கடவுள் ஒன்றே

55034

தொல்காப்பியர் காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடத்திலும் வாழ்ந்த குறிஞ்சி நிலத் தமிழர்களான குறவர்கள் முருகனை அல்லது செவ்வேளை வழிபட்டனர். காட்டிலும் காட்டைச் சார்ந்த நிலத்திலும் வாழ்ந்த முல்லை நிலத் தமிழர்களான இடையர்கள் திருமாலை வழிபட்டனர். வயலிலும் வயலைச் சார்ந்த மருத நிலத் தமிழர்களான உழவர்கள் இந்திரனை வழிபட்டனர். கடலும் கடலைச் சார்ந்த நிலத்திலும் வாழ்ந்த நெய்தல் நிலத் தமிழர்களான மீனவர்கள் வருணனை வழிபட்டனர். உழவுக்கும் பிற வேறெதற்கும் பயன்படாத பாலை நிலத்தில் வாழ்ந்த தமிழர்களான ஆறலைக் கள்வர்கள் கொற்றவையை வழிபட்டனர் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

வடமொழி வேதத்தின் கரும காண்டத்தில் கூறப்படும் இந்திரன், வருணன், அக்னி போன்ற தெய்வங்களெல்லாம் வடமொழி வேதத்தின் தாக்கம் வந்த பிறகே தமிழர் வழிபாட்டில் இடம்பெற்றுள்ளன என்று ஆய்வு அறிஞர்கள் குறிப்பிடுவர். தொல்காப்பியர் காலத்திலேயே பல தெய்வ வழிபாட்டுக்குள் திசை மாறிய தமிழர்கள் இன்று அதனினும் மிகத் தடுமாறிப் போய் இருக்கின்றனர். இன்று சைவர்கள் என்றும் இந்துக்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்ளும் தமிழர்கள் பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். இதனால் “கடவுள் பல” என்னும் கொள்கை தமிழர்களிடையே வேரூன்றி நிற்கின்றது.

தமிழர்களின் ஆரம்ப, அடிப்படையான, காலம் காலமாய் நம் அறிவார்ந்த மூதாதையர்களால் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் நெறி, “கடவுள் பல” எனும் கருத்தை மறுத்துக் “கடவுள் ஒன்றே” என்பதனைத் தெளிவுபடுத்துகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு மெய்கண்ட நூல்களில் ஒன்றான, “உண்மைநெறி விளக்கம்” எனும் மெய்கண்ட நூல், “கடவுள் ஒன்றே” என்று விளக்குகின்றது. உமாபதி சிவாச்சாரியார் என்பாரால் ஆக்கபெற்ற இந்நூல், கடவுள் ஒன்று, அது எங்கும் நிறைந்துள்ளது, கடவுளே முத்தொழில் புரிகின்றது, கடவுள் திருவருளையே திருமேனியாகக் கொள்கிறது, கடவுளே யாவற்றையும் இயக்குகின்றது, கடவுள் பற்றற்றது, கடவுளே உயிர்கள் தன் திருவடியை அடையும் போது அவற்றிற்குக் கடவுள் தன்மையை அளிக்கின்றது என்று குறிப்பிடுகின்றது.

மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூலர், “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றும் “ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்” என்றும் கடவுள் ஒன்று என்று குறிப்பிடுவார். “நாவுக்கு அரசு” என்று இறைவனால் அழைக்கப்பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகள், “நூறுகோடி பிரமர்கள் நொந்தினார், ஆறுகோடி நாரணர் அங்ஙனே, ஏறு கங்கை மணல் எண்ணிடில் இந்திரர், ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” என்று கடவுள் ஒன்று என்பதனைச் சுட்டுகிறார்.

மாணிக்கத் தமிழால் மணிமணியாய் இறைவனைப் பாடிய மாணிக்கவாசகர், “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” எனவும் சிவஞானபோதம் எனும் மெய்கண்ட நூலினை அருளிய மெய்கண்டார், “ஒன்றென்றது ஒன்றே காண்; ஒன்றே பதி” என்று கடவுள் ஒன்று என்று தெளிவுபடுத்துகின்றார். உண்மைநெறி விளக்கம் அருளிய உமாபதி சிவமோ, “ஒடுக்கி ஆங்கு இப்பவ்வம் விண்டு, அகலப்பண்ணிப் பாரிப்பான் ஒருவன்” என்று ஒரு கடவுள்தான் இவ்வுலகினை ஒடுக்கவும் தோற்றுவிக்கவும், விரிவாக்கம் செய்து காக்கவும் செய்கின்றான் என்று புலப்படுத்துகின்றார்.

ஒரு கடவுள்தான் முத்தொழில் புரிகின்றது. படைத்தல் தொழிலைப் பிரமனும் காத்தல் தொழிலைத் திருமாலும் அழித்தல் தொழிலை உருத்திரனும் செய்வதாய்ப் புராணங்கள் கூறுகின்றன. ஆயினும் இம்மூவரையும் ஆட்படுத்தித் தொழில்படுத்தி நின்று முத்தொழிலையும் செய்வது சிவம் எனும் பரம்பொருளான அவ்வொரு கடவுளே என்ற தெளிவினைச் சித்தாந்த சைவம் எனும் செந்நெறி குறிப்பிடுகின்றது. இக்கருத்தினைத் தமிழ்ஞானசம்பந்தர் தமது திருவெழுகூற்றிருக்கையில், “படைத்து அளித்து அழிப்பதும் மூர்த்திகள் ஆயினை” என்று குறிப்பிடுவார்.

மாணிக்கவாசகரோ தமது திருவெம்பாவையில், “இவ்வானும் குவலயமும் எல்லோமும், காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்று ஒரு கடவுளே முத்தொழில் செய்வதைக் குறிப்பிடுவார். ஒன்றாய் இருக்கின்ற கடவுளின் ஓசை வடிவமாக விநாயகரையும், ஞான வடிவமாக முருகனையும், ஆற்றல் அல்லது சக்தியின் வடிவமாக அம்பிகையையும் சைவர்கள் சிவமாகவே எண்ணி வழிபடுகின்றனர். இதனால் சைவர்கள் ஒரு கடவுள் கொள்கையை மறவாமல் போற்றுவதுதான் சரியான சமய வாழ்வியல் முறைமை என்பதனை மறந்துவிடக் கூடாது.

திருச்சிற்றம்பலம்.