13.எந்தை அடி போற்றி

1190

13.எந்தை அடி போற்றி

      ஆதி முதலாகிய பரம்பொருளின் துணைக் கொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை, “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையிலும் “போற்றி என் வாழ் முதலாகிய பொருளே” என்று திருப்பள்ளிஎழுச்சியிலும்  உயிர்கள் உலகில் இடம்பெறுவதற்குப் பெருமானேமுதலில் அருள் புரிந்தான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். எல்லா உலகங்களில் உள்ள உயிர்களும் அருமையான சிவப்பரம்பொருளைப் போற்றி வழிபடுவதற்கு உரியன என்பதனை, “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். அன்றாட வாழ்வில் எல்லா உயிர்வகைகளும் இயற்றும் அனைத்துச் செயல்களுக்கும் அவனே துணை நிற்கின்றான். பெருமானே உயிரற்ற எல்லாப் பொருள்களையும் உயிர்கள் பயன்பெறும் பொருட்டு இசைவிக்கின்றான் என்பதனைத் திருமூலர், “போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை” என்று குறிப்பிடுவார். இச்செய்தியினையே, “எந்தை அடி போற்றி” என்று மணிவாசகர் திருவாசகத்தின் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.

           பெருமானே உலகிற்குத் தந்தை. அத்தகைய பெருமானின் திருவடிகளை வணங்குகின்றேன் என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். பெருமானும் பெருமானின் திருவருளுமேஉலகையும் உலக உயிர்களையும் பேணிக்காப்பதனால், பெருமானையும் அவனின் திருவருளையும் உயிர்களுக்கும் உலகங்களுக்கும் அம்மை அப்பர் என்றனர். இதனையே சித்தாந்த சைவ மெய்கண்ட நூலான திருகளிற்றுப்படியாரும், “அம்மை அப்பரே உலகிற்கு அம்மை அப்பர்” என்று குறிப்பிடுகின்றது. உலகம் தோன்றுதற்கும் பெருமான் தோற்றிய உலகில் உயிர்கள் இடம்பெறுவற்கும் முதல்வனாகத் தந்தையாக இருக்கின்ற பெருமான், தனது திருவருளான நடப்பு ஆற்றலைக்கொண்டே அனைத்தையும் நடத்துவிக்கின்றான் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுவதனை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமானின் திருவருளை ஆதிசத்தி என்றும் பராசத்தி என்றும் சைவம் குறிப்பிடும். அச்சத்தியினையே அம்மையாக, அம்பிகையாக, பெண்ணாக மேலும் குறிப்பிடுகின்றன. இதனைஒட்டியே திருநாவுக்கரசு அடிகளும், “அப்பன் நீ அம்மை நீ … துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ”  என்று குறிப்பிடுவார்.

            எல்லா உயிர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற பெருமான் பொது நிலைக்கு இறங்கி வந்துதம்பிள்ளைகளைப் பேணிக்காப்பதாய் அருள்தொழில் செய்வதையே ஐந்தொழில் என்று குறிப்பிடுவர். தூய இறையுலக வாழ் உயிர்களுக்குத் தாமே நேரடியாக நின்று தோற்றுவித்தல், நிற்பித்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருள் செய்தல் எனும் ஐந்தொழில்களை நான்முகன், திருமால், துடைப்போன், மறைப்போன், அருளோன் எனும் வெவ்வேறு பெயர்களில் பெருமான் நின்று இயற்றுவான் என்று குறிப்பிடுவர். இதனாலேயே பெருமானை எந்தை என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பிற உலகங்களில் வாழ்கின்ற உயிர்களுக்கு, இறையுலகில் வாழும் முதிர்ச்சிப் பெற்ற உயிர்களுக்குப் பெருமான் ஐந்தொழில் செய்யும் உரிமத்தை அளித்து ஐந்தொழில் ஆற்ற அருள் செய்கின்றான். இந்நிலையில் உயிர் வகைகளே பெருமானின் திருவருள் துணையுடன் அயன், அரி, அரன் எனும் பெயரில் தோற்றுவித்தல், நிற்பித்தல், துடைத்தல் எனும் தொழில்களைச் செய்வதனால் பெருமானை எந்தை என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

           உலகிற்குத் தந்தையாகிய பெருமான் உயிர்களின் மலத் தடிப்பிற்கு ஏற்றவாறு உயிர்கள் வாழும் உலகங்களில் வாழ்வதற்குத் தேவையானவற்றைத் தோற்றுவித்துக் கொடுக்கின்றான். உயிர்கள் தங்களைப் பற்றியுள்ள அறியாமையைப் போக்கிக் கொள்ள வாழுங்காலத்தில் பல பிறவிகளில் செயல்கள் செய்து முதிர்ச்சி பெற வேண்டியுள்ளது. அதற்கு உயிர்களுக்கு உடல், கருவிகள், உலகங்கள், நுகர்ச்சிப் பொருள்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் அழுந்தி உழன்றே உயிர்கள் பல பிறவிகளில் தங்களுடைய அறியாமையைப் பெருமானின் திருவருளால் போக்கிக்கொள்ள வேண்டியிருக்கின்றது. இவற்றைப் பெருமான் உயிர்களுக்குத் தோற்றுவித்துக் கொடுப்பதனால் பெருமானை எந்தை என்றார் மணிவாசகர்.

           மாந்தர், வானவர், கணங்கள், அசுரர், விலங்கு, பேய், பறவை, பாம்பு, மீன், பூச்சி, புல், பூடு, மரம் என்று எல்லா உயிர் வகைகளின் உடம்பையும் பெருமான் தோற்றுவித்து அவற்றின் உள்ளே பெருமானால் தோற்றுவிக்கப்படாத உயிர்களைப் புகுத்தவும் செய்கின்றான். பெருமான் பல அண்டங்கள், கோள்கள், விண்மீன்கள், கதிரவன், மதி, நிலம், நீர், தீ, வளி, வெளி என்று ஐம்பூதங்களையும் தோற்றுவித்து அருளுவதனால் பெருமானை எந்தை என்று குறிப்பிட்டார். பெருமானே உயிர்கள் மெய்யறிவு பெறும்வகையில் உடலில் உட்கருவிகளைப் பொறுத்துகின்றான்.  பெருமான்  உயிரில் பொறுத்தும் மனம், சித்தம், அறிவு, மனவெழுச்சி எனும் கருவிகளைக் கொண்டே உயிர்கள் பெருமானின் திருவருளைத் துணைக்கொண்டு தங்களைப் பிணித்துள்ள அறியாமையைப் போக்கிக் கொள்கின்றன. இதனாலேயே மணிவாசகர் பெருமானை எந்தை என்று குறிப்பிடுகின்றார்.

           மாந்தர்களாகிய நமக்கு இவ்வுலகில் வாழ்வதற்குத் துணையாக நிலம், வீடு, மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள், பொன், பொருள், உடை, உணவு என்று மேலும் அளிக்கின்றான். இதனையே, “பொன்னும் மெய்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை” என்று சுந்தரமூர்த்திஅடிகள் குறிப்பிடுவார். இதனையே, “வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ” என்று மணிவாசகர் வேறு ஒரு பதிகத்தில் குறிப்பிடுவார். பெருமான் தோற்றுவித்த உலகம், உடல், கருவிகள், நுகர்ச்சிப் பொருள்கள் இவை யாவற்றையும் பெருமானே நிறுத்திக் காக்கின்றான். உயிர்கள் பெறவேண்டிய உணர்வினை, அறிவினை, படிப்பினையைப் பெறும் வரையிலும் ஒரு பொருள் நம்மிடம் இருக்கும்படியாக அதனை நிலைப்பித்து நிறுத்தி வைப்பதனையும் பெருமானே செய்கின்றான். பெருமானே நம் உடலில் உயிர் தங்கி இருக்கும்படியாகத் தோன்றாத் துணையாக நிற்கின்றான். பெருமானே நாம் நலமுடன் வாழத் துணை நிற்கின்றான். பெருமானே நமக்கு வேண்டும் காலம்வரையிலும் நம் கண் பார்வை, கைக்கால் விளக்கம், இதயத் துடிப்பு, குருதியோட்டம் என்று உடற்கூறுகள் அனைத்தையும் ஒவ்வொரு பிறவியிலும் காத்து நிற்கின்றான். இதனாலேயே மணிவாசகர் பெருமானை எந்தை என்று குறிப்பிட்டார்.

          பெருமானே நம் பெற்றோர், கணவன், மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள், பணம், பொன், பொருள், வீடு என்பவற்றையும் உலக வாழ்க்கையையும் உரிய நேரத்தில் நம்மிடம் இருந்து நீக்குகின்றான். பெருமானே மறைபொருளாய் நின்று உயிர்களுக்கு மறைத்தலையும் செய்து பின் செவ்வியுற்ற உயிர்களுக்குத் தன் திருவடியையும் நல்குகின்றான். இத்தனையையும் செய்யும்  பெருமானை இதனாலேயே தந்தையே என்றும் அப்பெருமானின் திருவடிகளை நன்றியால் வணங்குகின்றேன் என்றும் மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். தந்தையாய் இருந்து பெருமான் நமக்கு இயற்றும் உதவிகளை எண்ணிப் பார்ப்போம். நன்றியால் அப்பெருமானின் திருவடிகளைப் போற்றி மகிழ்வோம்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!