31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

3441

31: எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் உயிர்கள் நால்வகையில் தோன்றி எழுவகை பிறப்புக்களில் உழன்று இறைவனை அடைகின்றன என்று குறிப்பிடுகின்றது. உலகில் தோன்றும் உயிர் வகைகள் முட்டை, வியர்வை, விதை, கரு என்ற நான்கு வகைகளிலேயே தோன்றுகின்றன. அவை வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என எழுவகைப் பிறவிகளிலே பிறக்கின்றன என்கின்றது. உலகின் உயிர் வகைகள் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் எனவும் குறிப்பிடுகின்றது.

 

 

 

 


இவ்வாறு பிறக்கின்ற உயிர் வகைகள் அறிவு நிலையில் வேறுபடுகின்றன என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. தொட்டால் அறியும் ஓர் அறிவினை மட்டும் உடையன தாவரங்கள். தொடுதல், சுவை என்ற இரண்டினை மட்டும் அறியும் அறிவினை உடையவை இப்பி, சங்கு போன்றவை. கறையான், எறும்பு முதலியன தொடுதல், சுவை, மணம் போன்ற மூன்றை அறியும் ஆற்றல் உடையன. வண்டு, தும்பி முதலியன தொடுதல், சுவை, மணம், காணுதல் ஆகிய நான்கு அறிவினை உடையன. ஐந்து அறிவினை உடையன விலங்கு, பறவை முதலியன. இவை தொடுதல், சுவை, மணம், காணுதல், ஒலியைக் கேட்டல் போன்ற ஐந்து அறிவினை உடையன. மேற்கூறிய ஐந்து அறிவுகளோடு பகுத்து அறியும் ஆறாவது அறிவோடு கூடியவர் மாந்தரும் வானவரும் ஆவர்.

இத்தகைய ஓர் இடத்திலிருந்து இருந்து ஓர் இடத்திற்கு இயங்கும் உயிர் வகைகளாகவும் நின்ற இடத்திலேயே நின்று இயங்கும் உயிர் வகைகளாகவும் எல்லாப் பிறவிகளிலும் பிறந்து மெலிவடைந்த நான் எம்பெருமானே, இப்பொழுது உண்மையாகவே உன் அழகிய திருவடிகளை உம் துணையாலே கண்டதனாலே அத்தகைய பிறவிகள் எல்லாம் அறும் பேறு பெற்றேன் என்பதனை, “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக், கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய், வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச், செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான், மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்” என்று சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

உயிர்கள் தங்களைப் பற்றியுள்ள அறியாமையைப் போக்கிக் கொள்வதற்கு வாழுங்காலத்தில் பல பிறவிகளில் செயல்கள் செய்து முதிர்ச்சி பெற வேண்டியுள்ளது. அதற்கு

  • உடல் (தனு)
  • கருவி கரணங்கள் (கரணம்)
  • உலகங்கள் (புவனம்)
  • நுகர்ச்சிப் பொருள்கள் (போகங்கள்)

தேவைப்படுகின்றன. இவற்றில் அழுந்தி உழன்றே உயிர்கள் பல பிறவிகளில் தங்களுடைய அறியாமையை இறைவன் அருளால் போக்கிக் கொள்ள வேண்டி இருக்கின்றது. பெருமானே பல வகையான பிறவியை உடைய உயிர் வகைகளுக்கும் உடம்பைத் தோற்றுவிக்கின்றான். மனிதர், தேவர், கணங்கள், அசுரர், விலங்குகள், பேய், பறவை, பாம்பு, மீன், பூச்சி, புல் பூடு, மரம் என்று எல்லா உயிர்வகைகளின் உடம்பையும் பெருமான் படைத்து அவற்றின் உள்ளே என்றும் உள்ள, பெருமானால் படைக்கப்படாத உயிர்களை உட்புகுத்துகின்றான்.

உயிர்களுக்குத் தேவையான பல்வேறு உலகங்களைத் தோற்றுவித்து உயிர்களின் வினைக்கீடாக அவற்றை அங்கே வாழ வைக்கின்றான். அண்டங்கள், கோள்கள், விண்மீன்கள், சூரியன், சந்திரன் என்று பல்வேறு உலகங்களைத் தோற்றுவித்து அவற்றில் உயிர்களை அரு உடலோடும், உரு உடலோடும் வாழ விடுகின்றான். அந்தந்த உலகங்களில் வாழ்வதற்குத் தேவையான நிலம், நீர், தீ, வளி, வெளி என்று ஐம்பூதங்களைத் தோற்றுவித்து அருளுகின்றான். உயிர்கள் அவற்றின் அறியாமை மறைப்புக்கு ஏற்றவாறு இறையறிவு பெறும் வகையில் உடலில் உட்கருவிகளைப் பொறுத்துகின்றான். அவை மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் மனவெழுச்சியும் ஆகும். இவை பொறுத்தப்படுவதனாலேயே உயிர்கள் இறைவன் திருவருளைத் துணைக்கொண்டு அவனை நாடி தங்களைப் பிணித்துள்ள அறியாமையைப் போக்கிக் கொள்கின்றன.

உயிர்கள் தாம்தாம் வாழவேண்டிய உலகினில் வாழ்வதற்குப் பெருமான் உரிய நுகர்ச்சிப் பொருள்களைப் படைக்கின்றான். நம் போன்ற மக்களுக்குத் தேவையான நுகர்ச்சிப் பொருள்களையும் பிற உயிர் வகைகளுக்குத் தேவையான நுகர்ச்சிப் பொருள்களையும் இறைவனே உணர்ந்து தானே அளிக்கின்றான். இதனைத்தான் திருவள்ளுவ நாயனாரும், “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” என்றார். அதாவது இறைவன் படைத்து ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர முடியாது என்பதாம்.

மக்களாகிய நமக்கு இவ்வுலகில் நுகர்வதற்கென மனை, வீடு, மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள், பொன், பொருள், உடை, உணவு என்று இறைவனே நமக்கு நுகர்ச்சிப் பொருள்களைப் படைத்துக் கூட்டுவிக்கின்றான். அதனை நுகரச் செய்விக்கின்றான். இதனைத்தான் மாணிக்கத் தமிழில் பாடிய மாணிக்கவாசக அடிகள், “வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ” என்று குறிப்பிடுகிறார். உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம் என்ற அறியாமையைச் செய்யக் கூடிய பொருளின் வலிமையைக் குறைக்கவும் அறியாமையைப் போக்கவும் பெருமான் படைத்த உடல், உலகம், கருவிகள், நுகர்ச்சிப் பொருள்கள் இவை யாவற்றையும் பெருமானே தோற்றுவித்து, நிறுத்தி, போக்குவித்து, மறைப்பித்துத் தன் திருவடியை அருளுகின்றான்.

உயிர்கள் பெற வேண்டிய உணர்வினை, அறிவினை, படிப்பினையைப் பெறும் வரையிலும் ஒரு பொருள் நம்மிடம் இருக்கும்படியாகப் பெருமானே தோற்றுவித்து, நிறுத்தி, போக்குவித்து, மறைப்பித்துத் தன் திருவடியை அருளுகின்றான். பெருமானே நம் உடல் நலத்தைக் காக்கின்றான். பெருமானே நாம் சரியான உணவு முறைமைகளைக் கொள்ளவும் நோய் நொடியின்றி நலமுடன் நிற்கவும் தோன்றாத் துணையாய் நின்று காக்கின்றான். பெருமானே வேண்டுங்காலம் வரையிலும் நம் கண் பார்வை, கைகால் விளக்கம், இதயத் துடிப்பு, குருதியோட்டம் என்று உடற்கூறுகள் அனைத்தையும் ஒவ்வொரு பிறவியிலும் வேண்டுங்காலம் வரையும் காத்து நிற்கின்றான்.

பெருமானே நம் மன நலனையும் நம் சித்த நலனையும் அறிவு நலனையும் நம் மனவெழுச்சியின் வேக நலனையும் காக்கின்றான். பெருமானே வெள்ளம், புயல், நிலநடுக்கம், எரிமலை, பேராழியின் சீற்றம் என்பனவற்றில் எல்லாம் இருந்து நம்மைக் காக்கின்றான். பெருமானே பெருநிலத்தினைப் பேராழி கொள்ளாமலும் பேராழியும் நீர் நிலைகளும் வற்றி வரண்டு விடாமலும் நம் பொருட்டுக் காக்கின்றான். பெருமானே நம்மைச் சுற்றியுள்ள கோள்களையும் மரஞ்செடிக் கொடிகளையும், காய் கனிகளையும், புள்ளினங்களையும் விலங்குகளையும், மீன்களையும், பூச்சிகளையும் அவ்வவ்வகை உயிரினங்களின் வாழ்க்கைத் தேவைக்கு ஏற்ப காக்கின்றான்.

பெருமானே நம் மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள், பணம், பொன், பொருள், வீடு என்று நம் நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் நாம் இறையறிவு முதிர்ச்சிப் பெறும் வரையிலும் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து பேரூழி எனும் பேர் ஒடுக்கம் ஏற்படும் வரையிலும் அனைத்தையும் காக்கின்றான். இவ்வாறான நீண்ட பிறவிச் சுழற்சியில் சிக்கி மெலியாமல் இருப்பதனையே பிறவியின் குறிக்கோளாகவும் வழிபாட்டின் உட்பொருளாகவும் கொள்ள வேண்டும் என்று அருளாளர் பெருமக்கள் அறிந்து, உணர்ந்து கண்ணீர் மல்கி நின்றார்கள்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!