11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்

1192

11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்

நம்மில் பலர் எங்கும் எதிலும் தாமே வெளிப்பட வேண்டும் என்று தாமே தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதனைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். இதில் விலை உயர்ந்த ஆடைகள், அணிகலன்கள் என்று அணிந்து கொள்வதனால் தம்மை  உயர்வாக எண்ணுவர் என்று நினைக்கின்றனர். சிலர் விலை உயர்ந்த மகிழ்வுந்துகள், வீடுகள், நிலங்கள், பொருட்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தால் பிறர் தம்மை மதிப்பர் என்று எண்ணுகின்றனர். இன்னும் சிலர் வழக்குரைஞர், மருத்துவர், பொறியியலாளர், கணக்கர், பொருளாதார வல்லுநர், தொழில் முனைவர் என்று நல்லபணிகளைச் செய்வதால் தம்மை உயர்வாக எண்ணுவர் என்று உள்ளத்தே வைக்கின்றனர். இன்னும்சிலரோ நல்ல உயர் பதவிகளை வகிப்பதால் தம்மைக் கடவுளைப் போன்று உயர்வாக எண்ணுகின்றனர் என்று பெருமை கொள்கின்றனர்.

இன்னும் சிலரோ, தலைவர், செயலாளர், பொருளாளர், செயலவை உறுப்பினர் என்று பல்வேறு நிலைகளில் பொறுப்புக்களில் இருப்பதனால் தங்களை உயர்வாக நினைப்பர் என்று எண்ணுகின்றனர். சிலர் மேன்மை தங்கிய, மாண்புமிகு, அமைச்சர், முதல் அமைச்சர், துணை அமைச்சர்,  பிரதமர், ஆட்சியாளர் என்று அரசியல் பொறுப்புக்களையும் அவற்றிற்கு உரிய பட்டங்களைக் கொண்டு அழைக்கப் பெறுவதனையும் உயர்வாக எண்ணுகின்றனர். இன்னும் சிலரோ பட்டதாரி, முதுகலை,முனைவர், பேராசிரியர், நிறைநிலைப் பேராசிரியர் என்று தாங்கள் கற்றக் கல்வியினைக் கொண்டு தங்களை உயர்வாக எண்ணுவர் என்று எண்ணுகின்றனர்.

பருவ அகவையினரோ தங்களின் நிற அழகு, முக அழகு, முடி அழகு, உடற்கட்டின் அழகு, நடையழகு, பேச்சழகு, சிரிப்பழகு என்று தங்களின் அழகினால் அவர்களை உயர்வாக எண்ணுவர் என்று நினைவில் கொள்கின்றனர். சிலர் தங்களிடம் இருக்கும் சேமிப்பையும் சொத்துக்களையும் வைத்துப்பிறர் தங்களை உயர்வாக எண்ணுவர் என்று கொள்கின்றனர். சிலர் தங்களிடம் உள்ள மொழிப்புலமை,கவித்திறன், ஆடல், பாடல், இசை, ஓவியம், தற்காப்புப் போன்ற திறமைகளால் தங்களை உயர்வாக எண்ணுவர் என்று மனத்தில் கொள்கின்றனர். இன்னும் சிலர், இன்ன நாடு, இன்ன ஊர், இன்ன இனம், இன்ன மொழி, இன்ன சமயம் என்பதனால் தங்களை உயர்வாக எண்ணுவர் என்று சிந்தையில் கொள்கின்றனர். வேறு சிலரோ இவற்றிற்கு எல்லாம் மேலே ஒரு படியாகத் தங்கள் குடும்பம், சாதி, குலம், கோத்திரம், பழக்க வழக்கம் என்பதனால் தங்களை உயர்வாக எண்ணுவர் என்று மார்தட்டிக்கொள்கின்றனர். இவை சரியான எண்ணம்தானா என்பதனை மணிவாசகரின், “சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க” எனும் சிவபுராண வரி கேள்வி எழுப்பி அதற்குப் பதிலை உணர்த்திநிற்கின்றது.

தமிழ்ச் சைவர்களின் மந்திரச் செய்யுளாக விளங்குவது திருவாசகம். திருவாசகம் மணிவாசகர் கூற, தில்லைக் கூத்தன் கைப்பட எழுதிக் கைச்சாற்று இட்டுக் கொடுத்தது. இறைவன் திருவாசகவடிவில் இருக்கின்றான் என்று இறைவனால் உணர்த்தப் பெற்றது. திருவாசகத்தின் திரண்டப் பொருள் சிவபெருமானே என்று இறைவன் நமக்கு உணர்த்தியது. அத்தகைய திருவாசகம் உயிர்களின் உண்மையான உயர்வைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

நாம் உயர்வாக எண்ணு கின்ற மேற்கண்டவை நம் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்று விட்டால் இல்லாமல் போய்விடும் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. நாம்  இறந்து போவோமேயானால், முதலில் நம் பெயரை நீக்கிப் பிணம் என்று பெயரிடுவார்கள். நாம் மேற்குறிப்பிட்ட அனைத்துப் பெருமைகளும் அக்கணமே நம்மை விட்டு நீங்கிப் போக, நம் உடலைக் கொண்டுப் போய்ச் சுடுகாட்டில் எரித்து விடுவார்கள் என்று திருமூலர் குறிப்பிடுவார். “காதுஅற்ற ஊசியும் வாராதுகாண் நும்கடைவழிக்கே” என்று பட்டினத்து அடிகள் குறிப்பிடுவார். ஊசியின் நூல் நுழைகின்ற பகுதியை ஊசியின் காது என்பர். ஊசியின் அக்காது உடைந்து போகுமானால் அது பயனற்றுப் போனதாய் வீசி விடுவர். அதுபோல நம் உயிர் உடலை விட்டுப் பிரிந்தால் பயனற்ற அவ்வூசி அளவு கூட நாம் கொண்டிருந்த எதுவும் நம் உயிருடன் வருவதில்லை! எல்லாம் உடல் பொருட்டாகவே கழியும் என்கின்றார் பட்டினத்து அடிகள்.
           பட்டினத்து அடிகள்

இதனையே, உடலை விட்டு உயிர் பிரியுமானால் ஊரார் வெறுத்து ஒதுக்குகின்ற பிணம் என்ற ஒருபொருளாய் நம் உடல் போய்விடும் என்பதனை, “ஊர்முனிப் பண்டம்” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். நாம் நமக்கு உயர்வு தரக்கூடியதாக எண்ணிய நம் உடைமைகள், பதவிகள், பட்டங்கள், திறமைகள், அழகு, குலப் பெருமை ஆகிய எல்லாமே நம்மை விட்டுப் போய்விடும் என்று திருவாசகம் உணர்த்துகின்றது. உயிரோடு வாழும் காலத்திலேயும் கூட நாம் வகிக்கும் பதவி, நம்மிடம் உள்ள செல்வம், நம்மிடம் உள்ள பொருள், நம்மிடம் உள்ள ஆற்றல்கள் நம்மை விட்டு நீங்கி விடுமானால் உயர்வாக எண்ணிக் கொண்டிருந்த நம்மைப் பிறர் திரும்பியும் பாராத நிலை ஏற்படும் என்று மேற்கண்ட சிவபுராண வரி உணர்த்துகின்றது.

மேற்கூறிய பெயர், புகழ் போன்றவை நிலையற்றவை. அவை தற்காலிகமானவை. அவை உண்மைப் புகழைக் கொடுக்காதவை. அவற்றினால் கிட்டும் இன்பம் நிலைபெறாது. நிலையான இன்பம், நிலையான புகழ் ஒன்று உண்டு என்பதனை உயிர்கள் உணர வேண்டும் என்கின்றார் மணிவாசகர். மேற்கூறிய, உயர்வாக எண்ணியவற்றை நமக்கு அளித்தவனே உண்மையான புகழுக்குத் தகுதி உடையவன் என்பதனை உணர்கின்ற உயிருக்கே நிலைத்த இன்பமும் உண்மைப் புகழும் கிட்டும் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். இறைவன், நமக்கு நாம் மேம்படுவதற்காக அளித்திருகின்ற செல்வம், பெயர், புகழ், திறமை, பதவி போன்றவற்றைக் கொண்டு, “நான், எனது” எனும் செருக்கினைக் கொள்ளாது, பெருமான் நமக்கு இவ்வளவு பேர் உதவிகளைச் செய்து இருக்கின்றானே என்று எண்ணுகின்றவருக்கே உண்மையான புகழ், உயர்வு கிட்டும் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

அண்டங்களையும் கோள்களையும் படைத்து, நிலம், நீர், தீ, வளி, வெளி எனும் ஐந்து பூதங்களையும் படைத்து, உயிர்களுக்கு உடம்புகளையும் படைத்து, அவ்வுடலில் கண், காது, மூக்கு, வாய், மெய் எனும் ஐந்து பொறிகளையும் அவற்றிற்கு உரிய ஐந்து புலன்களையும் படைத்து, கை, கால் போன்ற புறக்கருவிகளையும் மனம், சித்தம், அறிவு, மனவெழுச்சி போன்ற அகக் கருவிகளையும் படைத்து, நமக்குத்துணையாகப் பெற்றோர், மனைவி, மக்கள் போன்ற இதர மாந்தரையும் பிற உயிரினங்களையும் பிறப்பித்து, இதர நுகர்ச்சிப் பொருள்களையும் நமக்குக் கொடுத்து இவ்வுலகில் நம்மை உலவ விட்டு இருக்கின்றான் பெருமான். இத்தகையப் பேர் உதவியைச் செய்திருக்கும் பெருமானைக் காட்டிலும் நாம் எவ்வளவு சிறியவர் என்று உயிர் உணருமானால் பெருமான் எவ்வளவு உயர்வானவன் என்பது நமக்குத்தெரியும் என்கின்றார் மணிவாசகர். அவ்வாறு உணர்ந்து கொள்ளும் உயிர்களின் தலைகள், தங்களை அறியாமலேயே பெருமானின் முன் நிற்கும்போது தானாகக் குவியும் என்கின்றார் மணிவாசகர். பெருமானின் பேர் அருளை உணருகின்ற உயிர்களின் தலைகள் எதனையும் எதிர்பார்த்து இறைவனை வழிபடாமல் நன்றியினால் தானாகக் குவியும் என்கின்றார்.

இவ்வாறு தானாகத் தலை குவியப் பெற்றவர்களே உண்மையான உயர்வுக்குரிய அருளாளர்கள். இவர்களின் உண்மையான புகழை இறைவன் உலகுக்குக் காட்டி அவர்களை உயர்கதியான தன்திருவடிக்கு ஆளாக்குவான் என்கின்றார் மணிவாசகர். இதனையே, “தலையால் வணங்குவார் தலையானார்களே” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். நம் சிறுமையான சிற்றறிவையும் சிற்றாற்றலையும் நிலையில்லாத வாழ்வையும் எண்ணி, “யான் எனது” எனும் செருக்கினை விடுவோம். பெருமானின் பெருமையைப் போற்றிப் பணிவினால் நம் தலைகள் குவியப் பெறுவோம். அருளாளர்களுக்கு அருளிய அவ்வுயரிய உண்மையான உயர்வினைப் பெருமான் நமக்கும் அளிக்கப்பெறுவோம்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!