115. சிவ ஆசான் வெளிப்படல்

1438

115. சிவ ஆசான் வெளிப்படல்

சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் நன்னெறி நான்கினால் செவ்வியுற்று, நல்ல செயல் தீய செயல் எனும் வேறுபாடு இன்றி எல்லாம் சிவன் செயல் என்று முதிர்ச்சியுற்ற உயிர், தன்னைப் பற்றியுள்ள பற்றுக்கள் நீங்குதற்குத் தயாராகிவிட்ட நிலையில், இறைவனின் திருவருள் வீழ்ச்சி உயிரின் மீது பதியும் என்பதனை அறிவோம். உயிர்களின் மீது அருள்வீழ்ச்சி பதிதலை, இறைவனே சிவஆசானாக வெளிப்பட்டுப் பதிவிப்பான் என்கின்றார் திருமூலர். சிவனே சிவஆசானாக வெளிப்படுதலைச் சிவகுரு தரிசனம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். சிவனே சிவஆசானாக வெளிப்பட்டு அருளும் அந்ந்நிலையில், அச்சிவ ஆசானின் இயல்பும் அச்சிவஆசானின் திருவருள் பதியப்பெறும் உயிரின் இயல்பும் எவ்வாறு இருக்கும் என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

மாந்தரைப் போன்று வடிவம் தாங்கி வருகின்ற அச்சிவஆசான், என்றும் உள்ள உண்மைப் பொருளாகிய அப்பெருமானிடத்து அன்பு உண்டாகும்படிச் செய்து எல்லா உயிர்களாலும் தொழப்படவேண்டிய தன் திருவடிகளைப் பற்றிக் கொள்ளக் கொடுப்பான் என்கின்றார். மாந்த வடிவில் வரும் அச்சிவஆசான், தன் தூய திருவாக்கால் உயிரின் ஐயங்களைப் போக்கி உயிராகிய தன்னையும் உலகப் பொருள்களையும் இறைவனையும் அதன் உண்மை நிலையில் உள்ளவாறு அறியச் செய்வான் என்கின்றார். இதனால் பதி என்னும் இறைவன் நிலையானவன் என்றும் பாசம் என்னும் உலகம் நிலையில்லாது மாற்றம் அடையக்கூடியது என்றும் பசு எனும் உயிர் எதைக் கூடி நிற்கின்றதோ அது அதுவாய்ச் சார்ந்து நிற்பது என்றும் உயிர்களுக்குத் தெளிவினை ஏற்படுத்துவான் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு சிவனைத் தவிர வேறு யாரும் செய்ய இயலாது என்பதனால், இவ்வாறு செய்யக் கூடிய சிவஆசானைச் சிவம் என்று உணர்தலே மெய்யுணர்வு பெறுதல் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உயிருக்கு மேற்கூறியத் தெளிவினை ஏற்படுத்தக் கூடிய சிவமாம் தன்மை எய்தி நிற்கும் அருளாளரும் சிவ ஆசான் எனப்படுவர் என்கின்றார் திருமூலர். எனவே சிவத்தை உணரும் உணர்வை ஏற்படுத்தக் கூடியவரே சிவஆசான் என்கின்றார் திருமூலர். இதனைப்,

“பத்தி பணிந்துப் பரவும் அடிநல்கிச்,
சுத்த உரையால் துரிசுஅறச் சோதித்துச்,
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்,
சித்தம் இறையே சிவகுரு ஆமே”

என்று குறிப்பிடுகின்றார்.

உலக மாந்தருள் ஒருவரைப் போன்று தோற்றம் அளிக்கும் குற்றம் சற்றும் இல்லாத அறிவு ஆசான் ஆகிய சிவஆசான், உயிர்கள் பிற உயிர்களைச் சார்ந்தும் அவற்றின் மீது பற்றும் அன்பும் கொண்டிருக்கின்ற நிலையினைத் தெளிவித்து, அக்கட்டிலிருந்து உயிர்களை விடுவிக்கும் ஆற்றலைக் கொடுப்பான் என்கின்றார். சிவ ஆசான் உயிர்களுக்கு உலக பொருட்களின் மீது உள்ல பற்றினைத் தெளிவித்து அவற்றிலிருந்து உயிரை விடுவிப்பான் என்கின்றார். உடம்பின் மீது உயிர்கள் கொண்டுள்ள பற்றினையும் போக்கி உலகத்தாரின் போலியான புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மகிழ்வதும் துன்புறுவதும் இல்லாத உயிர் முதிர்ந்த நிலையை இவ்வுலகிலேயே பெறச் செய்யும் இயல்பினைக் கொடுக்கக் கூடிய ஆசானே உண்மைச் சிவஆசான் என்பதனைப்,

“பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு,
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே,
கூசற்ற முத்தியில் கூட்டலால் நாட்டகத்து,
ஆசுஅற்ற சற்குரு அப்பரம் ஆமே”

என்று குறிப்பிடுகின்றார்.

சிவஆசானாகப் பெருமான் வெளிப்பட்டு அருளும்போது, இறைவனிடத்து மாறாத அன்பும் அவ்வன்பினால் ஓதப் பெறும் பல வகை மந்திரங்களின் ஆற்றல்களும் சிவச்செறிவினில் நிலைப்பெற்று நிற்கும் உறுதிப்பாடும் கைவரக் கிட்டும் என்கின்றார் திருமூலர். சிவச் செறிவினில் கிட்டும் எண்வகைப் பேறுகளும் (அட்டமாசித்தி) மறைப்பாற்றலாய் இருந்த பெருமானின் திருவருள் வனப்பாற்றலாய் இயங்குகின்ற தெளிவும் இறைவன் அருளுகின்ற சிவ அறிவும் அவ்வறிவால் சிவனை உணரும் உணர்வும் சிவன் உயிரைச் சிவமாம் தன்மையை அடையச் செய்யும் பேறும் சிவ ஆசானால் கிட்டும் என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சிவனே சிவ ஆசானாக மாந்த வடிவில் வெளிப்பட்டுச் செவ்வியுற்ற உயிர்களின் பற்றுக்களைப் போக்கி அவற்றைத் தூய்மை செய்கின்ற போது உயிர்கள் உலகப் பற்றுக்களையே வேட்டையாடுகின்ற கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐம்புலன்களின் வேடர் கூட்டத்திலிருந்து நீங்கி அரசனாகிய தன் தந்தை சிவ பெருமானை அடைந்து நிற்கும் என்கின்றார் திருமூலர். இவ்வாறு பெருமான் சிவ ஆசானாக மாந்த வடிவில் வெளிப்பட்டு அருளும் சிறப்பினை அறியும் சிவ அறிவு வரப்பெறாதவர்கள் அச்சிவஆசானை அறியாமையால் வேறுபடக் கண்டு அச்சிவஆசானை நம்மைப் போன்ற மாந்தரில் ஒருவராக எண்ணுவர் என்கின்றார் திருமூலர். எனினும் சிவ அறிவினைக் கண்ணாகக் கொண்ட முதிர்ச்சியுற்றோர் அச்சிவ ஆசானை, “இவன் சிவன்” என்று அறிந்து அப்பெருமானின் திருவடிகளை வணங்கி நிற்பர் என்கின்றார் திருமூலர். இதனைச்

“சுத்த சிவகுருவாய் வந்து தூய்மை செய்,
தத்தனை நல்குஅருள் காணா அதிமூடர்,
பொய்த்தகு கண்ணால் நமர்என்பர் புண்ணியர்,
அத்தன் இவன்என்று அடிபணி வாரே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சிவ ஆசான் வெளிப்பட்டு உயிருக்கு அருளும் போது உயிரின் அறிவு அறிகின்ற யாவும் சிவன் தனது அருளால் அறிவிப்பனவே ஆகும் என்கின்றார் திருமூலர். இந்நிலையில் உயிரின் அறிவு அறிவன யாவும் சிவனாகவே இருப்பதனால், சிவனும் உயிரின் அறிவில் பிறவற்றைத் தோற்றுவிக்காது தன்னை மட்டும் தோற்றுவித்து நிற்பான் என்கின்றார் திருமூலர். உயிரின் அறிவு முதிர்ச்சி அடையாத பொழுது சிவன் உயிரின் அறியாமைக்கும் பற்றுக்கும் ஈடாகத் தன்னை மறைத்து உலகை உணர்த்தி நிற்பான் என்றும் உயிர் முதிர்ச்சியுற்ற நிலையில் உலகையும் பற்றையும் மறைத்துத் தன்னையே உணர்த்தி நிற்பான் என்றும் மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுவதனைத் திருமூலரும் குறிப்பிடுகின்றார்.

சிவஅறிவும் திருவடி இன்பத்தின் பயனும் இறைவனை மறவாத அருள் நிலையும் உயிர் மயக்கத்தை விட்டொழிப்பதற்கு ஏதுவாகிய உண்மைப் பொருளை உடைய சமய நூல்களின் முடிந்த முடிபும் சிவனே சிவஆசானாக வராவிடில் ஒருவரும் அவற்றை அறிய இயலாது என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். எனவே சிவன் சிவஆசானாய் மாந்த வடிவில் வந்து ஆட்கொள்வான் என்ற சித்தாந்த சைவ கொள்கையைத் திருமூலரும் உணர்த்தி நிற்கின்றார். மேலும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நன்நெறி நான்கினில் முதல் மூன்று நெறிகள் சமய ஆசான்களின் துணையால் கைவரப் பெறக்கூடும் என்றும் அறிவு நெறியானது சிவஆசானின் துணையால் மட்டுமே நிறைவு பெறும் என்பதனைப்,

“பத்தியும் ஞான வைராக்கியமும் பர,
சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால்,
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை,
சத்தி அருள்தரின் தான் எளிதாமே”

என்று குறிப்பிடுகின்றார்.

மாந்தர்களின் பரு உடம்பு நீங்கிய பின்பே இறைவனைக் கண்டு அவனைக் காணும் இன்பத்தினை அடைய முடியும் என்று குறிப்பிடுவர். ஆனால் உடலோடு இவ்வுலகில் வாழும் காலத்திலேயே அவ்விறைவனை மாந்த வடிவிலே கண்டு இவ்விறைவனைக் காணுகின்ற இன்பத்தினை நுகரக்கூடிய பேற்றினை அளிக்க வல்லவன் சிவ ஆசானாக வெளிப்படும் சிவ பெருமான் என்கின்றார் திருமூலர். உயிர் சிவ பெருமானை நிலைத்த பேறாக எண்ணும் செவ்வி அல்லது முதிர்ச்சி அடைந்த உடனேயே, தானே சிவஆசானாக வெளிப்பட்டு அருள் செய்வான் பெருமான் என்றும் சிவஆசானைத் தேடி அலையத் தேவை இல்லை என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சமய ஆசான்களின் அருளால் இப்பெரிய பூமியின் இயல்புகளைப் பொதுவாக அறிந்தேன். சமய ஆசான்களின் அருளால் சிவனது இயல்புகளையும் உயிர் இயல்புகளையும் சமய கேள்விகளையும் நூல்களையும் ஓதி உணர்ந்து உலகப் பற்றுக்களை விடாது உலக வாழ்க்கையில் உழன்று வந்தேன். அதன் விளைவாகப் பின்பு உயிர் முதிர்ச்சியுற்று சிவ பெருமான் சிவஆசானாக வெளிப்பட்ட போது உலக முழுவதின் உண்மை இயல்பினை உனர்ந்தேன். சிவ பெருமானின் உண்மை இயல்பைச் சிவ பெருமானின் சிவஅறிவைத் துணைக் கொண்டு உணர்ந்தேன். அப்பெருமானின் திருவருளால் என் அறிவை இழந்து அவனது அருளையே கண்ணாகக் கொண்டு உலக வாழ்க்கையில் பற்று சிறிதும் இல்லாதவன் ஆயினேன், அதனால் இவ்வுடம்பில் இருந்தும் அதனில் இருந்து நீங்கி நின்று இறைவனை உணரும் நிலையை உடையவன் ஆயினேன் என்று திருமூலர் குறிப்பிடுவதன் வழி திருமந்திரம் குறிப்பிடும் சமய ஆசானின் உதவியையும் சிவஆசான் செய்திடும் திருவருளையும் நன்கு தெளிந்து இன்ப நிலையை அடைவோமாக!

இன்பமே எந்நாளும் துன்ப மில்லை!