் ஆதி சரியா ஆதியில்பெறும், சாலோகம் சாமீபம் தங்கும் கிரியையால், சாலோகம் சேரில் வழிஆகும் சாரூபம், பாலோகம் இல்லாப் பரன்உரு ஆமே”என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனால் இறைத்தொண்டுகளிலும் திருக்கோயில்தொண்டுகளிலும் உலக உயிர்த்தொண்டுகளிலும் மட்டும் உறைப்பாய் நிற்கின்றவர்களுக்கு இறைஉலகில் வாழ்ந்து அங்கு எங்கும் செல்லும் உரிமை மட்டும் கிட்டும் என்பதுவும் பூசனைகளில் மட்டும் உறைப்பாய் நின்று இறைஉலகை அடைபவர்களுக்குச் சிவனின் அருகே நிற்கின்ற பேறு மட்டும் கிட்டும் என்றும் சிவச்செறிவு முறைகளால் சிவனின் வடிவினைப் போன்று வடிவம் பெறுதல் மட்டும் கிட்டும் என்றும் முன்கூறிய தொண்டு, பூசனை, சிவச்செறிவு ஆகிய மூன்றின் பயனால் விளையும் ஆசான்நெறியாகிய அறிவுநெறியில் நிற்பவருக்கு அவனோடு ஒன்றாதல் பேறு கிட்டும் என்றும் புலப்படுகின்றது.

சாலோகம் எனப்படும் சிவஉலகில் இருக்கும் நிலையில் உயிரானது பரு உடலை விட்டு நீங்கித் தன் நுண் உடலைப் பொருந்தியுள்ள மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி எனும் அகங்காரம் என்பவை உயிருக்குப் பொருத்தப்பட்டுள்ள தற்காலிகக் கருவிகளே! அவை உயிராகிய தான் அல்ல என்ற தெளிவினைப் பெற்றிருக்கும் என்கின்றார் திருமூலர். தாமே உயிர் என்று உயிரை மயக்கி அதனைத் தன் வயப்படுத்தி வைத்திருந்த அந்தக் கருவிகளை விட்டு நீங்கித் தாம் வேறு என்ற தெளிவினை உறுதியாய்ப் பெற்றிருக்கும் என்கின்றார் திருமூலர். இதனினும் மேம்பட்டச் சிவனுக்கு அருகே நிற்கின்ற சாமீபம் எனும் நிலையில், சிவ உலகில் இருக்கும் உயிர், தன்னினும் வேறாகக் கண்ட மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி என்ற கருவிகளைச் சிவனின் அருள்வயப்பட்டதாய் ஆக்கி, உயிர் இறைவனை அணுகுவதற்குத் துணையாய் அவற்றைப் பயன்படுத்தி இறைவனின் அருகே நிற்கும் என்கின்றார் திருமூலர்.

சிவவடிவினைப் பெற்றுச் சிவனைப் போன்றே நிற்கின்ற நிலையில் அக்கருவிகள் எல்லாம் சிவமயமாகவே நின்று உயிருக்குச் சிவத்தினை நுகரும் இன்பத்தினை அளித்து நிற்கும் என்கின்றார். சிவனுடன் உயிர் இரண்டு அற கலக்கும் நிலையான சாயுச்சியம் அல்லது பரமுத்தி எனும் நிலையில் உயிருக்குப் பொருத்தப்பட்டு இதுவரை நின்ற, மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி என்ற கருவிகள் நீங்கி, உயிர் இறைவனின் திருவருளையே கருவியாகக் கொண்டு சிவனைக் கூடி அவனிடத்திலே இருக்கின்ற பேரின்பத்தினை நுகரும் நிலையினில் நிற்கும் என்பதனைப், “பாசம் பசுவானது ஆகும்இச் சாலோகம், பாசம் அருளானது ஆகும்இச் சாமீபம், பாசம் சிவமானது ஆகும்இச் சாரூபம், பாசம் கரைபதி சாயுச் சியமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

இறை உலகில் இருத்தலான சாலோகத்திற்கும் இறைவனுக்குப் பக்கத்தில் இருத்தலுமான சாமீபத்திற்கும் மேம்பட்ட நிலையாகக் கூறப்படுவது சிவ வடிவம் பெற்று விளங்கும் நிலை என்கின்றார் திருமூலர். சிவச் செறிவு இயற்றும் சிவச்செறிவாளர்கள் இயற்றும் எட்டாம் படிநிலையாகிய சிவசமாதி எனப்படும் சிவநினைவில் அழுந்தி இருத்தல் எனும் நிலை அடைந்தவருக்கே சிவவடிவம் பெறும் பேறு சிவ உலகில் கிட்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவவடிவம் பெற்ற முதிர்ந்த சிவச் செறிவாளருக்கே அதற்கு மேலாய சிவனோடு கலத்தல் ஏற்படும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனால் சிவ உலகு, சிவனுக்கு அருகே நிற்றல், சிவ வடிவம் பெறல் என்பவற்றின் உண்மைப் பயன் சிவனோடு இரண்டு அற கலக்கும் நிலையே என்பது பெறப்படும்.

சைவம் எனும் சொல்லின் பொருள் சிவனுடன் தொடர்புற்று நிற்றல் என்பது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். எனவே உயிர் தான் சிவனது அடிமை என்னும் உண்மையை உணர்ந்து, அவனைச் சார்ந்து நிற்றலே நிறைவான சிவநெறி எனப்படுகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உயிர் சிவனைச் சார்ந்து நின்ற பின்னும் அவனைத் தவிர பிறிது ஒன்றையும் சாராது, கருவிகளையும் நீங்கி நிற்றல் அந்நெறி நிறைவு பெறுவதற்கு இன்றியமையாதது என்கின்றார். அத்தகைய நிறைவான சிவநெறியின் பயன் சிவனது பேரின்பம் என்றும், அப்பேரின்பத்தைப் பெற்று அதில் மூழ்கியிருக்கும் நிலையே சாயுச்சியம் எனப்படும் இரண்டு அற கலத்தல் எனும் நிலை என்பதனைச், “சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆகுதல், சைவம் தனைஅறிந்தே சிவம் சாருதல், சைவம் சிவம்அன்றிச் சாராமல் நீங்குதல், சைவம் சிவானந்தம் சாயுச் சியமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

எனவே சீலம், நோன்பு, செறிவு என்ற தொண்டுநெறி, மகமைநெறி, தோழமைநெறி, என்பவற்றின் பயன் ஆசான்நெறியில் கிட்டும் சிவஅறிவே என்பது பெறப்படும். ஆதலால் தொண்டுகளாலும் பூசனைகளாலும் சிவச்செறிவுகளாலும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டுவது சிவஅறிவேயாம். இச்சிவ அறிவே சிவ உலகத்தில் இருத்தல், சிவனின் அருகே இருத்தல், சிவ வடிவம் பெறல் என்ற இடைநிலைப் பயன்களைக் கொடுத்துப் பின் சிவனுடன் இரண்டு அற கலக்கும் பேரின்பப் பெருவாழ்வினைக் கொடுக்கும் என்பதனைத் தெளிவோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!