59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்

1482

“சாகாமை கற்பதுவே கல்வி” என்பார் ஒளவை பிராட்டி. சாகாமைக் கற்கும் கல்வி என்பது மேலும் பிறவிக்கு உட்படாமல் இறைவனின் திருவடி இன்பத்தினை எய்தி, அதில் நிலைபெற்று இருப்பது என்று பொருள்படும். எனவே இறைவனின் திருவடி இன்பத்தினை எய்துவிக்கும்  இறைக்கல்வியே உண்மையான கல்வி என்பது அதன் பொருள். இதனையே, “கேடு இல் விழுச் செல்வம்” என்பார் ஐயன் திருவள்ளுவர். ஒருவருக்குப் பல பிறவிகளிலும் உயிரைத் தொடர்ந்து வருகின்ற செல்வம் அவ்வுயிர் பெறுகின்ற இறைக்கல்வியே என்பார் ஐயன் திருவள்ளுவர். ஒருவர் பெறுகின்ற உலகக் கல்வி, அவ்வப் பிறவியோடு துணை நின்று மேலும் அடுத்து அடுத்து வருகின்ற பிறவிகளில் உயிர்களுக்குத் தொடர்ந்து வரும் இறைக் கல்வியாய் மாறித் துணைபுரியும் என்பதனை, “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு, எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்பார் பேராசான் திருவள்ளுவர். சென்ற சென்ற பிறவிகளில் பெற்ற இறைக் கல்வியினாலேயே மூன்றே அகவையிலேயே திருஞானசம்பந்தர், சிவனின் திருவடியையே சிந்திக்கின்ற, இறைமை உணர்வு பெருகுகின்ற, சிவ அறிவினைப் பெற்றார் என தெய்வச் சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் குறிப்பிடுவார்.  இவ்வுயரிய இறைக் கல்வியின் சிறப்பினைத் திருமூலரும் தமிழ்ச் சிவ ஆகமமான திருமந்திரத்தில் குறிப்பிடுவார்.

குற்றம் இல்லாத உண்மையான கல்வியின் முடிவு என்னவெனில் உயிரோடும் உலகோடும் இயைந்து இருக்கின்ற இறைவனை உணர்தலே ஆகும் என்கின்றார் திருமூலர். அத்தைகைய உண்மையான இறைக் கல்வியினால் உயிரோடும் உலகோடும் கூடியிருக்கின்ற இறைவனை அறிந்து, அவனை உள்ளத்திலே இருத்தி வைக்க அறிந்து கொண்டேன். அதனால் நீங்களும் எண்ணையும் எழுத்தையும் கற்று அதன் வழி இறைக் கல்வியை நாடுங்கள். அதுவே உங்களுக்கு இறைவனை உள்ளத்திலே இருத்தற்குத் துணைபுரியும் என்பதனை, “குறிப்பறிந்தேன் உடலோடு உயிர் கூடிச், செறிப்பறிந்தேன் மிகு தேவர் பிரானை, மறிப்புஅறியாது வந்து உள்ளம் புகுந்தான், கறிப்பறியாம் மிகும் கல்வி கற்றேனே” என்பார். இதனையே, “கற்றதனால்ஆய பயன் என்கொல் வால்அறிவன், நற்றாள் தொழார் எனின்” என்பார் பேராசான் திருவள்ளுவர்.

“இளமையிற் கல்” எனும் முதுமொழிக்கு ஏற்ப இறை கல்வியை இளமையிலேயே கற்க வேண்டும் என்கின்றார் திருமூலர். நம்மில் பெரும்பாலோர், “என் பிள்ளை இப்பொழுது சிறு பிள்ளையாக இருக்கின்றான்; இப்போதைக்கு உலகக் கல்வியைக் கற்றுக் கொண்டால் போதும், திருமுறைகள், அடியார்களின் வரலாறு, பூசனை முறைகள், மெய்கண்ட நூல்கள், அவை குறிப்பிடும் உண்மைகள் போன்றவற்றை வயது போன பிறகு கற்றுக் கொள்வார்கள்” என்று குறிப்பிடுகின்றோம். அத்தகைய கூற்று தவறு என்கின்றார் திருமூலர். நம் பிள்ளைகள் உலகக் கல்வியில் தேர்ச்சி பெறுவதற்குச் சிறந்த பள்ளியைத் தேர்ந்து எடுப்பது, கூடுதல் வகுப்புகளுக்கு அனுப்புவது, வீட்டில் சொல்லிக் கொடுப்பது என்று எவ்வாறெல்லாம் பாடுபடுகின்றோமோ, அதனை போன்றே இறைக் கல்வியைப் போதிப்பதற்கும் ஆர்வமும் முயற்சியும் வேண்டும் என்கின்றார் திருமூலர். இறைக் கல்வியைக் கற்று அதனை நடைமுறைப்படுத்த நீண்ட காலம் தேவைப்படுவதனால் அதனைச் சிறுஅகவை முதலே கற்க வேண்டும் என்கின்றார். உலகக் கல்வியின் முடிவாக இறைக் கல்வி இருப்பதனால் வயது போன பிறகு கற்றுக் கொள்ளலாம் என்பதற்குக் காலம் போதாது என்கின்றார். தவிர நம் வாழ்நாள் எவ்வளவு காலம் என்பதனை நாம் அறியாததினால் குறிக்கோள் இன்றி இருந்துவிடக் கூடாது என்கின்றார். காலம் கடந்து இறைவனை எண்ணிய தவற்றைக், “குறிக்கோள் இன்றிக் கெட்டேன்” என்பார் திருநாவுக்கரசு அடிகள்.

வயதுபோன பிறகு இறைக் கல்வியைக் கற்றுக் கொள்ளலாம் என்றாலும் வயதுபோன பிறகு நம் புலன்கள் தளர்ச்சி அடைந்து சுறுசுறுப்பை இழந்து விடுகின்றன. காதின் கேட்கும் தன்மை குறைந்தும் கண்பார்வை மங்கியும் சொல்லில் தெளிவு இன்றியும் கை கால்கள் நடுக்கமுற்றும் மனம் சோர்வுற்றும் காணப்படுகின்ற வயதுபோன காலத்தில் இறைக் கல்வியைக் கற்றலையும் இறைவழிபாட்டினையும் திருத்தொண்டுகளையும் எண்ணியவாறு செய்ய இயலாது என்கின்றார் திருமூலர். தவிர சிறு அகவை முதலே இறைவுணர்வைப் பெறுவதற்கு இறைக் கல்வியைக் கற்றால், சிறு அகவையிலேயே நம் பாவங்கள் என்று சொல்லப்படுகின்ற தீய செயல்களின் விளைவுகள் முன்கூட்டியே கழியத் தொடங்கும் என்கின்றார்.

மேலும் கால ஓட்டத்தில்தான் வெறுங்கல்வியாக இருக்கின்ற உலகக் கல்வி இறைக் கல்வியாக மாறும் என்கின்றார். அவ்வாறு மாறுகின்ற இறைக் கல்வி, புறத்திலே உள்ள இரு கண்களை விடுத்து அகத்திலே புதிய ஒரு கண்ணைத் தோற்றுவிக்கும் என்கின்றார். அகக் கண்ணின் துணைக்கொண்டே உயிர்களிளும் உலகப் பொருள்களிலும் செறிவுற்று இருக்கின்ற இறைவனைக் காணவும் உணரவும் இயலும் என்கின்றார். இதனை, “கற்று அறிவாளர் கருதிய காலத்துக், கற்ற அறிவாளர் கருத்திலோர் கண்ணுண்டு, கற்றுஅறிவாளர் கருதி உரைசெய்யும், கற்ற அறிகாட்டக் கால் உளவாகுமே” என்கின்றார் திருமூலர். இவ்வாறான அகக் கண்ணைப் பெற்றவர்களின் இறைக் கல்வி அறிவுரையானது பாலை நிலத்திலே நீர் வளம் பெருகச் செய்து அதில் கெண்டை மீனைப் பிறழச் செய்வது போன்ற அரிய நன்மையைக் கொடுக்கும் என்கின்றார்.

இறைக் கல்வியினால் அகத்தில் கண் பெறும் இத்தகைய மெய்நெறிக் கல்விவியாளர்கள், இறைப் பண்புகளோடு பலரும் போற்றுகின்றவர்களாகவும் பலரும் விரும்புகின்றவர்களாகவும் திகழ்வர் என்கின்றார் திருமூலர். இத்தகைய இறைக் கல்வியாளர்கள் தங்களிடம் உள்ள குறைபாடுகளையும் பிறரிடம் உள்ள குறைபாடுகளையும் நீக்க வல்ல உயர்ந்த பண்புடையவர்களாக விளங்குவர் என்கின்றார். வெய்யிலில் உணவுப் பொருட்களைக் காய வைக்கும் ஒருவர், அவ்வுணவுப் பொருட்களை உண்ண வரும் பறவைகளைக் கையில் ஒரு கோல் கொண்டு துரத்தி அப்பொருட்களைப் பறவைகள் அண்டா வண்ணம் காப்பர். அது போல இறைக் கல்வி எனும் கோலைக் கையில் வைத்திருக்கும் மெய்யறிவாளர் உடலுக்கும் உயிருக்கும் தீமையை விளைவிக்கும் தீயப் பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் விரட்டுவதில் வெற்றி கொள்வார்கள் என்பதனை, “நூல் ஒன்று பற்றி நுனி ஏறமாட்டாதார், பால்ஒன்று பற்றினால் பண்பின்பயன் கெடும், கோலொன்று பற்றினால் கூடா பறவைகள், மால்ஒன்று பற்றி மயங்குகின்றார்களே” என்று குறிப்பிடுகின்றார்.

பிள்ளைகளும் பெரியவர்களும் மற்றவரும் தங்களைத் தீயவற்றிலிருந்து காத்துக் கொள்வதற்கு இறைக் கல்வியை அறனாகக் கொள்ளுங்கள் என்கின்றார். இன்று மாந்தக் குமுகாயத்தில் மலிந்து கிடக்கும் பல்வேறு சீர்கேடுகளுக்கு உண்மையான இறைக் கல்வி இல்லாமையே காரணம் என்பது திருமூலரின் குறிப்பு. இறைக் கல்வியின் துணையால் உள்ளத்தில் அகக் கண்ணைப் பெற்றவர்களே உயிருக்குக் கேட்டினை விளைவிக்கக் கூடிய தீயவற்றை, அது நம்மைப் பற்றும் முன்பே அதனைக் கண்டு அதனிலிருந்து விலக முடியும் என்கின்றார். இவர்களைத்தான், “கண்ணுடைய கற்றோர்” என்று ஐயன் திருவள்ளுவரும் குறிப்பிடுகின்றார்.

இறைக் கல்வியே இறைவனை அறிதற்கும் உயிரைத் தூய்மை செய்தற்கும் மறுபடியும் இவ்வுலகில் பிறவாமைக்கும் துணை நிற்பதனால் அவ்விறைக் கல்வியை முயன்று கற்க வேண்டும் என்கின்றார் திருமூலர். மெய்நெறிக் கல்வியைக் கொண்டுள்ள மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் இதர வழிபாட்டு நூல்களும் கற்பதற்குச் சிரமம் ஆயினும் அவற்றை எப்பாடு பட்டாவது கற்றே ஆகவேண்டும் என்கின்றார் திருமூலர். “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்று ஆசான் பெருமக்களை இறைவன் நிலைக்கு உயர்த்திச் சொல்வதும் இதுபற்றியேயாம் என்பதனை உணர்தல் வேண்டும். ஆசான்கள் இடத்தில் உள்ளவர்கள் பொருள் ஈட்டுதலுக்கும் நல்ல பணியில் அமர்வதற்கும் பட்டம் பெறுவதற்கும் மட்டும் கல்வி என்று அல்லாமல் மாணாக்கர்களுக்கு மெய்நெறிக் கல்வியையும் மறவாது ஊட்ட வேண்டும் என்கின்றார். அவர்களே உண்மையான மெய்யறிவு ஆசான்கள் என்கின்றார். உயிரில் நன்னெறியும் நற்பண்புகளும் சிறந்தோங்குவதற்கும் இறையின்ப உணர்வு வளர்வதற்கும் இறைக் கல்வி துணையாய் இருப்பதனால் உண்மைக் கல்வியான இறைக் கல்வியைப் பெற்றவர்கள் இறைவனையும் அவனை வழிபடுதலையும் பெரிதும் விரும்புவர் என்பதனைக், “கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை” என்று சேந்தனார் தமது திருவிசைப்பாவிலும், “கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி” என்று திருநாவுக்கரசு அடிகள் தமது திருத்தாண்டகத்திலும் குறிப்பிடுவார்கள்.

கற்றவர்களே இறைவனின் மெய்ந்நூல் இயல்பினை அறியும் ஆற்றலைக் கொண்டிருப்பதனால் கற்றவர்களே இறைவனை எளிதில் அடைய முடியும் என்கின்றார் திருமூலர். மெய்க்கல்வியான இறைக் கல்வியைப் பெறாதவர்கள்  இறைவனை அடைய இயலாது என்கின்றார். சிவபெருமான் எல்லா உயிர்களிலும் எவ்விடத்தும் எப்பொருளிலும் நிறைந்து நிற்பவனாய் இருப்பினும் இறைக் கல்வியைக் கற்றவர்களின் நெஞ்சினுள்ளேயே இனிமையாய் விளங்குகின்றான் என்பதனைக், “கடல்உடையான் மலையான் ஐந்து பூதத்து, உடையான் பல ஊழிதொறு ஊழி, அடல்விடை ஏறும் அமரர்கள் நாதன், இடம் உடையார் நெஞ்சத்தில் இருந்தானே” என்பார். அகக் கண்ணைப் பெறுதலுக்கும் குற்றம் நீங்கி வாழுதற்கும் இறைவனின் திருவடி இன்பத்தினை உணர்வதற்கும் துணையாய் இருக்கின்ற இறைக் கல்வியை தவறாது கற்றுத் துன்பம் நீங்கி இன்பமாய் வாழ்வோமாக!

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!