83. சிவனை இகழாமை

1173

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களுக்குத் தொன்று தொட்டு வழிபடு கடவுளாக விளங்குவது முழுமுதற் பரம்பொருளான சிவமே! பிற சமயங்களின் தாக்கங்களினாலும் பிற இனத்தவரின் வருகையினாலும் சமயத்தை ஆழ்ந்து கற்காத கருத்தின்மையினாலும் தொடர்ந்து நிலவும் அறியாமையினாலும் சிவமே தமிழர்களின் நிகரில்லாத வழிபடு கடவுள் என்பதனைச் சீர்மிகு செந்தமிழர் மறந்து போயினர். ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் வைத்துப் போற்றி வழிபட வேண்டிய சிவப் பரம்பொருளை, வீட்டில் வைத்து வழிபட்டால் துன்பம் தொடர்ந்து ஏற்படும் என்ற அறியாமையைத் திருமூலர் கண்டிக்கின்றார். சிவப் பரம்பொருளை வழிபட வேண்டியதன் முதன்மையை அறியாமலும் அப்படி வழிபட விரும்புகின்றவர்களைத் தடுத்தும் அச்சுறுத்தியும் வாழ்க்கை நடத்துகின்றவர்களுக்கு விளையும் தீமையைச் “சிவநிந்தை கூடாமை” எனும் பகுதியில் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவபெருமானை இகழ்ந்து, சிவபெருமானை முன்னிருத்தாத அவவேள்வியினைச் செய்த தக்கனின் தலையைக் கொய்து அவனுக்கு ஆட்டுத் தலையைச் சிவபெருமான் கொடுத்ததும் சிவனை இகழ்ந்த அந்த அவவேள்விக்குச் சென்ற தேவர்களுக்குத் தீமை விளைந்ததையும் கச்சியப்பரின் கந்தபுராணம் காட்டும். இச்செய்தியினையே திருமூலரும் குறிப்பிடுகின்றார்.

அறியாமையால் சிவ வழிபாட்டை ஒரு தரப்பினர் மறந்தும் பின்தள்ளியும் இருக்க, இன்னும் சிலர் உண்மை நூல்களைக் கற்காமல் சிவபெருமானின் திருவடிவினையும் அவனின் திருவியல்பினையும் பழித்துத் துன்பத்தை வேண்டிப் பெறுகின்றனர் என்கின்றார். சிவபெருமானின் திருமேனி என்பது அவனது திருவருளை உருவகமாகக் குறித்து நிற்பது என்பதனை அறியாமல் சிலர் பிதற்றுவர் என்கின்றார். சிவபெருமான் அணியும் மண்டையோட்டுடன் கூடிய எலும்பு மாலையும் புலித்தோலும் படமாடும் அரவும் திருமேனியில் பூசும் சாம்பலும் சுடுகாட்டில் ஆடுதலும் மண்டையோட்டு உண்கலமும் பிறையும் முயலகனும் கங்கையும் உமையும் எதனை உணர்த்துகின்றன என்பதனை அறியாமல் பலர் பிதற்றித் துன்பத்தை விரும்புவர் என்கின்றார். தன் திருவருளையே தனக்குத் திருமேனியாகவும் தன் ஆற்றலையே தனக்குத் திருவடிவாகவும் உயிர்களுக்குக் காட்டுகின்ற பெருமானே, அனைத்து உயிர்களுக்கும் வேண்டுவனவற்றைப் படைத்து, காத்து, துடைத்து, மறைத்து, அருளி, இறுதியாக உயிர்களைத் தன் திருவடியான திருவருளில் அமிழ்த்துகின்றான் என்பதனை எலும்பு மாலைகளும் மண்டை ஓடுகளும் உணர்த்துகின்றன என்று உண்மை நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமானின் திருமேனியில் உள்ள சாம்பல் அல்லது நீறானது உயிர்களைப் பற்றியுள்ள அறியாமையைப் பெருமான் சுட்டு எரித்ததின் அடையாளம் எனவும் புலித்தோல் என்பது இறைநெறியை அறியாது இறைவனை மறுத்துத் தங்களின் சிற்றறிவு வலிமையையே பெரிதாக எண்ணுகின்றவர்களின் கொட்டத்தை அடக்கியதின் அடையாளமாகவும் சுடுகாட்டில் ஆடுதல் என்பது எல்லோருடைய வாழ்வையும் அவனே முடிப்பதனையும் காட்டுவதாகவும் உண்மை நூல்கள் குறிப்பிடுகின்றன.

பெருமான் மண்டை ஓட்டு ஊண்கலத்துடன் இருத்தல் அவன் உயிர்களின் அறியாமையைப் பலி கொள்வதனையும் உயிர்கள் மற்ற உயிர்களுக்கு ஈதலைச் செய்தல் வேண்டும் என்பதனையும் உணர்த்தி நிற்கின்றன என்பர். அம்மண்டை ஓட்டு ஊண்கலமும் பிரமனின் மண்டை ஓடு என்பதானது பெருமானே தேவர்களுக்கும் அவர்களின் அறியாமையை நீக்கி உய்வு அளிக்கின்றான் என்பதாம். தவிர பெருமான் தன் திருத்தலையில் சூடியுள்ளப் பிறையானது அவன் உயிர்களின் குற்றத்தை மன்னித்துத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றவன் என்பதனையும் அவனது பரந்த விரிந்த சடை அவனது பரந்து விரிந்த பேர் அறிவினையும் அவனது நெற்றிக் கண் என்பது அவனின் முற்றறிவையும் உணர்த்தி நிற்கின்றது என்று உண்மை நூல்கள் குறிப்பிடுகின்றன.

பெருமானின் பரந்த சடையில் பெண் வடிவில் உள்ள கங்கையானது ஆணவச் செருக்குற்ற கங்கை நீர் அவன் திருச்சடையில் ஆணவம் அடங்கிச் சிறிதாய் வெளிப்பட்டு உலகினுக்குப் பயன் அளிக்கின்றது என்பதனை உணர்த்துகின்றது என்பர். பெருமானின் திருவருளே உமை எனும் பெண் வடிவாயுள்ளது என்பர். அது ஒருபோதும் இறைவனிடம் இருந்து பிரியாமலும் அவனின் இயல்பிலிருந்து வேறுபடாதும் இருக்கின்றது என்பதனை உணர்த்தப் பெருமானை மாது ஒரு பாகனாய்க் குறிப்பிட்டனர். இதனை உணராது சிலர் பெருமானுக்கு உடலில் ஒரு மனைவியும் தலையில் ஒரு மனைவியும் என இரு மனைவியர் உளர் என்று அறியாமையில் பிதற்றுவர் என்று உண்மை நூல்கள் குறிப்பிடுகின்றன. சிவபெருமானின் திருவடியில் மிதியுண்டு கிடக்கும் குழந்தை வடிவம் போன்ற முயலகன் என்பவனும் கூட ஆணவம் பெருமானின் திருவடியில் அடங்கிக் கிடக்கும் என்பதுதான். இவற்றைப் புரிந்து கொள்ளாத பலர் சிவபெருமானை வழிபட்டால் செல்வம் தங்காது என்றும் இல்லறம் ஆட்டம் கண்டுவிடும் என்றும் சிவனை வழிபடுகின்றவர்களுக்குச் சிவன் மிகுதியான சோதனைகளைக் கொடுப்பான் என்றும் அறியாமல் பிதற்றுவர் என்கின்றார் திருமூலர். இத்தகையோர் சிவனை இகழ்கின்ற செயலானது கிளி ஒன்று தானே பூனையின் அருகே சென்று அகப்பட்டு நின்றது போல் துன்பத்தை வருவித்துக் கொள்வதற்கு ஒப்பாகும் என்கின்றார் திருமூலர்.

சிவபெருமானின் முழுமுதல் தன்மையை அறியாது அவனைச் சிறு தெய்வங்களில் ஒன்றினைப் போன்று எண்ணுகின்றவர்கள் துன்பத்திற்கு உள்ளாவார்கள் என்கின்றார் திருமூலர். சிவபெருமானின் திருவருளையும் அவனின் திருவியல்பினையும் உணர்த்தும் திருக்கோவில்களின் உண்மையை உணர்ந்து கொள்ளாது சிவன் கோவில்களை இகழ்வதும் பின்தள்ளுவதும் அது இறந்தவர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்கு மட்டும் உள்ள கோவில் என்று எண்ணுவதும் சிவ ஆகமங்களில் விதிக்கப்பட்டபடி இல்லாத திருக்கோவில்களில் சிவனை இருத்துவதும் துணை தெய்வங்களில் ஒன்றாகச் சிவனைத் திருக்கோவில்களில் அமைப்பதுவும் சிவனை இகழ்கின்ற துன்பத்தினை நமக்கு ஈட்டித்தரும் என்கின்றார் திருமூலர்.

சிவபெருமான் இவ்வுலக வாழ்க்கைக்கும் இறைவுலக வாழ்க்கைக்கும் தேவையான பொருட்செல்வத்தினையும் அருட்செல்வத்தினையும் முழுமையாக அளிக்கும் பேர் அருள் பெருங்கருணையாளன் என்பதனை உணர்ந்து அவன்பால் அன்பு செலுத்த வேண்டும் என்கின்றார் திருமூலர். கல்விக்கு ஒரு தெய்வம், செல்வத்திற்கு ஒரு தெய்வம், வீரத்திற்கு ஒரு தெய்வம், தொழில் முன்னேற்றத்திற்கு ஒரு தெய்வம், பாதுகாப்பிற்கு ஒரு தெய்வம் என்று பல தெய்வங்களை வழிபட்டு அவற்றில் சிவனும் ஒன்று என்று எண்ணுவது சிவனை இகழ்வது என்கின்றார். இன்னும் தமிழ்ச் சைவர்களில் பலர் தேவர்களையும் தீய தெய்வங்களையும்(துற்தேவதைகள்) பேய்களையும் பிறந்து இறந்த மாந்தர்களையும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மாந்தர்களையும் சிவனுக்கு நிகராக வைத்து வழிபடுவது முழுமுதலான சிவத்தை இகழ்கின்ற செயல் என்கின்றார் திருமூலர்.

சிவச் சின்னங்களான திருநீறு, திருவைந்தெழுத்து, கண்டிகை, சிவனடியார்கள், சிவனின் திருவுருவங்கள், சிவன்கோவில்கள், சிவனின் திருவிழாக்கள், திருமுறைகள், நாயன்மார்கள், சிவவழிபாடுகள் போன்றவற்றைப் பின்தள்ளுபவர்களும் இகழ்கின்றவர்களும் பெரும் தீமையை எதிர்நோக்கி இருப்பவர்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். எனவே சைவத் திருக்கோவில்களில் சிவனுக்கு முதன்மை அளிக்காமையும் சிவச் சின்னங்களை மதிக்காமையும் சிவன் திருவிழாக்களை நடத்தாமையும் சைவத் திருக்கோவில்களில் பூசனையில் பஞ்சபுராணத்தையும் திருமுறைகளையும் ஓதாமையும் சிவனைப் பற்றிப் பேசாமையும் சிவப் பூசனைகள் இயற்றாமையும் சிவனை இகழ்வதாம். சைவக் கோவில்களில் வருமானத்தையே குறிக்கோளாகக் கொண்டு சிறு தெய்வங்களையும் துணைதெய்வங்களையும் முதன்மைப் படுத்திப் பலவகையான முறையற்ற வழிபாடுகளை இயற்றுவதும் பெருங்குற்றமாம்.

செந்தமிழ்ச் சைவர்கள் சைவக் கோவில்களிலும் இல்லங்களிலும் சிவ வழிபாட்டினை முன்னிலைப் படுத்தாது பல்வேறு வழிபாடுகளை முன்னிலைப் படுத்துவது பெருங்குற்றமாம். தமிழ்ச் சைவர்களுக்கே உரிய சிவ வழிபாட்டினை அச்ச உணர்வின்றி இயற்றி, அன்பே வடிவான அச்சிவத்தின் அருளுக்குப் பாத்திரமாகி, சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லையெனும் கொள்கையினை நிலைநாட்டி, மேன்மைகொள் சைவநீதியை உலகமெல்லாம் விளங்கச் செய்வோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!