70. பரசிவமே அருளலைச் செய்கின்றது

1073

உயிர்களின் மீது கொண்ட பரிவின் காரணமாகப் பரசிவமே தானேயும் பிற உயிர் வழியும் படைத்தல், காத்தல் துடைத்தல், மறைத்தல் என்ற தொழில்களைச் செய்தலைப் பரசிவத்தின்  திருவருள் என்று கூறினும் உயிர்களுக்கு வீடு பேற்றினை அளிப்பதையே அருளல் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் சிறப்பாகக் குறிப்பிடுகின்றது. உயிர்களுக்கு நிலைத்த பேரின்பம் வழங்குவதற்காகவே பரசிவம், உடல், கலம், உலகு, உணா அல்லது நுகர்ச்சிப் பொருள் (தனு, கரண, புவன, போகம்) என்பனவற்றைப் படத்துக் காத்துப் பின் அவற்றைத் துடைத்துத் தன்னை மறைத்து உயிர்களுக்கு அருளல் செய்யினும் முடிந்த நிலையான பேரின்பப் பெருவாழ்வினை உயிர்களுக்கு அளிப்பதனையே பரசிவத்தின் அருளல் தொழில் என்று சிறப்பாக குறிப்பிடப்படுகின்றது.

பரசிவமே உயிர்களுக்காகப் பிறவிகள் தோறும் பல்வேறு உடம்புகளையும் கருவிக் கரணங்களையும் பல்வேறு உலகங்களையும் உலகப் பொருள்களையும் பல்வேறு நுகர்ச்சிப் பொருள்களையும் அந்தந்த உயிர் வகைக்கும் அந்தந்த பிறவிக்கும் ஏற்றவாறு வகுத்துப் படைத்து, காத்து, துடைத்து, வருகின்றான் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுவதனை முன்பு கண்டோம். இவ்வாறு செய்வதனால் உயிர்கள் பல பிறவிகளில் நீண்ட காலம் உழன்று பல்வேறு உலக வாழ்வில் செயல்கள் செய்து, அச்செயல்களின் பயனாய் அறிவு வளர்ச்சி பெறுகின்றன என்றும் மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

இப்படி உயிரின் அறிவு வளரவே உயிர்களின் அறியாமை குறைந்து இறைவனுடைய பெருமைனுயிர்களுக்குப் புலப்படத் துவங்குகிறது. இதனால் எப்பொழுதும் “தான்”, “தனது” என்று செருக்கித் திரியும் உயிர்களின் அறிவு மயக்கம் தெளிவு அடைய ஆரம்பிக்கின்றது. இறைவன் தமது பெரும் பரிவினால் நமக்குச் செய்யும் நன்மைகளை எண்ணி, நன்றிப் பெருக்கினால், உண்மை அன்பு மேலிட, போலி வழிபாடு இயற்றாமல், உண்மை வழிபாட்டினை வீட்டிலும் திருக்கோயில்களிலும் இயற்றுகின்றது. கோவிலில் காணப்படும் திருமேனிகளையும், திருக்கோயில்களையும், திருவுடைய நீர் நிலைகளையும் வணங்கி மகிழ்கின்றது. பெருமான் செய்கின்ற நன்றிக்குக் கைமாறு செய்ய இயலவில்லையே என்று நாளும் எண்ணி வருந்துகின்றது. தன்னிடத்தில் உள்ள எதைக்கொடுத்தாலும் அதற்குத் தகும் என்று எண்ணுகின்றது. தம் உடைமைகளையும் உயிரையும் கூட அளிப்பதற்குத் துணிகின்றது. இவையே நாயன்மார்களின் வன்தொண்டுகளாகவும் மென்தொண்டுகளாகவும் கூறப்படுகின்றது. பெருமான் செய்கின்ற பெரும் பரிவினுக்குக் கைமாறாக அவன் உறையும் திருக்கோயிலில் தொண்டு புரிந்தனர். பெருமான் வாழும் பிற உயிர்களிடத்தில் அன்பு பாராட்டியும் அவற்றிற்கு இயன்ற தொண்டுகளையும் செய்தனர்.

இப்படி அன்பே வடிவாய் வாழும் காலத்தில் உயிர்களுக்கு உலகச் செயல்களில் சமநோக்கு ஏற்படுகின்றது. இதனால் உலகப் பொருள்கள் மீதும் உலகச் செயல்கள் மீதும் உயிர்களுக்கு விருப்பு வெறுப்பு அற்ற நிலை உண்டாகின்றது. இந்த விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் தான் மலபரிபாகம் எனும் நிலை ஏற்படுவதாக சைவம் குறிப்பிடுகின்றது.

மலபரிபாகம் என்பது உயிரை இருக்கமாகப் பற்றியுள்ள அறியாமை நீங்குவதற்குத் தளர்வுறுதல் என்று பொருள். இன்னிலையை அடைகின்ற உயிர்களுக்கு இறைவனின் அருள் வீழ்ச்சி தலைப்படுகின்றது என்று சைவம் குறிப்பிடுகின்றது. அதாவது இதுவரை இறைவனின் மறைத்தல் தொழிலில் ஆழ்ந்திருந்த உயிர்களுக்கு இறைவனின் அருளல் தொழில் வெளிப்படுகின்றது. மறைத்தலில் தன்னைக் காட்டாது உலகையே பெரிது எனக் காட்டி நின்ற பரசிவம், தன்னை வெளிப்படுத்திக் காட்டி உயிரை மேல்நிலைக்குச் செலுத்துவதற்கு அருள்புரியும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. இந்நிலையை அருள் வீழ்ச்சி என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. உயிருக்கு அருள்வவீழ்ச்சி ஏற்படுகின்ற போது பரசிவத்தின் திருவருளே சிவகுருவாக எழுந்தருளி வந்து உயிருக்கு உண்மையைப் போதித்து அறியாமையை நீக்குகிறது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

     மாணிக்கத் தமிழ் மந்திரங்களாய்த் திகழும் திருவாசகம் அருளிய மணிவாசகருக்குப் பரசிவம் சிவகுருவாய்க் குருந்த மரத்தின் அடியில் தோற்றமளித்து சிவஞானபோதத்தின் பொருளினை உணர்த்தி   அவரை ஆளாய்க்கொண்டது இவ்வடிவிலேயாம். இவ்வாறு வருகின்ற சிவகுரு உயிரைத் தமது அருள் பார்வையால் நோக்கி, உயிராகப் பட்டது உடல், கருவி, கரணங்களில் இருந்து வேறுபட்டது; உயிர் அறிவுடைப் பொருள், உயிர் அடைய வேண்டிய பேரின்பப் பெருவாழ்வு என்ன என்பதனை அதற்கு உணர்த்தித் தன்னை அடையும் உண்மையான நெறியில் உயிரை நிலை நிறுத்துகின்றார் என்று சைவம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு இறைவனால் உணர்த்தப்பெற்ற உயிர் அறியாமை நீங்கப் பெற்று இறைவனையே எண்ணி ஏங்கி நிற்க, உயிர் இவ்வுடலை விட்டு நீங்கி, சிவமாம் தன்மை பெற்று, இறைவனின் திருவருளையே கருவி கரணங்களாகக் கொண்டு, இறைவனின் திருவடியில் பேரின்பப் பெருவாழ்வு பெற்று இன்புற்று இருத்தலையே வீடுபேறு என்கின்றது சித்தாந்த சைவம். இத்தகைய பெறுதற்கரிய திருவடிப் பேற்றினைப் பரசிவம் மட்டுமே அளிக்க இயலும் என்பதனை, “எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு, வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம், ஒட்டி உயிர் நிலை என்னும் இக்காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

பரசிவமே காற்று, நீர், தீ, நிலம், வானம் எனும் ஐம்பெரும் பூதங்களும் ஒருங்க இயைத்துப் பின்னிய “உயிருக்கு இடம்” என்று சொல்லப்படுகின்ற இந்த உடம்பாகிய பைக்குள் உயிர்களை முன்பு அடைத்துக் கட்டிவைத்துப் பின்பு அவிழ்த்து வெளிவிடுகின்றது என்கின்றார் திருமூலர். எனவே மறைத்தல் தொழிலில் பந்தத்தை உயிர்களுக்குக் கூட்டுவிக்கும் பரசிவமே அருளலில் வீடுபேற்றினை அளிக்கும்போது அப்பந்தத்தினை அறுக்க அருள்புரிகின்றது என்கின்றார் திருமூலர். உடம்பாகிய பைக்குள் உயிர்களை முன்பு அடைத்துக் கட்டி வைத்துப் பின்பு அக்கட்டினை அவிழ்த்துத் திருவடியில் இருத்தி உயிர்களுக்குப் பேரின்பம் அளிப்பதைப் பரசிவமே செய்கின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைவன் ஆற்றுகின்ற பிற தொழில்களைப் பிறர்பால் வைத்துச் செய்யினும் அருளல் தொழிலைப் பரசிவத்தை அன்றி வேறு எவரும் செய்வார் இல்லை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

உயிர் அறிவினுள் நிற்கின்ற அறிவாயும் உயிர் அறிவின்வழி உடலை இயக்குகின்றமையால் உடலாயும் இதர அனைத்து தேவர்களும் சிற்சத்திகளும் அடைகின்ற இன்பப் பொருளாயும் மண்ணுலகத்தில் உண்மையான அடியார்களால் போற்றப்படுகின்ற அருட்கோலத்தை உடையவனாயும் உள்ள பரசிவமே, கண்ணில் உள்ள கருமணி, உடல் செல்லுதற்குறிய நல்வழியைக் காட்டுதல் போல, உயிர் செல்லுதற்குரிய ஞானவழியினைக் காட்டுகின்ற பேர் ஆசிரியனாய் வந்து உயிர்களுக்குத் தன் திருவடி இன்பத்தினை நல்கிப் பேர் அருள் புரிவான் என்பதனை, “உண்ணின்ற சோதி உற நின்ற ஓருடல், விண்ணின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள், மண்ணின்ற வானோர் புகழ் திருமேனியன், கண்ணின்ற மாமணி மாபோதமாமே” என்று குறிப்பிடுகின்றார்.

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்கள் இன்று பல்வேறு வழிபாட்டு முறைகளையும் பல்வேறு தெய்வங்களையும் வாழ்வில் பின்பற்றி வழிபட்டு வந்தாலும் ஒருவருக்கு இறப்பு நிகழுமாயின் சிவகதி அடைந்தார் அல்லது சிவபதம் அடைந்தார் அல்லது சிவனடி சேர்ந்தார் என்று சொல்லி இன்றளவும் சிவன் திருக்கோயில்களைத் தேடிச் சென்று விளக்கிடுவதும் இறந்தவரின் பெயரில் வழிபாடு செய்வதும் இறந்தவரின் உயிர் அமைதிக்கு விளக்கு ஏற்றுவதும் இறந்தநாள் ஆண்டு நிறைவு வழிபாடுகளைச் செய்வதும் உயிர்களுக்குத் தன் திருவடியைப் புகலிடமாகக் கொடுத்து அருள்செய்து கொண்டிருப்பது பரசிவமே என்பதனை நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்து இருந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றாய்த் திகழ்கின்றது. உண்மைச் சைவத்தை உணர்ந்து உண்மைச் சைவர்களாக வாழ்வோம், திரும்முலரின் திருமந்திரத்தின் வழி நிற்போம், இன்பமே எந்நாளும் துன்பமில்லை!