27. பனை மரத்துப் பருந்து

1143

உயிர் தங்கி வாழும் உடம்பு நிலை இல்லாதது என்பதனால், “காயமே இது பொய்யடா, காற்றடைத்த வெறும் பையடா,” என்ற பொதுப்பாடல் ஒன்று உண்டு. உடல் நிலை இல்லாதது, அது அழிந்துபடும் என்றாலும் மெய்ப்பொருளான பரம்பொருள், உடலில் உள்ள உயிரில் செறிந்து இருப்பதனால் உடலை மெய் என்றும் குறிப்பிட்டனர். “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர், சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” என்பார் ஐயன் திருவள்ளுவர். பிள்ளைகளின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பம் கொடுப்பதாகும். அப்பிள்ளைகளின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் கொடுப்பதாகும் என்று மக்கட்பேறு எனும் அதிகாரத்தில், உடலை, “மெய்” என்று ஐயன் வள்ளுவர் அழகாகக் குறிப்பிடுவார். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல, உடல் நலமாக இருந்தால்தான் இறைவனை எளிதில் அடைய முடியும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. உடலை வறுத்துவதும் உடலைப் பேணிக் காக்காமல் புறக்கணிப்பதுவும் தவத்தினைப் பெருக்கும் என்ற கொள்கை சித்தாந்த சைவக் கொள்கை அல்ல!

உடம்பை நன்றாகப் பேணிக் காக்க வேண்டும். உடம்பை பேணிக் காக்காவிட்டால் இறைவனை ஒன்றிய மனத்தோடு எண்ணுவதற்கு முடியாமல் பல்வேறு இடையூறுகளையும் சிக்கல்களையும் உயிருக்கு உடல் ஏற்படுத்தும். உண்ணா நோன்பு (விரதம்) இருப்பவர்கள்கூட அதிக உணவு உட்கொண்டால் இறைவனை தொடர்ந்து சிந்திக்க முடியாமல் தூக்கமும் சோம்பலும் ஏற்படும் என்பதற்காகத்தான் ஒருவேளை உணவு மட்டுமோ, அல்லது பால், பழம் போன்ற எளிய, குறைந்த அளவு உணவுகளை மட்டுமோ உண்ணும் வழக்கினை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். உண்ணா நோன்பு அளவுக்கு மீறி பசிக்கொடுமையையோ அல்லது குடற்புண் எனும் நோயையோ ஏற்படுத்துமானால் முற்றாக இறைவனை எண்ண முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். எனவே உண்ணா நோன்பு என்பது இறைவனை தொடர்ந்து எண்ணுவதற்குத் துணையாக இருப்பதற்கே அன்றி உடலை வறுத்துவதற்கு அல்ல என்பதனைத் தெளிதல் வேண்டும்.

பலரும் உடலைத் தவறாக எண்ணுவதைத் திருமுலர் அழகாகக் குறிப்பிடுகின்றார். “ உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன், உடம்பினுக்கு உள்ளே உறுப்பொருள் கண்டேன், உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று, உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே,” என்று குறிப்பிடுவார். பால் வைக்கின்ற கிண்ணத்தை அதனுள் உள்ள பாலைக் கருதி பாதுகாப்பதைப் போன்று உடம்பினுள் சிவபெருமான் உயிருக்கு உயிராய் கோயில் கொண்டு அருளியிருக்கின்றான் எனும் உண்மையை உணர்ந்து அவன் கொடுத்த உடம்பினைப் பேணிக் காத்து வருகின்றேன். இவ்வுண்மையை உணராதபோது உடம்பினை இழிவானது என்று தவறாக எண்ணி இருந்தேன் என்கின்றார்.

   பெருமான் நமக்குக் கொடுத்திருக்கின்ற இந்த உடம்பு, உடம்பினுக்குள்ளே உயிரில் கலந்திருக்கின்ற அந்தப் பெருமானின் திருவடியை உணர்ந்து கொள்வதற்கு ஆகும். அவ்வுடம்பை உண்மை, வாய்மை, மெய்மை எனும் மெய்யுணர்வு வழியில் பழக்கிப் பெருமானின் திருவடி உணர்வைப் பெறவேண்டும். உடம்பை வீணே அழிய விட்டால் உயிர் பயன் அடையாது. அது பால் கிண்னத்தைப் பாலைப் பருகுவதன் முன் அழிய விடுவதை ஒக்கும் என்கின்றார். அவ்வுடம்பினை வளர்க்கும் வழி வகைகளை அறிந்து பின் உயிர் வளர்வதற்குத் திருவைந்து எழுத்தான, “நமசிவய” என்ற செழுந்தமிழ் மந்திரத்தை இடைவிடாது கணித்துக்கொண்டிருத்தல் வேண்டும். அப்படிச் செய்தால் உயிர் வளர்ச்சிப் பெற்று இறை உணர்வைப் பெறும் என்பதனை, “உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞானம் தேரவும்மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே,” என்று திருமுலர் குறிப்பிடுவார்.

     உடம்பில் உயரிய உறுபொருளான பெருமான் இருக்கின்றான் என்பதனைப் பலரும் உணராது உடம்பைப் பாழ்படுத்தும் பல்வேறு இழிவான செயல்களைச் செய்கின்றனர் என்கின்றார் திருமூலர். பெருமான் வாழும் கோயிலான இவ்வுடம்பில் நமக்கு அமைந்துள்ள வாய் பெருமானின் கோபுர வாசல் என்கின்றார். அவ்வாய் வழியாக உடலுக்கு அழிவைத் தரக்கூடிய உணவு வகைகளை உண்பது தவமற்ற செயல் என்கின்றார். மது வகைகள், போதைப்பொருள், நோயைத் தருவிக்கக்கூடிய உணவு வகைகள், வெண்சுருட்டு போன்றவை அறிவை மயக்குவதோடு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி உடலைச் சீரழித்து நம் தவத்தினை, நல்லுணர்வினை, மெய்யுணர்வினைத் தவிர்க்கும் என்கிறார் திருமூலர்.

      பெருமான் வாழும் திருக்கோயிலான நம் உடம்பில் கோபுர வாசலாக அமைந்துள்ள வாயின் வழியாக தீய கொச்சைச் சொற்களைப் பேசுவதும் பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் பொய், கோள், வஞ்சகம், பொறாமையான சொற்களைப் பேசுவதும் அதனால் பிறரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பழிக்கும் ஆளாதல் நம் தவத்தைக் கெடுக்கும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பேர் அருளாளனான பெருமான், உயிர் மேம்படுவதற்காக உடலைத் தந்திருப்பதோடு அவ்வுடலுக்குத் துணையாக உள்ளே மனம் எனும் கருவியையும் கொடுத்து இருக்கின்றார். இம்மனமே உயிரின் தூய்மையைப் பேணுவது என்று திருமுலர் குறிப்பிடுகின்றார். இம்மனம் மாசுபடுமானால் உயிர் இறைவனை உணர இயலாது என்கின்றார் திருமூலர். மனதில் மாசு ஏற்படாது காத்தலுக்கு உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருத்தல் இன்றியமையாதது ஆகின்றது. உயர்வானவற்றை உள்ளுகின்றவர்கள் அல்லது உயர்வானவற்றை எண்ணுகின்றவர்கள் உயர்ந்த பொருளாய் உள்ள பெருமானின் திருவடி உணர்வை உணரப்பெறுவார்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். எப்பொழுதும் கீழான சிந்தனைகளையே கொண்டு வாழ்கின்றவர்கள் தம் உடலுக்கும் உயிருக்கும் கேட்டை விளைவித்துக் கொள்கின்றவர்கள்; தவம் கூடப் பெறாதவர்கள் என்பதனை உணர்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர். தீய எண்ண அலைகளை உடையவர்கள் அத்தீய எண்ண அலைகளினால் ஆட்கொள்ளப்பெற்று அலைக்கழிக்கப்படுவார்கள். அல்லது அத்தீய எண்ணங்களின் இயல்பாய் மாறிப்போவார்கள். இதனால் இறை உணர்வு மேலோங்குதல் கடினம் என்கின்றார் திருமூலர்.

      “மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர், நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர், பனையுள் இருந்த பருந்து அதுபோல, நினையாதவர்க்கு இல்லை நின் இன்பந்தானே” என்பார் திருமூலர். சிவபெருமான் உயிருக்கு உயிராய் உடலில் திருக்கோயில் கொண்டு அருளி இருக்கும் உண்மையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு செம்மையான நெறியில் நின்று உடலை வாக்காலும், மனத்தாலும், செய்கைகளினாலும் பாதுகாக்கின்றவர் பெரும் தவத்தை உடையவர். அவர்களே சிவனை எண்ணுதற்கு உரிய கருவியான நெஞ்சத்தின் உண்மையான பயனை அறிந்தவர். சிவபெருமானிடத்தில் பேர் அன்பு கொள்வதற்கான வழியினையும் அறிந்தவர். சிவபெருமானின் திருவருள் துணையால் சிவபெருமானை உணர்தற்குத் தங்களைத் தயார் செய்து வருகின்றவர்கள். அதற்கு மாறாக இவ்வுடலில் பெருமான் கோயில் கொண்டமையை அறியாது இவ்வுடலை இழிந்த செயல்களுக்கும் உடலின் அழிவிற்கும் பயன்படுத்துபவர்கள், பனை மரத்தின்மேல் குடியிருக்கும் பருந்து, அப்பனை மரத்தின் உச்சியில் காய்த்துப் பழுத்திருக்கும் பழத்தின் சுவையையும் அவற்றின் தூய்மையான இயல்பினையும் அறியாது அதனை உண்ணாமல் இழிந்த பொருளை உண்ண நினைத்து பழி கொள்வது போலாகும் என்கின்றார்.

   எனவே பெருமான் கொடுத்துள்ள இவ்வுடம்பின் பயனையும் இவ்வுடம்பின் வழி அடைய வேண்டிய இலக்கினையும் உணர்ந்து ஏற்ற உணவு வகைகளையும் உணவுமுறைப் பழக்கங்களையும் பின்பற்றுவது அறிவுடமையாகும். மணியைப் பார்த்து உணவு உண்ணாமல் பசித்தால் மட்டுமே உணவு உண்ணவேண்டும் என்ற வழக்கத்தினை மேற்கொண்டால் உடம்பை மருந்து உண்ணாமலேயே காக்கலாம் என்பார் ஐயன் திருவள்ளுவர். உடலுக்குத் தீமை விளைவிக்கும் உணவை விலக்கி, உயிரைத் தூய்மை செய்யும் மனத்தில் மாசு அகன்று, நல்ல எண்ணங்களுடனும் நல்ல சொற்களையும் நல்ல செயல்களையும் நாளும் செய்து வருவோமானால் நம் செயல்கள் யாவும் தவச்செயல்கள் ஆகும். தவம் பெருக, தவத்தின் தலைவனான பெருமான் நம் உள்ளத்தில் வெளிப்பட்டுத் தோன்றுவான்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!