24. வாழ்த்த வல்லார் மனத்துள் உறுசோதி

1339

கண்கள் இமைக்கின்ற கால அளவு கூட இறைவன் நம் உயிரை விட்டுப் பிரியாமல் இருக்கின்றான் என்பதனை, “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்,” என்று மணிவாசகர் குறிப்பிடுவார். உடலில் உயிர் உயிர்க்கும்தொறும் இறைவன் நம்மில் நிலாவி இருக்கின்றான் என்று திருநாவுக்கரசர் அடிகள் குறிப்பிடுவார். நம் உடலில் தங்கியிருக்கும் உயிரில் தோன்றாத் துணையாக நின்று இறைவன் அருளுகின்றான். உயிர் வேறு இறைவன் வேறு என்று பிரித்துக்காண இயலாதபடி இறைவன் உயிரில் கலப்பினால் ஒன்றாய் இருக்கின்றான். இறைவன் நம் மனம், வாக்கு, காயத்தினால் செய்யும் ஒவ்வொறு செயலுக்கும் துணையாய் நின்று நம்மைச் செலுத்துகின்றான். இறைவன் உயிரில் பிரிப்பின்றி கலந்திருந்தாலும் பொருள் தன்மையால் இறைவன் வேறு உயிர் வேறு என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.

உடலில் உயிர் நின்று இயங்கக்கூடிய நிலைக்களங்கள் (ஆதாரங்கள்) ஐந்து என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். அவை மூலாதாரம், கொப்பூழ், இருதயம், கண்டம், புருவநடு என்று மெய்கண்ட நூல்களும் திருமந்திரமும் குறிப்பிடுகின்றன. பெருமான் தோன்றாத் துணையாக ஒலி வடிவில் மூலாதாரத்தில் இருந்து நம்மை நாளும் காத்து செலுத்திக் கொண்டிருக்கின்றான் என்பது மெய்கண்ட நூல்களின் கூற்று. அத்தகைய இறைவனை உள்ளத்தில் ஒளி வடிவில் அல்லது அறிவு ஒளியாக காண்பதே வாழிபாட்டின் வெற்றியாகவும் வாழ்வின் வெற்றியாகவும் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.

இறைவனை உள்ளத்திலே ஒளி வடிவில் காணலாம் என்பதனை, “உள்ளத்தின் உள்ளே எழும் ஞாயிறே போற்றி,” என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். உள்ளத்தின் உள்ளே உறைகின்ற இறைவனை ஒளி வடிவில் காண்பது என்பது உயிரில் அறிவு ஒளியாகக் காண்பதே ஆகும். உயிரில் இறைவனை அறிவு ஒளியாகக் காணலாம் என்பதனை, “வாழ்த்த வல்லார் மனத்துள்உறு சோதியைத், தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை, ஏத்தியும் எம்பெருமான் என்றுஇறைஞ்சியும், ஆத்தம் செய்துஈசன் அருள் பெறலாமே,” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சிவபெருமான் தன்னை வாழ்த்த வல்ல நல்ல தவமுடையவரின் தூய உள்ளத்து மிக அறிவுப் பேரொளியாகத் தோன்றுவான். அத்தகைய ஒளியாகவும் தூய்மையாகவும் இன்பமாயும் விளங்குகின்ற சிவபெருமானைப் பலவாகப் பரவியும் எம் தலைவனே என்று வணங்கியும் அவனுக்கு முற்றும் உரிமையாய்த் தன்னை முழுதும் கொடுத்தவன் நண்பன் எனப்படுவான். அந்நிலை எய்தியவர் அவன் திருவருளைப் பெறுவது எளிது என்கிறார் திருமூலர். உயிரில் இறைவனை அறிவொளியாகக் காண்பதற்கு மிக எளிமையான வழி அவனை வாழ்த்தி வணங்குவதே என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைவனை வாழ்த்தி வணங்குதல் என்பது பாமாலைகள் கொண்டு வணங்குவதும் பூமாலைகள் கொண்டு வணங்குவதாகும். இறைவனை நாவாறப் பாடுவதும் திருவைந்து எழுத்து மந்திரமான, “நமசிவய” என்ற மந்திரத்தைக் கணித்தலும் பெருமானை உயிரில் அறிவொளியாகக் காண்பதற்கு எளிய வழி என்கின்றார் திருமூலர்.

தமிழ்ச் சைவர்களுக்கு அன்னைத் தமிழில் உள்ள திருமுறைகள், இறைவனைப் போற்றிப் பாடும் அரிய வாழ்த்துக்களாக உள்ளன. இறைவனால் தெரிவு செய்யப் பெற்றுச் சிவஅறிவு வழங்கப் பெற்ற திருமுறை ஆசிரியர்கள் இருபத்து ஏழுவரும் மற்ற அடியார்களும் அன்பின் பெருக்கால் அருளியவை இவை. இவ்வருட்பாமாலைகள் நம்மைப் போன்றோர் இறைவனை வழுத்திப் பாட இவர்கள் மூலம் இறைவன் நமக்கு அருளி இருக்கின்றான். இத்திருமுறைப் பாடல்கள் நம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா இன்பம் தரக்கூடியவை.

சிவஞானப் பாலுண்ட திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பும் திருநாவுக்கரசு என்று இறைவனால் சிறப்பு சேர்க்கப் பெற்ற திருநாவுக்கரசு அடிகளின் தேவாரமும் “என்னைச் சொற்றமிழால் பாடு,” என்று இறைவனால் உவந்து கேட்கப் பெற்ற சுந்தரரின் திருப்பாட்டும் இறைவனே கைப்பட எழுதிக் கையொப்பமும் இட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வைத்த திருவாசகமும் “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே,” என்று மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலரின் திருமந்திரமும் பெருமானே கைப்பட பாணபத்திரருக்கு எழுதிய திருமுகப்பாசுரமும் இறைவனே “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுத்து பாடச் செய்த தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணமும் கல் போன்ற நம் மனதைக் கனிய வைத்து, மன இருளை அகற்றி உள்ளத்திலே இறையொளியைப் பெருக்க வல்லவை. திருமுறைக¨ளை நாளும் ஓதி உயிர் உள்ளொளியைக் கண்டு, “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி, தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி” என்று உள்ளம் உருகிக் கண்ணீர் மல்கியவர் சிதம்பர இராமலிங்க அடிகள்.

காரைக்கால் அம்மையும் தமது அற்புதத் திருவந்தாதியில் திருமூலர் கூறும் கருத்தினை வலியுறுத்துகின்றார். “நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே, பூமாலை கொண்டு புனைந்து அன்பாய், நாமோர் அறிவினையே பற்றினால் எற்றே, தடுமே எறிவினையே என்னும் இருள்,” என்கின்றார். நாவால் அமைக்கப் பெறுகின்ற சொன்மாலைகளான திருமுறைப் பாடல்களையும் “நமசிவய” மந்திரத்தையும் புனைந்த பூமாலைகளையும் நம் ஆண்டவனான ஈசனின் பொன்னார் திருவடிகளுக்கு அன்பாய்ச் சாற்றுகின்ற அறிவுத்திறத்தை விடாது பற்றிக்கொண்டால் உள்ளொளியைக் காண்பதற்குத் தடையாய் உள்ள நீங்க வேண்டிய செயல் என்னும் அறியாமை இருள் நீங்கும் என்கின்றார்.

இறைவனை நாவாலும் பூவாலும் வழிபடுவது மிகச் சிறந்த வழிபாடு என்பதனைப், “ பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார், நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார், ஆக்கைக்கே இரைதேடி அலமந்து காக்கைகே இரையாகிக் கழிவரே,” என்கிறார் திருநாவுக்கரசு அடிகள். பெருமானைப் பூக்களினாலும் பாடல்களினாலும் வழிபடாதவர்களின் வாழ்வு, இறைவனை உள்ளத்திலே ஒளியாகக் காணாமல் வெறுமனே கழியும் என்கின்றார்.

“நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க” என்று இறைவனை இடைவிடாது நாளும் வாழ்த்தி வணங்குவோமானால் அப்பெருமானுக்கும் நமக்கும் இடையில் நட்பு உறவு ஏற்படும். அவ்வுறவினால் அன்பு ஏற்படும். அவ்வன்பினால் உள்ளத்தில் இறை உணர்வு ஏற்படும். அவ்விறை உணர்வினால் உள்ளத்தில் குற்றங்கள் நீங்கும். குற்றங்கள் நீங்கப் பெற்ற தூய உள்ளத்தில், தூயவனான பெருமான் இன்பம் தருகின்ற உள்ளொளியாகத் தோன்றுவான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். மனத்தில் உறுசோதியாகப் பெருமான் தோன்றுதற்கு வாழ்த்துதலை இடைவிடாது சோர்வின்றி செய்தல் வேண்டும் என்பதனைப், “பிதற்று ஒழியேன் பெரியான் அரியானைப், பிதற்று ஒழியேன் பிறவா உருவானை,” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதே உண்மையைத் திருநாவுக்கரசு அடிகள், “சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான், அவன்எனை ஆட்கொண்டு அளித்திடும்ஆகில் அவன்தனையான் பவம் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால், இவன்எனைப் பன்னாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்படுமே” என்று குறிப்பிடுகின்றார்.

சிவன் என்ற பெயரைத் தனக்கே உரிய பெயராகக் கொண்ட செம்மை நிற மேனியைக் கொண்ட பெருமான் அடியேனை அடிமையாகக் கொண்டு கருணை செய்திட வேண்டுமாயின், அவனை அடியேன், அவன் திருப்பெயர்களை உள்ளத்திலும் சொல்லிலும் பற்றிப் பல நாளும் அழைத்தால், இவன் என்னைப் பல நாளாக அழைத்தலைத் தவறாது செய்கின்றான் என்று பெருமான் திருவுள்ளம் பற்றி அடியேற்குக் காட்சி வழங்குவான் என்கின்றார். பெருமான் நம் உள்ளங்கள்தோறும் மனத்துள் உறு சோதியாய்க் காட்சி அளிக்க நாளும் அவன் திருவடிகளை வாழ்த்துவோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!