56. வறுமை கொடியது

2109

“இல்லானை இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்று எடுத்த தாய் வேண்டாள்” என்பது ஔவையின் நல்வழியில் கிட்டும் செய்தியாகும். வறுமையுற்றுப் பொருளற்று இருக்கும் ஒருவரை வாழ்க்கைத் துணையாகிய மனைவியும் அவனைப் பெற்று எடுத்த அன்னையும் கூட விரும்பவும் மதிக்கவும் மாட்டார்கள் என்று ஔவை பிராட்டி உணர்த்துகின்றார். வறுமையின் கொடுமையை “நல்குரவு” எனும் அதிகாரத்தில் வள்ளுவப் பேராசான் பட்டியல் இடுகின்றார். வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போன்று துன்பமானது வறுமை ஒன்றேயாகும். அதற்கு ஒப்பான வேறு ஒன்றினைக் குறிப்பிட இயலாது என்பார் ஐயன் திருவள்ளுவர். ஒருவருக்கு இறைவுலக இன்பத்தினையும் இவ்வுலக இன்பத்தினையும் இல்லாமல் செய்யக் கூடிய வறுமை ஒருவரைப் பற்றுமானால், அவர் காலங்காலமாய்க் கொண்டு வரும் குடும்பப் பெருமையையும் பண்பையும் கெடும்படியாகச் செய்துவிடும் என்கின்றார்.

வறுமை ஒருவரை வந்து அடையுமானால் நல்ல குடும்பத்தில் பிறந்தவராய் இருக்கின்ற ஒருவரையும் பிறர் எளிதாக இழிவாகப் பேசிவிடும் அவலம் ஏற்பட்டுவிடும் என்பார். “ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்பது போல வறியவர் நல்ல நூல்களில் சொல்லப்பட்டுள்ள பொருளை நன்றாக உணர்ந்து அதன் உண்மையை எடுத்துச் சொன்னாலும் அவர் கூறும் உண்மையைக் கேட்பார் இல்லாமல் அது பயனற்றுப் போகும் என்கின்றார். வறுமையின் கொடுமையை நாளும் நாளும் கலங்கி எண்ணுகின்ற ஒருவருக்கு மன அமைதி ஏற்படாததோடு தூக்கமும் கெட்டு ஒழியும் என்பார் ஐயன் திருவள்ளுவர். இக்கொடுமையான வறுமையின் துன்பத்தைத் திருமந்திரம் அருளிய திருமூலரும் குறிப்பிடுவார்.

வறுமையின் கொடுமையை நல்குரவு எனும் தலைப்பின் கீழ் ஐந்து மந்திரங்களைக் கொண்டு திருமூலர் விளக்குகின்றார். இறைவழிபாட்டைச், சிவனின் திருவடியை மறக்கச் செய்யக் கூடியவற்றில், உடல் பற்று, செல்வச் செருக்கு, இளமைச் செருக்கு, காமம் என்பனவற்றைக் குறிப்பிட்டத் திருமூலர், வறுமையின் துன்பமும் இறைவனை; இறைவழிபாட்டை மறக்கச் செய்யும் என்கின்றார். வறுமையிலும் செம்மையாக நிற்றல் மிகவும் அரிது என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. வறுமையிலும் செம்மையாக நின்ற அடியவர்களே பின் நாயன்மார்கள் ஆனார்கள் என்பதனைச் தெய்வச் சேக்கிழாரின் பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.

முற்பிறவிகளில் செய்யத் தவறிய இறைவழிபாட்டின் பயனாகவே இப்பிறவியில் வறுமை ஒருவரை வந்து வாட்டுகின்றது என்கின்றார் திருமூலர். ஒருவர் அவர் உடுத்தி இருக்கின்ற ஆடை கிழிந்த ஆடையாய் வறுமைத் துன்பத்திற்கு ஆட்பட்டவராய் இருப்பாரேயானால் அவரது வாழ்க்கையும் கிழிந்து ஒழிந்து போகும் என்கின்றார். வறுமையுற்றவரை மனைவியும் பிள்ளைகளும் பெற்றோரும் உற்றார் உறவினரும் நண்பர்களும் மற்றவரும் மதிக்கமாட்டார்கள். பிறருக்கு எதுவும் கொடுக்க இயலாதவர்களிடம் யாரும் அன்பு காட்டமாட்டார்கள். வருமை உற்றவரை நடைப்பிணமாக நாட்டில் கருதுவார்கள். வறுமையுற்ற ஒருவருக்கு எவரிடமும் கொடுக்கல் வாங்கல் இல்லை என்று ஆகிவிடும் என்பதனால் தனித்துவிடப்படுவார்கள். அவருடன் பழகுபவர் இல்லை என்றாகி, வீட்டிலும் யாரும் அவருடன் பழகமாட்டார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி இன்றிப்போய்விடும். இன்முகம் காட்டிப் பேசுவார் இல்லாமல் போய்விடும். ஏதோ முகமனுக்காகப் பழகுவார்களே தவிர உண்மை அன்போடு பழகமாட்டார்கள். வறுமை குடிகொண்டிருக்கும் வீட்டில் எந்த ஒரு நல்லநாள், பெருநாள், திருநாள் என்பது நடைபெறாது போய்விடும். இறைவழிபாடும் நடைபெறாது என்பதனைப், “புடவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை, அடையப்பட்டார்களும் அன்பிலரானார், கொடையில்லை கோளில்லை கொண்டாட்டம் இல்லை, நடையில்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே” என்று குறிப்பிடுகின்றார்.

“ஆக்கைக்கே இரைதேடி அலமந்து, காக்கைக்கு இரையாகிக் கழிவரே” என்று வயிற்றுப் பசிக்கே நாளும் உழைத்துப் பொருள் தேடித் திரிபவர்கள், இறைவழிபாட்டினை மேற்கொள்வதற்கும் காலத்தை ஒதுக்காதவர்கள் வெறுமனே செத்து மடிவார்கள் என்று திருநாவுக்கரசு அடிகள் நினைவூட்டுவார். இதே கருத்தினைத் திருமூலரும் குறிப்பிடுகின்றார். காலை விடிந்தவுடன் இறைவழிபாட்டினைச் சிந்தியாது உணவை உண்பதற்கே குறியாய் நின்று, அதற்குரிய பொருளைத் தேடி அலைகின்றவர்களே, உயிர்ப்பசியைப் போக்குவதற்கும் சற்று நேரத்தைச் செலவழியுங்கள். நம் வயிற்றுப் பசியையும் நம் மனைவி மக்களின் வயிற்றுப் பசியையும் போக்குவதற்குப் பெரு முயற்சி செய்வதில் தவறில்லை! அம்முயற்சியோடு தவறாது இறைவழிபாடு செய்வதற்கும் தம்மையும் தம் மனைவி மக்களையும் ஈடுபடுத்துங்கள். இதுவே உயிர் பசியினைப் போக்கக்கூடியது. இதுவே அடுத்த பிறவியில் வறுமைத் துன்பத்தில் பிறப்பதில் இருந்து தவிர்ப்பது என்கின்றார். பொருட்செல்வத்தோடு வாழ்கின்றவர்கள் இறைவனை வழிபடுதலை மறந்து வாழ்வார்களாயின் அவர்களின் உயிர் வறுமைத் துன்பத்தில் வாழ்கின்றவையே என்பது திருமூலரின் வாக்கு. இறைவழிபாடே உண்மையான அருட்செல்வத்தினைத் தந்து உயிர் வறுமையைப் போக்கும் என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். “செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே” என்று திருஞானசம்பந்தரும் இதனைக் குறிப்பிடுவார்.

பொருள் செல்வம் பெரும் அளவில் சேர்த்து வைத்திருக்கும் செல்வந்தர்களுக்கும் பசி எனும் வயிற்றை நிரப்பும் துன்பம் உண்டு என்பதனால் அவர்களும் வறுமைத் துன்பத்திற்கு உரியவர்களே என்கின்றார் திருமூலர். தூர்க்கவே முடியாத கற்குழி போன்றது வயிறு என்கின்றார் திருமூலர். பொன்னையும் பொருளையும் எவ்வளவுதான் குவித்து வைத்தாலும் வயிற்றை நிரப்புதல் என்பதனைச் செல்வந்தராலும் செய்து முடிக்க இயலாது என்கின்றார் திருமூலர். பசி என்பது மீண்டும் மீண்டும் உருவெடுத்துக் கொண்டே இருக்கும். இதுவும் வறுமைத் துன்பம் தான் என்கின்றார் திருமூலர். இத்துன்பத்தைப் போக்குதற்கு ஒரே வழி இனி ஓர் உடலில் பிறவாமல் இருப்பதுதான். அவ்வாறு பிறவாமல் இருப்பதற்கும் இனி வயிற்றுப் பசி ஏற்படாமல் இருப்பதற்கும் ஒரே வழி இறைவழிபாடுதான். இறைவனை வழிபட்டால் உள்ளம் தூய்மை அடைந்து பசியாத நிலையான திருவடிப்பேறு கிட்டும் என்பதனை, “கற்குழி தூரக்கனகமும் தேடுவர், அக்குழி தூர்க்கை யார்க்கும் அரியதே, அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்த பின், அக்குழி தூரும் அழுக்கற்றவாறே” என்கின்றார். வயிற்றை நிரப்பும் துன்பம் செல்வம் உடையவர்களுக்கும் நீங்காமல் இருக்கின்றது என்பதனை உணர்ந்து வறுமையால் உள்ளம் வருந்தாது மனநிறைவு கொண்டு இறைவழிபாட்டினை விடாது இயற்றல் வேண்டும் என்கின்றார் திருமூலர்.

மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்பவர்களுக்காக ஒவ்வொரு நாளும் புதிய புதிய செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டும் அவர்களுக்காக தமது வாழ்நாள் முழுவதையும் கழிப்பதனால் மேற்கூறியவர்கள் ஓர் உயிரைத் தொடர்ந்து வருத்திக் கொண்டு வரும் வினைக்கு ஒப்பானவர்கள் என்கின்றார் திருமூலர். தமது வாழ்நாளை ஒருவர் அவர் தம் உயிர் வளர்ச்சிக்கென்று செலவிட முடியா வண்ணம் தொடர்ந்து பற்றி அவரை அலைக்கழிக்கின்ற இவர்கள் கொடிய வினையைப் போன்றவர்களே என்கின்றார். ஒருவரின் காலம் எல்லாம் கழிந்து ஆவி உடலை விட்டுப் போகும் முன்பே அவரைச் சுற்றியுள்ள மனைவி, மக்கள், உற்றார், உறவினர் போன்றோர் அவரை அவரின் உயிர் மேம்பாட்டிற்குக் காலத்தைச் செலவிட வழிவிட வேண்டும் என்கின்றார். மனைவி, மக்கள், உற்றார், உறவினர் போன்றோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாளும் உழன்று கொண்டிருப்பவர் எவ்வளவு பொருள் தேடி வைத்தாலும் உயிர் அளவில் அவர் வறுமைத் துன்பத்திற்கு உள்ளானவரே என்கின்றார் திருமூலர். அவருடைய வாழுங்காலத்திலே இறைவழிபாட்டில் ஈடுபட்டு மனமாசுகளை அகன்று பிறப்பினை அறுப்பதற்கு அவருக்கு வாய்ப்பளிப்பதே அவரின் உயிர் வறுமையைப் போக்குவதாகும் என்கின்றார் திருமூலர்.

உலகப் பொருள் இல்லமையினால் வறுமைத் துன்பத்திற்கு உள்ளாகி, இறைவனையும் இறைவழிபாட்டினையும் எண்ண இயலாது துன்புறுகின்றவர்கள் ஒருபுறம் இருக்க, உலகப்பொருள்கள் இருந்தும் மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்று நாளும் உழைத்து இறைவனை எண்ண முடியாமலும் இறைவழிபாடு செய்ய இயலாமலும் உயிர் வறுமையில் துன்புறுகின்றவர்கள் மற்றொருபுறம் இருக்கின்றார்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உலகப் பொருள் இல்லாமையால் துன்புறுகின்றவர்கள் அடுத்த பிறவியில் வறுமையில் பிறக்காமல் இருக்கவும் வாழ்வில் மேம்படவும் முயன்று உழைத்து இறைவழிபாட்டினை மறவாமல் தவறாமல் செய்ய வேண்டும் என்கின்றார். பொருள் இருந்தும் பசி வராமல் காக்கவும் மறுபிறவியில் பிறக்காமலும் இருக்கச் செல்வந்தர்கள் மறவாமல் இறைவனை வழிபடல் வேண்டும் என்கின்றார் திருமூலர்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!