109. ஆசான் மாணாக்கர் நெறி

1259

இறைவனிடத்தே கொண்ட உறவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வுமே நம்மை இறையறிவு பெறுவதற்கும் அவ்விறைவனிடத்தே இருக்கும் பேரின்பத்தினை அடைந்து பிறவி அறுப்பதற்கும் துணை நிற்கும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இறைவனிடத்தே வைக்கின்ற உறவு முறைகளில் ஆசான் மாணாக்கர் உறவினைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆசான் மாணாக்க உறவு முறையை ஆசான் மாணாக்கர் நெறி அல்லது சன்மார்க்க நெறி என்று வடமொழியில் குறிப்பிடுவர். சிவப்பரம்பொருளின் உண்மையான இயல்பினை விளக்குவனவாக இருபத்து எட்டு சிவாகமங்களும் பன்னிரண்டு திருமுறைகளும் பதினான்கு சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களும் விளங்குகின்றன. இவற்றின் உண்மைகளைப் பிழையற உணராது, உள்ளவாறு உணர்ந்து, அதன் பயனாகப் பற்று, சினம், உண்மைகளைப் பிழைபட உணர்தல் எனும் குற்றங்களை நீங்கிப் பரம்பொருளோடு ஒன்றுபடும் நிலை கிடைக்கப்பெற்றுப் பிறவியை வென்றவரே வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்தவர் என்பார் திருமூலர்.

சீடமைநெறி என்றும் வடமொழியில் அழைக்கப்பெறும் இந்நெறியின் வழி இறைவனிடத்தில் மாணாக்கர் எனும் உறவினை நேரடியாகப் பெற்றவர்கள், இவ்வுலகிலேயே உயிர்முற்றப்பெற்று வாழ்ந்த நாயன்மார்களும் இறைவனை நேரில் கண்ட மெய்யடியார்களும் ஆவர். உயிர் முற்றப்பெற்றுப் பற்று, சினம், உண்மைப் பொருள்களைப் பிழையுற உணர்தல்(காமம், வெகுளி, மயக்கம்) நீங்கப் பெற்றவர்களுக்கே இறைவன் சிவஆசானாக வெளிப்பட்டுச் சிவஅறிவினை நல்கினான். பல பிறவிகளில் இறைவனைப் பயின்று செவ்வியுற்ற அடியார்களுக்கே இறைவன் வெளிப்பட்டுத் தன்னை அறியும் அறிவினை நல்கினான். அவ்வகையில் ஆசான் மாணாக்க நெறிக்குச் சான்றாக மணிவாசகரையும் திருமூலரையும் குறிப்பிடுவர். சீலம், நோன்பு, செறிவு, அறிவு பற்றிய கல்வியினையும் அவற்றிற்குரிய செயற்பாடுகளையும் நன்குக் கற்று அறிந்த மணிவாசகருக்குப் பெருமான் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் அடியில் ஆசானாக வந்து அமர்ந்து இருந்து சிவஅறிவினை உணர்த்தினான் என்று மணிவாசகரின் வரலாறு குறிப்பிடுகின்றது. திருக்கயிலாயத்தில் தென்முகக் கடவுளாய், ஆசான் வடிவில் பெருமான் இருந்து, தமக்குச் சிவ அறிவினை உணர்த்தியமையைத் திருமூலர் தம் வரலாறு கூறும் பகுதியில் தாமே குறிப்பிடுவார்.

நம்மைப் போன்று செவ்வியடையாத உயிர்கள் பெருமானிடத்திலே ஆசான் மாணாக்க நெறியில் உறவு வைத்துக் கொள்வது என்பது மாணிக்கவாசகர், திருமூலர் போன்றோர் பின்பற்றிக் காட்டிய ஆசான் மாணாக்க உறவு நெறியினைப் பின்பற்றுவதுதான் என்பதனைத் தெளிதல் வேண்டும். பெருமான் ஆசானாக வந்து உணர்த்திய சிவஅறிவினை மாணாக்கர்களாக இருந்து கேட்டு உணர்ந்த நெறியினை மணிவாசகரும் திருமூலரும் இறையன்பு ஒழுக ஒழுகத் தேன் தமிழில் அருளியுள்ளனர். செவ்வியுறாத உயிர்களாகிய நம்மைப் போன்றோர், அவர்கள் இறையறிவுப் பெற்று அருளிய தமிழ் மந்திரங்களை ஓதி உணர்ந்து, அதன்படி நின்றால், அவர்கள் பின்பற்றி வெற்றி கண்ட ஆசான் மாணாக்க நெறியில் வெற்றி பெற நமக்கும் அப்பெருமான் அவர்களுக்கு வெளிப்பட்டு அருளியதைப் போன்று, சிவ ஆசானாக வெளிப்படுவான் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

மணிவாசகர், திருமூலர், திருஞானசம்பந்தர் போன்ற அடியார்கள், சிவஅறிவு பெற்றுப் பாடியருளியத் தமிழ் மந்திரங்களை, அவர்களை ஆசானாகக் கொண்டு ஓதினால், அவர்களுக்குப் பெருமான் ஆசானாக நின்று உணர்த்திய முறையில் நமக்கும் உணர்த்துவான் என்பதனை, “வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால், வாடின் ஞானம் என்னாவது எந்தை வலஞ்சுழி, நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டுஇசை, பாடு ஞானம்வல்லார் அடிசேர்வது ஞானமே” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வீடு பேறும், அதற்கு ஏதுவாய சிவஅறிவும் பெற விரும்புவீர்களானால், உண்ணா நோன்பு மேற்கொண்டு உடல் வாடுவதால் சிவஅறிவு வந்து விடாது என்கின்றார். திருவலஞ்சுழியில் உள்ள பெருமானை, அவனின் திருவருளால் திருஞானசம்பந்தனாகிய யான் ஓதியருளிய செந்தமிழை இசையோடு ஓதும் அறிவு வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபட்டால் சிவஅறிவு கிட்டும் என்று குறிப்பிடுகின்றார். எனவே சிவ அறிவினைச் சிவப்பரம்பொருளால் ஆசானாக இருந்து நேரடியாக அருளப் பெற்ற நாயன்மார்களின் திருவடிகளையும் அவர்களின் சிவஅறிவு பொதிந்த, அருள் நிகழ்ச்சிகளை(அற்புதங்கள்) நிகழ்த்திய தமிழ் மந்திரங்களையும் ஓதி உணர்ந்து, அதன்படி நிற்றலே சிவஅறிவு பெறுதற்கு வாயிலாகும் என்பதனைத் தெளிதல் வேண்டும்.

இறைவனை ஆசானாகவும் தங்களை மாணாக்கனாகவும் கொண்டுச் சிவஅறிவினைப் பெற முயலும் நம்மைப் போன்றோருக்கு, நாயன்மார்களே உண்மையான மெய்யறிவு ஆசான்கள். இவர்களின் திருவாய்மொழிந்த தமிழ் மந்திரங்களே அருளுரைகள். இவர்களின் அருளுரைகள், இறைவன் அவர்களின் உள்ளிருந்து உரைத்தவை என்று அவர்களே அவர்களின் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். இந்நாயன்மார்களின் திருவருள் உரைகளை உய்த்து உணர்ந்து வாழ்கின்றவர் உண்மைச் சிவஅறிவைப் பெறுவர். சிவப்பரம்பொருளின் சிவஅறிவைப் பெறாதவர் உண்மைச் சிவஅறிவினைப் பிறருக்குக் காட்ட மாட்டாதவர். உண்மைச் சிவஅறிவினைப் பெற்ற நாயன்மார்களைப் போற்றாத இவர்கள், சிவனது உண்மை இயல்பினை உணர்த்தும் நல்லாசான்களாக விளங்கமாட்டார்கள். இவர்கள் உலகச் சிற்றின்பங்களைப் பெற உதவ இயலுமேயன்றிப் பிறவியின் குறிக்கோளாகிய, திருவடிப் பேற்றினை அடைந்து, பிறவியறுதற்குத் துணை நிற்கமாட்டார்கள் என்கின்றார் திருமூலர். இத்தகையோரைப் பின்பற்றுதல் சித்தாந்த சைவம் குறிப்பிடும் உண்மையான ஆசான் மாணாக்க நெறியும் அல்ல என்பதனைத், “தெளிவு அறியாதார் சிவனை அறியார், தெளிவு அறியாதார் சீவனும் ஆகார், தெளிவு அறியாதார் சிவம் ஆகமாட்டார், தெளிவு அறி யாதார் தீரார் பிறப்பே” என்று குறிப்பிடுகின்றார்.

சிவ அன்பர் ஒருவர், உயிர் முற்றப் பெற்றப் பின்பு, தான் சிவனுக்குரிய உடைமைப் பொருள் என்று உணர்ந்து அவனுக்குத் தன்னை உரிமைப்படுத்திக் கொள்ளுதலே மெய்யறிவு எனப்படுகின்றது. இதனையே உண்மைச் சிவஅறிவு ஆசான்கள் தம் மாணாக்கர்களுக்கு உணர்த்துவர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உயிரானது சிவஅறிவு பெறுவதற்காக உயிருக்குக் கருவி கரணங்கள் எல்லாம் இறைவனால் பொருத்தப்பெற்றிருக்கின்றன. இவை உயிரினின்றும் வேறானவை. இக்கருவிக் கரணங்களை விட்டு நீங்கி, இறைவனுடன் உயிரைப் பொருத்திப் பெருமான் உயிருக்குச் செய்யும் உதவியை இடைவிடாது உணர்தல் வேண்டும். முன்பு அன்பினால் நெகிழாமல் வன்மையுற்று இருந்த மனத்தை இப்போது நெகிழ்ந்து உருகச் செய்து, அவ்வன்பினாலே சிவனின் உண்மை இயல்பின் வெளிப்பாட்டில் அழுந்தி அசைவின்றி நின்று உணர்தலே முழுமை பெற்றச் சிவஅறிவு பெற்ற ஆசான் மாணாக்க நிலையாகும். இதனை உணர்த்துபவர்களே உண்மைச் சிவஅறிவு ஆசான்கள் என்கின்றார் திருமூலர்.

ஆசான் மாணாக்க நெறியில், மாணாக்கர் ஆசானுக்கு அன்புப் பணிவிடைகள் செய்தல் உண்டு என்கின்றார் திருமூலர். இறைவனே நல்லாசானாக வெளிப்பட்டு அருளும் பேறு பெற்ற நாயன்மார்கள் ஆசான் பணிவிடைகள் செய்துள்ளனர். அவர்கள், ஆசானாக வந்தருளிய பெருமானைக் கண்ணால் காண்டல், பெருமானுக்குத் திருமுழுக்குச் செய்தல், ஒப்பனை செய்தல், புகை காட்டுதல், ஒளி காட்டுதல், திருவமுது படைத்தல், மலரிடுதல், முறைப்படி வழிபடல், பெருமானை மனத்தில் எண்ணுதல், பெருமானின் திருவடியைத் தொட்டு வணங்குதல், பெருமானைப் போற்றிப் பாடுதல், பெருமானின் திருவடிகளைத் தலைமேல் சூடிக்கொள்ளுதல் போன்றவற்றைச் செய்தனர். இதனாலே அவர்கட்குச் சிவ அறிவுப்பெருகித் திருவடிப்பேறு கிட்டியது என்பதனைத், “தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப், பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக், குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத், தரும்முத்திச் சார்பூட்டும் சன்மார்க்கந் தானே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

தமிழ்ச் சைவர்களுக்கு நாயன்மார்களும், நாயன்மார்களின் நெறிப்படி வாழ்கின்ற நல்லடியார்களுமே நல்லாசான்கள் ஆவர். நாயன்மார்களின் பொற்றாள்களை நம் உயிர்த்துணையாகக் கொண்டு வாழ்வதே தமிழ்ச் சைவர்களுக்கு உண்மையான ஆசான் மாணாக்க நெறியாகும். ஆசான் மாணாக்க நெறியில் நிற்க விழையும் நம் போன்றோர், சிவபெருமானின் சிவஅறிவினைப் பெற்று நமக்கு அதனை உணர்த்திய நாயன்மார்களான அருள் ஆசான்களுக்கு மேற்குறிப்பிட்டபடி அன்புப்பணிவிடை செய்தலே உண்மைச் சிவஅறிவைக் கூட்டுவிக்கும் என்பது தெளிவு. இன்பமே எந்நாளும் துன்பமில்லை!