நிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்

1438

அன்றாட வாழ்வில் நாம் அடைகின்ற இன்பம் அல்லது மகிழ்ச்சி சில மணித்துளிகளே நம்மோடு இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எதோ ஒரு துன்ப உணர்வும், சோர்வு மனமும் தான் நம்மிடம் நிலைத்திருப்பதைக் காண்கின்றோம். காலையில் பணிமனைக்கு உற்சாகமாகச் செல்லும் நம்மை அங்கு ஒருவர் நம் உடை அலங்காரத்தைப் பார்த்துப் பாராட்டும் பொழுது அதிக மகிழ்ச்சி அடைகிறோம். அடுத்த கணம் மற்றொருவர் நம்மைப் பார்த்து என்ன உடையிது? என்ன ஆயிற்று உங்களுக்கு? நல்ல உடையே இல்லையா? என்ற உடன் அத்துனை மகிழ்ச்சியும் போன இடம் தெரியாமல் மறைந்து துன்பமும் எரிச்சலும் மிகுந்து காணப்படும். சொன்னவர் நாம் மிகவும் மதிக்கின்ற ஒருவர் முன் சொல்லியிருந்தால் மானக்குறைவினால் கூனிக்குறுகி அன்றைய பொழுது முழுவதும் வருத்தத்தில் முடியும். காலையில் வந்தவுடன் நாம் பெற்றப் பலருடைய பராட்டும் அதில் வந்த இன்பமும் இருந்த இடம் தெரியது போகும். இது போன்ற மிகச் சிறிய நிகழ்வும் நம் மகிழ்ச்சிக்கு ஊறு விளைவிக்கும்.

தவிர, நமக்குப் பிடித்த பொருளைப் பெரும் பணம் கொடுத்து வங்குகிறோமே அதுவாவது நிலைத்த மகிழ்ச்சியைத் தருகிறதா என்றால் அதுவும் இல்லை. கடை வீதயில் கண்ட, விலை உயர்ந்த ஓர் ஆடைக்காக அம்மாவிடமும் அப்பாவிடமும் எவ்வளவு திட்டுவாங்குகிறோம்? திட்டினாலும் பரவாயில்லை, அந்த உடைதான் வேண்டும் என்று எவ்வளவுப் பிடிவாதமாக இருக்கிறோம்? அந்த ஆடைக்கு இணையானது இந்த உலகில் வேறு எந்த பொருளும் இல்லை என்று அம்மாவிடம் ஒரு வழக்குரைஞரைப் போன்று எப்படி வாதாடுகின்றோம்? அப்பவும் வாங்கித்தரவில்லை என்றால் உண்ணாவிரதம் இருந்தும், உலகமே இருண்டு விட்டது போன்ற கவலையில் ஆழ்ந்தும் மௌனப் போராட்டம் நடத்துகின்றோம். நம் துன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காதப் பெற்றோர் கடைக்கு அழைத்துச் சென்று அந்த உடையை வாங்கித் தந்த உடன் நாம் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை சொல்ல முடியுமா? அந்த உடையைப் போடுவதும் கழற்றி வைப்பதும், மீண்டும் போடுவதும் கண்ணாடியின் முன் நிற்பதும், நண்பர்களுக்குத் தெரிவிப்பதும், பள்ளிப்பையில் வைத்துப் பள்ளிக்கு எடுத்துச் சென்று தோழியிடம் காட்டுவதும், நெருக்கமான உறவினர் வீட்டுக்கு வந்தால் அவர்களிடம் காட்டுவதும் அடேயப்பா எத்தனைக் கொண்டாட்டம்!

முதன் முதலில் ஒரு நிகழ்விற்கு அந்த உடையை அணிந்து செல்லும் போது தன்னை உலக அழகியாகத் தேர்ந்து எடுத்து விட்டது போன்ற பெருமகிழ்ச்சித் தோன்றும். நம்முடைய ஒவ்வொறு அசைவையும் எல்லோரும் பார்ப்பதாக நினைப்புத் தோன்றும். அப்போது முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்கு ஒப்பாக வேறொன்றைக் கூறா முடியுமா?

அதே உடையை மறுமாதம், மறு வாரம், மறு நாள் என்று தொடர்ந்து நடைபெறும் அணைத்து நிகழ்வுகளுக்கும் அதே உடையை அம்மா போடச் சொன்னால் நம் நிலை என்னவாகும்? தவிர நாம் செல்லுகின்ற இந்த தொடர் நிகழ்ச்சிகள் அணைத்தும் அதே நண்பர்கள், அதே உறவினர்கள் வருவதாக இருந்தால்? நினைத்துக்கூட பார்க்க முடியாத துன்பம், பயம், வருத்தம் தோன்றாதா? நிகழ்வில் எல்லோரும் நம்மையே பார்த்து இகழ்ந்துச் சிரிப்பதாகத் தோன்றாதா? என்ன ஆச்சரியம்! எந்த உடை வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து போராடி, வாதாடி வங்கினோமோ அந்த அழகிய உடை இன்று நம்மை மற்றவர் இகழ்கின்ற உடையாக மாறிவிட்டதே! நிலைத்ததா அந்த உடையில் வந்த மகிழ்ச்சி? இல்லையே!

வயதுக்கு வந்ததும் நாம் விரும்பிய ஒருவரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து பல போராட்டங்களுக்குப் பின் திருமணம் செய்தோமே, அந்த திருமண நாளில் இருந்த மகிழ்ச்சி இன்று இருக்கிறதா? நம்மில் எத்தனைப்பேர் அம்மா பேச்சைக் கேட்டிருந்தால் இன்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் என்று கூறுவதைக் காதால் கேட்கிறோம்? திருமண நாள் கொண்டாட்டத்தில் எத்தனை பேர் தங்கள் சலிப்பையும் வருத்தத்தையும் வெளிப்படையாகச் சொல்கின்றனர். பிள்ளைகளுக்காக வாழ்கின்றேன் இல்லையானால் என்றோ இவரை விட்டுப் பிரிந்திருப்பேன் என்று கூறும் மாந்தர் நம்மில் அதிகம் என்றால் மறுப்பார் உளரோ!

பாராட்டினால் வந்த மகிழ்ச்சி சில மணிப்பொழுதும் நிலைக்கவில்லை, பெரும் பணம் செலவிட்டு விரும்பி வாங்கியப் பொருளினால் வந்த மகிழ்ச்சி சில மாதங்கள் நிலைக்கவில்லை. பெற்றோரையும் உற்றாரையும் பகைத்துச் செய்த திருமணத்தின் மகிழ்ச்சி சில ஆண்டுகள் நிலைக்கவில்லை. அப்படியானால் நிலைத்த இன்பத்திற்கு வேண்டிய செல்வம் எது? இவ்வினாவினைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு வாழ்வியல் நீதி அமைத்த வான்புகழ் வள்ளுவரைச் சென்று கேட்டபோது, அவர் “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்” என்று கூறுகிறார். அதாவது ஒருவர் அருளைச் செல்வமாகப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார். அருட்செல்வம் பலநாள் பல்லுயிரிடம் நாம் செலுத்திய அன்பின் பயனாக வரும் என்கிறார் பேராசான்.

சீர்மிகு சைவர்களுக்கே உரிய திருமுறையிலோ, “செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே” என்று மூன்றே வயதில் பெருமானால் ஞானப் பாலூட்டப்பெற்ற நம் திருஞானசம்பந்தப்பெருமான் அருளியுள்ளார்.  சம்பந்தப் பெருமான், செல்வம் என்பதே பெருமானின் திருவடிகளுக்கு அடிமைசெய்து வாழும் வாழ்வுதான் என்கிறார். இதனையே “ என்னப் புண்ணியம் செய்தனை நெஞ்சமே ……. முன்னம் நீ புரி நல்வினை பயனிடை ….. வானனை வாயார….. பண்ணி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே,” என்கின்றார். அதாவது பெருமானைப் பாடவும் நினையவும் வழிபடவும் முற்பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்.

மேலும், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற” என்கிறது திருநாவுக்கரசர் தேவாரம். இவ்வரிகளின் மூலம் எல்லா உயிர் மீதும் அன்பு செய்து வாழும் முறையை நாம் அறிந்துகொண்டால் நிலைத்த இன்பம் உண்டாகும் என்பது திண்ணம். இதையே தான் தாயுமானவர் “அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால், இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே” என்று கூறியுள்ளார். அருள் வாழ்க்கை வந்தால் ஆண்டியாகி விடுவோமே, பிறகு எவ்வாறு நிலைத்த இன்பம் வரும் என்று சிலர் நினைக்கக் கூடும். சித்தாந்த சைவம் கூடும் சரியை. கிரியை. யோகம், ஞானம் என்னும் அற வழி நின்றால் உலக வாழ்விற்கு வேண்டிய உணவும், உடையும், பொன்னும், பொருளும் பெருமானின் திருவருளால் வந்து சேரும் என்பது நால்வர் பெருமக்களின் திருவாக்கு ஆகும்.

“அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம், பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை” என்ற வரிகளின் மூலம் தில்லைச் சிதம்பர நாதரான சிவபெருமானைப் போற்றி அன்பு நிறைந்த அருள் வாழ்க்கை வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான சோறு தவறாது கிடைக்கும். அதற்குப் பெருமான் வழி செய்வார் என்பதோடு அல்லாது மேலும் ஏற்படும் மற்றத் தேவைக்கான பொன்னும் பெருமான் அருளுவார் என்கிறார் அப்பர் அடிகள்.

சுந்தரமூர்த்தி நாயனாரோ, “இம்மையே தரும் சோறும் கூறையும், ஏத்தலாம் இடர் கெடலுமாம்” என்று அருளுகிறார். அதாவது பெருமானை நாடி அருள் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உண்ண சோறும், உடுத்த உடையும் தவறாது கிடைக்கும் என்கிறார். அதுமட்டுமல்லாமல் மறுமை வாழ்வுக்குத் தடையாக இருக்கும் துன்பமும் விலகும் என்கிறார். மேலும் “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப், போகமும் திருவும் புணர்ப்பானை” என்று மொழிகிறார். இவ்வரிகளில் பொன்னைத் தந்து போகம் அனுபவிக்க செய்வதன் வழி மெய்ப்பொருளாகிய பெருமானை உணர்ந்து அருள் வாழ்க்கை வாழச் செய்து திரு என்னும் வீடு பேறாகிய நிலைத்தப் பேரின்பத்தை நாம் அடையத் தருகிறார் பெருமான் என்கிறார்.அருள் வாழ்க்கை நிலைத்த இன்பத்தை அடைவதற்கு வழி வகுக்கும் என்பதை நம் சைவப் பெருமக்கள் நன்கு உணர வேண்டும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் அன்பு வழி நின்று கருணை என்னும் அருளைப் பெருக்கி எல்லா உயிர்களிடத்தும் அருள் கொண்ட நெஞ்சினராய் வாழ வேண்டும். அப்பொழுதுதான் பெருமான் நமக்கு நிலைத்த இன்பத்தை அருளுவான் என்பதனைச் சைவப் பெருமக்கள் நன்குணர வேண்டும்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!