108. அறிவு வழிபாட்டில் அறிவு

1501

மனத்தை அது போகும் போக்கிற்கெல்லாம் போக விடாது அதனைத் தடுத்துத் தீமையானவற்றிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானவற்றில் அதனைச் செல்லவிடுவதே அறிவு என்பார் பேராசான் திருவள்ளுவர். இவ்வாறு மனத்தைத் தீமையானவற்றிலிருந்து நன்மையானவற்றிற்குத் திசை திருப்புவதற்கு இன்றியமையாதது சமய அறிவு. இதனாலேயே சமயநெறியில் வழிபடுதல் அல்லது வழிபாடு என்பது முதன்மை பெறுகின்றது. “ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லடியார் மேல், ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள் போலும்” என்று திருஞானசம்பந்தர் இதனைக் குறிப்பிடுவார். சிவபெருமான் அறிவின் திரண்ட வடிவாக இருக்கின்றான். அப்பேரறிவே நாளும் நன்மையானவற்றயே வேண்டி, வழிபட்டு நிற்கின்ற அடியவர்களின் மேல் உள்ள குற்றக் குவியல்களைப் போக்கி நல்வழிப் படுத்துகின்ற உண்மைப் பொருள் என்று குறிப்பிடுவார். எனவே இறைவழிபாடு என்பது இறைவனை அறிவின் திரண்ட வடிவாகக் கண்டு அவ்வறிவு நிலையை எய்துவதற்கு நாம் அவன் திருவருளை வேண்டுவது என்பதனைத் தெளிதல் வேண்டும். பேர் அறிவுப் பேர் அருளாளனாக விளங்கும் அப்பெருமானிடத்தில் உள்ள அறிவினைப் பெருவதற்கு அப்பெருமானின் பேர் இயல்புகளை அறிதலும் நம் அகப்புறக் குற்றங்களைக் களைதலும் இன்றியமையாதவை ஆகும்.

உலக அறிவும் அறிவே என்றாலும் அதனைத் துணையாகக் கொண்டு மெய்ப்பொருளான இறைவனை அறியும் அறிவே மெய்யறிவு அல்லது மெய்ஞானம் எனப்படுகின்றது. பேரறிவாக இருக்கின்ற சிவப்பரம்பொருளை அறிந்து அவ்வறிவினை உணர்தலே மெய்யுணர்வு எனப்படுகின்றது. இறை அறிவினைப் பெறுவதற்கும் மேலான ஓர் அறநெறி அல்லது அறிவுநெறி உலகத்தில் இல்லை. அப்படி இருப்பதாக ஏதாவது ஒரு சமயமோ அல்லது கொள்கையோ இருக்குமானால் அது நல்ல சமயமோ அல்லது கொள்கையோ ஆகாது. இறைஅறிவை விட்டு விலகிய எந்தக் கொள்கையும் சமயமும் உயிருக்கு உண்மையான மெய் அறிவையும் அதனால் விளையும் மெய் உணர்வையும் கொடுக்காது என்பதனை, “ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை, ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று, ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம், ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே” என்கின்றார் திருமூலர்.

உயிர் சிவஅறிவு பெறுவதற்குச் செய்யப்படுகின்ற செயற்பாடுகளை வழிபாட்டுச் செயல்முறைகள் அல்லது சமயநெறி என்கின்றோம். சமயநெறி என்பது பொதுவான நற்பண்புகளையும் குறிப்பாகச் சமய வழக்கில் நன்னெறி நான்கு எனப்படும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றையும் குறிக்கும். இவற்றின் வழி இறைஅறிவைப் பெற முயலுவதனையே வழிபடுதல் என்பர். இறைவழிபாட்டில் இயற்றப்பெறும் செயல் முறைகளாகிய விளக்கேற்றுதல், மணியை ஒலித்தல், தூபதீபம் காட்டுதல், திருமுறைகள் ஓதுதல், திருநீராட்டுதல், திருவமுது அளித்தல், திருநீறு அணிதல், கணிகை மணி அணிதல், திருக்கோயில் வழிபாடு இயற்றுதல், ஆலயத் திருத்தொண்டுகள் செய்தல் இவை அனைத்துமே சிவ அறிவைப் பெற செய்யபடும் முயற்சிகளாம், தவிர, நீண்ட பூசனைகள் இயற்றுதல், அகத்தவமான சிவயோகம் எனப்படும் சிவச்செறிவினை இயற்றுதல் இவை அனைத்துமே சிவஅறிவைப் பெற்று மெய்யுணர்வினைப் பெறுதற்கான வாயில்களாம் என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

வழிபாட்டில் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நமக்கு சிவஅறிவு வளர்தற்குத் துணையாய் நிற்கின்றதா என்பதனை உணர்ந்து இயற்றுதல் முதன்மையானது. இவ்வாறு நம் இறைஅறிவை பெருக்கும் ஒவ்வொரு செயலின் வழியும் நம் உயிரானது இறைஅறிவினைப் பெறுவதற்குத் தயாராகிச் செவ்வியடைந்து நிற்கப், பேரறிவாளனாகியா அச்சிவப் பரம்பொருள் நமக்கு மெய்யறிவினை நல்குவான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைஅறிவு பெறுவதற்கு வாயிலாக அமையும் இச்செயல் முறைகளையே பிடித்துக் கொண்டு அதற்கே முதன்மைக் கொடுத்து அதனால் விளையும் பயனை எண்ணாது இருப்பது ஏணியைக் கொண்டு மேலே ஏறுகின்ற ஒருவன் அவ்வேணியைப் பயன்படுத்தி மேலே சென்றுப் பெற வேண்டியதைப் பெறாமல் அவ்வேணியைப் பிடித்துக் கொண்டு மயங்கி நிற்றலைப் போன்றதாகும் என்று குறிப்பிடுவர். இன்னும் சிலர், உண்ணாது இருத்தல், உறங்காது, இருத்தல், கொல்லாமை, புலால் உண்ணாமை, ஐம்பொறி அடக்கல், பிற உயிர்கள் மீது இரக்கம் கொள்ளல், பிற உயிர்களுக்கு உதவி செய்தல் போன்ற வற்றை ஒரு வழிபாடாகவே கொள்வர். இவையும் சிவஅறிவைப் பெற முயலுகின்ற முயற்சியின் முதற்படியே ஆகும் என்கின்றார் திருமூலர். இவற்றிற்கும் மேலாக அறிவு வழிபாட்டில் பெற வேண்டிய அறிவினைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

அறிவு வழிபாட்டில் பெற வேண்டிய உண்மைச் சிவஅறிவு என்பது என்னவெனில், சிவனது பேர் அகண்டிதத்தினுள்ளே அடங்கி இருக்கின்ற இவ்வுலகமும் இவ்வுலகத்தின் உள்ளே உள்ள பிற பொருட்களும் சிவனது உடைமை. இவ்வுலகத்திலே உள்ள பொருள்களும் அப்பொருள்களைத் துணையாகக் கொண்டு வாழும் உயிர்களும் அவனுடைய உடைமைப் பொருள்கள். அச்சிவனுக்கு அடிமையாகவும் அவனுக்கு உரிமைப் பொருளாகவும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனை உணர்தலே உண்மையான மெய்யறிவு என்கின்றார் திருமூலர். இதனை உணர்ந்து சிவனிடத்து ஏற்படும் அன்பின் மிகுதியால் என்றும் அவனை இடைவிடாது எண்ணுதலினால் கிடைக்கப் பெறுவதே அவனின் திருவருள். உலகத்தில் உள்ள உயிரற்றப் பொருள்கள் யாவும் சிவனது உடைமை, உயிருள்ள அறிவுடைய பொருள்கள் யாவும் அவனது அடிமை என்பதனை வழிபாட்டில் எவ்வகையாலும் உணர்வதே அறிவு வழிபாடு என்பதனைத், “தன்பால் உலகம் தனக்கரு காவதும், அன்பால் எனக்கரு ளாவது மாவன, என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும், பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே” என்கின்றார் திருமூலர்.

இதனால் சமய உண்மைகளை ஆராய்வோரும் சமய நெறிகளில் சிறந்தோரும் அவர்தம் ஆராய்ச்சியால், தம் முயற்சியால், ‘யான்’ என்று தன்னையே உயர்வாகவும் இறைவனாகவும் கருதுகின்ற அகமயக்கமும் அறிவுக் குற்றமும் உடையவர் மெய்யறிவு உடையவர் அல்லது மெய்ஞானி ஆகார். கிட்டுவதை எல்லாம் என்னுடையது என்று பிழையாக உணரும் புறமயக்கமும் பற்றும் நீங்கி எல்லாம் சிவனது அடிமையும் உடைமையும் என உணர்பவர்களே உண்மையான சிவ அறிவாளர்கள் என்கின்றார் திருமூலர். “நான் யார்” என்று ஆராய்கின்றவன், தன்னை “இன்னான்” என அறிதல் சிவஅறிவு பெறுதல் என்கின்றார் திருமூலர். தமது அறிவிற்குச் சிவனது அருளே முதலாகி நிற்கின்றது என்பதனை உணரும் உணர்வு முதன்மையானது என்கின்றார். அவ்வுணர்வால் சிவனது பேர் அறிவிற்கும் பேர் அருளுக்கும் முன்னால் அடங்கி நிற்கும் அடக்கமும், அடங்கி நிற்கின்றமையால் அச்சிவனை மறவாது எண்ணி உணர்கின்ற உணர்வால் அச்சிவனிடத்து அன்பு பெருகும் என்கின்றார். இவ்வன்பின் துணையால் அறிவிலே இறைவனை மறவாது இருக்கின்ற முறையினை உணர்ந்த சிவ அறிவாளர்களுக்கே இவ்வுலகமாகிய இருள் நீங்கிச் சிவஅறிவாகிய சிவஒளி ஒளிவிடும் என்கின்றார் திருமூலர்.

சீலம், நோன்பு, செறிவு ஆகிய நன்நெறிகள் மூன்றினால் இயற்றப் பெற்ற வழிபாடுகளை விடுத்து மெய்யறிவு நூல்களை ஓதுதல், பிறருக்கு அவற்றை ஓதுவித்தல் மெய்யறிவு செய்திகளைக் கேட்டல், பிறரைக் கேட்பித்தல், குற்றமற்ற மெய்ப்பொருளான இறைவனின் திருவருளை இடைவிடாது சிந்தித்தல் போன்றவற்றை அறிவுப் பூசனை என்று சிவஞான சித்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடுகின்றது. இதனையே திருமூலரும் குறிப்பிடுகின்றார். மேற்கூறிய மெய்யுணர்வு பெறுதலுக்குக் கேட்டல், எண்ணுதல், தெளிதல், அதில் அழுந்தி நிற்றல் என்பன மெய்யுணர்வு அல்லது அறிவு வழிபாட்டிற்கு இன்றியமையாத வாயில்கள் என்கின்றார் திருமூலர். வழிபாடு என்றால் வெறும் செயல் முறைகள் மற்றும் பூசனைகள் மட்டும் என்று நின்று விடுதல் ஆகாது. அவற்றின் பின்னே புதைந்துள்ள அறிவுக்கூறுகள் எவை என்பதனை எண்ணி உணர்தலே அறிவு வழிபாட்டில் அறிவாகும். இவற்றை எண்ணி உணர்வதற்கு சில அடிப்படையான தேடல்கள் முதன்மையாகின்றன. தமிழ்ச் சைவர்களாய் இருப்பின் அத்தேடலின் விளைவாக, நமக்குரிய நெறி சித்தாந்த சைவம். நம் இறை போற்றிப் பாடல்கள் திருமுறைகள். நம் இறை உண்மை நூல்கள் பதிநான்கு மெய்கண்ட நூல்கள். நாம் பின்பற்ற வேண்டிய அருளாளர்கள் நாயன்மார்கள். நாம் ஓத வேண்டிய மூல மந்திரம் திருவைந்து எழுத்து. நாம் அணிய வேண்டியச் சின்னங்கள் திருநீறு, கணிகைமணி என்பவை. நாம் பின்பற்ற வேண்டிய நன்னெறி நான்கு சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவை கிட்ட வேண்டும். இவ்வாறானவற்றை எண்ணிப்பார்த்தாலே அறிவு வழிபாட்டில் தலைப்பட்டு முறையான இறைவழிபாட்டில் சென்று சிவஅறிவினைப் பெறுவோம் என்பது திண்ணம். இன்பமே எந்நாளும் துன்பமில்லை!