5. அறிச்சுவடி எழுதுதல்

1386

நல்லது தீயது என்று ஒன்றைப் பகுத்து ஆய்ந்து அறிவோடு வாழ்வதற்குக் கண்ணாயும் ஒளியாயும் இருப்பது கல்வி. எண்களும் எழுத்துக்களுமே கல்விக்கு அடிப்படையாக இருக்கின்றன. மாந்தர்களாகிய நாம் எழுத்துக்களைக் கொண்டு எண்ணியும் எண்களைக் கொண்டு கணக்கிட்டும் பலவற்றைக் கற்றுச் செயல்படுத்துகின்றோம். இவ்வாறு எண்களாலும் எழுத்துக்களாலும் குற்றமறக் கற்கும் கல்வியே வாழ்க்கையினை முறையாகவும் செம்மையாகவும் உலகிற்குப் பயன் தருகின்ற வகையிலும் வாழ்ந்து வீட்டின்ப நெறிக்கு நம்மை ஆளாக்குவதற்கு வழிகோலுகின்றது. இதனையே, “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும், கண்ணென்ப வாழும் உயிர்க்கு,” என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். எண்ணும் எழுத்தும் உலகில் வாழும் உயிர்களுக்குக் கண்களைப் போன்று முதன்மையானது என்று குறிப்பிடுகிறார்.

ஒருவருக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வி என்றும் ஒருவர் ஒரு பிறவியில் பெற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்றும் ஐயன் திருவள்ளுவர் மேலும் குறிப்பிடுவார். இதனை அறிந்தே சீர்மிகு செந்தமிழ்ச் சைவர், கல்வி கற்கத் தொடங்கும் நிகழ்ச்சியினைப் பிள்ளைகளின் வாழ்க்கையில் அரிய ஒன்றாக நிகழ்த்தி உள்ளனர். இந்நிகழ்ச்சியை அல்லது இக்கரணத்தை, எழுத்து அறிவித்தல், அறிச்சுவடி எழுதுதல் என்று செய்துள்ளனர்.

எழுத்து அறிவிக்கும் இக்கரணத்தினைக் குழந்தைகளுக்குப் பொதுவாக நான்கு அல்லது ஐந்து அகவை அளவில் நடத்துவிப்பர். தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கூறுகளில் அரிய ஒன்றாகக் கருதப்படும் இந்நிகழ்ச்சியில் குழந்தைக்குக் கல்வியின் முதன்மையையும் அதனை அறிமுகப்படுத்துவதுமே முதன்மை நோக்கமாக அமையும். குழந்தைகளின் வாழ்வில் அறிவு ஒளியினை ஏற்றி வைப்பதற்கு அடிகோல் நாட்டுவதான இந்நிகழ்ச்சி இல்லத்திலோ அல்லது திருக்கோவிலிலோ நடத்தப்பெறும்.

இல்லத்தில் நடத்தப்படுமானால் ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து, உறவு முறைகளுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்து நடத்தப்பெறும். இன்றைய வழக்கில், நவராத்திரி விழாக் காலத்தில், கலைமகள் விழாவின் போதோ (சரசுவதி பூசனை), அம்மை வெற்றியடைந்த பத்தாவது நாள் என்று கொண்டாடப்பெறும் விசயதசமி நாளின் போதோ நிகழ்த்தப் பெறுகின்றது. நவராத்திரி விழா தமிழ்ச் சைவர்களிடையே புகழ்பெறுவதற்கு முன்பு தமிழ்ச் சைவர்கள் இக்கரணத்தைத் தமிழ்ச் சைவர்களின் புத்தாண்டாகிய தைத் திங்களின் முதல் நாள் செயல்படுத்தி உள்ளனர் என்ற செய்தியும் அறியக் கிடக்கின்றது.

இக்கரணத்தை இல்லத்தில் நிகழ்த்துவிக்கின்றபோது இல்லத்தின் வரவேற்பு அறையில் ஒரு பகுதியில் சிறு வழிபடு மேடையைப் போல் அமைத்து, அதில் இறைவனின் திருவடிவப் படத்தினையோ திருவடிவத்தையோ அமைத்துக் குழந்தையின் பெற்றோரும் உற்றார் உறவினரும் முதலில் கூட்டு வழிபாடு இயற்றுவர். அதில் கல்லைக் கடலில் மிதக்க வைத்த, சாம்பலைப் பெண்ணாக்கிய, முதலை உண்டச் சிறுவனை மீண்டும் உயிரோடு மீட்டுத் தந்த, ஊமைப் பெண்ணைப் பேச வைத்தத் தமிழ் மந்திரங்களான திருமுறைகளை ஓதி, தூப தீபங்களை ஏற்றி இல்லத் தலைவர் இறைவழிபாட்டினை நிறைவு செய்வார்.

நம் முன்னோர், குழந்தையின் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சியில் குழந்தையின் தந்தையோ குழந்தையின் தாத்தாவோ இறைவழிபாட்டினைத் தாங்களே சுயமாக இயற்றும் பயனை அறிந்து அவர்களே வழிபாட்டினைச் சுயமாக நடத்தி உள்ளனர். குழந்தைக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒருவரை வழிபாடு இயற்றச் சொல்லிப் பெற்றோரும் உறவினரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருத்தல் முறையற்ற ஒன்று என்று அறிந்திருந்தனர். வழிபாட்டின் இறுதியில் குழந்தையில் கைகளில் மலர்களைக் கொடுத்து இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்குமாறு செய்வர். குழந்தையை, “நமசிவய” என்று மூன்று முறை பெருமானின் திருவைந்து எழுத்து மந்திரத்தைக் கூறச் சொல்லி, குழந்தையின் நெற்றியில் திருநீற்றை அணிவித்துப் பெற்றோரின் திருவடிகளிலும் தாத்தா பாட்டியின் திருவடிகளிலும் வீழ்ந்து வணங்கி திருநீறு அணிவிக்கப் பெற்று வாழ்த்து பெறச் செய்வர்.

பின்பு, இறைவனின் திருமுன்பு ஒரு தட்டையான மரப்பலகையின் மீதோ தரையிலோ அரிசியினைப் பரப்பிக் குழந்தையின் தந்தையோ அல்லது தாத்தாவோ அல்லது இல்லத்தில் உள்ள தமிழ்ப் படித்தப் பெரியவர்களோ தமிழ்ச் சான்றோர்களோ குழந்தையை மடியில் இருத்தி, அதன் ஆள் காட்டி விரலைப் பிடித்துப் பரப்பி வைக்கப்பட்டுள்ள அரிசியின் மீது எழுத்து எழுதுதலைக் கற்றுக் கொடுப்பர்.

இவ்வாறு எழுத்து அறிவித்தலில் முதலில் தமிழ் எழுத்துக்களுக்கு எல்லாம் முதலாக இருக்கின்ற “அ” என்ற அகரத்தையும் பின்பு “உ” என்ற உகரத்தையும் அதனைத் தொடர்ந்து “ம்” என்ற மகரத்தையும் சொல்லியவாறே எழுதுவிப்பர். மூன்று முறை இவ்வெழுத்துக்களை எழுதிய பின் இறுதியாக, “அ+உ+ம்” என்ற எழுத்துக்களின் கூட்டான “ஓம்” எனும் மந்திரத்தை எழுதியும் ஒலித்தும் காட்டுவர். இச்செயல் முடிந்தவுடன் அறிச்சுவடி விழாவிற்கு வருகை புரிந்துள்ளவரிடம் குழந்தை வாழ்த்து பெறும் முறையினைச் செய்வர்.

“அ” என்ற அகரம் சிவனையும் “உ” என்ற உகரம் இறைவனின் திருவருளான சத்தியையும் “ம்” என்ற மகரம் உலகினையும் உணர்த்தி நிற்கின்ற “ஓம்” என்ற மந்திரத்தைக் குழந்தை கல்வியின் முதலாகத் தொடங்குவதனால் இறையருளும் இறையறிவும் உலகத் தெளிவும் குழந்தைக்குக் கிட்டும் என்று நம் முன்னோர் முறைப்படுத்தி வைத்துள்ளனர். உலகிலுள்ள அனைத்துக் கலைகளும் இறைவனின் திருவருளால் வெளிப்பட்டவை என்பதனையும் கல்வியின் முடிந்த முடிவு இறைவனை அறிதலேயாம் என்பதனையும் குழந்தையின் உயிருக்கு உள்முகமாக  நினைவுறுத்தல் செய்வதற்கே இவ்வாறு செய்துள்ளனர். தவிர, கல்விக் கற்கத் தொடங்கும் தமிழ்க் குழந்தைக்கு “அ”,”உ”,”ம்” என்ற தமிழ் எழுத்துக்களையும் “ஓம்” என்ற தமிழ் மந்திரத்தையும் கற்பித்தலானது பிற மொழிகளைக் கற்றாலும் தாய்மொழியான தமிழ்க் கல்வியை மறத்தல் ஆகாது என்பதனை நினைவூட்டுதலுக்கே ஆகும்.

தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்கள், பண்பாடுகள், தமிழர் இறைக்கல்வி, தமிழர் வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கிய இலக்கியங்கள், தமிழர் நல்லொழுக்க நீதி நூல்கள், தமிழுக்கு உழத்தத் தமிழ்ச் சான்றோர் வரலாறுகள் முழுமையாகத் தமிழிலேயே காணப்பெறுகின்றன. பிற மொழிகளில் சில காணப்படினும் அவற்றை முழுமையாக உய்த்து உணரும் வாய்ப்புத் தமிழ்க் கற்றவருக்கே வாய்க்கப் பெறுகின்றது. தவிர, தமிழ்க் குழந்தைகள் சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்வியலை அறிந்து அதனைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத் தமிழ்க் கல்வியோடு எழுத்து அறிவிக்கும் கரணத்தை தொடங்கியிருக்கின்றனர். அறிச்சுவடி அறிவிக்கும் கரணத்தைத் தமிழ்க் கல்வியோடு தொடங்கி, நற்றமிழராய் வாழ்வாங்கு வாழ்ந்து இப்பிறவியை வெல்வோமாக! இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!