3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்

2153

மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழாகிய திருமந்திரம் கடவுள் ஒன்று என்று குறிப்பிடுகின்றது. உயிர்களுக்குக் கடவுள் அருள் புரிவதற்காக பொது நிலையில் இறங்கி வருகின்றபோது தன் திருவருளை வெளிப்படுத்தி இரண்டாக நிற்கின்றது என்கிறது திருமந்திரம். கடவுளின் திருவருளை அறக்கருணை, மறக்கருணை என்று இரண்டாகப் பிரிக்கும் சித்தாந்த சைவம். அறக்கருணை என்பது கடவுள் அன்பின் வழி நின்று அருள் புரிதல் எனப்படும். மறக்கருணை என்பது சினவடிவம் கொண்டு தண்டித்தல் வழி அருள் புரிதல் எனப்படும்.

ஆடல் அரசு, அம்மை அப்பர், முருகனுடனாய அம்மை அப்பர் கோலம், ஆல் அமர் செல்வர் கோலம் போன்றவை அறக்கருணை வடிவங்களாம். மண்டையோட்டு மாலையுடன் தோன்றும் கங்காளர் வடிவம், காலனைக் காய்ந்த காலகாலர், சட்டை நாதர், பைரவர் போன்ற வடிவங்கள் மறக்கருணை வடிவங்களாம். அறக்கருணை வடிவங்களும் மறக்கருணை வடிவங்களும் உயிர்களின் செவ்விக்கு(பக்குவத்திற்கு) ஏற்ப அவற்றைக் கடைத்தேற்றுவதற்கே இறைவன் அவ்வாறு கொள்கிறான் என்று தமிழர் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடும்.

அறக்கருணையாகவும் மறக்கருணையாகவும் நின்று அருள் புரியும் இறைவனின் திருவருள் ஆற்றலை மூன்றாகத் தெளிவுபடுத்துகின்றார் திருமூலர். “ஒன்று அவன் தானே இரண்டுஅவன் இன்னருள், நின்றனன் மூன்றினுள் …….” என்பார். பெருமானின் திருவருளை, அன்பு, அறிவு, ஆற்றல் என்று மூன்றாகவும் குறிப்பிடலாம் என்பார். இதனையே இச்சா சத்தி, கிரியா சத்தி, ஞானா சத்தி என்று வடமொழியில் குறிப்பிடுவர்.

பெருமானுடைய திருவருள் அன்பே வடிவானது. எனவேதான், “அன்பே சிவம்” என்ற வழக்கும் “அன்பும் சிவமும்இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார்” என்ற திருமூலரின் வாக்கும் காணக்கிடக்கின்றது. “சிவன் அழிக்கின்ற கடவுள், சிவனை வழிபட்டால் இறப்பு நேரிடும், துன்பம் தொடர்ந்து வரும், வீட்டில் உள்ள செல்வம் வற்றி, ஓடு ஏந்துகின்ற ஆண்டியாகி விடுவார்கள்” என்று திருமூலரின் கருத்திற்கும் சித்தாந்த சைவத்தின் கருத்திற்கும் முரணான கருத்தினை யாரோ அள்ளிவிட, இன்றளவும் அது தமிழர் தம் சிந்தையில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானாகிய சிவனை வழிபடாது, சீர்மிகு செந்தமிழர் மறந்து வாழ்ந்திட அது வழிவகுத்து விட்டது. தென்னாடுடைய சிவனைத் தென்னாட்டினராகிய தமிழரே கண்டு அஞ்சும்படியான அவலம் ஏற்பட்டிருக்கின்றது.

அன்பே வடிவான அப்பெருமானின் திருவருளை, “அன்பினில் விளைந்த ஆர் அமுதே,” என்பார் மணிவாசகப் பெருமான். ‘கரையிலா கருணை மாகடலே,” என்பார் திருவிசைப்பா அருளிய திருமாளிகைத் தேவர். “அன்பனை அடியார் இடர் நீக்கியை” என்பார் திருஞானசம்பந்தர். “அன்புடையானை அரனைக் கூடல் ஆலவாய் மேவிய….”என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுவார். “தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்” எனவும் “தனிப்பெருங்கருணை” எனவும் வள்ளல் பிரானும் குறிப்பிடுவார்.

பெருமானின் திருவருளே நமக்கு அறிவினைக் கூட்டுவிக்கின்ற பேரறிவாக விளங்குகின்றது என்று திருமூலர்குறிப்பிடுகின்றார். இதனையே, “வாலறிவன்’ என்று வள்ளுவப்பேராசானும் குறிப்பிடுகின்றார். பெருமானின் திருவருள் அறிவு வடிவமாக வெளிப்பட்டதே தட்சிணாமூர்த்தி என்று வடமொழியில் குறிக்கப்படும் தென்முகக் கடவுள் வடிவம். ஆல் அமர் செல்வர் என்றும் குறிக்கப்படும் இவ்வடிவில் நின்றே இறைவன் உயிர்கள் தன்னை அடைவதற்கான வழிகளைச் சின்முத்திரை காட்டி உணர்த்தினான் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. திருக்கயிலையில் தென்முகக் கடவுளிடம் கற்றே திருமூலர் நமக்குச் சிவ ஆகமங்களைத் தமிழில் நல்கினார். இறைவனின் பேரறிவே, திருஞானசம்பந்தருக்குச் சிவ அறிவுப்பாலாகவும் திருநாவுக்கரசருக்குச் சூலையாகவும் சுந்தரருக்கு அடிமை ஓலையாகவும் மணிவாசகருக்குச் சிவ அறிவுப்போத நூலாகவும் வந்து அருள் புரிந்தது.

இறைவனின் திருவருளே நமக்கு எல்லாவற்றையும் இயக்குகின்ற பேர் ஆற்றலாக நின்று உதவுகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். கோடான கோடி அண்டங்களையும் இவ்வுலகினையும் உலக உயிர்களையும் பிற உலகங்களில் வாழும் உயிர் வகைகளையும் இறைவனின் திருவருள் பேர் ஆற்றலே இயக்குகின்றது என்கிறார் திருமூலர். இதனையே, “அனைத்து உலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய்” என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுவார்.

அன்பு, அறிவு, ஆற்றல் என முத்திறமாய் நின்று அருள் புரியும் இறைவனின் திருவருளை, அச்சம் இன்றி, அன்பால் நன்றிப் பெருக்கோடு வழிபடுவோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!