103. அகத்தவத்தில் மந்திரச் செறிவு

1057

சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவத்தின் முழுமுதற் பொருளான சிவத்தை அடைதற்கு அன்பு ஒன்றே வழி என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவம் எனும் பரம்பொருளிடத்து அன்பு பெருகுதற்கு அறிவார்ந்த வழிபாடுகளை இயற்ற வேண்டும் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். அத்தகைய அறிவார்ந்த வழிபாடுகளில் ஒன்று அகத்தவம் என்கின்ற சிவச் செறிவு நெறி அல்லது சிவயோக நெறி என்பதனை அவர் சுட்டுவார். இச்சிவச் செறிவு நெறியின் துணையால் இறை அறிவினைப் பெற்று, அவ்வறிவின் துணையால் இறைவன் பால் அன்பும் உணர்வும் பெருகி, அதன் வழியாக இன்ப வெள்ளம் பெருகும் என்கின்றார். அன்பு பெருகிய பின், அவ்வன்பையே அதற்குப் பிறகும் துணையாகப் பின்பற்றி, அந்தப் பேரின்ப வெள்ளம் வற்றிப் போகாதவாறு பாதுகாத்துக் கொள்ளக் கூடும் என்பதனைக் “காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக், காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற், காதல் வழிசெய்து கங்கை வழிதரும், காதல் வழிசெய்து காக்கலு மாமே” என்று திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரத்தில், கலைநிலை எனும் பகுதியில் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

இடகலை, பிங்கலை எனப்படும் இடநாடி வழியாகவும் வலநாடி வழியாகவும் இயல்பாக இயங்கும் உயிர்ப்புக் காற்றை அதன் வழி விடாது யோகப்பயிற்சி எனும் செறிவுப் பயிற்சியினால் சுழுமுனைநாடி எனும் நடுநாடியில் செலுத்தி அதனைப் புருவ நடுவே கொண்டு வந்து நிறுத்தி, அதனை அசைவில்லாது நிற்கும்படிச் செய்து, வைத்து எண்ணப்படுகின்ற பொருளிலே அழுந்தி இருத்தல் வளிநிலை வெற்றி எனப்படுகின்றது. இதனை வாசியோகம் அல்லது வளிநிலைச்செறிவு வெற்றி என்று குறிப்பிடுவர். இந்நிலையில் இறைவனின் அருள் ஒளி சிறு தீப்பொறியாக மட்டுமே வெளிப்படும் என்பார் திருமூலர். இத்தகைய சிற்றொளியைப் பேரொளியாக ஆக்குதற்கு இறைஅறிவு (பரஞானம்) வேண்டுவது ஆகின்றது என்கின்றார் திருமூலர். அகத்தவம் எட்டில் தீதுஅகற்றலில் தொடங்கி சமாதி என்ற அழுந்தியிருக்கும் நிலைக்கு மேம்பட்ட இறைஅறிவு பெறுதல் எனும் சிவச்செறிவினுக்கே உரிய தனிச் சிறப்பினைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சமாதி எனப்படும் அழுந்தி இருத்தல் எனும் படிநிலைக்கு அடுத்த படிநிலை இறை அருள் பெறுகின்ற நிலையினை மந்திரச் செறிவு அல்லது பிராசாத யோகம் என்று குறிப்பிடுகின்றார் திருமூலர். இதனைப் பிரணவ யோகம் என்றும் குறிப்பிடுவர். பிராசாதம் என்று வடமொழியில் குறிக்கப்படுவதானது (பிரா- சிவஅறிவு , சா- கதி, த- தருவது) சிவ அறிவு நிலையைப் பெற்றுக் கொடு என்பதாகும். சிற்சிறு ஒளித் துளிகளாகத் தோன்றிய இறையறிவை நிலைத்த ஒன்றாகவும் பெரிதாகவும் பெற்று இறைவனிடத்திலே அன்பு செய்வதற்கு சிவச் செறிவாளர்கள் செய்ய வேண்டியது மந்திரச்செறிவு என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். வாசியோகம் எனப்படும் வளிச்செறிவினும் நுண்ணியதாகிய இம்மந்திரச் செறிவின் வழி, வளிச்செறிவினால் ஆதாரங்கள் எனப்படும் ஆறுநிலைக்களங்களில் சிறு சிறு இறை ஆற்றலாய், இறை அறிவுத் துளியாய் நின்ற குண்டலி ஆற்றல், மந்திரச் செறிவினில் அல்லது பிராசாத யோகத்தின் வழி தன் உண்மையான வடிவில் இறைப்பேரொளியாய் தலைப்பட்டு நிற்கும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

பிரணவம் என்கின்ற “ஓம்” எனும் மந்திரம் தொகையாய் நிற்கின்ற வடிவமாகும். இதனைச் சமட்டிப் பிரணவம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். தொகையாய் நிற்கின்ற “ஓம்” எனும் மந்திரத்தைப் பகுத்துப் பார்த்தால் அதனுள் ‘அகரம், உகரம், மகரம், விந்து, நாதம்” உறுப்புக்கள் உண்டு என்பர். இவ்வாறு ஐந்தாகி விரிந்து நிற்கின்ற நிலையை வியட்டிப் பிரணவம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். “ஓம்” என்ற தொகை மந்திரத்தின் உள்ளே இருக்கின்ற ஒவ்வொரு கூறினையும் சிவச்செறிவாளனுக்கு இறை அறிவினைப் பெற்றுத்தரும் ஒரு கூறு என்பதனால் இவற்றைக் கலைகள் என்பர். இதனாலேயே, “ஓதிய ஐந்து……….. ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய்” என்று இறைவனைக் கந்தர்கலி வெண்பாவில் குமரகுருபரர் சுட்டுவார் என்பர். எனவே இறையறிவுப் பேரொளியைப் பெறுவதற்கு இம்மந்திர கணிப்பு இன்றியமையாததாகின்றது. இம்மந்திரத்தின் துணைக்கொண்டே இறையறிவினையும் அதன்வழி இறையன்பினையும், பெற்ற இறையன்பினில் அழிந்தியிருத்தல் என்பது முடியும் என்பதனால் அகத்தவம் இயற்றுபவருக்கு இம்மந்திரச் செறிவு முதன்மையானது என்கின்றார் திருமூலர். அன்பின் பிழம்பாய்த் திரிந்த நாயன்மார்களுக்கும் திருமுறை ஆசிரியர்களுக்கும் அருள் நிகழ்ச்சியை நிகழ்த்தித் தந்த, இறைவனின் திருவடியில் சேர்ப்பித்த, முதன்மை மந்திரமான, ‘நமசிவய, சிவயநம” என்ற திருவைந்து எழுத்து மந்திரமே பருமை (தூலம்) நுண்மை (சூக்குமம்) மந்திரமாகவும் விளங்கியது. அதுவே அவர்களுக்குச் சொல் உலகையும் பொருள் உலகையும் கடக்க உதவியது.

சிவச்செறிவாளர்கள் உண்மையானப் பொருள் உலக அறிவைக் கடந்து உண்மையானச் சொல் உலக அறிவினை இறைவனின் அகண்டித அறிவின் துணையோடு, பொருள் உலகையும் சொல் உலகையும் கடந்து நிற்கின்ற பெருமானை உணர்ந்து அன்பு செலுத்த வேண்டுவதாய் உள்ளமையால் அவர்கள் நடப்பாற்றல், மலம், சிவம், வனப்பாற்றல், யாக்கை எனும் பொருளை உணர்த்தி நிற்கும் “சிவயநம, நமசிவய” என்ற மந்திரம் அவர்களுக்குப் பருமை (தூலம்) மந்திரமாகவும் “ஓம்” எனும் மந்திரம் அவர்களுக்கு நுண்மை (சூக்குமம்) மந்திரமாகவும் நிற்கும் என்பர். எனவே மந்திரச் செறிவில் சிவச்செறிவாளர்கள் “ஓம்” என்ற மந்திரத்தையே கணித்து நிற்பர் என்பர். பெருமான் திருவைந்து எழுத்து எனும் மந்திரத்தின் பொருளாய் நிற்பது மற்றுமின்றி , “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாகவும் நிற்கின்றான் என்பதனை, “ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்” என்று தமது திருத்தாண்டகத்தில் குறிப்பிடுவார் திருநாவுக்கரசு அடிகள். இதனாலேயே திருவைந்தெழுத்தைக் கணிக்கின்றவர்கள், “ஓம் நமசிவய, சிவயநம ஓம்” என்றும் கணிக்கும் வழக்கமும் “ஓம்” என்று கணிக்கும் வழக்கமும் பரவலாக உள்ளமையைக் காணலாம்.

திருவைந்து எழுத்து இறைவனுக்கு மந்திர வடிவமாக நிற்றல் போல ஓம் எனும் மந்திரத்தினை வடிவாக இறைவனை வைத்து எண்ணுவது மந்திரச்செறிவு அல்லது பிரணவ யோகம், அல்லது பிராசாத யோகம் எனப்படுகின்றது. ஓம் எனும் மந்திரத்தினை இறைவனின் ஓசைவடிவாக எண்ணி இடைவிடாது கணிக்கின்ற போது மந்திரச்செறிவாளருக்குப் பன்னிரண்டு நிலைகளில் சிவஅறிவு வளர்ச்சி ஏற்படும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனையே துவாதச கலாப்பிராசாதம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். நெற்றி நடு, தலையின் முற்பாதி(நெற்றி நடுவின் மேல் ஒன்றரை அங்குலம்), உச்சி, தலையின் பிற்பாதி (உச்சிக்குப் பின் ஒன்றரை அங்குலம்), உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குலம்(பிரம ரந்திரம்), போன்ற இடங்களில் மந்திரச்செறிவின் வழி இறைஅறிவு தென்படும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு சிவச்செறிவு பெறுகின்ற போது இறைவனின் பருமை ஒளி, நுண்மை ஒளி, அதி நுண்மை ஒளி, இறைவனின் ஒலி, நுண்மை ஒலி, அதி நுண்மை ஒலி, இறைவனின் திருவருள், அத்திருவருள் நிற்கின்ற நிலை, அத்திருவருள் செயல்படுகின்ற நிலை, திருவருளின் குறிப்பு, திருவருள் குறிப்பு செயல்படும் வகை, போன்ற உணர்வினை, இறையறிவால் மந்திரச்செறிவாளன் பெறுவான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பெறும் அறிவு படிம நிலையில் ஏற்படும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அகார, உகார,மகார அறிவு ஏற்பட்டப் பின் சிவச்செறிவாளருக்கு ஒரு வெற்று நிலை ஏற்படும் என்கின்றார். பெற்ற அவ்வறிவில் நின்று கீழ் இறங்காமல் ஓம்கார மந்திரத்தின் துணையால் மேல் நோக்க அதன் பின் இறைவனின் பருமை ஒளி, நுண்மை ஒளி, அதி நுண்மை ஒளி பற்றிய அறிவு தோன்றும் என்கின்றார்.

இவற்றைப் பெற்றச் செறிவாளனுக்கு மீண்டும் வெற்றுநிலை ஏற்படு என்கின்றார் திருமூலர். பெற்றச் சிவ அறிவினைத் துணையாகக் கொண்டு ஓம்கார மந்திரச் செறிவால் மேலும் மேல் நோக்கின் இறைவனின் ஒலி, இறைவனின் நுண்மை ஒலி, இறைவனின் அதிநுண்மை ஒலி வடிவுகள் புலப்படும் என்கின்றார். இவ்வாறாகப் படிம நிலையில் மேற்கூறியவாறு இறைவனின் திருவருள் குறிப்புச் செயல்படும் நிலை வரையிலும் உணர்ந்த பின்பு பரம்பொருள் முழுமையாக வெளிப்படும் எனவும் அதனை முழுமையாகக் காணுகின்ற பேறு மந்திரச் செறிவாளனுக்குக் கிட்டும் என்கின்றார் திருமூலர். இதுவே மந்திரச் செறிவின் பயனும் ஆகும் என்பார் திருமூலர். இப்பயனைத் தாம் பெற்றதாக, “ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம், தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே” என்று குறிப்பிடுவார். உயிருக்குள்ளே உணர்வாய் இருக்கின்ற அப்பெருமானின் மந்திர வடிவினை மந்திரச் செறிவால் பெற இயலும் என்று எல்லா செறிவு நெறிகளுக்கும் மேம்பட்டும் தனித்தும் நிற்கும் சிவச்செறிவினை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்வோமாக. இன்பமே எந்நாளும் துன்பமில்லை!