4. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க

1985

குருவினை ஆசிரியர் அல்லது ஆசான் என்று அன்னைத் தமிழில் குறிப்பிடுவர். ஆசு+இரியர் எனும் சொல் குற்றத்தை அல்லது குறையைப் போக்குபவர் என்று பொருள்படும். ஆசான் என்பவர் குற்றம் அல்லது குறை அற்றவர் என்பர். சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் ஆசானுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாட்டினைத் தெளிவுறக் கூறுகின்றது. திருமந்திரமும் அதனைத் தெளிவுபடுத்துகின்றது. சமய ஆசான்கள் இறைவனை அடைவதற்குத் தடையாய் உள்ள குற்றங்களை உணர்த்தி இறைவனை அடைவதற்கு வழிகாட்டியாய் இருப்பர். எனினும் இறையின்பத்தை இறைவனே அளிக்க வல்லவர். சமய ஆசான்கள் இறையின்பத்தை அளிக்க வல்லவர் அல்லர். இறைவனை அடைவதற்கு வழிகாட்டும் சமய குருவிற்கு மரியாதையும் பணிவும் வணக்கமும் போற்றுதலும் செய்யினும் வழிபாடு என்பது இறைவனுக்கு மட்டுமே என்பதனைச் சித்தாந்த சைவமும் திருமந்திரமும் தெளிவுறக் குறிப்பிடுகின்றன. குருவுக்கு வணக்கமே எனினும் இறைவனே மாந்த வடிவம் தாங்கி குருவடிவில் வந்து உயிர்களுக்கு அருளுதல் செய்யும்போது சிவகுருவான அவ்வடிவினைச் சிவமாகவே எண்ணி வழிபடுதல் வேண்டும் என்று மெய்கண்ட நூல்களும் திருமந்திரமும் குறிப்பிடுகின்றன. சிவகுருவாக வருகின்ற அந்தச் சிவனே உயிர்களின் அறியாமையையும் உலகப் பற்¨றையும் போக்க வல்லவன். சமய குருமார்கள் உயிர்களின் அறியாமையையும் பற்றையும் போக்கிக் கொள்வதற்கு வழியைக் கூறுபவர்களே ஆவர். இவர்கள் ஒருபோதும் இறைவன் ஆகமாட்டார்கள். இதனால் வழிபாடு என்பது சிவகுருவிற்கும் இறைவனுக்கும் மட்டுமே என்பதனைச் சைவ மெய்கண்ட நூல்கள் தெளிவுபடக் கூறுகின்றன.

திருமந்திரத்தின் முதல் தந்திரத்தில், உபதேசம் எனும் பகுதியில் சிவகுருவினைச் சிவனாகவே எண்ணி வழிபடவேண்டியதின் முதன்மையைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவஞானத்தை அளித்துச் செவ்வியடைந்த உயிர்களின் உலகப் பற்றையும் உயிர்களின் மயக்கத்தையும் போக்கி அருளும் சிவகுருவாக வந்த இறைவனின் திருவடிவைச் சிவனாகவே எண்ணி வழிபடுதல் வேண்டும் என்பதனைத்,

“ தெளிவு குருவின் திருமேனி காண்டல்,
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்,
தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்,
தெளிவு குரு உருசிந்தித்தல்தானே ”

என்கின்றார். உயிர்களுக்குச் சிவஞானத்தை அளிக்கவல்லவன் சிவன் ஒருவனே. சிவஞானம் அளிக்கின்ற குருவாகச் சிவனே வேறு வடிவில் வருவதனால் அவ்வடிவினைச் சிவனாகவே எண்ணி வழிபடுதல் வேண்டும் என்கின்றார் திருமூலர். திருப்பெருந்துறையில் மாணிக்கவாசக அடிகளுக்குக் குருந்த மரத்தின் அடியில் குருவடிவில் இறைவன் அமர்ந்து சிவஞானத்தினைப் புகட்டினான். அவ்வடிவினையே இறைவனாகக் கண்டு வழிபட்ட மணிவாசகர், “கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!” என்று குறிப்பிடுகின்றார். திருப்பெருந்துறையில் மட்டும் அல்லாது திருவாவடு துறையிலும் அவனே தலைச் சிறந்த ஆசானாக வந்து அருளினான் என்கின்றார்.

இறைவன் தாங்கி வந்த குருமணி வடிவினையே மணிவாசகர் நாளும் கண்டார். அதுவே அவருக்குச் சிவத்தெளிவினை நல்கியது. அச்சிவகுருவின் திருப்பெயரையே, “குருமணி”, “குருமணி” என்று திருவைந்து எழுத்திற்கு நிகராகக் கூறிவந்தார். அதுவே மணிவாசகரின் உயிருக்குத் தெளிவினைக் கொடுத்தது. அக்குருமணி ஒளிப்பிழம்பாய் மாறித் தம்மை விட்டுப் பிரியும்போது அக்குருமணியுடன் கலந்து விடலாம் என்று ஓடிய மணிவாசகரைச் சில காலம் கழித்துத் திருவுத்தரகோசமங்கைத் திருக்கோயிலுக்கு வரும்படி இறைவன் பணித்தார். அதுவே தமக்கு மிகச் சிறந்த ஒன்று என்று மணிவாசகர் அக்குருமணியின் திருவார்த்தையினைக் கேட்டார். குருமணியின் திருவார்த்தையினைக் கேட்டல் உலகத் தெளிவினை அவருக்கு நல்கியது. இறைவன் குருமணியாக வந்த அவ்வடிவினையே நாளும் சிந்தித்து வழிபட்டார். திருவுத்தரகோசமங்கைத் திருக்கோயில் கருவறையில் உள்ள இறைவனின் சிவக்கொழுந்து திருமேனியில் தமக்குச் சிவஞானம் அளித்த குருமணியின் திருவடிவடிவினைக் கண்டார்.

இறைவனே சிவகுருவாக வருகின்ற நிலையினைத் தாயுமானவ அடிகளின் வரலாற்றின் வழியும் உணரலாம். மெளனதேசிக குருவாக மாந்த வடிவு பூண்டு வந்து இறைவன் அவருக்குச் சிவஞானம் நல்கினான். அம்மெளனதேசிகக் குருவினைச் சிவனாகவே எண்ணி வழிபட்டுச் சிவஞானத் தெளிவினைப் பெற்றார் தாயுமானவ அடிகள்.. இறைவனே ஆலமர் செல்வராகச்(தட்சிணாமூர்த்தியாக) சனகாதி முனிவர்களுக்குக் குருவடிவில் கல்லால் ஆன ஆலமரத்தின் அடியில் தோன்றி அருளினார். அவ்வடிவினை இறைவனாகவே கொள்கின்றோம். “சும்மாயிரு சொல்லற” என்று முருகன் வடிவில் குருவாகத் தோன்றி அருணகிரி அடிகளுக்குச் சிவஞானத்தை அளித்தான் சிவபெருமான். அச்சிவகுருவின் சொல்கேட்டு உய்தி பெற்றார் அருணகிரிப்பெருமான். சீர்மிகு செந்தமிழரின் இறைநெறி, இறைவனே சிவகுருவாக வருதலையும் அப்படி வரக்கிடைக்கப் பெறுமானால் அச்சிவகுரு உயிர்களைப் பற்றியுள்ள மூன்று மலங்களாகச் சொல்லப்படும் ஆணவம், கன்மம், மாயை என்ற மலங்கள் நீங்கப் பெறுவார்கள் என்றும் குறிப்பிடுகின்றது. சிவகுரு உயிரைப் பற்றிய தெளிவையும் உலகைப் பற்றிய தெளிவையும் இறைவனைப் பற்றிய தெளிவையும் அளித்து, உயிர்களைப் பற்று அற்றவர்களாக ஆக்கக்கூடிய இயல்பினை உடையவராக இருப்பார் என்கின்றது. இத்தகையச் சிவகுரு வடிவங்களைச் சிவனாகவே வழிபடல் வேண்டும் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

இறைவனே குரு வடிவம் தாங்கி வருவதனைத் தவிர, சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டிருக்கின்றவாறு சமயத் தீக்கை, சிவத்தீக்கை, சிறப்புத்தீக்கை, ஆசான்தீக்கை போன்ற தீக்கைகளை முறையாகப் பெற்றுச் சித்தாந்த சைவத்தினை முறையாகக் கற்றுணர்ந்து அதனைப் பின்பற்றியதனாலும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நால்வகை நெறியில் உறைப்பாய் நின்றதனாலும் உள்ளத்திலே உண்மையான இறையன்பு பெருகி உயிர்முற்றப் பெற்றவர்களின் உள் நின்றும் இறைவன் குருவாகச் சிவஞானத்தை அளிப்பான் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இச்சிவஞானியர்களின் உள்ளத்தினை இறைவன் கோயிலாகக் கொள்வதனால் இவர்கள் தங்கள் செயல் என்பது போய் எல்லாம் இறைவனின் செயல் எனும் நிலையில் நிற்பவர்கள். இத்தகையவர்களின் உள்ளிருந்து இறைவன் செவ்வியுடைய உயிர்களுக்குச் சிவஞானத்தை அளிப்பான். இத்தகைய சிவஞானியர்களையும் அடியார்களையும் பிறர் கடவுள் என்றே எண்ணினும் இவர்கள் தாங்கள் ஒருபோதும் கடவுள் அல்ல என்பதனில் மிகத் தெளிவாய் உள்ளவர்கள். இவர்களைப் பின்பற்றும் அன்பர்கள் அடைய வேண்டியது சிவனை என்றும் வழிபடவேண்டியது சிவனை என்றும் தெளிவாக உணர்த்துபவர்களாக இருப்பர் என்று மணிவாசகர் வாழ்ந்து காட்டியுள்ளார்.

உலக நன்மைக்காகவே இறைவனின் நிகராளியாக விளங்கும் இஞ்ஞானாசிரியர்களின் மூலம் இறைவன் அருள்நிகழ்ச்சிகளை நிகழ்வித்துச் செவ்வியுடைய உயிகளுக்குச் சிவஞானத்தை வழங்குகின்றான் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் மூலம் அருள் நிகழ்ச்சிகள் நடைபெறினும் இவர்கள் அவ்வாற்றல்களை இறைவனின் பெருமையை உணர்த்துவதற்கும் உயிர்கள் சிவஞானம் பெறுவதற்கும் வழிகோல்வதற்கே பயன்படுத்துவர். அவ்வகையில்தான் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் போன்ற அருளாளர் பெருமக்களும் மெய்கண்டார், அருணந்திச்சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம் போன்ற அருளாளர்களும் ஞானாசிரியர்களும் இறைவனைப் போன்று வைத்துப் போற்றப் பெறுகின்றனர். எனினும் இஞ்ஞானாசிரியர்களுக்குச் செய்வது குருபூசனை, இறைவனுக்குச் செய்வது சிவபூசனை என்பதில் தெளிவு வேண்டும்.

இரண்டரை வயது மெய்கண்டாருக்குச் சிவஞானத்தை அறிவித்த பரஞ்சோதியாரையும் அறுபது வயது அருணந்திச்சிவத்திற்குச் சிவஞானத்தை உணர்த்திய மெய்கண்டாரையும் உமாபதிசிவத்திற்குச் சிவஞானத்தெளிவினை உணர்த்திய மறைஞானசம்பந்தரையும் பெற்றான் சாம்பான் எனும் விறகு வெட்டி சிவ உலகினுக்குச் செல்ல உதவிய உமாபதியையும் அவர்களின் மாணாக்கர்கள் அவர்களைக் கடவுள் என்றே குறிப்பிடினும் அவர்களுக்குச் செய்யப்படுவது குருபூசனைகளேயாம். அவர்களைச் சமய ஆசிரியர்கள் என்றும் சைவ குருபரம்பரையர் என்றும் குறிப்பிடுகின்றோமே தவிர அவர்களை இறைவன் என்று குறிப்பிடுவது கிடையாது. இதுவே குருவைப் பற்றிய தெளிவும் சைவ மரபும் ஆகும்.

இறைவன் நின்று அருளுகின்ற, உயிமுற்றப் பெற்ற அருளாளர்களையும் சிவஞானியர்களையும் முகமனாகக் கடவுள் போன்று குறிப்பிடினும் அவர்கள் ஒருபோதும் கடவுள் ஆகமாட்டார்கள் என்பதே சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களின் துணிபு. அச்சிவஞானியர்களும் அருளாளர்களும் இறைவனை அடைவதற்குத் துணை நிற்பவர்களேயன்றி இறைவன் ஆக மாட்டாதவர்கள். சிவஞானியர்களும் அருளாளர்களும் ஒருபோதும் இறைவனின் திருவடி இன்பத்தினை அளிக்கமாட்டாதவர்கள். பேரின்ப வெள்ளமான அச்சிவம் ஒன்று மட்டுமே உயிர்களுக்கு பேரின்பப் பெருவாழ்வினை அளிக்க வல்லது. அதுவே வழிபாட்டிற்கும் உரியது. இதர குருமார்கள் குருவணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்களேயன்றி வழிபாட்டிற்கு உரியவர் அல்லர் என்பதே திருவாசகத் தெளிவு.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!