மகா சிவராத்திரி

1294

தமிழர் சமயமான சைவ சமயம், இறைவன் உருவம், அருவுருவம், அருவம் என்ற நிலைகளில் நின்று உயிர்களுக்கு அருள்புரிகிறான் என்று குறிப்பிடுகிறது. உருவம் அற்ற இறைவன், உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக உருவம் தாங்கி வருகின்றான்; அதுவும் தானே வருகின்றான் என்பதை, “கற்பனை கடந்தசோதி கருணையே உருவமாகி, அற்புதக் கோலம் நீடி” என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பரம்பொருளான சிவம் சிவலிங்க வடிவமாகத் தோன்றிக் காட்சியளித்த நிகழ்வே சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. எனவே சிவராத்திரி என்பது இறைவன் சிவமாகிய இரவு என்று பொருள்படுகின்றது.

சிவராத்திரி

 இறைவன் சிவமாகி அருளியதை எண்ணி வழிபடும் சிறந்த வழிபாடாக மகா சிவராத்திரி இருப்பினும் சிவனை எப்பொழுதும் வழிப்படுவதற்கென நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி என்ற இதர சிவராத்திரிகளும் உண்டு. நித்திய சிவராத்திரி என்பது அமாவசை அல்லது பௌர்ணமியிலிருந்து பதினான்காம் நாளாகிய சதுர்த்தசி நாட்கள் 24 நாட்களில் கொண்டாடப்படுகிறது. பட்ச சிவராத்திரி என்பது தை மாதத்தில் பௌர்ணமியை அடுத்த முதல் நாளிலிருந்து, தொடர்ந்து 13 நாட்கள் சிவபூசை செய்து வழிபடுவது. மாத சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் சதுர்த்தசியில் கொண்டாடப்படுகிறது. யோக சிவராத்திரி என்பது திங்கட்கிழமைகளில் சூரிய உதயம் முதல் காலை மணி பத்துவரை சதுர்த்தசி இருக்குமானால் அன்று வழிபடப்படுகிறது. சூரிய உதயம் முதல், இரவு வரை 60 நாழிகையும் அமாவாசை இருப்பின் அதுவும் யோக சிவராத்திரி என்று வழிபாடுகள் செய்யப்படுகின்றன.  மாசிமாதத் தேய்பிறையில் 14ஆம் நாளான சதுர்த்தசியின் நள்ளிரவு 12.00 முதல் 1.00 மணி வரை வரும் வேளையே சிவபெருமான் சிவலிங்கத் திருமேனி கொண்டருளிய புண்ணியகாலம் என்றும் அதுவே மகா சிவராத்திரி காலம் என்றும் வழிபடப்படுகிறது.

புராணம்

 பரம்பொருளான சிவத்தின் ஆணையை ஏற்றுப் படைத்தல் தொழிலைச் செய்கின்ற பிரமனுக்கும் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலுக்கும் ஒருமுறை தர்க்கம் ஏற்பட்டதாம். அதாவது தம்மில் யார் உயர்ந்தவர் என்பதாகும். பிரமனும் திருமாலும் தங்கள் சிக்கலுக்கு முடிவு காண இயலாது பரப்பொருளான சிவத்திடம் முறையிட்டனர். இறைவரும் தம் கருணையினால் தங்களில் ஒருவர் என் திருமுடியையும் ஒருவர் என் திருவடியையும் தொட்டு வந்தால் உங்களில் சிறந்தவர் யார் என்பதைக் கூற இயலும் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி அன்னப் பறவை வடிவில் பிரமன் இறைவன் திருமுடியைத் தொட்டுவர முயன்று சோர்ந்து திரும்பினான். திருமாலோ பன்றி வடிவில் பூமியைக் குடைந்து உட்சென்று இறைவன் திருவடியைக் காண இயலாது சோர்ந்து திருப்பினான். ஆதியும் அந்தமும் இல்லா அப்பரம்பொருளின் அடியையும் முடியையும் காண இயலாது வந்த செய்தியைத் தம்தமிழால் பாடி இறைவனை அடைந்த திருஞானசம்பந்தர் சுவாமிகள் தமது ஒவ்வொரு பதிகத்திலும் 10ஆவது பாடலில் குறிப்பிடுவதைக் காணலாம்.  திருவங்கமாலையில் திருநாவுக்கரசர் “தேடிகண்டு கொண்டேன், திருமாலொடு நான்முகனும் தேடி தேடொனா தேவனை என்னுள்ளே, தேடிக் கண்டுகொண்டேன்”  என்பார்.  திருமாலும் பிரமனும் தங்கள் அறியாமையை உணர்ந்து, சிறுமையை உணர்ந்து இறைவனை வணங்கித் தங்களுக்கு அருள்புரியுமாறு வேண்டி நின்றனர். பிரமனுக்கும் திருமாலுக்கும் அருள்புரிகின்ற மாதேவனாகிய சிவப்பரம்பொருள் அவர்கள் அறியாமை நீங்க முதலில் பெரும் சோதிப் பிழம்பாய்க் காட்சி கொடுத்து நின்றார். “அரிய பெரிய பரஞ்சோதி, செய்வது ஒன்றும் அரியேனே” என்பார் மணிவாசகர். இறைவனின் இப்பெருஞ்சோதி வடிவினைக் காண இயலாது பிரமனும் திருமாலும் கலங்கி நின்றனர். அவர்கள் காணும்படியான வடிவினைக் காட்டியருளுமாறு வேண்டினர். இறைவன் சோதிப்பிழம்பாய் நிற்பதை விட்டு தணிந்தார். அப்பிழம்பே திருவண்ணாமலையாகக் குளிர்ந்தது என்பர். பிறகு நீண்ட நாள் திருமாலும் பிரமனும் தவம் இயற்ற அவர்களின் அறியாமை நீங்க வேண்டி இறைவன் நள்ளிரவில் சிவலிங்கமாகத் தோன்றி அவர்கள் காணும்படியாக அருள்புரிந்தார். இதுவே இலிங்கோத்பவர் என்றும் அன்றைய தினமே சிவராத்திரியாகவும் கொண்டாடப் பெறுகிறது என்றும் குறிப்பிடுவர்.

சிவராத்திரி கொண்டாடும் முறை

 சிவராத்திரி அன்று சைவர் குறைந்த அளவு உணவு உட்கொண்டு, உறக்கத்தை நீக்கி, நற்சிந்தனை, நற்சொற்கள், நற்செயல்கள் போன்றவற்றைக் கடைப்பிடித்துச் சிவ வழிபாடும் சிவாலயத்திற்குச் சென்று வழிபடுதலும் இன்றியமையாததாகும். சிவராத்திரி விரதம் என்பது அன்று முழுவதும் இறைவனை இடைவிடாது மனம், வாக்குக் காயத்தினால் எண்ணி வழிபடுவதாகும். இதற்காகவே ஆலயங்களில் இறைவனை நினைவூட்டும் பூசனைகள், நீராட்டு, சொற்பொழிவுகள், நடனங்கள், திருமுறைப் பாடல்களை ஓதுதல், பக்தித் திரைப்படங்கள் காண்பித்தல் போன்றவை இடம்பெறுகின்றன.  சைவ சமய முறைப்படி தீக்கைப் பெற்றிருக்கின்றவர்கள் சிவராத்திரியன்று இரவு நான்கு காலங்களிலும் தம் உயிர் ஈடேற்றத்தின் பொருட்டு ஆன்மார்த்த பூசனைகள் செய்வர். கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் பொருட்டும் உலக மக்களின் நன்மை பொருட்டும் சிவாலயங்களில் பரார்த்த பூசனைகள் 6 காலங்களுக்கு நடத்தப்படும். அன்பர்கள் இயன்ற அளவு இலிக்கோற்பவக் காட்சி வேளையின் போதாவது பூசனைகளில் கலந்துகொள்ள வேண்டியது முகான்மையானது. சிவராத்திரியன்று ஆலயத்திற்குச் செல்லும் அன்பர்களுக்குச் சிவசிந்தனை தடைபடாது இருக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கித் தருவது அனைவரின் கடமையாகும்.

சிவராத்திரி உணர்த்தும் உண்மை

 ஆணவம் ஏற்படுத்தும் அறியாமை என்கின்ற செறுக்கு உள்ளவரை உயிர்கள் இறைவனின் திருவருளைப் பெறமுடியாது என்றும் இறைவனின் திருவடி இன்பத்தில் திளைக்க முடியாது என்றும் சிவராத்திரி நமக்கு உணர்த்துகின்றது. திருமாலும் பிரமனும் ஆணவச் செறுக்கினால் தர்க்கித்து இறைவன் திருவடியையும் இறைவன் திருமுடியையும் காண முயன்று சோர்ந்தனர் என்பது இதனையே உணர்த்துகின்றது. அவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து அன்பினால் உருகி இறைவன் திருவருளை வேண்டித் தவமிருந்தபோது இறைவன் திருவருள் கிடைக்கப்பெற்றனர் என்பதும் கூறப்பட்டது. எனவே “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்று அடியார் பெருமக்கள் குறிப்பிடுவது போல அன்பினால் இறைவனை அடையலாம் என்று சிவராத்திரி உணர்த்துகின்றது.   அன்றாட வாழ்வில் பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்று பல்வேறு அறியாமையால் தர்க்கித்துத் திரியும் நாம் சிவராத்திரியன்று இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  நம்முடைய பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்பதெல்லாம் கருணையினால் இறைவன் அளித்தது என்றும் அதனைக் கொண்டு இறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டி உயிர் ஈடேற்றம் பெறுவதற்கு அவன் திருவருளை எண்ண வேண்டும் என்பதை அன்றைய தினம் எண்ணி எண்ணிப்பார்க்க வேண்டும். இறைவன் நமக்கு அளித்திருக்கின்ற குறுகிய வாழும் காலத்தைத் தற்காலிக உலக போகங்களை எண்ணிப்பார்த்து நம் ஆணவத்தை நீக்கி வாழ வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கணவன், மனைவி, மறுமகள், மாமனார், மாமியார், முதலாளி, தொழிலாளி, தலைவன், தொண்டன் போன்ற செறுக்குகளையெல்லாம் விட்டு இறைவன் திருவடிக்குச் செல்ல துடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு உயிர் என்ற எண்ணத்தில் அன்பு பாராட்டும் இயல்பு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி நிற்க வேண்டிய நாள் அது. இதனையே “ஆருயிர்களுக்கு எல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என்று வள்ளல் பெருமான் வேண்டினார்.  எனவே சிவராத்திரி என்பது வருடத்திற்கு ஒருமுறை ஆணவத்தினால் ஏற்படும் நம் அறியாமைச் செறுக்கினை எண்ணிப்பார்க்கின்ற நாளாய் அமைகின்றது. ஆணவத்தினால் நாம் செய்கின்ற அன்பில்லாச் செயல்களையும் வார்த்தைகளையும் எண்ணங்களையும் எண்ணிப்பார்த்து அவற்றைச் சரிப்படுத்துவதற்குறிய வழிவகைகளை ஆராயும் நாளாய் அமைகிறது. இறைவனை வழிபட்டு, அவன் திருவருளை வேண்டி நின்று, கண் விழிப்பதோடு மட்டுமல்லாமல் நம் உயிரினை விழிப்படையச் செய்யும் நாளாகவும் விளக்குகின்றது. இவ்வளவு சிறப்புக்களையும் உண்மைகளையும் உணர்த்தும் உயரிய சிவராத்திரியை உரிய முறையில் உள்ளவாறு உய்த்து உணர்ந்து கொண்டாடுவோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!