7. வேகம் கெடுத்தாண்ட

3077

7.வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முதுமொழி. கல்லையும் கனிவிக்கும் இவ்வரிய தமிழ் மந்திரத்தை அருளிய மணிவாசகப் பெருமான், சிவபுராணம் எனும் பகுதியில் சிவபெருமான் உயிர்களுக்குப் பழைமை தொட்டு ஆற்றி வரும் அரிய செயல்களைக் குறிப்பிடுகின்றார். தமிழ்ச் சைவர்களின் அன்றாட வழிபாட்டிலும் இல்ல நிகழ்ச்சிகளிலும் தமிழ்ச் சைவர்களின் திருக்கோயில்களிலும் தவறாது ஓதப்படவேண்டிய இச்சிவபுராணத்தில், வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

மாந்தர்களின் மன வேகம் காட்டில் மரத்திற்கு மரம் தாவும் குரங்கினைக் காட்டிலும் வேகமாய் உள்ளது என்று நாளும் திருவாசகத்தை ஓதி மனம் கசிந்து கண்ணீர் மல்கிய இராமலிங்க அடிகள் குறிப்பிடுவார். வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன்  என்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுவது மனவேகத்தினையே குறிப்பிடுகின்றது. பிறர் நில உலகையும் பிற உலகையும் ஆளக்கூடும். உயிர்களின் மனவேகத்தினை அடக்கி ஆளக்கூடியவன் பெருமான் ஒருவனே என்பதனால், வேகம்கெடுத்து ஆண்ட வேந்தன்  என்று சிவபெருமானை மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

மனவேகம் என்பது யான் எனது எனும் செருக்கினால் ஏற்படுவது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த யான் எனது எனும் செருக்கு உயிரின் அறிவை மறைக்கின்ற ஆணவம் என்பதின் வெளிப்பாடு என்று குறிப்பிடப்படுகின்றது. இருள் என்பது பொருட்களைக் காண இயலாதவாறு மறைத்தாலும் இருள்தான் இருப்பதனைக் காட்டும் என்பர். இதனால் இருள் சூழ்ந்து இருப்பதனைக் கண்டு அறியலாம் என்பர். ஆனால் உயிர்களின் அறிவை மறைத்து நிற்கின்ற ஆணவ இருளோ, தான் இருப்பதையும் காட்டாது தான் செய்கின்ற மறைப்பையும் உயிர்களுக்குக் காட்டாது என்பர். இதனால் உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைக்கின்றது என்பதனை உணராது நிற்கின்றன என்பர். உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைப்பதனால் அறிவுத் தெளிவு இன்றி முனைப்புடன் பல்வேறு செயல்களைத் தன்மூப்பாகச் செய்கின்றன என்பர். இதனையே யான் எனது எனும் செருக்கோடு செயல்படுவதாய்க் குறிப்பிடுவர்.

உயிர்களைப் பற்றி இருக்கின்ற அறியாமையைப் போக்கிக் கொண்டு, இறைவனிடத்தே இருக்கின்றநிலையான பேரின்பத்தை அடைவதற்கு இறைவன் அவனின் கருணையின் பேரில் அளித்தவற்றைக் கொண்டே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணராது உயிர்கள் இருமாப்புக் கொள்கின்றன என்பர். ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் அளிக்கும் உயிர்களின் வாழிடமான உலகம், பல்வேறு வகையான உடம்புகள், அவ்வுடம்புகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தப் பட்டுள்ள கருவிகள், ஒவ்வொரு பிறவியிலும் உயிர்கள் மேம்படுவதற்காக் கொடுக்கப்படுகின்ற உயிர்களைச் சுற்றி உள்ள நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றைப் பெருமானே உயிர்களுக்கு அளித்துள்ளான் என்பதனை உணராமல், நான் என்னுடையது என்ற அறியாமையில் உழல்வதனையே செருக்கு என்று குறிப்பிடுகின்றனர்.

உயிர்கள் அறிவு பெறுவதற்காகத் தற்காலிகமாய்ப் பெருமான் அளித்த வாழிடமான இவ்வுலகைத் தங்களுக்கே உரியது என்று உயிர்கள் உரிமை கொண்டாடுகின்ற அறியாமையை மன வேகம் என்று குறிப்பிடுவர். பெருமான் உடலில் இருந்து உயிரைப் பிரிக்கின்ற போது, என் வீடு, என் வாசல், என் நிலம், என் ஊர், என் நாடு, என் உலகம் என்பதனை விட்டு நீங்கி, ஒன்றும் இல்லாதவர்களாய்ச் செல்ல வேண்டும் என்று உணராதவர்களை மனவேகம் உடையவர் என்று குறிப்பிடுவர். புல், பூண்டு, புழு, மரம், விலங்கு, பறவை, பாம்பு, கல், மாந்தர், பேய், கணங்கள், அசுரர், முனிவர், வானவர் என்று பல்வேறு பிறவிகளுக்கு ஏற்ப இறைவன் அளித்துள்ள தற்காலிக உடம்பினை நிலையானது என்று எண்ணித் தன்மூப்போடு செயல்படுகின்ற இயல்பினை மனவேகம் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள உயிர் வகைகளில் வேறுபாடு காட்டுவதும் மாந்த உயிரைப் பெரிதாக எண்ணிப் பிற உயிர் வகைகளைக் கீழாக எண்ணி அவற்றை வதைப்பதும் மன வேகமே என்பர்.

பிறவிகளிலே ஆறு அறிவுடன் கூடிய மாந்தப் பிறவி கிடைத்தற்கு அரிது என்பர். அப்பிறவியிலே சாதி, குலம், கோத்திரம் என்று உயர்வு தாழ்வு காட்டி நிற்பதுவும் பெருமை கொள்வதுவும் சிறுமை செய்வதுவும் மன வேகமே என்று குறிப்பிடுவர். அவரவர் பேசும் மொழி, இனம், பண்பாடு, சமயம் எனும் பெயரினால் தற்கித்துத் திரிவதனையும் பிறரை எள்ளி மகிழ்வதனையும் மன வேகம் என்றே குறிப்பிடுவர். இன்னும் பலர், உடல் வாகு, முக அழகு, தோலின் நிறம், என்று பெருமை பேசிப் பிறரைச் சிறுமை செய்வதனையும் யான் எனது எனும் செருக்கினால் ஏற்படும் மனவேகம் என்றே குறிப்பிடுவர்.

இறைவன் அளித்த மனம், சித்தம், அறிவு, மனவெழுச்சி என்ற அகக் கருவிகளையும் பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், நுகர்தல் என்ற ஐந்து புலன்களின் ஆற்றல்களையும் அவற்றிற்கு உரிய கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற புறக்கருவிகளையும் இறைவனே அளித்தான் என்பதனை உணராமல், என் அறிவு, என் ஆற்றல் என்று பெருமை பேசித் திரியும் செயலினையும் மன வேகம் என்று குறிப்பிடுவர். உலகில் வாழும்போது உண்ணவும் உறங்கவும் இனப்பெருக்கம் செய்யவும் இதர பணிகளைச் செய்யவும் இறைவனே உடலில் பல்வேறு உறுப்புக்களைக் கொடுத்து உதவி இருக்கின்றான்; அவை தற்காலிகமானவை என்று அறியாமையினால் பலர் தங்களின் செயல் திறன் மீதும் பலத்தின் மீதும் செருக்கு கொள்கின்ற பாங்கினை மன வேகம் என்று குறிப்பிடுவர்.

மேலும் பலர் இறைவன் அளித்திருக்கின்ற உலகப் பொருள்களான நிலம், நீர், காற்று, தீ, வெளி ஆகியவற்றின் துணியின்றி இவ்வுலகில் வாழ இயலாது என்பதனை அறியாது தன்னையே பெரிதாக எண்ணி வாழ்வர். இன்னும்சிலர் தானே கடவுள் என்றும் குறிப்பிடுவர். இறைவன் அளித்துள்ள கதிரவன், திங்கள், இதர கோள்கள், விண்மீன்கள் எவ்வாறு நமக்கு ஊன்று கோலாய் உள்ளன என்பதனை அறியாமல் செருக்கித் திரிவர் என்று குறிப்பிடுவர்.

அன்பின் பிழம்பாய், பரிவின் வடிவாய்த் திகழ்கின்ற அப்பெருமானின் திருவருளைப் புரிந்து கொள்ள, அன்பின் வழியில் நிற்க இறைவன் உயிர்களுக்கு அளித்துள்ள பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர், பிறர் என்பதனை உணராது அவரிடத்தில் அன்பு பாராட்டாமல் வேறு பட்டு நிற்பதுவும் வெறுப்பினைக் காட்டுவதும் யான் எனது எனும் செருக்கின் அடையாளம் என்றும் மன வேகம் என்றும் குறிப்பிடுவர். படிப்பினால் வரும் பெருமை, பதவியினால் வரும் பெருமை, செல்வத்தினால் வரும் பெருமை, பட்டத்தினால் வரும் பெருமை என்று பலர் மன வேகத்தில் மயங்கித் திரிவர் என்பர். ஆண் பெண் எனும் செருக்கு, கணவன் மனைவி எனும் செருக்கு, மாமியார் மருமகள் எனும் செருக்கு, முதலாளி தொழிலாளி எனும் செருக்கு, தலைவன் தொண்டன் எனும் செருக்கு, மேட்டுக்குடி தாழ்ந்தவர் எனும் செருக்கு, பலம் உடையவர் நலிந்தவர் எனும் செருக்கு என்று பல்வேறு செருக்குகளினால் தாக்குற்றுப் பலரும் மன வேகத்தில் உழன்று வாழ்வர் என்று குறிப்பிடுவர்.

மேற்குறிப்பிட்ட எல்லாமே பெருமான் எண்ணினால் நொடிப்பொழுதில் நம்மை விட்டு நீங்கி விடும்என்ற தெளிவின்மையே மன வேகத்திற்குக் கரணியம் என்கின்றார் மணிவாசகர். உண்மையும் தெளிவும் இவ்வாறு இருக்க உயிர்கள் மன வேகத்தில் சற்றும் சளைக்காது செருக்குற்றுத் திகழ்கின்றன என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். இம்மன வேகத்தினைச் செருக்கினைக் கட்டுப்படுத்தக் கூடியவன் பெருமான் ஒருவனே என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

மாந்தர்களின் அறிவுக்கு எட்டாது பல்வேறாகப் பாய்ந்து ஓடும் மன வேகத்தினைத் தூய அறிவாக விளங்கும்இறைவனின் திருவருளே அடக்க வல்லது என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். இதனையே பெருமான் கையில் ஏந்தி இருக்கும் மான் குறித்து நிற்கின்றது என்பர். உயிர்களுக்கு அனைத்தையும் அளித்து அருள் புரிகின்றபெருமானின் பெருமையையும் அவனின் பரிவினையும் அன்பினையும் உயிர்கள் உணர மனவேகம் குறையும் என்பர். இதன் வழி உயிர்களின் சிறுமையும் நிலையற்ற உலக வாழ்வினையும் வாழ்க்கையின் குறிக்கோளையும் அறிய நேரிடும் என்பர். வாழ்க்கையின் குறிக்கோளை உணர்ந்த உயிர் பெருமானின் திருவருளிற்காக ஏங்கி நிற்கும். அவ்வாறு நிற்கவே திருவருள் சிறக்க மன வேகம் கெடும் என்பர். இதனையே வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க என்று பெருமானை மணிவாசகர் புகழ்ந்து பாடினார்.

 

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!