3. முடி இரக்குதல்

4992

உயரிய வாழ்வியல் உண்மைகளைத் தங்கள் வாழ்க்கைச் சுற்றில் வாழ்வியல் கரணங்களாகச் செயல்படுத்தி வருகின்ற சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் மற்றொரு வாழ்வியல் கரணம் குழந்தைகளுக்கு முடி இரக்குதல் ஆகும். குழந்தைகளுக்கு முடி இரக்குதல் அல்லது மொட்டை அடித்தல் என்று பொதுவாக அழைக்கப்படும் இச்செயல் முறையினைப் பிறந்த குழந்தையின் உச்சந்தலை இறுகிய பின்பே செய்வார்கள். பொதுவாகக் குழந்தை பிறந்து ஐந்து திங்களுக்குப் பிறகோ அல்லது ஒரு அகவை நிறைவு அடைவதற்கு முன்போ இக்கரணத்தைச் செய்து விடுவார்கள்.

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கரணங்களையும் இறை அருளோடு தொடர்பு படுத்தி வாழும் மாண்பினை உடையவர்களாக இருக்கின்றனர். அவ்வகையில் குழந்தைக்கு முடி இரக்குதலையும் இறை வழிபாட்டோடு தொடர்பு படுத்தி, இக்கரணத்தைக் கடவுளுக்கு முடி இரக்குதல் என்று வழக்கப்படுத்தி வைத்துள்ளனர். குலதெய்வத்திற்கு முடி இரக்கிக் காணிக்கை ஆக்குவதாகவும் இன்றளவும் இக்கரணம் செய்யப்பட்டு வருகின்றது.

முடி இரக்கும் கரணத்தைச் செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோர், குழந்தையின் இருதரப்புத் தாத்தா பாட்டி, தாய் மாமன் அத்தை, இதர உறவினர்கள் என்று திருவிழாக் காலங்களிலோ பிற வேளைகளிலோ குழந்தையுடன் திருக்கோவிலுக்குச் செல்வர். திருக்கோவில்களில் உள்ள நீர் நிலைகளில் நீராடிய பிறகு திருக்கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு செய்து, இறைவனின் திருவருளை முதலில் பெறுவர். பின்பு உரியவரிடம் குழந்தையின் மயிரை மலிக்கச் செய்வார்கள். மயிர் மலிக்கப்பட்டக் குழந்தையின் தலையில் சந்தனம் பூசுவார்கள். மலித்த மயிரை ஓடு நீரில் விட்டு, இறைவனை வணங்கி, ஏழை எளியவருக்குக் குழந்தையின் பெயரால் உணவளிப்பார்கள். இயாலதவர் திருக்கோவிலின் நற்பணிகளுக்கு உண்டியலில் பணம் செலுத்துவார்கள்.

பொதுவாக வெளித்தோற்றத்திற்கு இம்முடி இரக்கும் கரணம் முதன்மை அற்றது போன்று தோன்றினாலும் இதில் அடங்கியுள்ள அறிவியல் அடிப்படையிலான உண்மை தமிழ்ச் சைவர்களின் அறிவுத் திறத்திற்குச் சான்றும் பெருமையும் பகர்வதாய் அமைந்துள்ளது. மருத்துவ அடிப்படையில், குழந்தைகளுக்குப் பிறந்த போது உள்ள தலை மயிர், செழிப்பு அற்றதாக இருக்கின்றது என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகின்றது. அதனை நீக்கிய பின் வளரும் தலை மயிரே செழிப்புடனும் நலமிக்கதாயும் நல்ல நிறத்தை உடையதாகவும் வளரும் என்று குறிப்பிடுகின்றனர். இதனை அறிந்தே சிறப்புடைய தமிழ்ச் சைவர், தங்கள் குழந்தைகளுக்கு முடி இரக்கும் கரணத்தைச் செய்து, இறைவனின் திருவருளால் அது மீண்டும் செழித்து வளர வேண்டும் என்று இறை வழிபாட்டினையும் அக்கரணத்தில் இணைத்து வைத்தனர்.

குழந்தையின் தலை மயிரை மலித்து விட்டால் தலைக்குச் சூடு கூடும் என்பதற்காகவும் தலை மயிரை மலிக்கும் போது ஏற்படக் கூடிய சிறு சிறு காயங்களின் எரிச்சலைப் போக்கவும் காயங்களை ஆற்றவும் குளிர்ச்சித் தன்மையும் மருத்துவ இயல்பும் உடைய சந்தனத்தைக் குழந்தையின் தலையில் தடவி விட்டார்கள். தூய்மையைக் கருதியும் பிறர் நலன் கருதியும் குழந்தையின் மலித்தத் தலை மயிரை ஓடும் நீரில் விட்டனர். அறியாதவர் இதனை இறைவனுக்குக் காணிக்கை என்றனர். இறைவனுக்கு நம் தலை மயிர் வேண்டுவது என்பது இல்லை. தவிர இறைவன் காணிக்கையையும் எதிர்பார்ப்பது இல்லை. இறைவன் நமக்குக் கொடுத்தத் தலை மயிரை அவனுக்கே காணிக்கை ஆக்குவது என்பது ஏற்புடையது அன்று.

இறைவனுக்கும் இறைவன் வாழும் உலக உயிர்களுக்கும் அன்பு பாராட்டுவதே உண்மையான் வழிபாடு என்பதனைத் தங்களின் வாழ்வியல் கொள்கையாகக் கொண்டவர் செந்தமிழ்ச் சைவர். இதன் அடிப்படையில் இக்கரணத்தின் போது இறைவனுக்கு நம் அன்பையும் நன்றியையும் காட்டுவதற்கு இறைவழிபாட்டினைச் செய்தும் பிறருக்கு உணவளித்தும் இறைவன் உறையும் இடமான திருக்கோவில் நற்பணிகளுக்கு நன்கொடை அளித்தும் மகிழ்வது வழக்கம்.

தமிழ்ச் சைவர்கள் தங்கள் வாழ்வியல் கரணங்களில், வள்ளல் பெருமான் சிதம்பர இராமலிங்க அடிகள் வலியுறுத்திய, ஆர் உயிர்களுக்கு அன்பு செய்யும் கோட்பாட்டினையும் மற்ற உயிர்கள் இன்புற்று இருப்பதனையே விரும்பும் உயரிய கொள்கையினையும் போற்றி உள்ளமையை உணர்ந்து உண்மைத் தமிழ்ச் சைவராய் வீறு  கொள்வோம், புகழ்பட வாழ்வோம்! இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!