111. மகமை நெறி

1443

எல்லாப் பொருள்களிடத்தும் உயிர்களிடத்தும் கலந்து நிற்கின்ற தன்மையால் ஒன்றாயும் இறைவன் வேறு பொருள், உயிர் மற்றும் உலகப்பொருள்கள் வேறு எனும் பொருள் தன்மையினால் வேறாகவும் எல்லாவற்றுக்குள்ளும் நின்று செலுத்தும் தன்மையால் உடனாகவும் இருக்கின்ற சிவம் எனும் பரம்பொருளைச் சிற்றறிவு உடைய உயிர்கள் உறுதியாய் அடைய இயலும் என்று அறுதியிட்டுக் குறிப்பிடுகிறது தமிழ்ச் சைவர்களின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம். சிவம் எனும் பரம்பொருளைப் பற்றி ஆழ்ந்து கேட்டும் படித்தும் அதனைப் பற்றிச் சிந்தித்தும் அதில் அழுந்தியும் இருப்போமானால் அப்பரம்பொருளிடத்து  ஓர் உணர்வு ஏற்படும் என்கின்றது சித்தாந்த சைவம். அன்பு எனும் அவ்வுணர்வினைப் பெறுவதற்கு அப்பரம்பொருளிடத்து ஓர் உறவினை நிலைநாட்ட வேண்டியிருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றது. இவ்வுறவும் உணர்வுமே அப்பொருளின் திருவருளை உணரவும் நுகரவும் பின் அப்பரம்பொருளின் அறிவினைப் பெறவும் அப்பரம்பொருளோடு கூடியிருந்து பேரின்பம் துய்க்கவும் வழிவகுக்கின்றது என்று தமிழ்ச் சைவர்களின் சிவஆகம நூலாகவும் வழிபாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகின்ற திருமந்திரம் குறிப்பிடுகின்றது.

சிவம் எனும் பரம்பொருள் அதன் சிறப்பு நிலையில் இருந்து பொது நிலைக்கு இரங்கி வந்து அருளுகின்றபோது அதனைச் சிவம் என்கின்றோம். அச்சிவனின் பேரருளையும் பேராற்றலையும் உணர்ந்து அவனோடு இடைவிடாது கூடியிருப்பதற்குச் சிவச்செறிவு எனும் தோழமைநெறி உறுதுணையாய் நிற்கின்றது. சிவனோடு இடைவிடாது கூடியிருந்து அவனின் பேரருளையும் பேரரறிவையும் சிவஅறிவாய்ப் பெறுவதற்கு ஆசான் நெறி இன்றியமையாததாய் உள்ளது. இவ்விரண்டு நெறிகளும் கைக்கூடும் முன்னே மகமைநெறி இவ்விரண்டு நெறிகளும் கைக்கூடுதற்கு வாயிலாக இருக்கின்றது. மைந்தர்நெறி என்றும் அழைக்கப்பெறும் இந்நெறியை வடமொழியில் சற்புத்திர மார்க்கம் என்று குறிப்பிடுவர். பெருமானைத் தந்தையாகவும் நம்மை அவனின் மகன் அல்லது மகள் எனும் உறவு முறையில் வைத்து அவனிடம் அன்பு பராட்டுதலே மகன்மைநெறி எனப்படுகின்றது.

மகனோ அல்லது மகளோ தன் தந்தைக்கு அணுக்கமாய் இருந்து செய்ய வேண்டிய பணிவிடைகளையெல்லாம் தன் தந்தை தனக்கு ஆற்றிய உதவியினை எண்ணி எண்ணி, நன்றி உணர்வாலும் அதனால் விளைகின்ற அன்பாலும் செய்வதுதான் மகன்மைநெறி எனப்படுகின்றது. பெற்ற தந்தையின் உடலைத் தொட்டு, அவருக்கு அன்போடு பணிவிடைகள் செய்து, உள்ளத்திலே அவரை எப்போதும் நன்றியினால் எண்ணி அன்பு பராட்டுதல்போல பெருமானுக்கு மிக அருகில் நின்று அவனின் திருவடிவினைத் தொட்டுப் புறத்திலேயும் அகத்திலேயும் பணிவிடைகள் செய்வதே இம்மகன்மைநெறி என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனையே கிரியை என்று வடமொழியில் குறிப்பிடுகின்றனர். பெருமானைத் திருக்கோயில்களிலும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருத்தி, அவனின் திருவடிவினைத் தொட்டுப் பல பணிவிடைகளைச் செய்து வழிபட்டு அவன்பால் அன்பினைப் பெருக்கிக்கொள்கின்ற செயலே மகன்மைநெறியினில் குறிக்கப்பெறுகின்றது என்கின்றார் திருமூலர். வடிவமும் வடிவம் அற்றதுமான அருவுருவ வடிவங்களான சிவலிங்கம் எனப்படும் சிவக்கொழுந்தின் வடிவிலும் ஒளி வடிவிலும் பெருமானை நிலைநிறுத்தி, அவற்றைச் சிவபெருமானாகவே எண்ணி, கண்ணை இமை பாதுகாப்பது போலப் பாதுகாத்துப் பல்வேறு பணிவிடைகளை மகன் தன் தந்தைக்குச் செய்தல்போல வெளியேயும் அகத்திலும் செய்வதே மகன்மைநெறி என்பதனை, “மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில், தாவிப்பதுஆம் சகமார்க்கம் சகத்தொழில், ஆவது இரண்டும் அகன்று சகமார்க்கத், தேவியோடு ஒன்றல் சகமார்க்கம் தெளிவதே” என்று குறிப்பிடுகின்றார்.

பெருமானின் ஒளிவடிவினை நிலைத்த வடிவாக விளக்கி நிற்பதே சிவலிங்கம் எனப்படும் சிவக்கொழுந்து திருவடிவமாகும். அவ்வடிவினைத் தந்தையாகவே எண்ணி அன்போடு செய்கின்ற பூசனை வழிபாடுகளே மகன்மைநெறியில் அப்பெருமானிடத்தில் அன்பு ஏற்படுதற்கு வாயில் என்கின்றார் திருமூலர். பெருமானைச் சிவக்கொழுந்தாகக் கொண்டுத் திருக்கோயில்களிலும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் வைத்துத் தொட்டுப் பூசனைகள் இயற்றி வழிபடுவதே மகன்மைநெறி என்கின்றார் திருமூலர். மகன்மைநெறியில் நின்று சிவபெருமானுக்குச் சிவஆகமங்கள் குறிப்பிடுகின்றபடி பதினாறு பணிவிடைகள் என விரிவாகவோ அல்லது தங்களால் இயன்ற பணிவிடைகளைச் சுருக்கமாகவோ செய்வதில் முன்னிலைப்படுத்த வேண்டியது அப்பணிவிடைகளின் தெளிவும் அன்பும் என்கின்றார் திருமூலர்.

உடல் தூய்மை, உளத்தூய்மை, இடத்தூய்மை, பூசனைப் பொருட்களின் தூய்மை, சொல் தூய்மை, வழிபடுகின்ற திருவடிவின் தூய்மை என்பதனை ஏற்படுத்தி, அன்போடு பூசனை இயற்றுதலே இம்மகமைநெறியினில் இறைவனிடத்தில் உறவையும் உணர்வையும் ஏற்படுத்தும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றர். நாம் இவ்வுலகில் பிறப்பதற்கும் வளர்வதற்கும் வாழ்வு பெறுவதற்கும் பல்வேறு வகையில் உதவிய நம் தந்தையின் அன்பையும் அருளையும் நன்றியையும் எண்ணி அவர்பால் அன்பொழுகப் பணிவிடைகள் செய்வது போன்று, பெருமானுக்குத் திருமஞ்சனம்(அபிடேகம்), ஒப்பனை, புகை, ஒளி, திருவமுது, மந்திரங்கள், மங்கல இசை, நடனம், திருமுறைகள், மலர்கள், வழிபடுதல் போன்றவற்றை உள்ளன்போடு செய்தலைக் குறிப்பிடுகின்றார். இறைவனுக்குப் பூசனைகள் இயற்றும்போது அப்பூசனையில் இயற்றப்பெறும் பணிவிடைகளுக்குப் பொருளறிந்து இயற்றுதலே உண்மை மகமை உறவை ஏற்படுத்தும் என்கின்றார் திருமூலர்.

பூசனையில் இயற்றும் பதினாறு பணிவிடைகளில், அடுக்கு என்பது பலவாகத் தோன்றும் இறைவன் ஒருவனே என்றும் விண்மீன் தீபம் காட்டுகையில் அவனே விண்மீன்கள் முதலாய கோள்களையுமண்டங்களையும் தோற்றுவித்தான் என்றும் ஐமுகத் தீபம் காட்டுகையில் அவனே நிலம், நீர், வளி, தீ, வெளி ஆகிய ஐந்து கூறுகளைத் தோற்றுவித்தான் என்றும் வில்வம் தீபம் காட்டுகையில் அவனே உயிரைப் பற்றியுள்ள அறியாமை எனும் நோய்க்கு மருந்தாகின்றான் என்றும் உணரல் வேண்டும். அரவத் தீபம் காட்டுகையில் அவனே அவனை அறிகின்ற குண்டலி ஆற்றலாய் நிற்கின்றான் என்றும் விடைத் தீபம் காட்டுகையில் அவன் அறத்தை அடிப்படையாகக் கொண்டு உயிர்களுக்கு அருள்பவன் என்றும் மாந்தவிலங்குத் தீபம் காட்டுகையில் அவனே உலக உயிர்களை  இயக்குகின்றான் நிறை குடத் தீபம் காட்டுகையில் அவன் எல்லாம் அறிஎத நிறைவு உடையவன் என்றும் ஈசன் ஆதித் தீபம் காட்டுகையில் அவனே ஐந்து திருமுகங்களுடன் உயிர்களுக்காகத் தோற்றுவித்தல், நிற்பித்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து அருட்செயல்களைச் செய்கின்றான் என்றும் உணரல் வேண்டும்.

பெருமானுக்குப் பூசனையில் திருநீறு சாற்றிகின்ற போது அப்பெருமானே நம் உயிரைப் பற்றியுள்ள அறியாமை எனும் அழுக்கை எரித்து நீறாக்குகின்றான் என்றும் குடை காட்டிகையில் அப்பெருமானின் நடுநிலையான அருளாட்சியே உலகை ஆளுகின்றது என்றும் கொடி காட்டுதலின் போது அப்பெருமானின் திருவருளே எல்லாவற்றையும் வெற்றி கொள்கிறது என்றும் ஆலவட்டம் காட்டுகையில் நாள்களும் கோல்களும்  பிற சிற்சத்திகளும் அவனின் ஆனைக்கு உட்பட்டுச் செயல் ஆற்றுபவை என்றும் கண்ணாடி காட்டுகையில் அவனே என்றும் நிலைத்த, மாறுபடாத பேரழகன் என்றும் கவரி காட்டுகையில் அவனே எல்லா பெருமைகளுக்கும் உரியவன் என்றும்  தெளிதல் வேண்டும் என்கின்றார் திருமூலர்.

தவிர பூசனையில் தூய்மையான நீர், மலர், புகை, ஒளி, திருமுறைகள் ஓதுதல் போன்ற்றவற்றைச் செய்து அவன் புகழை வாயாறக் கூறி தலையாறக் கும்பிட்டு அகங் குழைந்து உருகி வழிபட்டால்லுயிர்களுக்குத் தந்தையாகிய அப்பெருமானிடத்தில் மகன் தந்தை எனும் உறவும் உணர்வும் ஏற்படும் என்கின்றார் திருமூலர். சிவனின் மகனாதற்கு இளம் வயதே மிக ஏற்றது என்பதனால் துருஞானசம்பந்தரை இம்மகன்மை நெறிக்குக் குறிப்பிடுவர். சிறுவயதினருக்கு உரியது என்று இதனை எண்ணிவிடாமல் அனைத்து அகவையினரும் எக்காலத்தும் செறிவு, அறிவு, நெறிகள் கூடிய நிலையிலும் வழிபாடு செய்தலைச் செய்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர். பெருமானின் திருவருளை இவ்வுலகிலேயே பெற்ற நாயன்மார்களும் திருமூலர் போன்ற சிவச் செறிவாளர்களும் அறிவு நெறியில் நின்ற மணிவாசகர் போன்றோரும் தோழமை நெறியில் நின்ற சுந்தரர் போன்றோரும் விடாது இயற்றிய சிவ பூசனையாகிய மகன்மை நெறியினைத் தவறாது இயற்றிப் பெருமானின் திருவருளுக்கு ஆளாவோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!