40. இறைவன், உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை.

1039

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதனைப் போன்று உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதனை, “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். உலகங்களும் உலகத்திலுள்ள பொருள்களும் தோன்றி நின்று மறைகின்றன. உலகங்களும் உலகங்களிலுள்ள சடப்பொருள்களாகிய உயிரற்றப்பொருள்களும் அறிவற்ற பொருள்களாய் இருப்பதனால், அவை தானே தோன்றி, நின்று, மறைதல் என்பது இயலாத ஒன்று. அவற்றைத் தோற்றுவித்துச் சிறிது காலம் நிலைபெறச் செய்து பின் அவற்றை ஒடுக்குவிக்கும் அறிவுடைப்பொருள் ஒன்று இருக்க வேண்டும். மாந்தர்கள் இவ்வுலகங்களையும் இவ்வுலகப் பொருள்களையும் புதிதாகத் தோற்றுவிக்கப் போதிய அறிவும் ஆற்றலும் உடையவர்களாக இல்லாமல் இருப்பதனைக் காணுகையில் உலகங்களையும் அவ்வுலகப் பொருள்களையும் தோற்றுவித்து, நிலைபெறச்செய்து, ஒடுக்குவிக்கும் அப்பேர் அறிவு, பேர் ஆற்றல் உள்ள பொருள், மாந்தரை விடப் பல் மடங்கு பேர் ஆற்றலும் பேர் அறிவும் உடையதாய் இருக்க வேண்டும். அதனை இறைவன் அல்லது பதி என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.

‘பதி’ என்ற சொல்லுக்குத் ‘தலைவன்’, ‘காப்பவன்’ என்று பொருள். உலகங்களுக்கும் உலகப் பொருள்களுக்கும் ஆதாரமாக இருப்பதனால் அப்பதியினை இறைவன் என்றும் குறிப்பிடுவர். உலகங்களையும் உலகப் பொருள்களையும் கடந்து அவற்றிற்கு அப்பாற் பட்டிருப்பதனாலும் அவை எல்லாவற்றினுள்ளும் கலந்து இருப்பதனாலும் அவை எல்லாவற்றினுள்லிருந்தும் அவற்றைச் செலுத்துவதனாலும் பதியைக் கடவுள் என்றும் குறிப்பிடுவர். எல்லாவற்றிற்கும் அப்பாலாய்த் தன் ஆற்றலான திருவருளையும் தன்னுள் ஒடுக்கிக் கொண்டுப் புறப்பொருள் மீது தன் திருவருளைச் செலுத்தாது தன்னுடைய இயல்பான சிறப்பு நிலையில் இருக்கின்ற பதியின் நிலையினை, “உண்மை, அறிவு, இன்ப” நிலை என்பர். இதனையே சத், சித், ஆனந்தம் அல்லது சச்சிதானந்தம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். என்றும் ஒருபடித்தாய் அல்லது மாற்றம் அடையாததாய், அதாவது மூப்பு, பசி, பிணி, சாக்காடு என்பது அறியாது இருக்கின்ற உண்மைப் பொருளான இப்பதி, அறிவு மயமான பொருள், இன்ப மயமான பொருள் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. எல்லா பொருள்களையும் கடந்து அப்பொருள்களுக்குத் தன்னுடைய அகண்டிதத்திலே இடமளித்து நிற்கின்ற அப்பதியினுக்கு இச்சிறப்பு நிலையில் குணம், அடையாளம், வடிவம், பெயர் என்பது கிடையாது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

தனது சிறப்பு நிலையில் உண்மை, அறிவு, இன்பமாய் உள்ள பதி, உயிர்களைப் பாசம் என்ற அழுக்கு பற்றிக் கொண்டிருப்பதனை அறிந்து, உயிர்களை அவ்வழுக்கில் இருந்து விடுவித்துத் தன்னிடம் உள்ள பேரின்பத்தினை அவை நுகர வேண்டும் என்ற பெருங் கருணையினால் பதி பொது நிலைக்கு வந்தது என்பர். உயிர்களுக்கு உதவி செய்வதற்காகத் தன்னுடைய ஆற்றலாகிய அருளைச் செலுத்தி, அருவம், அருவுருவம், உருவம் ஆகிய மூன்று வகையான திருவடிவங்களைத் தாங்கிப் பொது நிலைக்கு வந்து, உயிர்களுக்காக உலகங்களையும் உலகப் பொருள்களையும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கின்றது என்பர். உயிர்களுக்குத் தலைவனாகவும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து பேணிக் காக்கும் பதி ஒன்றுதான்.ஒன்றாய் இருக்கின்ற இப்பதியே பொது நிலையில் பல் வேறு வடிவங்களில் வந்து உயிர்களுக்கு அருள்கின்றது என்பர். பதி என்றும் அழிவில்லாத நிலைத்தப் பொருள் என்பார் திருமூலர்.

உயிர்களுக்கு உள்ள உடல் அறிவற்ற, தானே செயல்பட முடியாத பொருள் என்று இறந்தவரின் உடலைப் பார்த்தால் புரிகின்றது. உயிரற்ற, தானே செயல்பட முடியாத உடலினைச் செயல் படுத்தும் அறிவுப் பொருள் ஒன்று அவ்வுடலின் வேறாக அவ்வுடலின் உள்ளே இருந்து அதனைச் செயல் படுத்துகின்றது. இதனால் உயிர் உண்மைப் பொருள் என்று தருக்க முறையில் நிறுவப்படுகின்றது. உயிர்கள் பாசத்தினால் பற்றப் படுவதனால் அதனைப் பசு என்றும் குறிப்பிடுவர். உயிர்கள் எண்ணில் அடங்காதவை என்பதனால் அவற்றை எண்ணிலி என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இறைவனைப் போலவே உயிர்களும் என்றும் அழிவில்லாத நிலைத்த பொருள் என்றும் அவற்றை இறைவன் தோற்றுவிக்கவில்லை என்பதும் சித்தாந்த சைவத்தின் கொள்கை. இறைவன் எப்பொழுது இருக்கின்றானோ அப்பொழுதிலிருந்து உயிர்களும் உள்ளன என்பர். இதனையே, ‘என்று நீ அன்று நான்” என்று தாயுமானவ அடிகள் குறிப்பிடுவார்.

உயிர்களுக்குப் பருவுடல், நுண் உடல் என்று உண்டு. எழுவகைப் பிறவிகளில் வெவ்வேறாய் உடல் கொள்ளும் உயிர்கள் உயிர்க்காற்று அல்ல! உயிர்களுக்குப் பொருத்தப்பட்டிருக்கும் மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி எனும் உயிர்க்கருவிகளும் உயிர் அல்ல! உயிர் வேறு, இறைவன் வேறு! ஆணவ மல மறைப்பினால் அறிவிக்க எதையும் அறிவதாயும் தானே எதனையும் இயற்கையாக அறிய முடியாததாயும் உயிர்கள் உள்ளன. எதைச் சார்ந்து இருக்கின்றனவோ அத்தன்மையாகவும் உடம்பில் விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை, பேர் உறக்க நிலை, உயிர்ப்பு அடங்கல் நிலை என்று ஐந்து நிலைகளில் நின்று இயங்கக் கூடியவை உயிர்கள் என்பர். சிற்றறிவும் சிறு ஆற்றலும் உடையவை உயிர்கள். உயிர்கள் கண்ணுக்குத் தெரியாத அருவ நிலையில் உள்ள பொருள்.

உயிர்களைப் பற்றி இருக்கும் அழுக்கினை அல்லது மலத்தினைப் பாசம் என்பர். இது மூவகைப் படும். இவற்றை மும்மலம் என்றும் குறிப்பிடுவர். அவை ஆணவம், கன்மம், மாயை என்பனவாம். ஆணவம் என்ற அழுக்கு உயிரை ஆரம்பம் முதலே பற்றியிருக்கின்றது என்பர். இவ்வாணவ மலம் உயிர்களின் அறிவு, விருப்பம், செயலை நடை பெறாமல் தடுத்து அணுத்தன்மை அல்லது கீழ்த் தன்மை படுத்துகின்றது என்பர். இவ்வாணவ மலம் செம்பில் களிம்பு போலவும் நெல்லில் உமி போலவும் ஆரம்பம் முதலே உயிர்களைப் பற்றியிருந்தது என்பர். இவ்வாணவ மலமும் என்றும் உள்ள அழிவில்லாத பொருள் என்பார் திருமூலர். இறைவன், உயிர், பாசம் என்ற தளை ஆகிய மூன்றும் என்றும் உள்ள பொருள் என்பதனைப், “பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில், பதியினைப் போன்று பசு பாசம் அநாதி” என்று குறிப்பிடுவார்.

ஆணவ மலம் ஒரு பொருளாயினும் அனைத்து உலகங்களிலும் அனைத்து உயிர்களையும் பற்றக்கூடிய ஆற்றலை உடையது என்றும் இதுவே உயிர்களுக்கு அறியாமையைச் செய்து, உயிர், தன்னையும் அறிய முடியாமல் இறைவனையும் அறிய முடியாமல் மறைத்து நிற்கின்றது என்பர். இவ்வாணவமலத்தைக் கழுவவே இறைவன் உயிர்களுக்குக் கன்மமலம் என்றும் மாயாமலம் என்றும் இரண்டு மலங்களைக் கூட்டுவித்து அழுக்கை அழுக்கால் போக்குகின்றான் என்கின்றது சித்தாந்த சைவம். மன, வாக்கு, காயத்தினால் செய்யப்படும் செயல்களே கன்மமாகும். உயிர்கள் உலகில் வாழும் காலத்தில் இன்பத்துன்ப நுகர்ச்சிகளைப் பெற்றுச் செவ்வி அடைவதற்குத் துணையாக இருப்பது இக்கன்மம். கன்மத்தை வினை என்றும் குறிப்பிடுவர். வினை மூன்று வகைப் படும். அவை பழ வினை, நுகர் வினை, வரு வினை எனப்படும். உயிர்கள் வாழும் காலத்து மன, வாக்கு, காயத்தினால் செய்யும் செயல்கள் இம்மூன்று வினைகளையும் போக்கிக் கொள்வதற்கே ஆகும். இப்படிச் செயல்கள் செய்யவே உயிர்கள் செவ்வி அடைந்து இறைவன் திருவடியை அடையும்.

மாயை என்பது இறைவன் உலகங்களையும் உலகப் பொருள்களையும் தோற்றுவிக்கவும் ஒடுக்கவும் துணையாய் இருக்கின்ற மூலப் பொருள். இதுவும் என்றும் உள்ள நிலையான பொருள். மூலப் பொருளால் ஆன உலகங்களும் பிறவும் பேரூழிகாலத்தில் இறைவனால் ஒடுக்கப் படுகின்ற போது மாயை எனும் இம்முலப் பொருளின் உள்ளேயே எல்லாம் போய் ஒடுங்கி இறைவனின் அகண்டிதத்திற்குள் நிற்கின்றன. உயிரைப் பற்றி இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை எனும் பாசம் உயிரைப் பற்றுமே தவிர பதியினைப் பற்றாது. உயிர் செவ்வியுற்றால் பதியினை அல்லது இறைவனை நெருங்கும். அப்படி நெருங்கும் போது உயிரைப் பற்றியுள்ள பாசம் உயிரைப் பற்றி நில்லாது விட்டு நீங்கும் என்பதனைப், “பதியினைச் சென்று அணுகா பசு பாசம், பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே” என்பார் திருமூலர்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!