21. அழுதால் அவனைப் பெறலாம்

1181

பெருமானின் திருவருளைப் பெறுவதற்குப் பலரும் பல்வேறு வழிகளைக் குறிப்பிடுவர். சிலர் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று உலக உயிர்களுக்கு உணவு, உறையுள், உடை கொடுத்துத் தொண்டு செய்து வாழ்வதன் வழி இறைவனை அடையலாம் என்பர். இன்னும் சிலர் திருக்கோயிலைக் கூட்டிக் கழுவுதல், மெழுகுதல், கோலமிடல், தீவத்தி ஏந்துதல், பல்லக்குச் சுமத்தல், மலர் பறித்துக் கொடுத்தல், திருமஞ்சனத்துக்குப் பால், நீர் கொண்டு வந்து கொடுத்தல், குளம் வெட்டுதல் போன்றவை செய்தால் இறைவனை எளிதில் அடைந்து விடலாம் என்பர். இன்னும் சிலர் பூசனை முறைகள் தவறாது சிவ ஆகம நெறிகளோடு பூசனை இயற்றினால் இறைவனை எளிதில் அடைந்து விடலாம் என்பர். இன்னும் சிலர் சிவாகம நெறியோடு பூசனை செய்வதனைக் காட்டிலும் உள்ளன்போடு பூசனை இயற்றினால் இறைவன் ஓடோடி வந்து அருள்வான் என்பர்.

 பூசனைக் கிரியைகளில் சிறந்து விளங்கும் இன்னும் சிலர் நெறிமுறைகள் தவறாது சிவ வேள்விகள் செய்தால் பெருமான் உள்ளம் குளிர்ந்து நம் அழைப்பிற்கு ஓடோடி வந்து விடுவான் என்பர். பெருமானை அகத்திலும் புறத்திலும் எண்ணி, விடாது பூசனை செய்தால் அவன் வெளிப்படுவான் என்பர். சிவயோகம் எனும் சிவச்செறிவு இயற்றுகின்றவர்களோ நல்ல இருக்கை முறைகளைக் கற்று, மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வெளித்தொடர்புகளைத் துண்டித்து உள்முகமாக இறைவனை அகத்திலே இருத்தித் தொடர்ந்து எண்ணி வந்தால் எட்டு வகையான வெற்றிகளைப் (அட்டமாசித்தி) பெருவதோடு அல்லாமல் இறைவன் திருவடியை அடையலாம் என்பர்.

அறிவு நெறியில் நிற்கின்றவர்களோ இறைவனைப் பற்றிய நூல்களைக் கற்றல், கேட்டல், சிந்தித்தல், அறிவாலே அவனோடு சேர்ந்து இருத்தல் என்பதன் வழி பெருமானை அடையலாம் என்பர். மேற்கூரிய அனைத்தையும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நால்வகை நெறிகளாகத் தமிழர்களின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.

  மேற்கூறிய நால்வகை நெறியின் வழி சித்தாந்த சைவம் நமக்கு அளிக்கும் முடிந்த தெளிவு யாதெனின் இறைவனின் பெருமைகளை எல்லாம் உயிர் அறிய அறிய உயிர் தன்னுடைய சிறுமையை உணரும் என்பதுதான். இறைவனின் பேராற்றலையும் பேர் அருளையும் அவன் நின்றதோர் நேர்மையையும் அவன் சீமையையும் அறிய அறிய உயிர் தன்னை அறியத் தலைப்படும் என்பதுதான். இறைவன் திருவருளால் தனக்குத் தலைவனாகிய சிவபெருமானை அறிய, தன்னை அறியும் தன் உயிராகிய தனக்கு எப்பொழுதும் பிறப்பு இறப்புக்களாகிய கெடுதல் என்பது உண்டாகாது. அவ்வாறு தனக்குரிய தலைவனை அறியாது தானே பிறந்து இறந்து துன்புறுவதற்கான தீவினைகளைச் செய்து கெடுகின்றது. தன் தலவனை அறியும் தனி அறிவை அறிந்தபின் அத்தலைவனாகிய சிவபெருமானின் திருவருளையும் பெருமையையுமே எண்ணி வழிபடுவர். அங்ஙனம் வழிபடுவதால் அச்சிவபெருமான் அவர்கள் நல்லுள்ளத்தில் வலிந்து புகுந்து வாழ்கின்றான் என்பதனை, “தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை, தன்னை அறியாமல் தானே கெடுகின்றான், தன்னை அறியும் அறிவை அறிந்த பின், தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே” என்று திருமூலர் வேறொரு பாடலில் குறிப்பிடுகின்றார்.

எனவே சைவம் குறிப்பிடும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பதன் வழி இறைவனை அறிவதனால் இறைவன் திருவருளால், உயிர் தான் யார் என்பதனை அறிகின்றது. தன்னை அறியும் அறிவினைப் பெறவே உயிர்கள் அழ வேண்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். “இறைவனே! நானும் என் மனம் முதலியனவும் பொய்மை உடையவர்கள் ஆனோம்! ஆனால் அழுதால் உன்னைப் பெறலாமோ? தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! நான் உன்னைப் பெறும் வழியை எனக்கு அறிவித்தல் வேண்டும்” என்று மணிவாசகர் திருச்சதகத்தில் திருமூலர் குறிப்பிடும் இதே செய்தியினைக் குறிப்பிடுகின்றார். நானுன் என் மனமும் பொய் உடையனவாக இருக்கின்றோம். அவற்றை உண்மையானவையாக மாற்றும் வழியினைக் கொடு என்று அழுவதைக் குறிப்பிடுகின்றார். அடியேன் தீவினைகள் உடையவனாக இருப்பதனால் உன்னை அடைய இயலாதவனாக இருக்கின்றேன். அவற்றைச் சரி செய்து கொண்டால் உன்னை அடையலாம். உன் திருவருளால் மட்டுமே சரி செய்து கொள்ளக்கூடிய அவ்வறிவின்மையைச் சரி செய்து கொள்வதற்கு உன் திருவருளைப் பெற வேண்டி அழுவேன் என்கின்றார் மணிவாசகர். எனவே நால்வகை நெறியின் வழி பெருமானை மகிழ்வித்தால் இறைவன் ஓடோடி வருவான் என்று எண்ணுவது தவறு! நம்மைப் பெருமானின் திருவருளால் சரி செய்து கொள்ளும் அறிவினைப் பெற்றால் இறைவன் நமக்கு வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பது புலனாகின்றது. இதனை வேண்டியே உயிர்கள் அழவேண்டும் என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைத் திருமூலரும் குறிப்பிடுகின்றார்.

“வானின்று அழைக்கும் மழைபோல் இறைவனும், தானின்று அழைக்கும் கொல் என்று தயங்குவார், ஆனின்று அழைக்கும் அதுபோல் என் நந்தியை, நானின்று அழைப்பது ஞானம் கருதியே” என்பது திருமூலரின் பாடல். உலகத்தில் உள்ளோர் வேண்டாமலேயே உலகை உய்விக்க மழை தானாகவே வானத்திலிருந்து பெய்கின்றது. அதுபோல் இறைவன் நம்மைத் தாமாகவே எங்கு அழைக்கப் போகின்றான் என்று பலரும் தயங்குகின்றனர். கன்றுக்குட்டி தன் தாய்ப்பசுவை நினைந்து கதறி அழைப்பது போல் என் நந்தி எம்பெருமானாகிய சிவபெருமானை அன்பால் மனமுருகி ஓவாது அழைக்கின்றேன். எது கருதி என்றால் அவன் தன் திருவடி உணர்வால் என் அறியாமையைப் போக்கிக் கொள்ளவே என்கின்றார் திருமூலர்.

எனவே இறைவழிபாட்டின் வழி இறைவனை அடைய விரும்புவோர், பெருமானுக்குப் பிடித்தத் தொண்டு, பெருமானுக்குப் பிடித்தத் திருமஞ்சனம், பெருமானுக்குப் பிடித்தப் பூசனை, பெருமானுக்குப் பிடித்த உணவுப்பொருள், பெருமானுக்குப் பிடித்த ஆடை அணி என்பதனை விடுத்து, நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கின்ற அறியாமையைப் போக்கிக் கொள்ளவே அவன் திருவருளை வேண்டி நாளும் அழவேண்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இன்னும் உலகியல் பொருட்களையும் குடும்ப சிக்கல்களையும் எண்ணி இறைவன் திருமுன்பு அழாமல் என்னை மனத்திலே மாசு அற்றவனாக ஆக்கிக் கொள்வதற்கு உன் திருவருளைப் பெறும் திருநாள் என்றோ என்றே எண்ணி அழவேண்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நாளும் மனத்தினால் எண்ணும் தீய எண்ணங்களும் வாயினால் பேசும் தீய சொற்களும் கைகால்களினால் செய்யும் தீய செயல்களும் தீவினைகள் ஆகின்றன. அத்தீவினைகள் நம்மை விட்டுப் போனாலேயே இவ்வுலகில் பிறந்து இறக்கும் துன்பம் நம்மை விட்டுப் போகும். அத்துன்பம் நீங்குவதற்கே இறைவன் திருமுன்பு நாளும் அழ வேண்டும் என்வதே திருமூலரின் அரிய செய்தியாகும்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!