104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

8185

நிலையற்றப் பொய்யான உடம்பில் மெய்யான மெய்ப்பொருள் இருப்பதனால், பொய்யான இவ்வுடம்பிற்கு மெய் என்று பெயர் சூட்டினார்கள் என்று கற்றறிந்தோர் குறிப்பிடுவர். உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் பயனற்றப் பண்டமாய் இவ்வுடல் போய்விடும் என்பதனால், இவ்வுடலைப் பேணிக்காத்தல் பயனற்றது என்று சிலர் எண்ணுவர். உடலில் உள்ள ஐம்புலன்களினால் மயக்குற்றுப் பல்வேறு துன்பங்களுக்கு நாம் ஆளாவதனால் ஐம்புலன்களைத் தாங்கியுள்ள இவ்வுடலைத் தங்களுக்குப் பகையாகச் சிலர் எண்ணுவர். உலக இன்பங்களையே நாடும் இவ்வுடலை வறுத்தினால் இறை இன்பத்தை அடையலாம் என்று பலர் எண்ணுவர். எனவே இறை நெறியில் தங்களை ஆழ்ந்து ஈடுபடுத்திக் கொள்கின்றவர்கள், குறிப்பாகத் துறவிகளும் யோக நெறி எனப்படும் செறிவு நெறியில் நிற்பவர்களும் இவ்வுடலை வறுத்தினால் தான் இறையருளைப் பெற இயலும் என்று ஒரு காலத்தில் எண்ணினர். இதற்கெல்லாம் பதில் தருவது போன்று மிகச் சிறந்த சிவயோகியாகிய அல்லது சிவச்செறிவாளராகியத் திருமூலர் தமது திருமந்திரத்தில் அருளுகின்றார். காயசித்தி உபாயம் எனும் பகுதியில் இதற்கு விடையளித்துப் பல ஐயங்களைப் போக்கி உடலைப் பேண வேண்டியதின் முதன்மையையும் அதற்கான வழியையும் உணர்த்துகின்றார்.

காயசித்தி உபாயம் என்றால் உடம்பை நிலை பெறுவித்தற்கான வழி என்று தமிழில் பொருள்படுகின்றது. ஒருவருக்கு உடம்பு அழியுமானால், இவ்வுடம்பைத் துணையாகக் கொண்டு இயங்கிய உயிர், தாம் மேம்படுவதற்குத் துணையாய் அமைய உள்ள இறை அருளைப் பெறுவதற்கான முயற்சிகளைச் செய்ய இயலாது என்கின்றார். இறையருள் பெறும் முயற்சியை உடலக் கொண்டு செய்ய இயலாது போகுமானால் இறை உணர்வும் அடையப் பெறாமல் போய்விடும் என்கின்றார் திருமூலர். இதன் அடிப்படையில் உடம்பை நிலை பெறுவிக்கும் வழியை அறிந்து அவ்வழியில் உடம்பினை நிலை பெறுவித்து என் உயிரை நலம் பெறச் செய்தேன் என்பதனை, “உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞானம் சேரவு மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே” என்று குறிப்பிடுகின்றார். இதன்வழி, இறை நெறியாளர்களும் பிறரும் உடல் நலத்தைப் பேணி, உடம்பை நிலை பெறுவித்தற்கான வழியை அறிந்து கொள்ள முயலுங்கள் என்கின்றார் திருமூலர்.

சிவனைப் பற்றிய கல்வியைப் பெறுவதற்கு முன்னால் இவ்வுடம்பு அழுக்கு உடைய பொருள், இழிவான் பொருள் என்று தாம் எண்ணி இருந்ததாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவனைப்பற்றிக் கற்ற பின்பு தாம் இழுக்காகக் கருதிய உடம்பினுள்ளே உயிர் மேநிலை அடைவதற்கான பல வழிகள் இருப்பதனை அறிந்தேன். சிவக் கல்வியினால் உடம்பிற்குள்ளே தானே இறைவன் தனக்கு இடம் அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதனை அறிந்து, இப்பொழுது நான் உடம்பைக் கேடு உறாதவாறு குறிக்கோளோடு காத்து வருகின்றேன் என்பதனை, “உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன், உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன், உடப்புளே உத்தமன் கோயில்கொண் டான்என், றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே” என்று குறிப்பிடுகின்றார் திருமூலர்.

முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, ஓய்வு என்று பொதுவாக உடல் நலத்தைப் பேண விரும்புவோர்க்குப் பலரும் அறிவுரைகளும் ஏடல்களும் கூறுவர். இது நாம் நோயற்று வாழவும் குறிப்பிட்ட வாழ்நாளைப் பெறவும் மட்டுமே துணை நிற்கும் என்று குறிப்பிடலாம். எனினும் இதன்வழி பிறவிப் பயனை அடையாமலேயே வெறுமனே இறந்து படுவோம். நீண்ட நாள் இவ்வுடலை நிலை நிறுத்தி வாழ்வதற்கும் நிலை நிறுத்திய உடலைக் கொண்டு பிறவிப் பயனாகிய இறைவனின் திருவடி இன்பத்தினை நுகர்வதற்கும் திருமூலர் வழி காட்டுகின்றார். இவ்வுடலை அதற்குக் கருவியாகவும் அடையும் பயனாகவும் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவச் செறிவுப் பயிற்சியின் மூலம் இப்பயன்களை அடைய முடியும் என்றும் அவர் அறிவுறுத்துகின்றார்.

சிவச்செறிவில் அல்லது சிவயோகத்தில் உடலை நிலை நிறுத்துதற்கு உரிய அரிய வழியாக மூச்சுப் பயிற்சியைக் குறிப்பிடுகின்றார். வளிநிலை அல்லது பிராணாயாமம் என்று குறிப்பிடப்படும் மூச்சுப் பயிற்சியைத் திறம்படக் கைக்கொண்டால் உடலை நிலை நிறுத்தும் வெற்றியை அடையலாம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உயிர்ப்புக் காற்றை முறையாக உள் வாங்குதலும் வெளியிடுதலும் ஆகிய சுழற்சியை முறையறிந்து செய்வோமானால் உடலில் உள்ள மாசுகள் நீங்கும் என்கின்றார். மாசுகள் நீங்கிய உயிர்ப்புக் காற்றை உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் எனப்படும் ஆறு நிலக்களங்களில் நிரப்பி, அவற்றின் வழியாக உடம்பில் உள்ள் எல்லா நாடியின் உள்ளும் அவ்வுயிர்ப்புக் காற்று சென்று உலவும்படிச் செய்தால் நாடிகள் ஆற்றல் பெறும் என்கின்றார். உடலில் உள்ள நாடிகளுக்கு ஆற்றலைத் தருகின்ற இம்முறையை அறிந்து செய்ய வல்லார்க்கு, வெறுமனே இறந்துபடுகின்றவர்களின் உடம்பினைப் போல் அல்லாது உயிரினுள் ஒளிந்து இருக்கின்ற கள்வனாகிய இறைவனைப் புலன்களின் வழிக் காட்டும் மந்திர மை போன்று இவ்வுடல் அமையும் என்கின்றார் திருமூலர்.

மந்திர மையைப் போன்று இறைவனைக் காட்ட வல்ல உடம்பினை, அவ்வாறு ஆகவிடாது, ‘ஐ, வளி. பித்து’ என்ற மூன்று பொருட்கள் எப்பொழுதும் தாக்கி நோய்வாய்ப்படுத்திக் கொண்டே இருக்கும். இவற்றை மூச்சுப் பயிற்சிச் செய்வதன் வழி வெல்லாம் என்கின்றார் திருமூலர். ‘ஐ’ என்னும் சளியை மாலை நேரத்துச் செய்யும் மூச்சுப் பயிற்சியின் மூலம் போக்க இயலும் என்கின்றார். வளி அல்லது வாதம் என்பதனால் ஏற்படும் நோய்களை நண்பகலில் செய்யும் மூச்சுப் பயிற்சியினால் போக்க இயலும் என்கின்றார். பித்தத்தினால் ஏற்படும் நோய்களைக் காலையில் செய்யும் மூச்சுப் பயிற்சியினால் போக்க இயலும் என்று குறிப்பிடுகின்றார். இதனால் உடலுக்கு இளமை நீங்காமை ஏற்படும் என்றும் தலை மயிர் நரைத்தல், கண்களில் திரை விழுதல் போன்றவையும் ஏற்படாது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

இட நாடி வழியாகவும் வல நாடி வழியாகவும் இயல்பாக இயங்குகின்ற உயிர்ப்புக் காற்றை அடக்கி, நடு நாடி வழி இயங்கச் செய்து, குண்டலி சத்தியை நடு நாடியில் பொருந்த இருக்கச் செய்தால், உடம்பிற்கு அழிவு உண்டாகாது என்கின்றார் திருமூலர். சிவச் செறிவு முறையால் பெறப்படும் வாழ்நாள் நீடிப்பு இயல்பாய் அமைந்த வாழ்நாளின் எல்லையோடு ஒப்பிடுகையில் கூடி நிற்கும் என்கின்றார். உயிர்ப்புக் காற்றும் குண்டலி சத்தியும் நடு நாடியில் பொருந்தி இருக்குமானால், “மணி, கடல், யானை” முதலியவற்றின் ஓசை போல் ஒலி கேட்கும் எனவும் சிவபெருமான் தாள அமைப்பிற்கு ஏற்ப ஆடுகின்ற ஆட்டத்தின் கழல் ஒலியும் கேட்கும் என்கின்றார். தவிர மெய்யான, நிலை பெற்ற, இன்பமே வடிவான அப்பெருமானும் விளங்கித் தோன்றுவான் என்று குறிப்பிடுகின்றார். எனவே மூச்சுப் பயிற்சியினால் குண்டலியின் இயக்கமும் குண்டலியின் இயக்கத்தினால் திருவருள் பேறும் கிட்டும் என்கின்றார். இதற்கு அடிப்படையாக இருப்பது உடலே என்று நிறுவுகின்றார் திருமூலர்.

உடலைப் பேண விரும்புகின்றவர் உணவைக் குறைத்து அளவோடு உண்ணல் இன்றியமையாதது என்கின்றார் திருமூலர். உணவுக் குறைவால் முகத்தில் தசை ஒட்டிக் கண் குழி விழுந்தாலும் அதனால் உடலுக்கு அழிவு ஏற்படாது என்கின்றார் திருமூலர். உடம்பு இளைத்தால் உயிர்ப்புக் காற்று கைவரப்பெற்று உடலை நிலைநிறுத்தும் வழியில் வெற்றி பெறலாம் என்கின்றார். உணவு குறைந்தால் உயிர் நலம் பெறுவற்குரிய வழிகள் பலவும் அமையும் என்கின்றார். இதனால் உண்டி சுருக்கியவன் இறவாமையினாலும், இன்ப நிறைவாலும் சிவனை ஒத்து நிற்பான் என்கின்றார் திருமூலர்.

இறைவன் உயிர்களின் உடம்பில் மூலாதாரத்தில் அக்கினியையும், அவ்வக்கினியில் உடலை நிலைப்பிக்கின்ற ஆற்றலையும் படைத்து, அவற்றை நீங்காது நிறுத்தித் தானும் அவற்றில் உடன் நிற்கின்றான் என்கின்றார் திருமூலர். இதனை அறிந்து அவ்வக்கினியை எழுப்பி, அம்மூலாதாரத்தில் இறைவனை இடைவிடாது நினைப்பவர், உடலை நிலை நிறுத்தும் ஆற்றலைப் பெறுவர் என்கின்றார். உடலை நிலை நிறுத்துகின்ற மூச்சுப் பயிற்சி மற்றும் மூலாதார அக்கினியை இயக்கும் பயிற்சிகளை இறையருள் வழி நின்று செய்தல் வேண்டும். இவ்வாறு அல்லாமல் வெறும் யோக முயற்சி உடலை நிலை நிறுத்தும் ஆற்றலைத் தாமே பெற்றுத் தந்துவிடும் என்பது வெறும் மயக்கமே! அவ்வாறு எண்ணுகின்றவர்கள் மயக்கம் உடையவர்கள். இவர்கள் இறைவனின் திருவருளை ஒருபோதும் பெறமாட்டாதவர்கள் என்றும் குறிப்பிடுகின்றார். எனவே திருமூலர் கூறும் உடம்பினை நிலைநிறுத்தும் வழியினை அறிந்து உயிரை வளர்ப்போமாக! திருவருளைப் பெறுவோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!