43. சிவயோகமும் தவயோகமும்

1438

சீர்மிகு செந்தமிழர் இறைவனை அடைய வகுத்து வைத்துள்ள நன்மை நெறிகள் நான்கு. அவை சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்பனவாம். இவற்றில் இறைவனை அகத்தில் இருத்தி அகவழிபாடு செய்வது செறிவு அல்லது யோகம் எனப்படுகின்றது. சிவனைத் தவிர வேறு பொருட்களையும் ஆற்றல்களையும் மாந்தர்களையும் ஆசான்களையும்(குருமார்களையும்) எண்ணிச் செய்கின்ற யோகத்தினைத் தவயோகம் என்றும் அவை சிவயோகம் ஆகா என்றும் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றவாறு திருமூலரும் குறிப்பிடுகின்றார்.

            அரிய இருக்கை (ஆசனம்) முறைகளைக் கற்றுக் கொண்டு அவற்றின் துணையோடு, மூச்சைக் கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தும் யோகம் அடயோகம் எனப்படும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதில் சுவத்தி, வாள், கோழி, கோமுகம், தாமரை, சிங்கம், வீரம், சுகம் போன்ற முதன்மையான இருக்கை வகைகளும் மீன், ஆமை, வில், மையில், தவளை, குரங்கு, கலப்பை, ஓடம், ஒற்றைக்கால், தலை, முழு உடம்பு, பிணம் போன்ற இருக்கை வகைகளும் வலியுறுத்தப்படுகின்றன. அடையோகத்தைத் தவிர பதஞ்சலி யோகம் என்று பலராலும் பரவலாகப் பயிலப்படுகின்ற யோகமும் உண்டு. இதனை அட்டாங்க யோகம் என்றும் குறிப்பிடுவர். எட்டு உறுப்புக்களை உடைய இந்த யோகத்தில் தீது அகற்றல் (இயமம்), நன்று ஆற்றல் (நியமம்), இருக்கை (ஆதனம்), வளி நிலை (பிராணாயாமம்), தொகை நிலை (பிரத்தியாகாரம்), பொறைநிலை (தாரணை), நினைதல் (தியானம்), நொசிப்பு (சமாதி) என்பவை வலியுறுத்தப்படுகின்றன.

            தீய செயல்களை விட்டு, ஆற்ற வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்து, நல்ல இருக்கைகளைப் பயின்று, இவற்றின் துணையாலே மூச்சுக் காற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, வெளித் தொடர்புகளை எல்லாம் துண்டித்து, மனதினை ஒரு நிலைப் படுத்தி, ஒன்றையே தொடர்ந்து நினைந்திருந்து, நினைந்திருந்ததிலே அழுந்தி இருத்தலை அட்டாங்க யோகம் வலியுறுத்திடினும் சிவத்தை எண்ணும் பொருளாக வைத்திடாவிடில் அது சிவ யோகம் ஆகாது என்பார் திருமூலர். தவிர சிவ யோகத்தில் சமாதி நிலையைக் கூடியிருக்கும் உயிருக்கு ஞானத்தை அளிப்பவன் சிவனே என்று அட்டாங்க யோகத்திற்கும் அடயோகத்திற்கும் ஒருபடி மேல் செல்வது சிவ யோகம் என்கின்றார் திருமூலர். சிவயோகத்தில் சமாதி நிலையை அடைவது முடிந்த முடிவல்ல எனவும் உயிர்களின் முயற்சியினால் மட்டுமே சிவயோக முடிவின் முடிவான நிலையான சிவபோக நிலையை அடைய முடியாது என்றும் குறிப்பிடுகின்றார்.

            “சிவயோகம் ஆவது சித்துஅசித்து என்று, தவயோகத்துள் புக்குத் தன்னொளி தானாய், அவயோகம் சாராதவன் பதி போக, நவ யோகம் நந்தி நமக்களித்தானே” என்பது திருமந்திரம். சிவயோகத்திற்கும் இதர யோகங்களுக்கும் உள்ள வேறுபாட்டினைத் திருமூலர் உணர்த்துகின்றார். சிவயோகம் அல்லாத இதர யோகங்கள் சமாதியையே யோகத்தின் முடிந்த நிலையாகக் கூறுகின்றன. திருமூலர் சொல்கின்ற சிவயோகமானது சமாதி அல்லது நொசிப்பு நிலையில் ஒன்றி ஒருமித்து அழுந்தியிருக்கும் உயிரானது தன் முயற்சியால் இறைவனைக் காண இயலாது என்று குறிப்பிடுகின்றார். ஒருநிலைப்பட்டு இருக்கின்ற உயிர் சிவனது அருளாலே அவன் அருள் ஒளியைப் பெறல் வேண்டும். அவ்வருள் ஒளியின் துணையாலே தன்னையும் இறைவன் அறிவிக்க இறைவனையும் காண வேண்டும். அப்படிக் காணும் திறத்தால் உலகப் பொருட்களோடும் புலன்களோடும் உயிர் சேராது. பயனில்லாத செயல்களின் மீது மனம் செல்லாது அச்சிவத்தையே பற்றியிருக்கும் நிலை உயிருக்கு ஏற்படும். இதனால் சிவனோடு கூடியிருக்கின்ற இன்பம் ஏற்படும். இதுவே சிவபோகமாய் அமையும். இந்தச் சிவபோகத்தினைக் கொடுக்கின்ற, வேறு யோகங்களை எல்லாம் காட்டிலும் வேறுபட்டு நிற்கின்ற, புதியதோர் யோகத்தினை நந்தி எனும் சிவபெருமான் எமக்களித்தான் என்கின்றார் திருமூலர்.

            சிவயோகத்தின் வழி சமாதி நிலையைக் கடந்து சிவபெருமானால் அகத்தினுள்ளே சிவகுருவாகத் தோன்றி சிவனால் அருளப்பெற்றுச் சிவஅறிவைப் பெற்றவர்கள் பிறவிக்கு மூலமாக உள்ள பழவினை அல்லது கிடைவினையைப் போக்கிக் கொண்டவர்களாய் இருப்பர். சிவயோகம் கைவரப் பெற்றவர்கள் காண்பனவற்றை எல்லாம் சிவமாகவே காண்பர். உலகப் பொருட்களயும் உலக உயிர்களையும் சிவமாகவே காண்பதனால் அவற்றின்மீது விருப்போ வெறுப்போ அவர்களுக்கு ஏற்படுவதில்லை. இன்பமானது துன்பமானது என்ற வேறுபாடும் அவர்களுக்கு இல்லை. எவரிடமும் எப்பொருளின் மீதும் ஆசையும் சினமும் மயக்கமும் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. ஐம்புலன்களினால் ஏற்படும் உணர்வுகளுக்கு ஆட்படாமல் சிவனது திருவருளையே உணர்ந்து அதில் அழுந்தியிருந்து இவ்வுலகத்தில் வாழும் உடம்பு இருக்கின்ற போதே செத்தார்போல உலகத்தை நோக்காது இறைவனையே உள்நோக்கி இருப்பார்கள் என்பதனை, “வித்தைக் கெடுத்து வியாக்கிரதத்தே மிகச், சுத்தத்துரியம் பிறந்து துடக்கு அற, ஒத்துப்புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு, செத்திட்டிருப்பர் சிவயோகியர்களே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

            சிவயோகங்கள் பல இருப்பினும் அவற்றில் மிகச் சிறந்த யோகங்களாக இரண்டினைச் சுட்டுவார் திருமூலர். அவை கேசரியோகமும் பரியங்கயோகமுமாம். கேசரியோகம் துறவறம் மேற்கொள்ளும் சிவயோகியர்களுக்கும் பரியங்கயோகம் இல்லறம் மேற்கொள்ளும் சிவயோகியர்களுக்குமாம். கேசரியோகத்தை ஆதாரயோகம் என்றும் நிராதாரயோகம் என்றும் பகுப்பார் திருமூலர். இது தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு கடும் தவம் இயற்றும் துறவிகளுக்கு உரியதாகும். மனைவியோடு இல்லறத்தில் வாழ்ந்தாலும் மனம் சிவத்தையே சிந்திக்க, உலகியலால் தாக்குண்ணாது சிற்றின்பத்திலும் பேரின்பத்தை மறவாது எண்னி வாழ்வது பரியங்கயோகமாகும்.

            சிவயோகங்கள் அல்லாத யோகங்களைத் தவயோகங்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவயோகம், யோகத்தினால் கிட்டும் சித்திகளை விரும்பாது மெய்ஞானத்தையே விரும்பி செய்தல் ஆகும். தவயோகங்கள் சித்திகளை மட்டும் பெற்றுத்தருவன. தவயோகங்கள் பிற உடம்பில் புகல் (பரகாய பிரவேசம்) போன்ற பலனைத் தரும். இதனைச் சித்தி காமயோகம் என்பர். இறைவனின் அறிவு வெளியில் நுழைவது சிதாகாயப் பிரவேசம் எனப்படுகின்றது. இதனை முத்தி காமயோகம் என்பர். இதுவே சிவயோகம். தவயோகங்கள் அணுவிலும் அணுவாய்ப் புகுதல் (அணிமா), அண்டத்தையும் கடந்து நிற்றல் (மகிமா), காற்றை விட நொய்மையாய் வானத்தில் உலாவுதல் (இலகிமா), மலைபோல திண்மையாய்க் கனமாய் இருத்தல் (கரிமா), நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்லல் (பிராத்தி), நினைத்ததை அடைதல் (பிராகாமியம்), எல்லோராலும் ஏற்றுப் போற்றப்படுதல் (ஈசத்துவம்), யாவரையும் தன் வழிப்படுத்தி நிற்றல் (வசித்துவம்) போன்ற எட்டு சித்திகளை அளிக்கக்கூடியவை. இவற்றை அட்டமா சித்தி என்பர்.

            சிவயோகியர்களுக்கு அட்டமாசித்திகள் கைவர கிடைக்கப் பெற்றாலும் அவற்றை அவர்கள் பெரிதாக எண்ணுவதில்லை! இவற்றிற்கெல்லாம் மேலான சித்தியாகிய சிவ அறிவினைப் பெற்று சிவனோடு ஒன்றியிருக்கும் சிவபோகமான இன்பத்தினைப் பெறுவதிலேயே கருத்தைச் செலுத்துவர். சிவயோகிகள் தங்களுக்குக் கிட்டும் ஆற்றல்களை வைத்துப் பொன்னையோ பொருளையோ தேடிப் பெருக்குவதில்லை. பெயருக்கும் புகழுக்கும் அவற்றைக் கூவி ஏலம் விடுவதில்லை. உலக நன்மைக்காகத் தேவைப்படுகின்ற போது அதன் நன்மையை உலகிற்கு அளித்து மகிழ்ந்தார்கள். தங்களிடம் இருக்கும் ஆற்றல்களைப் பயன் படுத்தி ஏழை எளியவர்களின் பசியையும் நோயையும் வாட்டத்தையும் போக்கினார்கள். இறைவன் தங்களுக்கு இலவயமாக அளித்த அப்பேரின்பப் பேற்றை பிறரும் அடைய வேண்டும் என்று எண்ணினார்கள். வந்தோர்க்கெல்லாம் இலவயமாக வாறி வழங்கினார்கள். இன்றைய உலகியலில் உழன்று திரிபவர் பலர் தொழில், திருமணம், பகை, வாணிகம், கல்வி, வீரம், பிறரைக் கவர்தல், பணம் எனும் சித்திகளைப் பெறவே யோகம் பயில்கின்றனர். இன்னும் சிலர் மன அமைதி, மன அழுத்தத் தணிவு, ஓய்வு நேர நடவடிக்கை என்றும் உடற்பயிற்சி என்றும் யோகம் பயில்கின்றனர். அவை ஒருபோதும் திருமூலர் குறிப்பிடும் சிவயோகம் ஆகா! உண்மையான சிவயோகத்தை அறியாத பலர் தங்களைச் சிவயோகியர்கள் என்றுக் கூறிக்கொள்வதும் அவர்களை ஆசான்கள் என்று பலர் கொள்வதும் குருடர் குருடரைப் பின்பற்றிய கதைதான்!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!