5. அடையும் ஆறாக விரிந்தான்

2516

ஆறு என்பது ஆறு என்ற  எண்ணையும் வழி என்ற பொருளையும் குறிக்கும். “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற, இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே”, என்பார் திருநாவுக்கரசு அடிகள். என் அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினை நான் அறிந்து கொண்டுவிட்டமையினால் இனி பிறவி வாய்க்காது என்பார். பெருமான் உயிர்கள் அடைய வேண்டிய பொருளாயும் அவனை அடைகின்ற வழியாயும் உள்ளதனையே, “ஆறாய் விரிந்தனன்” என்பார் திருமூலர். பெருமானை அடைவிக்கும் வழியாகப் பெருமான் நிற்றலை வடமொழியில் அத்துவாக்கள் என்பர். இதனையே தமது முதற்பாடலில், “ஆறாய் விரிந்தனன்” என்று அன்னைத் தமிழில் இயம்புவார் திருமூலர்.

உயிர்கள் சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்ற நான்கு நெறிமுறைகளைப் பின்பற்றிப் பெருமானை அடைவதற்குப் பெருமான் ஆறு வழிமுறைகளை வகுத்து, அவற்றின் வழி நமக்கு அருளுகிறான் என்பார் திருமூலர். உயிர்கள் கற்பனையும் செய்து பார்க்க இயலாத, சொல்லிற்கு அகப்படாத, செயலுக்கு அகப்படாத இறைவனை, உயிர்கள் தாமாக அறிதல் இயலாத ஒன்று எனும் பெருங்கருணையினால், பெருமான் அவனை அடைதற்கு எளிய ஆறு வழிகளை நமக்கு வகுத்துத் தந்துள்ளான் என்பார் திருமூலர். அவ்வகையில் இந்த ஆறு வழிகளை மந்திரம், பதம், வண்ணம், கலை, மெய்கள் (தத்துவம்), அண்டங்கள் (புவனம்) என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுவதைக் குறிப்பிடுவார்.

ஆறு அத்துவாக்கள் என்று சொல்லப்படும் இந்த ஆறு வழிகளைச் சித்தாந்த சைவம் இரண்டாக வகைப்படுத்துகின்றது. ஒன்று சொல் உலகம், மற்றது பொருள் உலகம். உயிர்கள் பெருமானை அறிவதற்குத் துணை நிற்கக் கூடிய உயிர் அறிவினையும் இறை அறிவினையும் பெற இவ்விரு வகை உலகங்களின் வழியும் இறைவன் வழி அமைத்துக் கொடுத்திருக்கின்றான் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.

மந்திரம் எனப்படுவது பொருளுள்ள எழுத்துக்கள். எடுத்துக்காட்டாக, “அ” என்பது சிவத்தையும் “உ” என்பது அவனது திருவருளான சத்தியையும் குறித்தல் போன்று ஆகும். தமிழ் எழுத்துக்கள் எண்ணாகவும் எழுத்தாகவும் நிற்பது பற்றியே பேராசான் திருவள்ளுவரும், “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும், கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்பார். “அ”, “உ” என்பது எட்டு, இரண்டு எனும் எண்களாகவும் “அ”, “உ” என்ற எழுத்துக்களாகவும் நிற்பது பற்றியே திருமூலரும், “எட்டும் இரண்டும் அறியாத என்னை, எட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்தி”, என்று குறிப்பிடுவார். இதனையே திருநாவுக்கரசு அடிகளும், “எண்ணானாய் எழுத்தானாய், எழுத்தினுக்கோர் இயல்பானாய்”, என்பார். பதம் என்பது சொற்றொடர்கள். “சிற்றம்பலம்” என்பது பெருமான் ஆடுகின்ற அறிவு வெளியினை உணர்த்தி நிற்கின்ற சொற்றொடர். வண்ணம் என்பது வெளிப்படையாக நிற்கின்ற நீண்ட வாக்கியங்கள். இதனுக்கு எடுத்துக்காட்டாகத் திருமுறைப் பாடல்களைக் குறிப்பிடுவர்.

எனவே மந்திரம், பதம், வண்ணம் என்று கூறப்படும் சொற்களைக் கொண்டு உயிர்களுக்கு அறிவு வளருமாறு இறைவன் வழி அமைத்து, அச்சொற்களின் பொருளாய்  நின்று, அறிவு விளக்கம் செய்விக்கின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனாலேயே கற்றலில் பேச்சு, வாசிப்பு, எழுத்து இன்றியமையாதது என்பார்கள் பயிற்றியல் அறிஞர்கள்.

இறைவனை அடைவிக்கும் ஆறு வழிகளில் மற்றையது பொருள் உலகம் எனப்படும். இறைவன் படைத்து அளித்துள்ள பொருள்களைத் தொட்டு, உய்த்து, உணர்வதாலும் உயிர்களுக்கு இறைவன் அறிவு வளர வழி வகுத்துள்ளான் என்று திருமூலர் குறிப்பிடுவார். பொருள் உலகில் முதலாவது, உயிர்களுக்கு இறைவன் சேர்ப்பிக்கும் ஐந்து கலைகள். கலைகள் என்றால் செயல் என்று பொருள். உயிர்கள் பிறவிக்கு வருவதற்கு முன்பு சிக்கிக் கொண்டிருந்த ஆணவ இருள் என்பதிலிருந்து அதனை விடுபடச் செய்து, உலகில் உடலுக்குள் உயிரை நிலை பெறச்செய்து, உலக இன்ப துன்பங்களை நுகரச் செய்து, பின்பு உலகின் மீது பற்று அற்று அமைதி பெறச் செய்து, உலகினுக்கு அப்பால் உள்ள தனது திருவடியில் நிலை பெறச் செய்வது ஐந்து கலைகள் ஆகும். இதனையே திருநாவுக்கரசு அடிகளும், “ ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே, அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே, ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே, உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே, புகுவித்தால் ஆரொருவர் புகுதாதாரே, …காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே…” என்று நயம்பட தமது திருத்தாண்டகத்தில் குறிப்பிடுவார்.

பொருள் உலகில் இறைவன் அளித்துள்ள அடுத்த வழியானது முப்பத்தாறு தத்துவங்கள் எனப்படும் முப்பத்தாறு மெய்கள் ஆகும். இவை நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்கள், உடலில் அறிகின்ற கருவிகள் ஐந்து, தன்மாத்திரை எனும் புலன்கள் ஐந்து, உடலில் செயல் செய்கின்ற கருவிகள் ஐந்து, உடலின் உட்கருவிகள் நான்கு, காலம், ஊழ், தொழில், அறிவு, விழைவு, ஆள், மருள் எனும் வித்தியா மெய்கள் ஏழு, சிவ மெய்கள் ஐந்து எனப்படும். (இவற்றைச் சித்தாந்த நூல்களில் விரிவாகக் காண்க). இம்முப்பத்து ஆறு மெய்களையும் இறைவன் உயிர்கள் அறிவு பெறுவதற்கு ஏற்படுத்தியும் அவற்றினுள் நின்றும் உயிர்களூக்கு அறிவைச் சிறப்பிக்கின்றான் என்று திருமூலர் குறிப்பிடுவார்.

பொருள் உலகின் இறுதி வழியானது அண்டங்கள். இறைவனே பல்வேறு அண்டங்களைப் படைத்து, அவற்றிலுள்ள கோள்களையும் விண்மீன்களையும் படைத்து, அவற்றினுள் தம் ஆற்றலைச் செலுத்தி, அவற்றின் வழி உயிர்களுக்குப் பல நன்மைகளை அமைத்துத் தன் திருவடியை அடைய வழிவகுத்து உள்ளான் என்கிறார் திருமூலர். அறவாழி அந்தணன் ஆறாக விரிந்தான் என்பது இதுவே!