112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி

1483

பெருமான் மனத்தில் உள்ளான், தலைமேல் உள்ளான், நாம் பேசுகின்ற வாக்கில் உள்ளான், தீயில் உள்ளான், மலை மீது உள்ளான், கைலாயத்தின் உச்சியில் உள்ளான், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளான் என்று திருநாவுக்கரசு அடிகளின் தமிழ் மந்திரம் குறிப்பிடும். அவ்வாறு இருக்கின்ற இறைவனைக் கற்பனையும் செய்து பார்க்க இயலாத நம் போன்றோருக்கு அவனை அறியும் வழியினைத் திருமூலரின் திருமந்திரம் இயம்புகின்றது. இறைவனிடத்திலே ஓர் உறவை ஏற்படுத்தி, அவ்வுறவின் விளைவால் ஏற்படும் உணர்வினைத் துணையாகக் கொண்டு, பெருமானின் திருவருள் துணையால் சிவ அறிவினைப் பெற்றால் அப்பெருமானை மேற்குறித்தவாறு காண இயலும் என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. இதற்கு இறைவனை ஆசானாகவும் எண்ணும் ஆசான் மாணவ நெறியையும் இறைவனை நண்பனாக எண்ணும் தோழமை நெறியையும் இறைவனைத் தந்தையாகக் கொள்கின்ற மகமை நெறியினையும் குறிப்பிடும் திருமந்திரம், தொண்டு நெறி எனும் மற்றொரு நெறியையும் குறிப்பிடுகின்றது.

தொண்டு நெறியினைத் தாச மார்க்கம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். இறைவனை ஆண்டானாக எண்ணித் தன்னை அவ்வாண்டானுக்கு அடிமை செய்கின்ற அடிமையாகவும் எண்ணி இறைவனிடத்திலே உறவை நாட்டுதலையே இத்தொண்டர் நெறி குறிப்பிடுகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உண்மையான தொண்டன் ஒருவன் தன் தலைவனுக்கு உண்மைப் பற்றோடு வேண்டிய பணிவிடைகளை அன்போடு செய்கின்ற மன நிறைவினாலும் அதன்வழி ஏற்படுகின்ற உறவு நெருக்கத்தினாலும் அன்பை வளரச் செய்து தன் தலைவனின் அருளைப் பெறுவது போன்று இறைவனின் திருவருளைப் பெற இயலும் என்கின்றார் திருமூலர். ஒரு பணியாள் தன் முதலாளிக்கு உள்ளன்போடு வேண்டிய பணிவிடைகளைச் செய்து அம்முதலாளியின் கருணையையும் உறவையும் பெறுதல் போல உயிர்கள் இறைவனைத் தங்கள் உடையவனாகக் கொண்டு அவனின் பேரருளுக்கு ஆளாகலாம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சரியை என்றும் வடமொழியில் குறிப்பிடப்படும் இச்சீல நெறியில் இறைவனைத் தம் ஆண்டானாகத், தலைவனாக, முதலாளியாக ஓர் உறவினை நிலை நிறுத்தி அவ்விறைவனுக்குச் செய்யும் பணிவிடைகளைத் திருமூலர் வரிசைப் படுத்துகின்றார். பெருமானைத் தன் தலைவனாகக் கொண்டு அவனுக்குத் தொண்டு செய்யும் முகத்தான் திருக்கோயிலிலும் இல்லத்திலும் செய்ய வேண்டிய பணிவிடைகளைத் திருமூலர் கூறுகின்றார். அவ்வகையில் விளக்கு ஏற்றுதல், நல்ல தூய்மையான அன்று மலர்ந்த மலர்களைக் கொண்டு வந்து பூசனைக்குக் கொடுத்தல், மலர் மாலை கட்டிக் கொடுத்தல், பெருமானின் திருக்கோயிலையும் இல்லப் பூசனை அறையையும் கூட்டுதல், கழுவுதல், தூய்மை செய்தல், கோலம் போடுதல், திருமுறைகளை ஓதுதல், போற்றிகளைச் சொல்லுதல், இறைவனின் ஊர்தியினைச் சுமத்தல் (பல்லக்கு), தீப்பந்தம் ஏந்துதல், குடை பிடித்தல், கவரி வீசுதல், பெருமானின் திருமஞ்சனத்திற்குப் பால், தயிர், நெய், சந்தனம், கருப்பஞ்சாறு, இளநீர் போன்ற பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தல், திருக்குளம் வெட்டுதல், பூந்தோட்டம் அமைத்தல், உழவாரப் பணி செய்தல் போன்றவற்றை அன்போடு செய்தலைத் திருமூலர் கூறுகின்றார். இதனை, “எளிய நல்தீபம்இடல் மலர் கொய்தல், அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல், பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி, தளிதொழில் செய்வதுதான் தாச மார்க்கமே” என்று குறிப்பிடுகின்றார்.

அந்தத் தெய்வம் இந்தத் தெய்வம் என்று சிறு தெய்வங்களையும் கடவுள் அல்லாத விலங்குகளையும் பறவைகளையும் மரங்களையும் செடிகளையும் மாந்தர்களையும் சிற்றாற்றல்களையும் முழுமுதற் கடவுள் என்று எண்ணுகின்ற மறுதலையான எண்ணங்களை விட்டுச், சிவனே முழுமுதற் கடவுள் என்ற தெளிவு இத்தொண்டர் நெறியில் இன்றியமையாதது என்கின்றார் திருமூலர். பரம்பொருளான அச்சிவனை வணங்குவதே தாம் உய்வதற்கான நெறி என்றும் ஒருகடவுள் கொள்கையே தன் உறவினையும் அன்பினையும் ஒருமுகப் படுத்துவதற்கு உதவும் என்பதனையும் இத்தொண்டர் நெறியில் உணர வேண்டும் என்கின்றார் திருமூலர். எல்லா வானவருக்கும் கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் அவனே தலைவன் என்றும் உணரல் வேண்டும் என்கின்றார் திருமூலர். சிவ பெருமானே தனித் தலைவன் என்ற சிவஆகம உண்மையில் உறைப்புடன் நின்று அப்பெருமானுக்கு அன்போடு பணிவிடைகள் செய்து அவ்வழியே இறைவனை அடையலாம் என்பதனை உணர்த்துவதே இத்தொண்டர் நெறி என்பதனை, “அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு, சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல், வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும், வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே” என்கின்றார்.

சைவம் குறிப்பிடும் வழிபாட்டிற்குரிய கடவுளின் ஒரு திருவடிவினைத் தெரிவு செய்து அதனையே பிற வடிவங்களிலெல்லாம் கண்டு, அந்த ஒரு கடவுளுக்கே பணிவிடைகள் செய்து, அவ்வொரு கடவுளையே புறத்திலும் அகத்திலும் இருத்தி அன்புடன் தொண்டுகள் செய்தால் இத்தொண்டு நெறியில் இறைவனின் திருவருள் கூடும் என்கின்றார் திருமூலர்.  இதனையே, “விளக்கினார் பெற்றஇன்பம் மெழுக்கினால் பதிற்றிஆகும், துளக்கிநன் மலர்தொடுத்தால் தூயவிண் ஏறலாகும், விளக்குஇட்டார் பேறுசொல்லின் மெய்ஞெறி ஞானமாகும், அளப்பில் கீதம்சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல திருக்கோயிலை மெழுக்குவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும் என்கின்றார். ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால் தூய வீட்டு உலகத்திற்கு இவ்வுயிர் மேல் நோக்கிச் செல்லும், கோயிலில் விளக்கு ஏற்றுகின்றவர்கள் உண்மை வழியில் செல்லும் அறிவாகிய பேறு பெறுவர், எல்லை இல்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைக்கு எல்லை இல்லை என்கின்றார் திருநாவுக்கரசு அடிகள்.

பெருமானுக்குச் செய்யும் மேற்குறிப்பிட்ட பணிவிடைகளோடு பெருமானின் திருப்பெயர்களை எப்பொழுதும் கூறுதலும் திருவைந்து எழுத்தான ‘சிவயநம’ என்ற மந்திரத்தை எப்பொழுதும் கூறுதலும் பெருமானுடைய பெருமைகளையே எப்பொழுதும் பேசுதலும் திருக்கோயில் வழிபாட்டினைத் தவறாது இயற்றுதலும் உணவு உண்பதற்கு முன் பெருமானுடைய திருவடி மலர்களை எண்ணுதலும் எப்பொழுதும் திருநீறு அணிதலும் இத்தொண்டு நெறிக்கு உரியன என்றும் குறிப்பிடுவர்.

பெருமான் உறையும் திருக்கோயில்களையும் இல்லங்களையும் விடுத்து அவன் வாழும் மற்றொரு உறைவிடமான உலக உயிர்களுக்கு அன்புடன் தொண்டு செய்தலும் இத்தொண்டு நெறிக்கு உரியது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நடமாடும் திருக்கோயில்களான பெருமானின் அடியார்களுக்கும் பிற உயிர்களுக்கும் அவற்றிற்கு வேண்டுவன கொடுத்து அவற்றின் துன்பத்தைப் போக்குவதும் தொண்டு நெறியில் நிற்பது என்கின்றார் திருமூலர். பசியால் வாடுகின்றவருக்கு அன்போடு உணவளிப்பதும் உடுக்க உடையும் இருக்க இடமும் இல்லாதவருக்கு உடையும் உறையுளும் கொடுப்பதும் இறைத்தொண்டு என்கின்றார் திருமூலர். பிறருக்கு உலகக் கல்வியையும் சமயக் கல்வியையும் கொடுப்பதும் உழைத்து முன்னேற வேண்டும் என்பவருக்கு அவர் முன்னேறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் இன்னல்களைப் போக்குதலும் இறைத் தொண்டே என்கின்றார் திருமூலர்.

மாந்தரிலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டினைக் காட்டாது அனைத்து உயிர்களின் உயிரையும் தன் உயிரைப் போன்று பேணி அன்பு பாராட்டி வாழும் நெறியும் இத்தொண்டு நெறிக்கு உரியது என்கின்றார் திருமூலர். இறைத் தொண்டையும் மக்கள் தொண்டையும் பிற உயிர்களுக்குச் செய்யும் தொண்டையும் வெறும் பெயருக்கும் புகழுக்கும் மட்டும்  செய்வோமேயானால் அது தொண்டர் நெறியில் நிற்கவும் இறைவனிடத்தில் உறவு ஏற்படுத்தவும் துணை நிற்காது என்கின்றார் திருமூலர். மாறாக மேற்கூறிய ஒவ்வொன்றிலும் இறைவனை முன்நிறுத்தி, தன்முனைப்பு அற்று, அவற்றை இறைத்தொண்டாக, இறை அன்போடு செய்தால் அது தொண்டர் நெறிக்கு நம்மை ஆளாக்கி அந்நெறியில் சிறந்து ஓங்கிட வழிவகுக்கும் என்கின்றார் திருமூலர். மகமை நெறிக்கும் தோழமை நெறிக்கும் ஆசான் நெறிக்கும் அடிப்படையாகவும் வாயிலாகவும் விளங்கும் இத்தொண்டர் நெறியை உறைப்போடு கடைப்பிடித்துப் பேரின்பப்பெருவாழ்வு பெறுவோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!