42. சூரிய காந்தக் கல்லும் சூழ் பஞ்சும்

2232

சூரியன் எனும் கதிரவனின் கதிர் ஒளியை ஏற்று வெளியிடும் கல் சூரிய காந்தக் கல். சூரியனின் ஒளியை ஈர்த்துத் தன்னுள் கொள்ளும் ஆற்றல் உடைமையினால் இக்கல்லைச் சூரிய காந்தக் கல் என்று குறிப்பிடுவர். இக்கல் தான் ஈர்க்கும் கதிரொளியை வெளிப்படுத்தி எதிரே உள்ள பொருளை எரிக்கும் ஆற்றல் உடையது. கதிரவன் இதன் முன்னே இல்லாவிட்டால் தானாகவே இக்கல் எதனையும் சுட்டெரிக்க இயலாது. கதிரவன் இல்லாவிட்டால் தன்னைச் சுற்றியுள்ள பஞ்சு போன்ற எளிய பொருளையும் இதனால் சுட இயலாது. இதற்குச் சுடும் ஆற்றலை வழங்குவது கதிரவனே. சூரியனும் பஞ்சு போன்ற எளிய பொருளையும் நேரடியாகச் சுட்டு எரிக்காது.சூரிய காந்தக் கல் அக்கதிரவனின் ஒளியை உள்வாங்கி ஒருமுகப் படுத்தவே அச்சூரிய காந்தக் கல்லின் வழியாகச் சூரியன் பஞ்சினை எரிக்க இயலுகின்றது. இது போன்றே உயிர்களையும் அவற்றைப் பற்றியுள்ள அழுக்குகளான ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் இறைவனையும் திருமூலர் உருவகப் படுத்துகின்றார்.

             பசுக்கள் எனப்படும் உயிர்களைச் சூரிய காந்தக் கல்லுக்கும் உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குகளான ஆணவம், கன்மம், மாயை என்பனவற்றைப் பஞ்சிற்கும் சூரியனை இறைவனுக்கும் ஒப்புமை காட்டுகின்றார் திருமூலர். சூரியகாந்தக் கல் சூரிய ஒளியின் துணையின்றித் தானே பஞ்சினைச் சுட்டெரிக்க மாட்டாது போன்று உயிர்கள் தாமே தம்மைப் பிணித்துள்ள மலங்களைப் போக்கிக் கொள்ள மாட்டாதவை. எனினும் சூரியன் தம் முன் தோன்றும் போது அதன் ஒளியால் பஞ்சினைச் சுட்டு எரிப்பது போன்று இறைவன் உயிர்கள் முன் சிவகுருவாய்த் தோன்றும் போது தங்களைப் பிணித்துள்ள மும்மலங்களை அச்சிவகுருவின் திருவருளால் போக்கிக் கொள்ள இயலும் என்பதனைச், “சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே, சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா, சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல், ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே” என்கின்றார்.

             உயிர்கள் ஏன் தாமாகத் தங்களைப் பிணித்துள்ள அழுக்குகளான மும்மலங்களைப் போக்கிக் கொள்ள இயலாது எனின் ஆராய்ச்சி அறிவோடு மெய்கண்ட நூல்கள் ஏற்புடை விடைகளைக் குறிப்பிடுகின்றன. உயிர்களுக்கு அறியாமைச் செய்யும் ஆணவம் என்ற உள்பொருள் ஒன்று உண்டு. இரவில் காணும் இருள் இருப்பதனை நம்மால் அறிய இயலும். அது தம்முடைய கருமையினால் பொருள்களை மறைக்கின்றது. அதனால் பொருள்கள் நமக்குத் தெரியவில்லை என்பதனை அறியலாம் என்பர். ஆனால் உயிர்களின் அறிவினை மறைக்கும் ஆணவம் என்ற இருளோ, தாம் இருப்பதனையும் உயிருக்குக் காட்டாது தான் செய்கின்ற அறிவு மறைப்பையும் உயிருக்குக் காட்டாது என்கின்றது சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம். இதனால் தன்னை ஆணவம் என்ற ஓரழுக்குப் பற்றியுள்ளது என்று உயிர் சொல்லளவில் அறிந்தாலும் உணர்வால் அதனை அறியாது. எப்பொழுதெல்லாம் இவ்வாணவம் தன் அறிவை மறைக்கின்றது என்பதனையும் உயிர் அறியாது எனப்படுகின்றது.

             உயிர்கள் தாமாகவே தங்களுக்குச் சேர்க்கப்பட்டிருக்கின்ற கன்மம் என்ற வினையைப் போக்கிக் கொள்ள இயலுமா என்றால் இயலாது என்பர். கன்மம் அல்லது வினை என்பது செயல்கள். இதனை நல்வினை தீவினை என்று இரண்டாகக் கூறுவர். வினைகள் கழிய வேண்டுமாயின் மனத்தாலும், வாக்காலும் காயத்தாலும் செய்யப்படும் செயல்கள் நடைபெறாமல் போகவேண்டும். அப்பொழுதுதான் வினை அற்றுப் போகும். சித்தாந்த சைவம் கன்மக் கொள்கையைச் சொல்லும் போது ஒவ்வொரு நல்வினைக்கும் தீவினைக்கும் பலனை நுகர்ந்தே அதனைக்கழிக்க இயலும் என்கின்றது. இப்பிறவியில் இல்லாவிட்டாலும் இனிவரும் பிறவியிலாவது அதனை நுகர்ந்து தீரவேண்டும் எனும் கோட்பாட்டினைக் குறிப்பிடுகின்றது. இதனையே, “வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்” எனும் முது மொழியால் சுட்டுவர். பாவ புண்ணியங்களின் தொடர்ச்சி என்பதும் ஊழ்வினை என்பதும் இதுபற்றியே ஆகும். என்று உயிர்கள் செய்யும் நல்வினையும் தீவினையும் நேர் ஆகி வினைகள் அற்றுப் போகின்றதோ அன்றே நம் வினைகள் முற்றாகக் கழிகின்றன. வினைகளைப் பற்றிப் பேசுகையில் உயிர்கள் பிறவிகள் எடுத்துப் பிறவியில் நுகர்ந்து கொண்டிருக்கும் வினைகளைப் பற்றியே பேசுகின்றோம். இன்னும் உயிரின் பிறவிகளில் சேர்க்கப்படாத, வாழுங்காலத்தில் உட்படுத்தப் படாத வினைகள் இருக்கின்றன. அவற்றைப் பழவினை என்கின்றோம். பிறவிக்கு உட்பட்ட காலத்தில் உயிர்கள் மேற்கொள்ளும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளின் போது செய்யப்படும் நல்வினை தீவினையின் பலனாக மேலும் ஏறு வினை அல்லது வருவினை வந்து சேரும். இப்பொழுது அன்றாட வாழ்வில் செய்து கொண்டிருக்கின்ற நுகர்வினை, இன்னும் பிறவிகளுக்குக் கொண்டுவரப்படாது இருக்கின்ற பழவினை, இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற வாழ்க்கையில் செய்யும் நல்வினை தீவினையின் காரணமாக வரும் ஏறுவினை எல்லாம் கழிந்து இனி செயல் செய்வதற்கு முனைப்பிலாத சோர்வும் இருவினைகளையும் சமமாகப் பார்க்கும் இருவினை ஒப்பு என்பதும் உயிர்களுக்கு ஏற்பட்டாலே வினை ஒழிவதற்கு வழி திறக்கும் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. முடிவு பெறாது தொடர்ந்து செய்யப்படும் செயல்கள் சக்கரம் போன்று மீண்டும் மீண்டும் நடை பெறுவதால் உயிர்கள் தானாக அவற்றைப் போக்கிக் கொள்ள இயலாது என்றும் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. செயல் செய்யாது சும்மா இருக்கும் நிலைக்கு உயிரை ஆளாக்கி செடியைப் போன்று முளைத்துக்கொண்டே இருக்கும் வினைகளின் வித்தைத் தீய்ப்பதற்கு இறைவன் சிவ குருவாக வெளிப்பட்டு அருளவேண்டும் என்றும் சித்தாந்த சைவம் மேலும் குறிப்பிடுகின்றது.

             உயிர்களைப் பற்றியுள்ள மூன்றாவது மலமாகிய மாயை எனும் மலத்தினை உயிர்கள் தாமாகவே உயிர் அறிவினால் போக்கிக் கொள்ள இயலாதா என்றால், இயலாது. ஏனெனில் உயிரின் அறிவு சிற்றறிவாய் இருப்பதனால் ஒரு பொருளின் உண்மையான, முழுமையான தன்மையை அதனால் அறிய இயலாததாய் உள்ளது. உலகப் பொருள்களையும் தாம் பெறும் நுகர்வுகளையும் அது அதுவாய் அறிவதனால் தன்னைச் சூழ்ந்துள்ள, இறைவனால் அளிக்கப்பெற்றிருக்கின்ற உடல், கருவி, கரணங்கள், நுகர்ச்சிப் பொருள்கள், வாழிடம் போன்றவற்றின் உண்மைப் பயனையும் நோக்கத்தினையும் அறியாமையினால் மாறுபட்டு மயக்கம் உறக் காணும் மாயையை உடையதாய் உள்ளது. வாழுங் காலத்தில் உயிருக்கு நிலையான வாழ்வையும் இன்பத்தினையும் தர வல்லவை எவை என்பதை அறியாது மயக்குற்று இருக்கின்றது. இம்மயக்கம் ஒழிய இறைவனின் முற்றறிவும் பேரறிவும் தேவைப்படுகின்றது. இறைவன் சிவ குருவாய் வெளிப்பட்டு உயிர்களின் அறிவைத் தம் அறிவினைப் போன்று சிவ அறிவாய் மாற்றுவதற்கு உயிர்களின் கண், காது, மூக்கு, வாய், மெய் போன்றவற்றைச் சிவக் கரணங்களாய் மாற்றினாலேயே இம்மயக்கம் நீங்கும். இதனாலே உயிர்கள் தாங்களாகவே தங்களின் மயக்கத்தைப் போக்க இயலாது. இதனையே, “மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்த அமுதே” என்பார் சிவ குருவாய் இறைவனைக் காணப்பெற்ற மாணிக்கவாசகர். “சித்தமலம் அறுவித்து சிவமாக்கி எனை ஆண்ட” என்றும் “ பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே, நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே” என்றும் “ கோகழி ஆண்ட குருமணி” என்றும் இறைவன் சிவகுருவாகத் தமக்கு வந்து அருளியமையை மணிவாசகர் சுட்டுவார்.

             உயிர்களுக்கு அறிவு, முயற்சி, செயல் இருப்பினும் அவை முழுமை பெற்றதாக இருக்கவில்லை! அதனால் தங்களைப் பிணித்துள்ள மும்மலங்களைத் தாங்களாகவே போக்கிக் கொள்ள முடிவதில்லை. அதற்குச் சிவ குருவாக இறைவன் தோன்றி அருள வேண்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். சிற்றறிவு உடைய உயிர்களுக்கு உதவ பேரறிவு உடைய இறைவனாலேயே இயலும் என்கின்றார் திருமூலர். பேர் அறிவு உடைய இறைவனை ஆரியன் என்கின்றார். ஆரியன் என்பது மேலான அறிவினை உடையவன் என்று பொருள்படும். ஆசிரியன் என்ற சொல்லே கால ஓட்டத்தில் ஆரியன் என்று ஆகி இன்று ஆரியன் எனும் வழக்கில் உள்ளது. இன்னும் சிலர் இதனினும் ஒரு படி மேலேபோய் ஆரியன் எனும் ஓர் இனத்தை உருவாக்கி அதனை ஆரிய இனம் என்று ஆக்கிவிட்டனர். இதனை அறியாத சிலரே இறைவன் ஆரிய இனத்தைச் சேர்ந்தவன் என்று அறியாமையால் பிதற்றுகின்றனர். மணிவாசகரின் சிவபுராணத்திலும் திருமுறைகளில் பல இடங்களிலும் வரும் ஆரியன் எனும் சொல்லுக்கு ஆசிரியன் எனும் பொருளே ஏற்புடையது என்பதனைச் சீர்மிகு செந்தமிழர் தம் சிந்தையில் இருத்த வேண்டும். இனம், மொழி, நாடு, குலம், சாதி என்பவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவனாக விளங்கும் இறைவனை ஒரு சிறு பிரிவினுக்குள் அதுவும் இன அடிப்படையில் ஒடுக்கும் அறியாமையை நீங்கி வாழ்வோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!