18. அறிவால் வழிபடுவோம்

1134

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம், இறைவனை அடைவதற்குச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு(சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்னும் நான்கு வழிமுறைகளை முன்வைக்கின்றது. மேற்கூறிய ஒவ்வொரு வழிமுறையிலும் நான்கு அடிப்படைக் கூறுகள் வலியுறுத்தப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு நிலையிலும் இறைவனை அடைவதற்குச் செய்யக் கூடிய வழிபாட்டு முறைகளில், முதலில் புறத்தில் செய்து, பின்பு அதனைப் புறத்திலும் அகத்திலும் நிகழ்த்திப் பின் அகத்திலே முழுமையாக நிகழ்த்துவதனால் பெற்றப் பயனில் அழுந்தி இருந்து, அது அறிவாகிப் பின் உணர்வாவது வலியுறுத்தப்படுகின்றது. இதனையே சுருக்கமாகக் கிரியா பாதம் என்றும் ஞான பாதம் என்றும் உபநிடதங்களும் சிவ ஆகமங்களும் குறிப்பிடுகின்றன.

இறைவனை அடைவதற்கு மனம், வாக்கு, காயத்தினால் செய்யப்படும் ஒவ்வொரு செயலிலும் அதன் அறிவுப்பகுதியானது புலப்படவேண்டும் என்று நம் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. வழிபாட்டில் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் அது அறிவுறுத்தக் கூடிய அறிவுக்கூறு என்ன என்பதனை உணர்ந்து கொள்வதே உண்மையான வழிபாடு ஆகும். சடங்குகள் என்று வடமொழியில் குறிக்கப்படும் செயல்முறைகளில் அல்லது கிரியைகளின் பின்னால் நம் அறிவினையும் உணர்வினையும் செம்மைப்படுத்தும் அறிவுக்கூறுகள் என்ன இருக்கின்றன என்பதனை அறிந்து உணர்ந்து இயற்றுவதே உண்மை வழிபாடாகும். அதுவே இறைவனை அறிவால் அல்லது புந்தியால் வழிபடல் ஆகும்.

இன்று இறைநம்பிக்கையும் வழிபட்டில் ஈடுபாடும் உள்ளவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்கிசூழூ நம்மில் பலர் வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் என்று வடமொழியில் குறிக்கப்படும் செயல் முறைகளுக்கே அதிக முதலிடம் கொடுத்து விட்டு அதன் உண்மை அல்லது அது உணர்த்தும் அறிவார்ந்த உண்மை என்ன என்பதை எண்ணுவதில்லை! இதனால்தான் சமய அறிவும் தெளிவும் ஈடுபாடும் நம் இளைய குமுகாயத்தினரிடையே குன்றி வருவதனைக் காண்கின்றோம். கிரியைகள் இல்லாவிடில் நம் சமய உண்மைகள் முற்றாக அழிந்துபடும் என்பதில் சற்றேனும் ஐயமில்லை. எனினும் வெறும் கிரியைகளை மட்டும் பல மணி நேரம் நடத்தி அதன் பின் இருக்கும் அறிவு விளைவிக்கும் கூறினையும் இறையன்பு வளர்க்கும் பகுதியினையும் நெடுங்காலமாக விட்டு விட்டமையால் நம் இளைய குமுகாயத்தினரும் பெரியவரும் கூட இறைவனை புந்தியால் அல்லது அறிவால் வழிபடாமல் வெறும் புறத்திலே ஏதோ சடங்காகவே (கிரியையாகவே) நடத்தி வருகின்றனர்.

திருநீறு ஏன் அணிகின்றோம் என்று அதன் பொருள் அறியாமல் அணிதலும் “நமசிவய” எனும் திருவைந்தெழுத்து மந்திரத்தினை ஏன் கூற வேண்டும் என்று அதன் பயனை அறியாமல் கூறுவதும் திருமுறையை ஏன் வழிபாட்டில் ஓதுகின்றோம் என்று அறியாமல் ஓதுவதும் இறைவனுக்கு ஏன் மலரிடுகின்றோம் என்ற தெளிவினைப் பெறாமல் மலரிடுவதும் பெருமானுக்கு ஏன் கற்பூரம் காட்டுகின்றோம் என்று அறியாமல் வெறும் சடங்காகச் செய்வதும் வழிபாட்டில் சாம்பிராணி என்ற குங்கிலியம் ஏன் காட்டுகின்றோம் என்ற எளிய செயல் முறைகளின் பொருள் கூட அறியாமல் வழிபாடு செய்கின்ற போது அது புந்தியால் வழிபடுவது ஆகாது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

“நந்தி இணையடி நான் தலை மேற்கொண்டு, புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றி செய்து, அந்தி மதிபுனை அரன் அடி நாடொறும், சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆல் அமர் செல்வனாம் நந்தி என்று அழைக்கப்படும் சிவபெருமானின் திருவடியினை என் தலைமேலும் என் அறிவிலும் நிறுத்தி, வாயினாலும் துதித்து, இவ்வாறு செய்ததின் விளைவால் பெருமானின் திருவருள் பெருமையினை இடைவிடாது சிந்திக்கும் உணர்வினைப் பெற்றுச் சிவ ஆகமங்களுக்குப் பொருள் கூறத் தொடங்கினேன் என்கின்றார்.

எனவே வழிபாட்டில் செய்யப்படும் ஒவ்வொரு செயல் முறைக்கும் அல்லது கிரியைக்கும் பொருள் தெரிந்து அதனை அறிவோடு தொடர்புபடுத்துதல் வேண்டும் என்பது திருமூலரின் வாக்கு. நம் வாழ்வு நிலையாமையை உடையது. நம்முடைய அறியாமை, செயல், மயக்கம் என்பவை நீங்குதல் வேண்டும். அதற்காகவே நாம் திருநீறு அணிகின்றோம் என்று நம் புந்திக்கு திருநீறு அணியும் பயனின் செய்தி அனுப்பப்பட வேண்டும். இறைவன் திருவருளே நம் உள்ளும் வெளியும் நின்று இயக்குகின்றது என்பதற்கு நன்றி சொல்லவே நாம் திருவைந்து எழுத்தினை ஓதுகின்றோம் என திருவைந்து எழுத்தினை ஓதுகின்றவர் அறிந்திருத்தல் வேண்டும். அரிய பெரிய அருள்ஒளி வடிவில் உள்ள இறைவனை நாம் வழிபடுவதே கடன் என்பதனை உணரவே நாம் கற்பூரம் ஏற்றுகின்றோம் என்று தெளிதல் வேண்டும்.    உயிர் அறிவு விளக்கம் பெறும் வரையிலும் குங்கிலியப் புகை மூட்டத்தில் இறைவன் திருவுரு மங்கலாய்த் தெரிவதுபோல், நடைமுறை வாழ்வில் இறைவன் தெளிவுறக் காட்சிப்படமாட்டான் என்பதனை விளங்கிக்கொள்ளவே சாம்பிராணி அல்லது குங்கிலியம் காட்டுகின்றோம் என்ற தெளிவினைப் பெறவேண்டும். அறியாமை நீங்கி அறிவு தெளிவடைய வேண்டும் என்பதற்காகவே தேங்காய் உடைக்கின்றோம் என்ற தெளிவு கிடைக்கப்பெற வேண்டும். நம் உள்ளத்து அன்பினையே மலராக இறைவன் திருவடியில் இடுகின்றோம் என்றும் நம் அகங் குழையவே பெருமானின் அருட்பண்புகளையும் அவன் புகழையும் திருமுறைகளின் வழி ஓதுகிறோம் என்ற தெளிவும் ஏற்பட வேண்டும். இவை போன்று ஒவ்வொரு கிரியையின் விளக்கத்தினையும் அறிந்து வழிபாடு செய்வதே புந்தியால் செய்யும் வழிபாடு என்பது திருமூலரின் குறிப்பாகும்.

இன்றைய சூழலில் பல மணிநேரம் செய்யப்படும் வழிபாட்டுக் கிரியைகளைப் பற்றிச் சற்றேனும் எவரும் விளக்காத சூழலிலும் பல மணிநேரம் இயற்றப்படும் யாக வேள்விகள் பற்றி யாரும் விளக்காத சூழலிலும் குடமுழுக்குகளும் திருவிழா நிகழ்வுக் கிரியைகளும் அன்றாட திருக்கோயில் வழிபாட்டுக் கிரியைகளும் விளக்கப் படாது வெறும் சடங்குகளாய் அல்லது வெறும் செயல்முறைகளாய் மட்டுமே அமையும் சூழலிலும் அவை புந்தியால் செய்யும் வழிபாடு ஆகாது. அறிவிற்கு இடமின்றி வெறும் ஈடுபாடு, நம்பிக்கை, கடமை, மரபு என்பவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செய்யும் வழிபாடு சைவர்களை இச்சைவ நெறியில் நீண்ட காலம் நிலை நிறுத்தாது என்பதனைச் சைவர்கள் சீர்தூக்கிப் பார்த்து ஆவன செய்வோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!