105. அறிவுப் பூசனையில் சீலம்

1403

உயிருக்கு உயிராய் விளங்குகின்ற பேர் அறிவாளனாகிய பரம்பொருளை அறிவினால் ஆராய்ந்து அறிவது அறிவுப்பூசனை அல்லது ஞானப்பூசனை என்கின்றார் திருமூலர். ஓங்கார ஓசை வடிவினனாக உயிருக்குள் ஒளிந்திருக்கின்ற அப்பரம்பொருளை அகத்திலே செய்யப்படும் பல்வேறு முயற்சிகளால் உணரலாம் என்கின்றார் திருமூலர். அகத்திலே ஆராய்ந்து அறிவதனைச் செறிவுப்பூசனை என்றும் புறத்திலே இறைவனைப் பல திருவடிவங்களில் வைத்து வழிபடுவது புறப்பூசனை என்றும் குறிப்பிடுகின்றார். அகப்பூசனை, புறப்பூசனை ஆகிய இரண்டுக்குமே அடிப்படையாவது உண்மையான அன்பு! அதுவே உண்மையான சிவப் பூசனையாகும் என்பதனை, “உயிர்க்குயிர் ஆய்நிற்றல் ஒண்ஞான பூசை, உயிர்கொளி நோக்கல் மகாயோக பூசை, உயிப்புறும் ஆவாகனம் புறப் பூசை, செயிர்க்கடை நேசம் சிவபூசை யாமே” என்கின்றார். இதனையே, “அன்பால் உருகி உருகி நினைக்கின்ற அடியவர் நெஞ்சினுள்ளே விரைந்து வெளிபட்டு நிற்கின்ற இறைவன் போலியான வழிபாட்டைப் பூசனையில் செய்பவர்களின் மலரையும் நீரையும் கண்டு ஏளனமாகச் சிரித்து அவர்களின் செயலுக்காக நாணி நிற்பான்” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார்.

உலகில் உயிர்கள் வாழ்வதற்கு முதல்வனாய் இருக்கின்ற பெருமானை அடைந்து உய்வதற்கு இருக்கின்ற ஒரே வழி வழிபாடு அல்லது அறிவுப்பூசனை என்ற ஒன்றுதான் என்கின்றார் திருமூலர். அவ்வழிபாட்டினை அல்லது அறிவுப் பூசனையைச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் நால்வகை நன்னெறியாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. வழிபடுவதற்கு ஏற்ற நாடுகளையும் நல்ல நகரங்களையும் அவற்றில் உள்ள முறையான அமைதியானத் திருக்கோயில்களையும் தேடிச் சென்று வாயாரப் பாடி பணிந்து வழிபடுங்கள். அப்படி வழிபடுவதன் மூலம் உள்ளத்தில் உள்ள இறைவன் உணர்வாகத் தோன்றுவான் அல்லது நமது உள்ளமே இறைவன் உறைகின்ற இடமாக மாறும் என்பதனை, “நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும், தேடித் திருந்து சிவபெருமான் என்று, பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின், கூடிய நெஞ்சத்தைக் கோயிலாகக் கொள்வனே” என்கின்றார். இறைவனை ஆலயங்கள் தோறும் தேடிச் சென்று வழிபட்டால் நாளடைவில் சிறுமையுடைய நம்மையும் பொருளாகக் கருதி இறைவன் வெளிப்பட்டு அருளுவான் என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார்.

பத்தி அல்லது அன்போடு சீல நெறியில் நின்று இறைவனை வழிபடுபவர் பத்தர் அல்லது அன்பர் எனப்படுவர் என்றும் இறைவனுக்கு அணுக்கமாய் அவனின் திருவுருவங்களைத் தீண்டி இறைத் தொண்டு செய்யும் நோன்பு நெறியினை உடையவர்கள் தொண்டர் என்றும் அழைக்கப்படுவர் என்கின்றார் திருமூலர். தீது அகற்றல் நன்றாற்றல் முதாலாகிய படிநிலைகளில் நின்று பயில்கின்ற செறிவாளர்கள் சாதகர் என்றும் முழுமையாக அறிவு நிலையில் நின்று வழிபடுபவர் சித்தர் என்றும் பெயர் பெறுவர் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். சீல நெறியில் நிற்கும் பத்தரும் இறைத்தொண்டு செய்து நோன்பு நெறியில் நிற்பவரும் திருநீறு, கணிகைமணி முதலியவை தாங்கித் திருவேடத்தைத் தவறாமல் கொண்டிருப்பர் என்கின்றார் திருமூலர். இறைவனை அகக் காட்சியிலே காணும் அறிவுப் பூசனையை இயற்றும் செறிவு, அறிவுச் சாதகரும் சித்தரும் திருவேடம் தாங்கியும் தாங்காமலும் காணப்படுவர் என்கின்றார்.

சிவபெருமானிடத்திலே இருக்கின்ற சிவ இயல்புகளைப் பெற்றவர் சிவமாம் தன்மை உடையோர் எனப்படுவர். இந்நிலையை எய்தியவரே அறிவு நிலையில் முற்றுப்பெற்றவர் அல்லது மெய்ஞானம் முற்றப்பெற்றவர் எனப்படுவர். மனம் இறைவனிடத்திலேயே அழுந்தி இருக்கும் நிலையைப் பெற்றவரே செறிவு நெறியில் முற்றுப் பெற்றவர் ஆவர். தவறாது இறைவனுக்குச் செய்யும் தொண்டு அல்லது பணிவிடையாகிய பூசனை முற்றினவரே நோன்பு அல்லது கிரியை எனும் நெறியில் வெற்றி பெற்றவர் என்கின்றார். இதனால் ஒவ்வொரு நெறியிலும் நிற்பவர் அதனை இறுதிவரைக் கொண்டு முதிர்தல் வேண்டுமெனப் பெறப்படும். தவிர, அவர் அவருக்கு எற்ற நெறிகளைத் தெரிவு செய்தலும் அவற்றில் உறைப்பாய் நிற்றலும் வழிபாட்டில் முதன்மையானது என்று அறியக் கிடக்கின்றது.

இதனாலேயே பல்வேறு நெறிகளில் நின்ற நாயன்மார்களின் வராலாறுகள் இறைவனால் நமக்கு அளிக்கப்பெற்றிருக்கின்றது என்பர். அன்பை முன்னிலைப்படுத்தித் தம்மால் இயலும் வகையில் செய்யப்படும் வழிபாடே உயர்ந்த வழிபாடாய் அமையும் என்பர். இதனால் சமய நூல்களில் குறிக்கப் பெற்றுள்ள நூல்முறை வழிபாடு, அன்புமுறை வழிபாடு என இரு வகையான வழிபாடுகள் உண்டு என்பர். இவ்விரு முறைகளை முறையே, “விதி மார்க்கம், பத்தி மார்க்கம்” என்று வடமொழியில் குறிப்பிடுவர்.

பெருமானின் திருவடிப் பேரின்பத்திற்கு வழிகாட்டும் வீட்டின்ப நெறிகளாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு ஆகிய நூல்முறை நெறிகளில் நிற்க விரும்புவோர் சித்தாந்த சைவ ஆசான்களை அடைந்து தீக்கைப் பெற்று வழிபாடுகளைச் செய்தல் வேண்டும் என்று சித்தாந்த மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. தீக்கை வகைகள், சமயம், சிறப்பு, நிருவாணம், ஆசான் அபிடேகம் என நான்கு வகைப் படும். சமய தீக்கைப் பெற்ற ஒருவர், தம் பரு உடம்பைப் பல வகையில் தூய்மை செய்து கொள்ளல் ஆகும். இதன் பயனாக ஒருவர், இது நாள் வரை எல்லாச் செயல்களையும் தானே செய்து வருகின்றேன் என்று மயங்கி இருந்து பின் அம்மயக்கம் நீங்கி எல்லாச் செயல்களையும் சிவன் செயல் என்று உணரும் வாய்ப்பினைப் பெறுவார். இதனால் நாள் தவறாது திருக்கோயில்களிலும் இல்லங்களிலும் இறைவனை வழிபடுகின்ற செயலைச் செய்வார்.

மலர் பறித்தல், திருவலகிடுதல், திருக்கோயிலை மெழுகுதல், இறைவனின் திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு வருதல், பல்லக்குச் சுமத்தல், தீவர்த்தி ஏந்துதல், கவரி வீசுதல், சங்கு ஊதுதல், கண்டாமணியை ஒலித்தல், திருக்குளம் வெட்டுதல், திருப்பூந்தோட்டம் அமைத்தல், வாயாறப் பாடுதல், அடியார்களுக்கு உணவளித்தல், போன்ற பணிகளைச் செவ்வனச் செய்வார். இச்சீல நெறியில் நின்று நாயன்மார்கள் திருக்கோயில்களில் உழவாரப் பணி செய்ததும் அடியார்களுக்கு உணவளித்ததும் அடியார்களுக்கு உடை வெளுத்துக் கொடுத்ததும் திருக்கோயில்களில் விளக்கெரித்ததும் சந்தனம் அரைத்துக் கொடுத்ததும் குங்கிலியம் புகைத்தலும் திருக்குளத்தைத் தூறு எடுத்ததும் திருக்கோவிலுக்குத் திருவமுது சமைத்துக் கொடுத்ததும் சீல நெறியில் நின்று இயற்றிய அறிவுப் பூசனைக்கு பெரிய புராணத்தில் சான்று காட்டப் பெறுகிறது.

சிவத் தீக்கை அல்லது சிறப்புத் தீக்கைப் பெற்றவர், சிவ மந்திரங்களை உறைப்புடன் கூறிப் பூசனைகள் இயற்றுவதால் பெறும் பயனை அடைவர் என்கின்றார் திருமூலர். இவர்கள் ஒவ்வொரு நாளும் தவறாது இறைவனின் திருமேனியைத் தீண்டி திருமஞ்சனம் ஆட்டுவித்து, மலரிட்டு, நீரிட்டுத் திருவமுது படைத்துத் தூப தீபங்கள் இயற்றி நாத்தழும்பேறு மந்திரங்களைக் கூறிப் பூசனை இயற்றுவர். அரசன் ஒருவனுக்கு அடிமை ஒருவன் பணிந்து பணிவிடைகள் செய்வது போல இறைவனுக்குத் தவறாமல் நாளும் நாளும் பணிவிடையைச் செய்யும் அறிவுப் பூசனையை மேற்கொள்வர்.

நிருவாணத் தீக்கையைப் பெற்றவர் சிவச் செறிவினை இயற்றி இறைவனை முழுமையாக உள்ளத்திலே கண்டு, தன்னைப் பஞ்சபூதங்களினும் வேறாகக் கண்டு, ஐம்புலன்களின் தொடக்குகளை விட்டு அகன்று, செயல் செய்வதிலே நாட்டம் இன்றி, உயிர்ப்புக் காற்றைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருநிலைப் படுத்தி, ஆறு நிலைக்களங்களிலே மனதை நிறுத்தி, மாசு அற்று, அகத்திலே இறைவனை வழிபட்டு மகிழும் அறிவுப் பூசனையைச் செய்வர்.

அபிடேக ஆசிரியர் தீக்கைப் பெற்றவர்கள் இறை உண்மையை உணர்ந்த மெய்யறிவு ஆசான்களாக விளங்கி அவ்வறிவினைப் பெறுதற்குப் பிறர்க்குத் தீக்கை செய்விக்கும் தகுதியைப் பெற்றவர்களாக பெரிய அறிவு நிலையை எட்டி, இறைவனை உருவமற்ற நிலையில் அறிவுக்கு அறிவாய் வழிபடும் அறிவுப் பூசனையை இயற்றுவர். இவ்விதிமுறைப் பூசனையை விடுத்துக் கண்ணப்பர் இயற்றியது போன்ற அன்புமுறை அறிவுப்பூசனையும் பெருமானுக்கு ஏற்புடையனவே என்று பெரியபுராணம் போன்ற அடியார் வரலாறு கூறும் சைவப் பெட்டகங்கள் பறைசாற்றுகின்றன. இன்பமே எந்நாளும் துன்பமில்லை!