28. பரம்பொருள் உரைத்த நெறி

1391

முத்தமிழுக்கும் சங்கம் அமைத்து, சங்கப் புலவர்களைக் கொண்டு, சங்கப் பலகையின் நேர்கொண்டு அதனை நிலைநிறுத்தித் தமிழ் ஆய்ந்து, தமிழைப் பேணிக் காத்து வளர்த்தவர்கள் சீர்மிகு செந்தமிழர்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வாழ்வியல் மெய்ப்பாடுகளைத் தங்கள் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தமிழர்கள், பலமுறை ஏற்பட்ட கடல்கொள் பேரிடர்களினாலும் தமிழர்களின் கவனக்குறைவினாலும் பல அரிய தமிழ்க் கருவூலங்களை இழந்தனர். அதோடு ஆரிய வருகை ஆரிய இறைக்கொள்கையையும் ஆரிய மொழியையும் ஆரிய பண்பாட்டினையும் ஆரிய மயக்கம் தலைக்கேறிய சில தமிழ் மன்னர்களின் துணையோடு மிக விரைவாய்த் தமிழர்களிடையே பரவி வேர் ஊன்றுவதற்குத் துணை நின்றது. செந்தமிழ் நாட்டில் அயல் வழக்குகள் மேலோங்கித் தமிழ் வழக்கு நலிந்திருந்த காலத்தில், மாதவம் செய்த தென்திசையான தமிழ்நாடு அனைத்துத் திசைகளில் உள்ள நாடுகளையும் விட புகழ் பெறவும் தமிழ்நாட்டிற்கே உரிய நிலைபெற்றத் தமிழர் இறைக்கொள்கையும் தமிழர் பண்பாடும் தமிழ் மொழியும் உலகம் முழுவதும் பெருமை பெற்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கவும் செய்தவர் திருஞானசம்பந்தர் என்பதனைத், “திசைஅனைத்தின் பெருமைஎலாம் தென்திசையே வென்றுஏற, ……. அசைவுஇல் செழும் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல……” என்று தெய்வச்சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் குறிப்பிடுவார். தமிழர் தங்கள் தாய்மொழியில் இறைவனை எண்ணி அன்பு செலுத்துவது என்பது மங்கிப் போய் அயல் மொழிகளில் என்ன செய்கின்றோம் என்பதனை அறியாது பெயருக்கு வழிபட்டு வந்தமை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், தெய்வச் சேக்கிழார் போன்ற தமிழ்ச் சைவ அடியார்களின் வருகையால் நீங்கியது. சீர்மிகு செந்தமிழர் உண்மைச் சைவர்களாய் வாழ வழி பிறந்தது.

பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற இருபத்து ஏழு திருமுறை ஆசிரியர்களின் அருந்தமிழ் மந்திரங்கள் இறைவனை அன்னைத் தமிழில் வழிபடுவதற்கும் விழுமிய பொருளான அவ்விறைவனை உணர்ந்து உளம் உருகிக் கண்ணீர் மல்குவதற்கும் அதனைப் புரிந்து கொள்வதற்கும் புரிந்து கொண்டதைப் பிறருக்குப் படிப்பிக்கவும் பெரிதும் பங்காற்றின. திருமுறைகள் தமிழர் பண்பாட்டினையும் தமிழ்ச்சமயத்தின் உண்மைகளையும் தாய்த்தமிழ்மொழியின் வழி இறைவனை அடைய இயலும் என்பதனை மெய்ப்பித்தன. தமிழரின் இன மானத்தை மீட்டுத்தந்தன; தாய்த்தமிழைச் செம்மொழியாக்கின. பெருமானே வெளிப்பட்டுத் தோன்றி சிவஞானப்பால் ஊட்டியும் சூலையைக் கொடுத்து ஆட்கொண்டும் ஓலையைக் காட்டி அடிமை கொண்டும் குருந்த மரத்தின் அடியில் வீற்றிருந்து தமது திருவடியினை நல்கியும் “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுத்தும் அன்னைத் தமிழ்மந்திரங்களான திருமுறைகளை அப்பெருமக்களின் வழி நமக்கு அளித்தான். இவ்வருளாளர்களின் காலத்திற்குப் பிறகு அவை மறைக்கப்பட்டு இருந்தமையைப் பெருமானே ஆனைமுகன் வடிவில் திருநாறையூரில் நம்பியாண்டார் நம்பிகள் வழி தில்லைச் சிதம்பரத்தில் ஓர் அறையில் பூட்டப்பட்டு இருந்தமையை வெளிப்படுத்தி உதவினான்.

தமிழ்ச்சைவர்களுக்குத் திருமுறைகளை விடுத்து இன்றியமையாத சைவக் கருவூலங்களாக இருப்பவை பதினான்கு மெய்கண்ட நூல்களும் இருபத்து எட்டு சிவ ஆகமங்களுமாம். தமிழில் சிவ ஆகமங்கள் இருந்து பின் அவை கிடைக்கப் பெறாது போயின. வட மொழியில் மட்டும் சிவாகமங்கள் கிடைக்கப் பெற்ற காலத்தில் சிவ ஆகமங்களைத் தமிழ்படுத்துமாறு இறைவன் தம்மைப் பணித்ததாகத் திருமூலர் குறிப்பிடுவார். “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்பார். பரம் பொருளைப் பிழையின்றி உள்ளவாறு உணர்ந்து உய்தற்குக் கருவியாகச் செந்தமிழ்ச் சிவாகமமான திருமந்திரத்தைப் பாடுமாறு இறைவன் தன்னைப் பணித்ததாகக் குறிப்பிடுகின்றார்.சிவாகமங்கள் இருபத்து எட்டு எனவும் அவ்விருபத்தெட்டு தமிழ்ச் சிவாகமங்களைப் பெருமானே செவ்வியுடைய, திருவடி உணர்வு கைவந்த மேலோராகிய இறை உலகில் வாழ்கின்ற இருபத்து எண்மருக்குப் உரைத்தார் என்கின்றார். பெருமான் தமக்குரிய ஒப்பில்லாத திருமுகங்கள் ஐந்தனுள் உச்சித் திருமுகத்தால் (ஈசானம்) உரைத்தருளினான் என்பதனை, “அஞ்சொடு இருபத்து மூன்றுள ஆகமம், எஞ்சலில் விஞ்ஞகர் இருபத்து எண்மரும், அஞ்சாமுகத்தில் அரும் பொருள் கேட்டதே” என்று குறிப்பிடுகின்றார்.

சிவபெருமான் தமது திருவருளால் உரைத்தருளிய தமிழ்ச் சிவாகமங்கள் அயன் மால் உள்ளிட்ட தேவர்களாலும் விளங்கிக் கொள்ள முடியாத அருமையானது. அத்தமிழ்ச் சிவாகமங்களில் பெருமான் அருளிச் செய்த மெய்ப்பொருள் உண்மையை விளங்கிக் கொள்ளும் சிவ உணர்வுச் சிறப்பினைப் பெற்றிருக்காவிட்டால் எல்லை இல்லாத அவை கற்பதற்கு இயலாதது என்கின்றார். சிவம் என்று சொல்லப்படும் மேலான பரம் பொருளிடத்திலிருந்து அதன் திருவருளாகிய சத்தியும் அச்சத்தியின் இடத்திலிருந்து அருளோன் எனப்படும் சதாசிவனும் சதாசிவத்தினிடமிருந்து ஆண்டானாகிய மகேசனும் அம்மகேசனிடமிருந்து ஆசானாகிய நந்தியங் கடவுளும் இவ்வாகமங்கள் முழுமையும் பெற்றனர் என்பார். நந்தியங் கடவுளிடமிருந்து தாம் பெற்ற சிவ ஆகமங்கள் ஒன்பது என்று திருமூலர் குறிப்பிடுவார். அவை காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்பார். இதனைப், “பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம், உற்ற நல் வீரம் உயர் சிந்தம் வாதுளம், மற்ற அவ்வியாமளம் ஆகும் காலோத்தரம் உற்ற நற் சுப்பிரம் சொல்லு மகுடமே” என்பார். இவ்வொன்பது தமிழ் ஆகமங்களையே ஒன்பது தந்திரங்களாகத் திருமூலர் மூவாயிரம் பாடலில் அருளியுள்ளார்.

நந்தியங்கடவுள் ஆல்அமர் செல்வராக (தட்சிணாமூர்த்தியாக) இருந்து தமிழ்ச் சிவாமகங்களை உரைக்கவும் திருமூலர் தம்மோடு சேர்த்து எட்டு பேர் அதனைக் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றார். “நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடில் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி, மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர், என்று இவர் என்னோடு எண்மருமாமே” என்கின்றார். சனகர், சனாதனர், சனந்தனர், சற்குமாரர், சிவயோகமாமுனி, தில்லை மன்றில் பெருமானைத் தொழுத பாம்புக்கால் பதஞ்சலி, புலிக்கால் முனிவர், தாம் என எண்மர் நந்தியங் கடவுளான ஆல்அமர் செல்வரிடம் தமிழ் ஆகமங்களைக் கேட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

பின்னர் ஆலமர் செல்லவர் நந்தியங் கடவுளின் திருவடியினைத் தலைமேற்கொண்டு, தாம் கேட்டவாறே அறிவின் கண் நிறுத்தி உயிருக்கு உறுதி பயக்கும் ஒன்பது செந்தமிழ்ச் சிவாகமங்களை ஒன்பது தந்திரங்களாக மொழிந்தேன் என்பதனை, “நந்தி இணையடி நான் தலைமேற்கொண்டு, புந்தியினுள்ளே புகப்பெய்து போற்றி செய்து அந்தி மதிபுனைஅரனடி நாள் தொறும், சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே” என்கின்றார். தமிழ்ச் சிவாகமங்கள் இறைவனிடமிருந்து நேராகப் பெறப்பெற்றவை. கையிலாய ஆசான் மாணவ முறை வழியாக நம்மிடம் திருமூலர் மூலம் வந்து சேர்ந்தவை இவை. அன்னைத் தமிழ் மொழியில் இறைவனால் உரைக்கப்பட்ட இத்தமிழ்ச் சிவாகமங்கள் இருபத்தெட்டும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பாகம் திருக்கோயில் அமைப்பு முறைகள், பெருமானின் திருவுரு அமைப்பு முறை, நாள் விழா, சிறப்பு விழா முதலியன செய்யும் முறைமைகளைப் பற்றி வகுத்துக்கூறும் செய்கைப் பகுதியாகும். இரண்டாம் பாகம் பெருமானை எவ்வாறு வழிபடுவது என்பது பற்றிய பகுதியாக இருக்கின்றது. மூன்றாவது பாகம் இறைவன், உயிர், உலகம் என்ற முப்பொருள் உண்மையைப் பிழையின்றித் தெளிவிக்கும் மெய்யுணர்வுப் பகுதியாக இருக்கின்றது. இதனை முறையே கரும காண்டம், உபாசனை காண்டம், ஞான காண்டம் என்று வட மொழியில் குறிப்பிடுவர்.

 சீர்மிகு செந்தமிழர் தங்கள் தமிழ்ச் சமயத்தைத் தமிழிலேயே உய்த்து உணர்வதற்கும் பெருமான் திருவடியை அடைவதற்கும் திருமூலர் மூலம் நமக்குத் தமிழ்ச்சிவாகமங்களைத் திருமந்திரம் எனும் திருமுறை மூலம் அளித்திருக்கின்றான். பெருமானே உரைத்தருளிய இவ்வரிய கருவூலத்தின் பெருமையையும் அதன் சீர்மையையும் அதன் மெய்யுணர்வையையும் உணராது அயல் மொழிகளிலே மயக்குற்று எதையும் சரியாகப் புரிந்து கொள்ளாது தலையாட்டிப் பொம்மைகளாகவும் சமயக் குருடர்களாகவும் இறைவனை நெருங்கி அடைய முடியாதவர்களாகவும் தங்கள் இறைவனைத் தாங்களே வழிபடத் தெரியாதவர்களாகவும் வாழும் தமிழர்களின் அவலம் இழுக்கிலும் பேரிழுக்கு எனலாம்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!