4. தமிழில் வழிபடுதல்

2019

“ஆறு அது ஏறும் சடையான் அருள்மேவ அவனியர்க்கு, வீறு அது ஏறும் தமிழால் வழிகண்டவன்” என்று திருஞானசம்பந்தரைத் திருத்தொண்டர் திருவந்தாதி அருளிய நம்பியாண்டார் நம்பி புகழ்வார். அதாவது தலையில் கங்கையை அணிந்துள்ள சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கு உலகத்தவர்க்கு உயர்வு தரும் தமிழால் வழிகண்டவர் திருஞானசம்பந்தர் என்று குறிப்பிடுகின்றார். பதிகப் பெருவழியாகிய இறையன்பு நெறியை நமக்கு அளித்தவர் திருஞானசம்பந்தர். தெரிந்த, எளிய, அன்னைத் தமிழிலேயே இறைவனைப் பாடி அடையலாம் என்பதே இதன் கருத்து. இதனையே தமிழர் வழிபடு மரபாகச் சேக்கிழார் தமிழர் வாழ்வியல் பெட்டகமான பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.

 அடியார்கள் பெருமையை எவ்வாறு, என்னசொல்லிப் பாடுவது என்று சேக்கிழார் இறைவனை உள்கி நின்றபோது, “உலகெலாம்” என்று இறைவன் அன்னைத் தமிழில் அடியெடுத்துக் கொடுத்தார். பெருமானின் சிவஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர் திருநெறிய தமிழில்தான்  இறைவனைப் பாடினார். சிவஞானபால் தமிழ்ஞானம் ஊட்டியதை என்னுகையில் சிந்தை குளிர்கின்றது. சூலை நோயால் துடிதுடித்துத் தமக்கைத் திலகவதியாரிடம் திரு நீறு பெற்று, அதிகை வீரட்டானத்து இறைவனைச் “சலம்பூவோடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” என்று அழகு தமிழில் பாடியே சூலை நோய் நீக்கினார் திருநாவுக்கு அரசர்” என்று இறைவனால் அழைக்கப்பெற்ற அப்பர் பெருமான்.

 பெரிய புராணத்தின் முதல் சருக்கமான திருமலைச் சருக்கத்தில் சுந்தரர் பெருமானின் வரலாறு இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரலாற்றில் இறைவன் தமிழை விரும்பிக் கேட்டதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தூய மறையினைப் பாடும் இறைவன், “நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று கூறியதாய்ச் சேக்கிழார்பெரிய புராணத்தில் பதித்துள்ளார். இதன் வழி இறைவனுக்குச் சிறந்த அர்ச்சனை பாடுதலே ஆகும் என்று தெளிவாகிறது. பெருமான் விரும்பிக் கேட்ட உயர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் பெருமானைத் தமிழிலேயே போற்றிப் புகழ்ந்து, அகங்குழைந்து, கண்ணீர் மல்கி வழிபடலாம் என்று புலனாகிறது. பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டே பெருமானை முதலில் வழுத்தி வழிபடுகின்றார். இறைவனைத் தமிழில் வழிபடுவதே தமிழர் வழக்கு என்பதனைச் சேக்கிழார் பெரிய புராணம் நெடுகிலும் பதிக்கின்றார். தமிழ்ஞானசம்பந்தர் பிறப்பினைப் பற்றி குறிப்பிடும் சேக்கிழார், “திசைஅனைத்தின் பெருமைஎலாம் தென்திசையே வென்றுஏற, மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனிவெல்ல, அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல, இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக” என்று குறிப்பிடுகின்றார்.

   தமிழர்கள் தங்கள் அன்னைத் தமிழின் பெருமையை மறந்த நிலையினையும் தமிழர்களின் இறைவழிபாட்டில் திருநீராட்டு, குடமுழுக்கு, பூசனை, ஓதல் அனைத்தும் தமிழில் இடம்பெற வேண்டும் என்பதனைச் சேக்கிழார் சுட்டிக் காட்டுகின்றார். தமிழர்கள் வாழும் தென்திசையின் பெருமை உலக முழுமைக்கும் சிறக்கவும், தமிழர் மரபாகிய சிவ நெறியும் தமிழ் மொழியும்,, தமிழர்தம் வழக்கங்களும், தமிழர் இசையும், மெய்யறிவும் மற்ற வழக்குகளைக் காட்டிலும் சிறக்கத் திருஞானசம்பந்தர் தோன்றினார் என்கிறார். திருஞானசம்பந்தர் கால கட்டத்திலேயே தமிழர்கள் தங்கள் தமிழ் வழக்கங்களைத் தொலைத்து விட்டிருந்திருக்கிறார்கள் என்றும் இதில் புலப்படுகின்றது.

 அருளாளர்கள் அன்னைத் தமிழில் பாடிய திருமுறைகள் தமிழ் மந்திரங்கள். அவை இறைவழிபாட்டிற்கு உரியவை என்பதனை, “பன்னு தமிழ்மறையாம் பதிகம் பாடி” சேக்கிழார் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் இன்னும் திருமுறைகள் பாடிய நாயன்மார்களின் பதிகங்களுக்குச் சேக்கிழார் பல அரிய அடை மொழிகளைத் தந்து குறிப்பிடுகின்றார். பெருமானிடம் நம்மைச் சேர்ப்பிக்கும் தமிழ் மந்திரங்களைச் சேக்கிழார், “உரைத்தமிழ்மாலை, கோதில் திருப்பதிகம், தேமாலை செந்தமிழ், அருந்தமிழ், தூமொழி, நற்றமிழ் மாலை, விருத்தத் திருமொழி, அருஞ்சோல்வளத்தமிழ் மாலை, நாவார் பதிகம், சொன்மாலை, எழுது மறை, ஒப்பரிய தமிழ், அஞ்ஞான செந்தமிழ்ப்பதிகம்” என்று பலவாறாகப் போற்றுகின்றார்.

 பெருமானின் அருள்பெற்றுப் பெருமானை முழுக்க-முழுக்கத் தமிழிலேயே அருளாளர்கள் பாடி, பெருமானின் திருவடி நிழலை அடந்து காட்டியும் நம் போன்ற தமிழர்களுக்கு இன்னும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை! திருக்கோயில்களில் நம் அடியவர் பெருமக்கள் ஓதி இறைவனை வழிபட்ட தமிழ் மந்திரங்கள் இறப்பு வீடுகளில் மட்டும் ஓதப்பெறுவதும், அங்கு ஓதுவதற்கு மட்டுமே தகுதியுடையது என்று எண்னுவதும் நம் அறியாமையே.

சீர்மிகு செந்தமிழரின் அன்னை மொழியாகிய அருந்தமிழ் பெருமான் விரும்பிக் கேட்டது என்று கண்டோம். பெருமானின் அருள்பெற்ற அருளாளர்கள் அன்னைத் தமிழிலேயே பெருமானைப் பாடி வழிப்பட்டார்கள். இதற்குச் சான்று இறையன்பும் நெகிழ்வும் குழைவும் மிக்க பன்னிரண்டு திருமுறைகளும், பிற்காலத்து அடியார்களின் இறையன்புப் பனுவல்களும் ஆகும். பதினேழாயிரம் பாடல்களுக்கு மேற்பட்ட தமிழ் மந்திரங்களான திருமுறைப் பாடல்கள் பெருமானைத் தமிழில் போற்றி வழிபட பாடப்பெற்றவையே!

 ‘நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒரு போதும் இருந்தறியேன்” என்று பாடுகின்ற பாடலின் பொருள் தெரிந்து உள்ளம் உருகிப் பெருமானை வழிபடுகின்றப் போது இறைவனிடத்திலே அன்பு பெருகுகிறது. உள்ளம் கசிகின்றது. கண்ணீர் மல்குகின்றது. நம் உளச் சுமைகளெல்லாம் குறைகின்றது. ஊன் உருகுகின்றது. உயிர் உருகுகின்றது. உவட்டாத இன்பம் சிந்தையில் கொப்பளிக்கின்றது. உள்ளத்து இருள் நீங்கி உள் ஒளி பெருகுகின்றது. வழிபாடுகளில் இடம் பெரும் கிரியைகள் அல்லது செயற்பாடுகள் உயிர் அறிவுபெறுவதற்குத் தேவையான செய்திகளைச் செயற்பாடுகள் மூலம் உணர்த்துவனவாகும். பூசனைகல் இடம் பெறும் செயற்பாடுகள் இறைவனின் பெருமைகளையும் பெருங்கருணையையும் உணர்த்துவன. இதனை உணர்ந்து நம் அறியாமையினைப் போக்கி, அன்புப் பிழம்பாய் மாறி நற்சிந்தனை, நற்செயல், நல்ல சொற்கள் பேசி உயிர் விளக்கம் பெற்று வாழ்வதே இறை நெறிக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதனை உணர்த்துவதற்கே இக்கிரியைகள் செய்யப்படுகின்றன.

 உயிர் அறிவு பெறுவதற்கு இறைவனிடத்திலும் இறை வாழும் பிற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே சிறந்த வழி என்பதனை அன்பே சிவம் என்று திருமூலர் குறிப்பிடுவார். இறைவனிடத்தில் அன்பு ஏற்படுவதற்கு இறைவனைப் புரிந்த மொழியில் வழிபட வேண்டி இருக்கின்றது. இறைவனைப் பற்றிய உண்மைகளையும், உயிரைப் பற்றிய உண்மைகளையும், உலகைப் பற்றிய உண்மைகளையும், முழுமையாகவும்,தெளிவாகவும், தமிழர் தம் பண்பாட்டிற்கும் மரபிற்கும் உட்பட்டு, விளங்கும் மொழியில் நமக்கு அறிவிப்பது அன்னைத் தமிழில் உள்ள திருமுறைகளே! “இரும்பு மனத்து என்னை உருக்கி, நின் கரும்பு சுவை எனக்குக் காட்டினை” என்று மணிவாசகர்   நைந்து உருகிப் பாடியது, வழிபட்டது அன்னைத் தமிழில்தான். இறைவன் தான் தன்னைத் தமிழில் பாட வைத்தான் என்பதனைத், “தன்னார் தமிழ் அளிக்கும் தன் பாண்டி நாட்டானை” என்று மணிவாசகர் குறிப்பிடுவார். பெருமான் தமிழ் வழிபாட்டினைக் கேட்டு இரங்குவான் என்பதனை, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர் முன்தாளம் ஈந்து, அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை, கோளிலிப் பெருங்கோயில் உளானை, கோலக்காவில் கண்டு கொண்டேனே” என்று சுந்தரர் பாடுகின்றார்.

 தமிழ் மந்திரங்களான திருமுறைகள் இறைவனை இரங்க வைக்கக் கூடியவை என்னும் தமிழிலேயே இறைவனைப் பாடி அடையலாம் என்பதனைச் சம்பந்தர், அப்பர், சுந்தரர், காரைக்கால் அம்மையார், திருமூலர், சேரமான் பெருமான் நாயனார், பொய்யடிமை இல்லாத புலவர்கள் போன்றோரின் வரலாறுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் தெளிவுற விளக்குகின்றார்.

 உண்மையான வழிபாட்டு முறைகளையும் உண்மையான சிவநெறிக் கொள்கைகளையும் உண்மையான இறயன்பு மீதூறும் நெறிமுறைகளையும் நமக்குத் தமிழில் உணர்த்தும் தமிழ் மந்திரங்களான திருமுறைகள் பல அருள் நிழக்வுகளை அடியார்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ளமையைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் காட்டுகின்றார். தமிழால் இறைவனை வழுத்திப் பாடி தமிழ்ஞானசம்பந்தர் ஆண் பனையைப் பெண்பனை ஆக்கியதும், சாம்பலை மறுபடியும் பெண்ணாக்கியதும், பாம்பு தீண்டி இறந்த வனிகனை மறுபடியும் உயிர்ப்பித்ததும், நீரில் திருமுறை எழுதிய ஓலை எதிர்த்து சென்றதும், தீயில் திருமுறை எழுதிய ஓலை வேகாமல் பச்சையாய் நின்றதும்தமிழ் வழிப்பாட்டினால்தான். தமிழ் ஓதி முத்துப் பல்லக்குப் பெற்றதும் , பொன் தாளம் பெற்றதும்,முத்துப் பந்தல் பெற்றதும், பொற்காசு பெற்றதும், குளிர் நோய் போக்கியதும், கடும் வெப்பு நோயைப் போக்கியதும் தமிழால்தான்.

 திருநாவுக்கரசு அடிகள் கல்லில் கடலில் மிதந்ததும், நீற்றறையில் உயிர் பிழைத்ததும், மதங்கொண்ட யானையை அடக்கியதும், சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப் பெற்றதும், இறைவன் திருவடி தம்மேல் சூட்டப் பெற்றதும் தமிழில் வழிபட்டுத்தான்! சுந்தரர் பெருமான் தம்பிரான் தோழர் நிலைமையை அடையப் பெற்றதும், பொன் பெற்றதும், பொதி சோறு பெற்றதும், முதலை உண்ட பாலகனை மீட்டுத் தந்ததும், திருவடி சூட்டப் பெற்றதும், இழந்த கண்னொளியை மீளவும் பெறப் பெற்றதும் தமிழ் வழிபாட்டினால் தான் என்பதனைச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தமிழில் பாடி இறைவனை வழிபடும் வாழுங்காலத்திலேயே பலமுறை இறைக்காட்சியைக் கானும் பேறுபெற்ற இப்பெருமக்கள் தமிழில் வழிபட்டால் இறைவனை அடையளாம் என்றுதிருஞானசம்பந்தர் பெருமண நல்லூரிலும், அப்பர் பூம்புகலூரிலும், சுந்தரர் திருவஞ்சைக் களத்திலும், காரைகால் அம்மையார் திருவாலங்காட்டிலும் அடைந்துகாட்டினர். தமிழில் இறைவனை வழிபட்ட நம் மரபினைச் சீர்மிகு செந்தமிழர் சிந்தையில் கொண்டு வழிபடும் நால் எந்நாளோ!