12. குபேரனுக்கு நிதி அளிக்கும் பெருமான்

999

காது உடைந்து போன ஊசி கூட நாம் இறந்து போனால் துணைவராது என்பார் பட்டினத்து அடிகள். வாழ்நாள் முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து சேர்த்து வைக்கும் பொருட்செல்வம் உடலோடு நின்றுவிடும். இறை உலக வாழ்விற்குத் துணையாக வரும் செல்வம் அருட்செல்வமே என்பதை, “ அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்றும் “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள” என்றும் கூறுவார் திருவள்ளுவப் பெருந்தகை. உலகப் பொருட்களாகிய நிலையற்ற செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளன. அவை உடலோடு நின்றுவிடும். உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள நிலைத்த அருள் செல்வம் இறந்த பின்னரும் உயிரோடு தொடர்ந்து வருவது. இதனாலேயே “செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே” என்று திருஞானசம்பந்தர் கோயில் திருப்பதிகத்தில் குறிப்பிடுவார். தில்லைச் சிதம்பரத்தில் ஆடிக் கொண்டிருக்கின்ற, உலகச் செல்வங்களையும் அருட் செல்வத்தையும் அருள்கின்ற அப்பெருமானை வழிபடுவதே உண்மையான செல்வம் என்பார். சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவத்தில் முழுமுதற்பொருளாகக் கொண்டு வழிபடுகின்ற சிவபெருமான் இரப்பவர் அல்லது பிச்சை ஏற்கின்ற பிச்சாடனராகக் கோலங்கொண்டு அருள் புரிவதனால் அவரை ஏழ்மையில் வாழும் கடவுள் என்று நம்மில் பலர் எண்ணுகின்றனர். ஏழ்மையான சிவபெருமானை வழிபடுகின்றவர் ஏழைகளாகிப் போவர் என்று அஞ்சுகின்றனர். பெருமான்  கொள்கின்ற வேக, போக, யோக வடிவங்களில் இரப்புக்கோலம் (பிச்சாடனர் கோலம்) யோக வடிவங்களில் ஒன்று என்பதனைப் பலரும் அறிவதில்லை. மறக்கருணை கொண்டு தீயவர்களை ஒடுக்கும் வடிவம் வேக வடிவம்.    இதற்குப் பெருமான் எலும்பு மாலையையும், மண்டை ஓட்டு மாலையையும் அணிந்துள்ள கங்காள வடிவத்தினைக் குறிப்பிடலாம். உமை அம்மையோடும் முருகனுடனும் இருக்கும் அம்மை அப்பர் பிள்ளை வடிவு (சோமாசுகந்தர்) போக வடிவம் ஆகும். எல்லாவற்றையும் துறந்து வெறும் கீழ் உடையுடன் இரப்புக்கலனுடன் இருக்கின்ற கோலம் (பிச்சாடனர்) யோக வடிவாகும்.

தவிர, எல்லோருடைய வாழ்வினையும் முடிக்கின்ற கடவுள் என்பதனால் பெருமான் சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருக்கின்றான் என்பர். அவன் தீயாகி நின்று இறந்த உடலைச் சாம்பல் அல்லது நீறு ஆக்குவதோடு உயிர்களின் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் சுட்டு எரித்து நீறு ஆக்குவதனால் அவனைச் சுடுகாட்டில் உடைய சாம்பலை உடலில் பூசி நள்ளிருளில் நட்டம் ஆடுகின்றவன் என்பர். இவ்வரியக்கருத்தினைச் சரிவர புரிந்துக்கொள்ளாதவர் சிவபெருமானை ஏழைமையான சுடுகாட்டுக் கடவுள் என்றும் இறந்து போனவர்களுக்காக வழிபாடு செய்வதற்கு மட்டுமே உரிய கடவுள் என்றும் எண்ணுகின்றனர். சுருங்கக் கூறின் உயிர் அமைதி பெறுவதற்கு (மோட்ச விளக்கு) வழிபாடு செய்யும் கடவுள் சிவ பெருமான் என்று எண்ணுகின்றனர். உலக வாழ்க்கைக்குத் தேவையான பணத்தினைப் பெற வேண்டுமானால் குபேர பூசனை செய்ய வேண்டும், இலட்சுமி பூசனை செய்ய வேண்டும் திருவேங்கிடமலையாரை வழிபட வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

சிவபெருமான் இட்ட பணிகளைச் செய்யும் வானவர்களில் ஒருவன்  குபேரன். இக்குபேரன் பெருமானின்  எல்லையற்ற நிதியத்தினைக் கட்டிக் காக்கும் தலைமைக் கணக்கர் பொறுப்பினை பெற்றுள்ளான். தவிர பெருமானின் அளவிலாத பொருளை உரிய அடியவர்களுக்கு உரிய வேளையில் அளிக்கும் பணியைப் பெருமான் குபேரனுக்குத் தந்துள்ளான் என்பதனை “அதிபதி செய்து அள்கை வேந்தனை, நிதி செய்த நிறைதவ யோகி, அதுபதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின், இறுபதிகொள் என்ற பெருமானே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

திருவேங்கட மலைக்குத்தலைவனாகிய திருவேங்கிடமலையானுக்கு (வெங்கடாசலபதி) செல்வம் அவனின் ஆற்றலாகிய இலக்குமி என்ற திருமகளின் வழியாகவே வருகிறது என்பதனால் தான் வாணிக மையங்களில் இந்துக்கள் திருமகள் திருவுருவப் படத்தினை வைப்பதையும் திருமகள் பூசனையை வீட்டில் வைப்பதனையும் பார்க்கின்றோம். தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது சிவபெருமானின் அருள் விளைவால் பல அரிய பொருள்கள் அக்கடலில் இருந்து தோன்றின. அவற்றில் ஒன்று திருமகள் ஆகும். இதனாலேயே திருமகளை அலைமகள் என்று குறிப்பிடுகின்றனர் என்று கச்சியப்பரின் கந்த புராணம் குறிப்பிடும். பொருட்செல்வத்தினை வாறி வழங்கும் ஆற்றலாக விளங்கிய திருமகளைச் சிவபெருமான் திருமாலின் சத்தியாக ஆக்கினார் என்பது கந்தபுராணச் செய்தி. எனவே எல்லாவிடத்தும் எப்போதும் பொருட்செல்வத்தையும் அருட்செல்வத்தையும் வழங்குகின்றவன் சிவபெருமான் என்று தெளிவாகின்றது.

தன் தந்தை சிவபாத இருதையர் வேள்வி செய்வதற்குப் பொருள் கேட்டபோது திருவாவடுதுறை சிவபெருமானை “இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்” எனும் தமிழ்மந்திரம் பாடித் திருவாவடுதுறையில் திருஞானசம்பந்தர் பொருள் பெற்றதும் அடியார்களின் பசியைப் போக்கத் திருவீழிமிழலையில்  தமிழ் மந்திரம் பாடி திருநாவுக்கரசு பெருமான் பொருள் பெற்றதும் பங்குனி உத்திரத் திருவிழாவிற்குப் பொருள் வேண்டிப் புகலூரில் செங்கல்லைத் தலைக்கு வைத்து உறங்கிய சுந்தரருக்கு அவற்றைப் பொன்னாக்கி பெருமான் தந்ததும் இன்னும் அடியார்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ள பல பொருள் பெற்ற நிகழ்ச்சிகளும் அவன் பொருளையும் வழங்குபவன் என்பதனை உறுதி செய்கின்றன.

சீனர்கள் நன்னோக்குப் பொம்மை (அதிர்ஷ்டபொம்மை) என்று வைத்திருந்த ஒரு சீனப் பொம்மைக்கு முடி அமைத்து (கிரீடம்) அதன் அருகில் கலைமகளையும் திருமகளையும் அமர்த்தி, அதனைக் குபேரன் என்று வழிபடும் பலர் திருமூலர் கூறும் அரிய உண்மைகளைத் தெளிய வேண்டும். குபேரன் பேரைச் சொல்லிப் பல்வேறு வழிபாட்டு முறைகளைச் சொல்லிக் கொடுக்கின்றவர்களும், அவ்வழிபாட்டினை நடத்துகின்றவர்களும் சிவபெருமானே குபேரனுக்கு அருள்புரிந்தார் என்று திருமூலர் கூறும் அரிய செய்தியினையும் மறவாது கூறி அவர்களை முழுமுதல் பொருளான சிவத்தை வழிபடுவதற்கு ஆட்படுத்தவும் வழிகாட்டவும் வேண்டும். உண்மைச் சமயத்தை உணர்ந்து உலகில் பொருளும் அருளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோமாக!