25. வஞ்சனை வழிபாடு திருவருளக் கூட்டுவிக்காது

873

முற்பிறவிகளில் செய்த செயல்களின் பலனே நமக்கு பிறவியையும் ஒவ்வொரு பிறவியிலும் நாம் நுகர வேண்டிய நுகர்ச்சிப் பொருள்களையும் தருகின்றன என்பதை, “பண்டு செய்த பல வினையின் பயன்” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். இவ்வாறு நாம் பிறவிக்கு மீண்டும் மீண்டும் வராமல் இருப்பதற்கான வழியினைத் திருநாவுக்கரசு அடிகள் மேலும் குறிப்பிடுகின்றார். நம் பிறவி அறுவதற்கும் அப்பிறவியில் வருகின்ற நுகர்ச்சிகளைப் பெறாமல் இருப்பதற்கும் அரிய எளிய வழியினைத் திருநாவுக்கரசு அடிகள் அதே பாடலில் குறிப்பிடுகின்றார். பிறவி அறுவதற்கும் பிறந்து வாழும் போது ஏற்படுகின்ற துன்பங்கள் நீங்குவதற்கும், “வண்டுலா மலர் செஞ்சடை ஏகம்பன், தொண்டனாய்த் திரியாய் துயர் தீர்கவே” என்று குறிப்பிடுகின்றார். வண்டுகள் மொய்க்கின்ற திருக்கொன்றை மலரை அணிந்துள்ள, சிவந்த சடையினை உடைய திருக்கச்சி ஏகம்பத்தில் இருக்கின்ற பெருமானின் அடியவராகி விட்டால் பிறவித் துயரும் வாழ்க்கைத் துயரும் நீங்கும் என்கின்றார்.

பெருமானின் தொண்டராவதற்குச் சிலர் வேத வேள்விகள் போன்ற கிரியைகளைச் செய்கின்றனர். யோகம் எனும் செறிவு நெறியில் நிற்பவர்கள் சிவச் செறிவினை இயற்றுகின்றனர். கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், அதில் அழுந்தி இருத்தல் என்ற அறிவு நெறியாளர்கள் அறிவு நெறியில் ஈடுபடுகின்றனர். இவற்றையெல்லாம் விட எளிய, எல்லோராலும் செயற்படுத்தக்கூடிய முறையினைச் சீர்மிகு செந்தமிழர்களின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம், சரியை அல்லது சீலம் என்கிறது. அதிலும் இறைவனைப் பாடி வழிபடுதலைக் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு பிறவியிலும் பெருமானைப் போற்றிப் பாடுவதற்கு முற்பிறவிகளில் நல்வினைகள் செய்திருக்க வேண்டும் என்பதனை, “என்ன புண்ணியன் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து, முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள், மன்னு காவிரி சூழ்திருவலஞ்சுழி வாணனை வாயாரப், பண்ணி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே” என்று திருஞானசம்பந்தர் அழகுற எடுத்தியம்புவார்.

முழுமையான மணிகளும், முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரி ஆறு சூழ்ந்த திரு வலஞ்சுழியில் வீற்றிருந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கின்ற இறைவனைப் போற்றியும் அன்பு செய்தும் பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத்தலால், கடல் சூழ்ந்த இவ்வுலகில் செய்த நல்வினைப் பயன்களினால் தான் நெஞ்சே! என்று தன் நெஞ்சினைப் பாராட்டுகின்றார் திருஞானசம்பந்தர். ஒரு பிறவியில் பெருமானை வாழ்த்திப் பாடிப் பெறும் நற்பயனானது அடுத்த அடுத்த பிறவிகளுக்கும் தொடரும் என்பது சித்தாந்த சைவத்தின் முடிபாகும். இதனைத்தான், “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்பார் ஐயன் திருவள்ளுவர்.

பெருமானைப் பாடுவதன் வழி அடைய முடியும் என்கின்ற உண்மையை, நெறியைப் “பதிகப் பெருவழி” என்று தெய்வச் சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். “நமக்கு அன்பிற்ச் சிறந்த அற்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மீது நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று சுந்தரமூர்த்தி அடிகளை இறைவன் பணித்ததாகத் தெய்வச் சேக்கிழார், பெரிய புராணத்தின் தடுத்தாட்கொண்ட புராணத்தில் குறிப்பிடுகின்றார். இதனால் பெருமான் விரும்பிக் கேட்பது தமிழ்ப்பாடல்கள் என்பதும் இம்மண்ணுலகத்தில் உள்ளவர்கள் பெருமானைத் தமிழில் பாடி வழிபட வேண்டும் என்பதற்காகவும் சுந்தரர் போன்ற அடியார் பெருமக்க்ளைத் தடுத்தாட் கொண்டு திருமுறைகளை அவர்கள் மூலம் நமக்கு அருளியிருக்கின்றான் என்பதும் புலனாகின்றது.

வணங்குதற்கு அருமையான அப்பெருமானை அன்னைத் தமிழில் வாழ்த்தி வணங்கும்போது அது வஞ்சக வழிபாடாக இல்லாமல் இருக்குமானால் அப்பெருமான் விரைந்து வெளிப்பட்டு அருளுவான் என்கின்றார் திருமூலர். “குறைந்துஅடைந்து ஈசன் குரைகழல் நாடும், நிறைந்துஅடை செம்பொனின் நேரொளி ஒக்கும், மறந்துஅடஞ் செய்யாது வாழ்த்தவல்லார்க்குப், புறம்சடம் செய்யான் புகுந்துநின்றானே,” என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமானிடத்து உண்மையான அன்போடு, அவன் திருவடியையே வேண்டி, பிற ஒன்றினை மனத்தில் ஒளித்து வைத்து, அதனைப் பெறவேண்டி, உண்மையான அன்பு உடையவரைப் போன்று நடிக்காமல் வழிபட்டால், சற்றும் குறைவில்லாத செம்பொனின் ஒளியை ஒத்த சிவபெருமான், அவ்வுண்மை அன்பரின் உடலினைப் புறந்தள்ளாது அவ்வன்பரின் உடலில் கோயில் கொள்வான் என்கின்றார்.

வழிபாட்டினை வெறுமனே அன்றாடக் கடமையைப் போன்று செய்தல் கூடாது. மாறாகப் பெருமான் நமக்குச் செய்திருக்கின்ற நன்மைக்காக அவன் கருணையை எண்ணுதலினால் மேலிடும் அன்பால் நன்றிப் பெருக்கோடு அவனைத் தொழவேண்டும் என்கின்றார் திருமூலர். இவ்வுலகில் நம்மைப்போன்ற உயிர்கள் வாழ்வதற்குப் பெருமான் நமக்கு அளித்திருக்கின்றவற்றிற்கு நாம் கைமாறு செய்ய இயலாது என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டும் என்கின்றார் திருமூலர். பெருமான் படைத்துக் கொடுத்தவற்றையே மீண்டும் அவனுக்குப் படைத்துப் பெருமிதம் கொள்ளுதல் அறியாமை என்பதனை உணரல் வேண்டும் என்கின்றார். பெருமான் படைத்ததைச் சிறுமை உடைய நாம் நம் அறியாமையினால், பெருமையுடன் அவனுக்கே அளிப்பினும் தம் பெருமையினால் அதனைப் பெருமான் பொறுத்துக்கொள்கின்றான். இதனை உணவு ஆக்கிய தாய் ஒருத்தித் தான் ஆக்கிய அவ்வுணவைத் தன் சேய்க்கு ஊட்டும்போது, அச்சேய் தனது பிஞ்சுக்கைகளால் அவள் ஆக்கிய அவ்வுணவை அவளுக்கே அள்ளி ஊட்டும்போது அச்சேயின் மனநிறைவிற்காக நன்றாயிருக்கின்றது என்று சொல்லி விரும்பி உண்பது போன்று நடிப்பதனைப் போல் பெருமானும் நாம் படைக்கின்ற பொருட்களை ஏற்று அமைதியாக இருக்கின்றான்.

இதை உணராத நாமோ, பெருமானிடத்திலே பெரும் வணிகம் பேசுகின்றாம் என்கின்றார். சேய் நல்ல வகையில் பிறந்தால் உனக்கு முடியைக் காணிக்கை ஆக்குகின்றேன் என்றும் திருமணம் கூடிவந்தால் நூற்று எட்டுத் தேங்காய் உடைக்கின்றேன் என்றும் வேலை கிடைத்தால் பாற்குடம் ஏந்துகிறேன் என்றும் எதையாவது ஒன்றினை எதிர்பார்த்துப் பெருமானிடத்தில் வாணிகம் செய்வதனைப் போன்று வஞ்சனை வழிபாட்டினைச் செய்வது தவறு என்கின்றார்.

 உயிர்கள் வாழ்வதற்குரிய உலகங்கள், உடல்கள்,, அகப்புறக் கருவிகள், அவ்வுலகங்களில் உள்ள நுகர்ச்சிப்பொருள்கள் என்று நாம் கேளாமலேயே பெருமான் அளித்திருப்பதற்கு எவ்வாறு, எதைச் செய்து அக்கடனை நிறைவு செய்ய இயலும் என்று கேள்வி எழுப்புகின்றார் திருமூலர். தவிர, இன்னும் சிலர் வழிபாடு செய்வதனால் மக்களிடத்தில் கிட்டும் புகழ்ச்சிகளுக்காக வஞ்சனை வழிபாடுகளைச் செய்வதும் வழிபாட்டில் திருமுறைகளை நன்றாக ஓதுதலினால் கிட்டும் புகழ்ச்சியினால் இறைவனைப் பாடுதலும், நன்றாகப் பூசனைச் செய்கின்றீர்கள் என்ற புகழ்ச்சிக்காகப் பூசனை இயற்றுவதும் நிறைய பாடல்களை மனனமாக ஒப்புவிக்கின்ற திறமையைப் பிறர் புகழ்வதை எண்ணி வழிபாடு செய்வதும் பிறர் பார்ப்பதற்காக நீண்ட நேரம் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வது போன்று நடிப்பதும் இறைவன் தன்மீது வந்து நின்று அருள் வழங்குவது போன்று ஏமாற்றுவதும் தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக்கொள்வதும் வஞ்சக வழிபாடுதான். இத்தகையவர்களைக் கண்டு பெருமான் நாணி விலகிக்கொள்வான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். வாழ்த்த வாயளித்த பெருமானை வாயாரப் பாடி வாழ்வாங்கு வாழ்வோமாக!