பிறவித் துன்பம் நீங்க உயிர்த்தொண்டு

1895

பிறவித் துன்பம் நீங்குவதற்கு இறைவனிடத்திலும் அவன் உள்ளிருந்து இயக்குகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுதலே எளிய வழி என்று அன்பு நெறியாகிய சிவ நெறி குறிப்பிடும். உடல், உலகம், உடலுள் இருக்கின்ற மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி என்ற உட்கருவிகள், மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் உறவினர், செல்வம், வீடு, வாசல் என்று உலக நுகர்ச்சிப் பொருள்களையும் தந்த இறைவனுக்கு நன்றி மனப்பான்மையால் சிவத்தொண்டுகள் செய்தால் அன்பு பெருக்கெடுக்கும் பிறவி நீங்கும் என்று முன்பு கண்டோம். இனி பெருமான் உள்ளே வாழுகின்ற உயிர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் எப்படி அன்பினைப் பெருக்கிப் பிறவிப் பெருங்கடலை நீந்தலாம் என்பதனைக் காண்போம்.

“அன்பர் பணி செய்திடவே ஆளாக்கி எனை விட்டுவிட்டால், இன்ப நிலை தானே வந்து எய்துமே பராபரமே” என்பார் தாயுமானவ அடிகள். உயிர்களுக்கு அன்பு செய்தால் பெருமான் திருவடிப் பேறு கிட்டும் என்கிறார் தாயுமானவர். “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” எனவும் “நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று  ஈயில் அது படமாடக் கோயில் பகவர்க்கதாமே” என்கின்றார் திருமூலர். இனம், மொழி, நிறம், சமயம், நாடு, சாதி, படிப்பு, அழகு, வயது என்ற வேறுபாடுகளையெல்லாம் மறந்து எவர் ஒருவர் தன்னளவில் இயன்ற உதவிகளைப் பிற உயிர்களுக்குச் செய்கின்றாரோ அவரே எளிதில் இறைவனை அடையலாம்; பிறவி துன்பத்தை நீங்கலாம் என்று வாழ்ந்து காட்டிய அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுகின்றனர்.

உணவு, உடை, பொருள், உழைப்பு, அறிவு, என்று எது நம்மால் முடியுமோ அவற்றை ஈந்து மக்கள் தொண்டினைச் செய்திருக்கின்றனர் நம் அருளாளர்கள். பணம் இல்லாத திருக்குறிப்புத்தொண்டர் எனும் நாயனார் அடியவருக்குத் துணி வெளுத்துக் கொடுத்துத் தம் உழைப்பைக் கொடுத்திருக்கின்றார்.  இளையான்குடி மாறனார் பசித்துத் தம் இல்லம் வந்த அடியார்களுக்கு உணவளித்திருக்கின்றார். சிறுத்தொண்டர் சிவனடியார்களைத் தேடிச் சென்று உணவளித்துள்ளார். கணநாதர் என்னும் நாயனார் இலவயமாக மக்களுக்குச் சமய அறிவையும் கல்வியையும் புகட்டி இருக்கின்றார். மேன்மை மிகு பைந்தமிழர் போற்றும் சைவ சமயத்தின் இரு கண்களான திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் மடங்கள் அமைத்து மக்கள் தொண்டு செய்திருக்கின்றார்கள் என்பதனைச் தெய்வச் சேக்கிழார் தாம் அருளிய திருத்தொண்டர் புராணத்தில் திறம்பட விளக்கியுள்ளார்.

நாமும் இன்றைய சூழலுக்கு ஏற்ப பல வழிகளில் மக்கள் தொண்டினைச் செய்து அன்பின் பிழம்பாய்த் திகழலாம். வேலை வாய்ப்புக்கள், கல்வி வாய்ப்புக்கள், பொருளீட்டும் வாய்ப்புக்கள் போன்றவற்றைத் தெரிவிக்கவும் அதனைப் பெறுவதற்கும் துணை நின்று தொண்டாற்றலாம். அவரவர் பணி இடங்களிலேயும் ஆலயங்களிலேயும் பள்ளிகளிலேயும் பனிமனைகளிலேயும் இருந்தவாறே கல்வி, சமயம், ஒழுக்கம், தன்முனைப்பு, தொழிற்கல்வி போன்றவற்றினை நல்கி தொண்டாற்றலாம். தம்மால் முடியாவிடில் முடிந்தவர்களின் துணையை நாடி மக்களுக்கு விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் கொடுப்பதும் அரிய மக்கள் தொண்டே! ஆலயங்கள் பள்ளிகள் போன்றவை நன்னெறிப் பண்புகளை வளர்ப்பதிலும் சமய அறிவைப் பெருக்குவதிலும் ஆற்றுகின்ற பணிகளும் மக்கள் தொண்டே என்பது தெளிதற்பாலது.

இல்லத் தலைவர்கள், இல்லத்தில் இருந்தபடியே உயிர்த்தொண்டினைச் செய்யலாம் என்று வள்ளுவப் பேராசான் அழகுற இயம்புவார். இல்லத்தில் உள்ளவரிடத்தே உண்மையான அன்பு பாராட்டுதலே பிறவிப் பெருந்துன்பத்தை அறுக்க வழிவகுத்துவிடும் என்பார், இயல்புடைய மூவர்க்கும் நல்ல துணையாக நிற்றலே நம் பிறவியை அறுக்க உதவும் என்பார். ஈன்ற பெற்றோர், இன்பத்திலும் துன்பத்திலும் நமக்கு உறுதுணையாக இருக்கும் மனைவி, நம் செல்வமாகிய பிள்ளைகள் ஆகிய இம்மூவரிடத்தே உண்மையான அன்பு பாராட்டி, அவர்களுக்கு உற்ற துணையாய் நின்று அறநெறியில் தவறாது ஒழுகினால், அன்பின் பிழம்பாய் மாறி, இறை உலகிற்கு வழி திறக்கும் என்பார் பொய்யாமொழிப் புலவர்.

தவிர இல்லவாழ்வின் வழி நின்று அன்பு பெருக்கெடுக்கும் வழியினைக் கண்டு பிறவி அறுதலுக்கு ஆற்ற வேண்டிய இன்னும் சில உயிர்த்தொண்டுகளைச் சொல்வார் நம் பேராசான். நம் முன்னோர் தெய்வம், விருந்தினர், உறவினர், என்பவரோடு தன்னையும் அன்போடு வைத்துப் போற்றுபவர் இல்லறத் தவம் இயற்றுபவர் என்கின்றார். வயது முதிர்ந்த பெற்றோரை அன்போடு வைத்துப் போற்றுதலும், பெற்ற பிள்ளைகளுக்கு வேண்டுவன அமைத்துக்கொடுத்தலும், அவர்களை அன்பு பாராட்டி வளர்த்தலும், வாழ்வில் உயர்வதற்கு வாழ்க்கைத் துணை நலமாக அமைந்த இல்லாளை அன்போடு பேணியும் உடன் பிறப்புக்களை நம் அரண்களாக எண்ணி அன்பு பாராட்டியும் வரியவரையும் உறவினரையும் அன்பால் காத்தும் இறைவழிபாட்டினைத் தவறாது செய்தும் மனத்தால், வாக்கால், உடலால் நல்லவற்றையே செய்வோமேயானால் இறை உலகிற்கு வழி பிறந்து பிறவி அறும் என்கின்றார் திருவள்ளுவப் பெருந்தகை.

உயிர்த் தொண்டு என்பது மாந்தரிடத்து மட்டும் அன்றி அதற்கு மேற்சென்று பிற உயிர்களிடத்தும் அன்பு பாராட்டவேண்டும் என்று பெருநெறியாகிய சிவநெறி காட்டுகின்றது. உயிர் அன்பு ஒருமைப்பாட்டினை உணர்த்திய இராமலிங்க அடிகள், “மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் படும் வருத்தத்தைக் கண்ணுறப் பார்த்தும் செவியுறக்கேட்டும் சற்றேனும் சகியமாட்டேன்” என்றார். எப்பாரும் எப்பதமும் சென்றே நான் ஆருயிகளுக்கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்” என்பார்.

ஆருயிர்களுக்கு உயிர்தொண்டு செய்தல் எனும் அன்பு பாராட்டும் எளிய வழியினைப் பின்பற்றி, எல்லோரிடமும் அன்பு பாராட்டி, இறைவனை வழிபட்டு, உள்ள அழுக்கினைப் போக்கிப் பிறவிப் பெருந்துன்பத்திலிருந்து நீங்கிப் பெருமானின் திருவடிப் பேரின்பத்திற்கு ஆளாவோமாக!