5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்

1078

தங்கள் தாய்மொழியைப் போற்றிய தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் தங்கள் உறவு முறைகளுக்கும் தமிழில் பெயரிட்டுப் பெருவாழ்வு வாழ்ந்திருக்கின்றனர் என்பதனைப் பெரியபுராணம் பறைசாற்றுவதைக் கண்டோம். பொருள் பொதிந்த, பொருள் தெரிந்த பெயர்களில் அழைப்பதனால் உயிர் விளக்கம் பெறுவதோடு அல்லாமல் பொருள் உணர்வும் ஏற்படும் என்று சான்றோர் கூறுவர். பொருள் பொதிந்த, பொருள் தெரிந்த அழகிய திருப்பெயர்களைச் சூட்டுவதனாலும் அதனைச் சூட்டிகொள்வதனாலும், பிறர் சூட்டியுள்ளதனைச் சொல்வதனாலும் வாய் மணக்கும், மனம் மணக்கும், சிந்தை மணக்கும், உயிர் மனக்கும் என்றார்கள். எனவேதான் முற்காலப் பெரியவர்கள் தூய, உயர்வான, அழகான, இனிதான, அறிவார்ந்த, திருவுடைய பெயர்களைத் தத்தம் உறவுகளுக்கும் உடைமைகளுக்கும் தமிழில் சூட்டி மகிழ்ந்தனர். அவ்வண்ணமே தாங்கள் வழிபட்ட பெருமானின் திருகோயில்களுக்கும், ஊர்களுக்கும் சிந்தைக்கினிய, பொருள் விளங்கிய அன்னைத் தமிழில் பெயரிட்டிருப்பது தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் பெட்டகமான பெரிய புராணத்தில் காணக்கிடக்கின்றது.

 சோதிப் பிழம்பாய் நின்று தணித்த மலையினை அண்ணாமலை என்றார்கள். அண்ணாமலையினை யொட்டிய தலத்தினை திருவண்ணாமலைத் திருத்தலமென்றார்கள். அதிலிருக்கும் அன்ணலைத் திருவண்ணாமலையார் என்றார்கள். பெருமானின் பெருமை பற்றி, அவன் பேராற்றல் பற்றி, யாவர்க்கும் பெரியவனாகிய அவன் தன்மை பற்றி அனைவருக்கும் பொருள் விளங்குமாறு அண்ணாமலையார் என்று அங்குள்ள பெருமானுக்கும் பெயரிட்டார்கள். இறைவனின் திருவருளே பெண்வடிவமாகப் போற்றப் பெறுவதனால் அண்ணாமலையார் உடன் உறை இறைவியின் திருமுலை பால் உண்ணப்படாத திருமுலை என்பதனைக் குறிக்க உண்ணாமுலை என்று பெயரிட்டனர். திருவண்ணாமலைப் பெருமானை அண்ணாமலையார் என்றும் பெருமான் உடன் உறை பெருமாட்டியை உண்ணாமுலை அம்மை என்றும் வாய் மணக்க, சிந்தை மகிழ போற்றிப் பரவினர். தமிழரின் மொழிப்பற்றும் இனமானப்பற்றும் இன்மை இன்று திருவண்ணாமலை அருணாசலம் ஆயிற்று, அண்ணாமலையார் அருணாசலேஸ்வரர் ஆனார். உண்ணாமுலை அம்மை அபீதகுஜாம்பாள் ஆயினார்.  “அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே” என்று தமிழ்ஞானசம்பந்தர் வாயினிக்க, நாவினிக்க, சிந்தை இனிக்கப் பாடிய திருவண்ணாமலையார் இன்று அருணாசலேஸ்வரர் ஆகிக்கிடக்கின்றார்.

 வடமொழி வேதங்களைக் கொண்டு திருக்காப்பிடப்பட்டு நீண்ட நாட்களாகப் பி பின்நுழைவாயில் வழியாக வந்து மக்கள் வழிபட்டுச் சென்ற வேதாரண்யம் என்ற திருக்கோயிலை அழகு தமிழில் திருமறைக்காடு என்று சேக்கிழாரும், மூவர் முதலிகளும், சேரமான் பெருமாள் நாயனாரும் தங்களது தமிழ் மந்திரங்களில் குறிப்பிடுகின்றனர். “பண்ணின்நேர் மொழியாள்” என்ற அருள்நிகழ் தமிழ்ப் பதிகத்தைத் திருநாவுக்கரசர் திருக்கோயில் கதவு திறக்கப்பாடியும், “சதுரம் மறைதான்” என்ற அருள்நிகழ் தமிழ்ப் பதிகத்தைத் தமிழ் ஞானசம்பந்தர் பாடி மறுபடியும் திருக்கோயில் கதவு மூடவும்செய்த அரிய திருக்கோயில் இன்று தனது தமிழ்ப் பெயரை இழந்து நிற்கிறது. பொருள் பொதிந்த திருமறைக்காடு என்னும் பெயர் இன்று வேதாரண்யம் என வழங்குகின்றது. “மறைக்காட்டு மைந்தா” என்று திருஞானசம்பந்தரால் தமிழில் போற்றப் பெற்ற பெருமான் இன்று வேதாரண்யேசுவரர் ஆனார். யாழைப்பழித்த மொழியம்மை என்ற பெருமானின் உடன் உறை அம்மை இன்று வீணாவாதவதூஷணி ஆயினாள். இத்தலத்திற்குச் செல்வோர் தமிழ்நாட்டில் உள்ளவர்களிடம் திருமறைக்காடு எங்கிருக்கிறது என்று கேட்டால் தெரியாது எனவும், வேதாரண்யம் எங்கு உளது என்று கேட்டால் தெரிந்திருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.

 தமிழர்கள் தாம்தாம்வாழும் ஊர்களிலுள்ள திருக்கோயில்களில் உறையும் இறைவனின் திருப்பெயர்களை ஆண்மக்களுக்கும் இறைவியின் பெயரைப் பெண்மக்களுக்கும் வைத்துப் போற்றி அழைத்து மகிழ்ந்தார்கள். திருக்கோயில்களில் உள்ள இறைவனின் பெயர்கள் தமிழில் இல்லாமையால்தான் இன்று தமிழர் தம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டாது, பொருள் தெரியா பிறமொழி சொற்களைக் கொண்டு பெயரிடுகின்றனர். சோதிட வல்லுநர்கள் சோதிடம் கணித்துக் கொடுக்கும்போது தமிழ்ப் பெற்றோர்களுக்குத் தமிழில் பெயர்கள் வருமாறு முதல் எழுத்துக்களைக் குறித்துக் கொடுப்பார்களேயானால் தமிழ்கூறு நல்லுலகம் நன்றியினால் அவர்களை என்றும் போற்றி மகிழும்.

காஞ்சி மாநகரில் கம்பை நதிக்கரையில் ஒற்றை மாமரத்தின் அடியில் மணலால் சிவலிங்கம் அமைத்து உமையம்மை வழிபட, பெருமான் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்ய, உமையம்மை சிவலிங்கத்தைத் தழுவிக் காத்தாள் என்ற தலவரலாற்றினைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் சுட்டுகின்றார். அப்படி உமையம்மை தழுவிய போது பெருமான் தன் திருமேனியில் அம்மையின் வளைத்தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார் என்ற வரலாறும் காணக்கிடக்கின்றது. இதனால் இங்குள்ள இறைவரைத் “தழுவக் குழைந்த பிரான்” என்று நம்முன்னோர் பெயரிட்டு வழிப்பட்டனர். ஒற்றை மாமரத்தின் அடியில் தோன்றிய பெருமானாதலின் ஏகாம்பரநாதர் என்ற பெயரும் பெற்றார். இறைவனைக் “கம்பன்”, “கள்ளக் கம்பன்” என்றே சுந்தரர் தமது பாடல்களில் சுட்டுகிறார். பெருமானை வழிபட்டு உமை அம்மை பல வரங்கள் பெற்றதாய் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் வரலாற்றில்  சேக்கிழார் குறிப்பிடுகின்றார். அதில் இரண்டு நாழிகை நெல்பெற்று முப்பத்து இரண்டு அறங்கள் வளர்த்தாள் உமையம்மை என குறிப்பிடப் பட்டிருகின்றது. இவ்வாறு அறம்வளர்த்த நாயகியாகிய உமை அம்மையை “ஏலவார் குழலி” என்றே சுந்தரரும் சேக்கிழாரும் குறிப்பிடுகின்றனர். “ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபட பெற்றக் கால காலனை, கம்பன் எம்மானைக் காண கண் அடியேன் பெற்றவாறே” என்று சுந்தரம் பாடுவார்.

 முந்தைய தமிழர் மரபில் இக்கோவிலில் ஏகம்ப நாதருக்கே முதன்மை கொடுக்கப் பெற்று சைவ நெறிப்படி நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. சாக்த சமயத்தினர் வடக்கேயிருந்து வந்து இங்கு சத்தி பீடங்கள் அமைத்தவுடன் இது காமக்கோடி பீடத்திற்குப் பெயர் பெற்றது. ஏலவார் குழலி காமாட்ஷி ஆனாள். ஏலவார் குழலி அம்மையின் ஆலயம் காமக்கோட்டம் ஆனது. ஒரு காலத்தில் தமிழர் மரபில் திருக்கச்சியேகம்பமாய் நின்ற திருக்கோயில் இன்று ஸ்ரீ காமாஷியம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பர நாதர் தேவஸ்தானம் என்று வழங்கப் படுகிறது. தமிழர் சைவ மரபில், பெரிய புராண மரபில் பெருமானை முன்னிறுத்தி இருந்த வழக்கு, பண்பாடு மாற்றப்பட்டது. இன்றைக்குக் காஞ்சிபுரம் என்றால் காஞ்சி காமாட்ஷி அம்மன் திருக்கோயிலும் காஞ்சிபுர பட்டுப் புடவையுமே தமிழர் மனதில் இடம்பெற்று இருக்கின்ற சூழல் நிலவுகிறது. திருவேகம்பம், திருக்கச்சியேகம்பம், ஏகாம்பரநாதர்கோயில் என்று அழைக்கப்பெற்ற திருக்கோயில் இன்று அதன் தமிழ்ப் பெயரை இழந்து நிற்கிறது. திருகோயில் என்ற அழகிய தமிழ்ப் பெயர்களைத் தமிழர்கள் தேவஸ்தானம் என்று மற்றி அழைத்து மகிழ்வது தமிழர் பண்பாட்டிற்கு ஊறுவிளைவிப்பது.

 தமிழ்ப்புலவர்களுடன் இறைவனும் ஒருவராய் இருந்து தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் ஆராய்ச்சி செய்த தலம், பெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் புரிந்த தலம், மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் வணங்கிய தலம், கூன்பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்த திருஞானசம்பந்தர் வழிபட்ட தலம், சமணர்களையும் பௌத்தர்களையும் வாதில் திருஞானசம்பந்தர் வென்று சைவத்தை நிலை நாட்டிய தலம், நக்கீரர், பரணர், கபிலர் போன்ற பெரும் புலவர்கள் வாழ்ந்த ஊர், வரகுண பாண்டியனுக்காக இறைவன் கால் மாறி ஆடிய தலம், அருளாளர் பெருமக்களால், சேக்கிழாரால் திருஆலவாய் என்றே சுட்டப்பட்டுள்ளது. இத்தலத்து இறைவரை ஆலவாய் அண்ணல், ஆலவாய் அரண் என்றே தமிழ்ஞானசம்பந்தர் போற்றினார். செந்தமிழ்ச் சொக்கநாதன் என்றே நம்முன்னோர் போற்றிப் பரவினர். பெருமானுடன் உறை அம்மையை அங்கயற்கண்ணி என்றே தமிழ்ச் சான்றோர் குறிப்பிட்டனர்.  “அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே” என்று தமிழ்ஞானசம்பந்தர் போற்றுவார். ஆலவாய் அண்ணல் இன்று சோமசுந்தரக் கடவுளாகவும், அங்கயற்கண்ணி இன்று மீனாட்சஷி அம்மையாகவும் மாறியுள்ளார்கள். தமிழ்ச் சைவ மரபுப்படி ஆலவாய் அண்ணல் முதன்மை குறைந்து இன்று மீனாட்சி அம்மையின் பெயராலேயே திருக்கோயில் விளங்குகின்றது. திருஞானசம்பந்தர் காலத்தில் ஆலவாய் அண்ணல் கோயில் மட்டும் இருந்ததாயும் பண்ணிரண்டாம் நூற்றாண்டில்தான் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மீனாட்சி அம்மைக்குத் தனிக்கோயில் எடுத்தான் என்று முனைவர் பு.மா.ஜெயசெந்தில் நாதன் குறிப்பிடுகின்றார். காஞ்சி என்றால் காஞ்சி காமாட்சி அம்மன் என்றும் மதுரை என்றால் மதுரை மீனாட்சி அம்மன் என்ற வழக்குகள், தமிழர் பண்பாட்டில் பிற்காலத்தில் வந்த வழக்குகளே என்று தெளிவாகிறது. தமிழ்த் திருக்கோயில்களுக்குத் தமிழில் பெயரிடுவதைச் சான்றோர்கள் சிந்திப்பார்களேயானால் நம் தமிழர் பண்பாடும் தமிழ்ச் சமயமும் மேன்மைபெறும்.