33. விமலா போற்றி

1607

33. விமலா போற்றி

சிவபெருமான் இயல்பாக மும்மலம் நீங்கினவன் என்று தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் நெறியாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. ஆணவம், கன்மம், மாயை என்பனவே மும்மலங்கள் எனப்படுகின்றன. இம்மும்மலங்களைத் தமிழில் ‘தளை’ என்கின்றனர். வடமொழியில் ‘பாசம்’ என்கின்றனர். உயிரின் அறிவு, விருப்பு, செயல்களை இயல்பாக நிகழவிடாமல் தடைசெய்து, உயிரினைத் தளைத்து (கட்டி) வைத்திருப்பவை ஆதலினால் மும்மலங்களைத் “தளை” என்றனர். எனவேதான் “தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி, அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே” என்று திருவாசகத் தேனைக் குறிப்பிட்டனர். பன்னெடுங்காலமாக நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் வன்மையான பிறவிக் கட்டினை அறுத்து இன்பம் அளிப்பது திருவாசகம் என்று குறிப்பிட்டனர்.

உயிரின் அறியாமைக்கும் துன்பங்களுக்கும் மூலகாரணமாக எது இருக்கின்றதோ அதுவே மும்மலங்களின் ஒன்றான ஆணவமலம் எனப்படுகின்றது. நாம் வாழும் இவ்வுலகம் அழிவு அடையக் கூடியது அல்லது மாற்றம் அடையக் கூடியது. இவ்வுலகில் இருக்கின்ற இன்பங்கள் நிலைத்த இன்பம் அளிக்கக் கூடியவை அல்ல என்பது பெறப்படும். ஆனால் உலகம் நிலைபேறு உடையது, நிலைத்த இன்பத்தை அளிப்பது என்று உண்மைக்கு மாறாகக் கொண்டு உயிர் அதில் விருப்புக் கொண்டு நிற்கின்றது. இந்நிலைக்கு காரணம் எதுவோ அதுவே ஆணவமலம் எனப்படுகிறது.

கண்ணின் ஒளியை மறைக்கும் புற இருள் போல, உயிரின் அறிவை மறைக்கும் அக இருள்தான் ஆணவமலம். உயிரின் அறிவு, விருப்பு, செயல்களைத் தடைசெய்து கட்டுப்படுத்தும் தன்மையுடையதாய பொருள் ஆணவமலம். புறத்திலே நாம் காணும் இருள் ஆனது ஒரு பொருளையும் காட்டாது. ஆயினும் இருண்ட கரு நிறமாகிய தன் இயல்பினையாவது காட்டும். ஆனால் ஆணவமாகிய அக இருள், புறப்பொருளை மட்டுமல்லாது தன் இயல்பினையும் காட்டாது என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். இருள் கண்ணொளியை மறைக்கும். ஆனால் அதனால் கதிரவனின் ஒளியை மறைக்க இயலாது. அது போல ஆணவமலம் உயிர் அறிவை மறைக்க இயலுமே தவிர இறையுணர்வை அல்லது இறையறிவை மறைக்க இயலாது. எனவேதான் இறைவன் ஆணவ மலத்திலிருந்து இயல்பாய் நீங்கினவன் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனையே விமலா என்று மணிவாசகப் பெருமான் திருவாசகத்தின் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.

ஆணவமலத்திற்கு இருவகை ஆற்றல் உண்டு. ஒன்று மறைக்கும் ஆற்றல். மற்றொன்று கீழ்நோக்கிச் செலுத்தும் ஆற்றல். ஆணவமலத்தின் மறைப்பாற்றலால் உயிர் தன்னையும் அறியாது. தன்னை இயக்குகின்ற இயவுளாகிய சிவத்தையும் அறியாது, தனக்கு அறியாமையைச் செய்து கீழ்ப்படுத்துகின்ற ஆணவத்தையும் அறியாது. இதனாலேயே திருமூலர்,

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை,
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்,
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்,
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே”

என்பார். அதாவது திருவருளால் ஆணவத்தை நீக்கித் தனக்குத் தலைவனாகிய சிவபெருமானை அறியத் தன்னை அறியும் உயிராகிய தனக்கு எஞ்ஞான்றும் பிறப்பு இறப்புக்களாகிய கெடுதல் உண்டாகாது என்கின்றார் திருமூலர். தன் தலைவனை அறியும் தனியறிவை உயிர் அறிந்தபின் தன் தலைவனாகிய சிவ பெருமானை அருச்சிக்கும் என்கின்றார் திருமூலர். உயிர்களுக்குத் தன் அறிவை மறைத்துக் கீழ்நோக்கிச் செலுத்தும் ஆணவமலம் இருப்பதனால் தான் அறியாமை எனும் பலவீனத்தால் உயிர்கள் பல்வேறு குற்றங்களுக்கு உள்ளாகின்றன. இதனாலேயே அது எதிலும் எவ்விடத்திலும் ‘யான், எனது’ எனும் செருக்குடனும் ‘தான்’ எனும் முனைப்புடனும் நிற்கின்றது. இவ்வியல்புகள் இறைவனை இயல்பாகவே பற்றுவது கிடையாது. இதனையே விமலா என்று மணிவாசகப் பெருமான் திருவாசகத்தின் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.

எல்லாவற்றிலும் தானே சிறப்புடையவன், தன்னுடையதே சிறப்புடையது என்று உயிர்கள் காட்டும் முனைப்பினை இறைவன் காட்டுவதில்லை. உயிர்கள் விரும்பும் புகழுக்கும் பேருக்கும் இறைவன் மயங்குவதில்லை. இறைவன் தன் பேர் ஆற்றலையும் பேர் அறிவையும் உயிர்களிடத்தே காட்டி அடைய வேண்டியது ஒன்றும் இல்லை. உயிர்களுக்குப் பிறரால் ஆக வேண்டிய செயல்கள் இருப்பது போல, இறைவனுக்கு உயிர்களால் ஆக வேண்டிய செயல்கள் எதுவும் இல்லை. உயிர்களைப் போன்று அறியாமையால் இறைவன் தவறுகள் செய்வதில்லை. பின் வருந்துவதும் இல்லை. நம்மைப் பழிவாங்குவது இல்லை. நம்மைத் துன்புறுத்தி மகிழ்வதுவும் இல்லை. நடிப்பு இல்லாமல் என்றும் ஒருபடித்தாகவே இருக்கின்றான். நிலைத்த இன்பமுடைய பொருளான அவன் நிலையற்ற பொருள்களையும் நிலையில்லாத இன்பமுடைய பொருள்களையும் விரும்புவதில்லை என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

கடவுளைப் போன்றே உயிரும் தளையும் அநாதிப்பொருள் (என்றும் உள்ள பொருள்) என்று சைவம் குறிப்பிடுகின்றது. ஆயினும் உயிரைத் தளை பற்றுவபோல் கடவுளைப் பற்றுவதில்லை. பற்றவும் இயலாது என்பதனைப்,

“பதிபசு பாசம் எனப்பகர் முன்றில்,
பதியினைப் போல்பசு பாசம் அனாதி,
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்,
பதி அணுகில் பசு பாசம் நிலாவே”

என்று தமிழ் ஆகமம் அருளிய திருமூலர் குறிப்பிடுவார்.

பதியாகிய இறையும் பசுவாகிய உயிரும் பாசமாகிய தளையும் அப்பதியினைப் போல் என்றும் உள்ளவை. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் கட்டுண்ட உயிரும், சடப்பொருளான அறியாமையைச் செய்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் இறைவனை அணுக முடிவதில்லை. கடவுளின் திருவருளைத் துணையாகக் கொண்டு உயிர் கடவுளை அணுகுமாயின் உயிரைப் பற்றியுள்ள மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்பன தம் முனைப்பு இல்லாமல் கெட்டு ஒடுங்கும் என்று திருமூலர் தெளிவு படுத்துகின்றார்.

மும்மலங்களில் இரண்டாவது மலமாகிய கன்மம் அல்லது செயல் அல்லது வினை என்பது கடவுளைப் பற்றுவது கிடையாது. ஆணவம் என்ற மலத்தினைப் போக்குவதற்குக் கன்மமலமும் மாயாமலமும் உயிர்களுக்கு இறைவனால் சேர்த்து வைக்கப்பட்டவை என்று சைவத் தமிழர் சமயமான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்களுக்குப் பிறவிகள், உடல்நிலை, வாழும் உலகம், அறிவு நிலை, நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளுக்குக் காரணம் வினைப் பயனே என்று சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்கள் என்னதான் முயன்றாலும் அது நிறைவேறும் காலம் வரும் வரைக்கும் அம்முயற்சி நிறைவேறாமல் நிற்பதற்குக் கரணியம் வினைப் பயனே என்று சைவம் குறிப்பிடுகின்றது. “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதும் வினைக்கொள்கை அடிப்படையில்தான். வினைப்பயன் இருப்பதனால்தான் அறநெறிப்படி வாழ்கின்றவருக்கு நன்மையும் அறநெறிப்படி வாழாதவருக்குத் தீமையும் நிகழும் என்ற சைவக் கோட்பாடு கூறப்பட்டுள்ளது.

நற்செயல்கள் செய்வதனை நல்வினை என்றும் தீச்செயல்கள் செய்வதனைத் தீவினை என்றும் சைவம் குறிப்பிடுகின்றது. இவற்றின் பயனே நமக்கு இன்ப துன்பங்களாய் மாறி மாறி வருகின்றன. உலகில் காணும் உயிரினங்களிடையே ஊனமுற்றவர்களையும், முழுமைபெற்றவர்களாயும், அறிவாளிகளாகவும் அதற்கு மாறாகவும், செல்வர்களாகவும் வறியவர்களாயும் நம் முயற்சிக்கு அப்பாற்பட்டு கிடைக்கப் பெறுவது இவ்வினைப் பயனை ஒட்டியே என்று சைவம் குறிப்பிடுகின்றது. உயிர்கள் மனம், வாக்கு, காயம் என்பனவற்றால் வினைகளைச் செய்கின்றன. அதனால் வரும் பலன்களை நுகர்ந்து கழிக்கின்றன. மனத்தால் எண்ணும் எண்ணங்கள் செயல்களே அல்லது வினைகளே என்று சைவம் குறிப்பிடுகின்றது. தீய எண்ணங்கள் தீய செயல்களாகவும் நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களாகவும் குறிக்கப்பெறுகின்றன. நல்ல சொற்களும் தீய சொற்களும் அவை அவற்றிற்குரிய பலன்கலைத் தருகின்றன. எனவே காயம் என்ற உடலால் செய்யும் செயல்கள் தான் வினை என்று எண்ணுதல் தவறு.

எனவே மனம், வாக்கு, காயம் என்ற மூன்றினால் செய்யும் செயல்களை ஆணவ மலம் பிணித்து இருப்பதனால் உயிர் மனத்தாலும் சொற்களினாலும் உடல் செயல்களினாலும் பல தவறுகளைச் செய்கின்றன. இவற்றிற்குத் துணையாக ஐம்புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், மெய் என்பன செயல்படுகின்றன. தவிர உட்கருவிகளான மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் மனவெழுச்சியும் துணைநிற்கின்றன. இப்படி அறியாமையால் செய்கின்ற மன, வாக்கு, காயச் செயல்களுக்கு உயிர்கள் அவற்றின் பயனை நுகர்ந்தே தீர வேண்டும்.

றியாமையால் செய்யும் செயல்களைக் கடவுளின் திருவருளாலும் திருவடி உணர்வாலும் மட்டுமே நிறுத்த இயலும் அல்லது சிவநல்வினையாய் மடைமாற்றம் செய்ய இயலும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. அதுவரையில் வினைப்பயனை நுகர்ந்தே தீரவேண்டும் என்கிறது. அதனாலேதான் கன்றுக் குட்டியைத் தேர்க்காலில் மடித்தத் தன் மகன் செய்த தீவினைக்குக் கழுவாய் (பரிகாரம்) செய்யாது அத்தாய்ப்பசு அடைந்த துன்பத்தைத் தான் நுகர்ந்து போக்கிக் கொள்ள வேண்டும் என்று தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றார் மனுநீதிச் சோழர் என்பார் தெய்வச் சேக்கிழார்.

அறியாமையால் மனம், வாக்கு, காயத்தால் பெருமான் தாக்குறுவதில்லை. அதனால் பெருமானிடத்தில் தீய எண்ணங்கள் அண்டுவதில்லை. தீய மொழிகள் பெருமான் திருவாயில் உதிப்பதில்லை. பெருமானின் திருவருட் செயல்கள் எல்லாமே அருட் செயல்களே! உயிர்களின் வினைகளுக்கு ஏற்பவே அவை நல்லனவாகவும் தீயனவாகவும் நுகர்ச்சிக்கு வருகின்றன. பெருமான் உயிர்களைப் போன்று ஐம்புலன்களால் தாக்குறுவது இல்லை. இதைத்தான், “பொறிவாயில் ஐந்துஅவித்தான்” என்று இறைவனை வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவார். ஐம்பொறிகளின் வாயிலாக ஏற்படும் வேட்கைகளையும் அவற்றினால் ஏற்படும் தவறுகளையும் வென்றவன் இறைவன் என்கிறார். நல்வினையும் தீவினையும் நீங்கினாலே நமக்குப் பிறவி விடுதலைக் கிடைக்கும் என்பது சைவக் கொள்கை. ஒன்று பொன் விலங்கு மற்றது இரும்பு விலங்கு. இரண்டுமே உயிர் பிறவியிலிருந்து விடுபடுவதற்குத் தடையானவைதான்.   எனவேதான் அவற்றை ‘இருள்’ என்று திருவள்ளுவர் உருவகித்தார். இறைவன் இயல்பாய் வினை நீங்கின விமலன் என்பதனை, “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்” என்றார்.

‘மா’ என்றால் ஒடுங்குதல் என்றும் ‘யா’ என்றால் தோன்றுதல் என்றும் பொருள்படுகின்றது என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். எனவே மாயை என்பது எல்லாப் பொருள்களும் ஒடுங்குதற்கும் தோன்றுதற்கும் எது மூலப் பொருளாக இருக்கின்றதோ அதுவே மாயை எனப்படுகின்றது என்று சிவத்தை முழுமுதற் பொருளாகச் சொல்கின்ற சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. புல், பூடு, புழு, மரம், விலங்கு, பறவை, பாம்பு, கல், மாந்தர், பேய், கணங்கள், அசுரர், வானவர், முனிவர் போன்ற உயிர்களுக்கு உரிய உடல், கருவி, உலக நுகர்ச்சிப் பொருள்கள் யாவும் இம்மாயை என்னும் மூலப் பொருளிலிருந்தே ஆக்கப்படுகின்றன என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.

மரம், செடி, கொடி போன்ற நகரா உயிரினங்களின் உடல்களும் பறவை, பாம்பு, புலி, மீன், பூச்சி, மாந்தர் போன்ற நகர்ந்து இயங்கும் உயிர் வகைகளின் உடம்புகளும் இம்மாயை எனும் பொருளாலேயே ஆக்கப்படுகின்றன. இவ்வுடம்புகள் பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, பசி என்பனவற்றிற்கு உள்ளாகி அல்லல்படும். துன்புறும், சிறுக்கும், பெருக்கும் அழிந்துபடும். நீர், நிலம், தீ, காற்று, ஆகாயமான ஐந்து வகைப் பூதங்களுக்குத் தாக்குற்று தமது நிலையில் இருந்து சீர் கெடும், மாறும் அழியும். உயிர்களின் உடம்பிற்கு இளமைக் கால உடல் முதுமைக் கால உடல் என்ற மாற்றமும் தோற்றமும் உண்டு. உயிர்களின் உடம்பிற்கு நோய் ஏற்படுவது உண்டு. இறப்பு ஏற்பட்டு உடல் அழிவது உண்டு. கடவுளின் உடல் எனப்படும் திருமேனி மாயையால் ஆகியது அல்ல. அது இறைவனின் திருவருளால் ஆனது. இறைவன் தனது திருவருளையே தமக்குத் திருமேனியை அமைத்துக் கொள்வதற்குத் துணையாகக் கொள்கின்றான்.

எனவேதான் கடவுளைப், “பிறவா ஆக்கைப் பெரியோன்” என்கிறார்கள். அதாவது இறைவனின் திருவுடம்பு பிறவிக்கு உட்படாதது என்பதாகும். இயல்பாய் மாயையிலிருந்து இறைவன் நீங்கினமையால் திருவருளால் ஆகிய அவன் திருமேனி மூப்பு அடைவதில்லை. அதனாலேயே கடவுளை, “மூவா முதல்வா போற்றி” என்று அருளாளர்கள் போற்றுகின்றனர். இறைவனைப் பசிக்கொடுமை வாட்டுவதில்லை. இறைவனை நீர், நிலம், தீ, காற்று, வெளி என்பவை துன்புறுத்துவதில்லை. அழிக்கவும் முடிவதில்லை. நிலைத்த பொருளாக என்றும் மாற்றம் இன்றி இறைவன் ஒளிவிடுகின்றான். ஒளிப் பிழம்பாய் என்றும் மாற்றம் காணாது ஒருபடித்தாய் இருக்கின்ற பெருமானை, இதுபற்றியே, “உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி” என்று நாவுக்கரசரும் “நொந்தா ஒண் சுடரே” என்று சுந்தரமூர்த்தி அடிகளும் போற்றிப் புகழ்ந்தார்.
உயிர்களுக்குப் பொறுத்தப்பட்டுள்ள மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்று சொல்லப்படுகின்ற கருவிகளும் மாயையினாலேயே ஆக்கப்பட்டுள்ளன. உயிர்கள் இறைவனின் திருவடிப் போற்றினை அடையும் போது மாயையினால் ஆகிய இவை நீங்கிப் போகும். பெருமானின் திருவருள் என்ற ஒன்றை மட்டும் துணையாகக் கொண்டு உயிர்கள் இறையின்பத்தை நுகரும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. எனவே மாயையினால் ஆன கருவிகள் இறைவனுக்குக் கிடையாது.

கை, கால், எருவாய், கருவாய், வாய் ஆகிய மாயையினால் ஆகிய செயல் கருவிகள் இறைவனுக்குக் கிடையாது. இதனால் வினைகளை இக்கருவிகளைக் கொண்டுச் செய்ய வேண்டும் என்ற ஒன்று இறைவனுக்கு இல்லை. இறைவன் நினைத்த அளவிலேயே அனைத்தையும் இயற்ற இயலும். அடியார்கள் வரலாரற்றில் பெருமான் நிகழ்த்துவது எல்லாம் மாந்தர் என்ற சட்டையை அணிந்து வருதல் போல் ஆகும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. எனவே அறிகருவிகள், செயல் செய்கின்ற கருவிகள் என்ற மாயையால் ஆகியவற்றை இறைவன் நீங்கினவன் என்று புலனாகிறது.

உயிர்கள் கடைத்தேறுவதற்கு மாயையினால் ஆகிய நுகர்ச்சிப் பொருள்களை இறைவன் படைத்து நமக்கு அளித்திருக்கின்றான். நீர், நிலம், தீ, காற்று, வெளி, கோள்கள், விண்மீன்கள், பொன், பொருள், பிற உயிர்வகையினால் கிட்டும் நுகர்ச்சிகள் இவையாவும் மாயையினால் ஆக்கப்பெற்றிருக்கின்றன. இவற்றின் மூலம் இறைவன் உயிர்களுக்கு பிறவிகள் தோறும் செவ்வியை (அனுபவத்தை) அளித்துத் தேற்றுகின்றான். மாற்றம் அடையக் கூடியதாகவும் அழியக் கூடியதாகவும் உள்ள இந்நுகர்ச்சிப் பொருள்களைக் கொண்டே உயிர்கள் அறிவு பெற்று இறைவனைப் புரிந்து கொண்டு பிறவிக்கடலை நீத்த வேண்டியவையாக இருக்கின்றன. பெருமானுக்கு மாயைப் பொருளினால் ஆகிய நுகர்ச்சிப் பொருள்களினால் கிட்ட வேண்டிய செவ்வி (அனுபவம்) தேவையில்லை! பெருமானே அப்பொருள்களைத் தோற்றவும், நிற்கவும், அழிக்கவும் செய்கின்றான். இவ்வாறு மாயையால் ஆகிய மாற்றம் அடையக் கூடிய பொருள்களை நிலையானவை என்று எண்ணுகின்ற மயக்கத்தினையே மாயா மலம் என்றும் குறிப்பிடுவர். இம்மாயா மலம் உண்மை அல்லாதவற்றை, நிலை இல்லாதவற்றை உண்மைப் பொருள் போன்றும் நிலைத்தப் பொருள் போன்றும் மயக்கினை ஏற்படுத்தும். இம்மாயா மலம் செய்யும் மயக்கம் உயிருக்கு ஏற்படும். இதனாலேயே உலக உயிர்கள் நிலை இல்லாத உலகப் பொருட்களின் பாலும் தெவிட்டி விடக்கூடிய சிற்றின்பங்களின் பாலும் அளவற்றப் பற்று கொண்டு, வாழ்நாளைக் கழிக்கின்றன. இம்மயக்கம் பெருமானைப் பற்றுவது இல்லை என்பதனைக் குறிக்கவே பெருமானை விமலா என்றார் மணிவாசகப் பெருமான்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!