சைவம் காட்டும் இல்லறம்

2868

சிறப்பையும் வனப்பையும் உடைய சிவம் என்கின்ற  பரம்பொருளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் தமிழருக்கே உரிய வாழ்வியல் செந்நெறி சைவம். இச்சைவநெறியை அருநெறி, திருநெறி, பெருநெறி, ஒருநெறி  என்றெல்லாம் சம்பந்தப்பெருமான் தம் பாடல்களில் குறிப்பிடுவார். இச்சைவநெறி  இல்லறம், துறவறம் என்ற இரண்டினையும் வலியுறுத்துகின்றது. எனவேதான் “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என ஒளவை பிராட்டியும், “இல்லறம்” என்ற ஓர் அதிகாரத்தைத் தமிழ் வேதமான திருக்குறளில் திருவள்ளுவரும் பாடியுள்ளனர். அதே போன்று மேற்கூறிய இருவரும் துறவறத்தைப் பற்றியும் பாடியுள்ளனர். செந்தமிழ்ச் சிவநெறியினைக் காட்டும் பெரியபுராணமும் இல்லறத்திலும் துறவறத்திலும் வாழ்ந்து வீடுபேறு பெற்ற அடியார் பெருமக்களின் வரலாற்றினைக் கூறுகிறது.

வாழ்க்கைத் துணையைத் தேர்தல்

பழந்தமிழர் தங்கள் வாழ்க்கைத் துணையைத் திருவருளை முன்நிறுத்தித்     தெரிவு செய்தனர். ஆடவரும் பெண்டிரும் இறைவன் திருவருளால் தங்களுக்கு நல்ல துணை அமைய வேண்டும் என்ற வாழ்வியல் முறையினைக் கொண்டிருந்தனர். காதல், வீரம், அழகு என்பவை ஒரு புறமிருக்க இறைநாட்டம்  உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கினர். எனவேதான் நம் தமிழ்ப் பெண்கள் நாட்டில் நல்ல  மழை  பெய்யவும், நல்ல கணவர்கள் அமையவும் மார்கழி மாதந்தோரும் பாவை நோன்பு நோற்றனர். இறைவழிபாடு செய்யக் கூடிய கணவர்கள்  தங்களுக்கு அமைய வேண்டுமென இறைவனை நோன்பு  நோற்று வழிபட்டனர். இதனைத் தமிழ் மந்திரமான திருவாசகம், ” எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்    எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க” எனவும் ” உன்னடியார் தாள்பணிவோம்  ஆங்கவர்க்கே பாங்காவோம்   அன்னவரே எங்கணவர் ஆவார்அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்” எனவும் குறிப்பிடும்.

இத்தகைய பெண்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அக்கால ஆடவர்கள் தங்களைத் தயார் செய்து கொண்டு வாழ்ந்தனர் என்பது நுட்பமாய் உணரவேண்டியுள்ளது.

இல்லறத்தார் முறைமை
அன்பு பாராட்டுதல்

பைந்தமிழரின் உயரிய வாழ்வியல்நெறி  அன்பு பாராட்டுவது. அன்பைச் சிவத்தோடு வைத்துப் பேசியிருக்கிறார்கள். எனவேதான் தமிழாகமமான திருமந்திரம், “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” என்று கூறுகிறது. தமிழ் மந்திரத்தால் கல்லைக் கடலில் மிதக்கச் செய்த நாவரசு பெருமானும், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற, இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று அருளினார். எனவேதான் திருவள்ளுவ நாயனாரும், தெய்வம் அல்லது இறைவழிபாட்டினை இயற்றுவது இல்லறத்தார்க்கான அடுத்த முகான்மையான கூறாகக் குறிப்பிடுகின்றார். இறைவனைத் தொழாவிடில் கற்ற கல்வியினால் பயன் ஒன்றும் இல்லையென்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர், ஓளவையோ, “நீறில்லா   நெற்றி பாழ்” என்பார்.  இல்லறத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் இறைவழிபாட்டினைச்  செய்வது இன்றியமையாதது என்று சைவம் குறிப்பிடுகிறது. இறைவழிபாடே ஒருவருக்கு மனக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தி நன்னெறியில் நிற்கச் செய்கிறது. இதனால் கணவன், மனைவி, பிள்ளைகள் போன்றோரிடம் ஒழுங்கீனச் செயல்கள் குறையவும், பணிவு, பொறுமை, உண்மை, ஒழுக்கம், சான்றான்மை போன்ற உயரிய பண்புகள் மேலிடவும் வழியுண்டு. இன்றைய அதிகமான மணவிலக்குகளுக்குக் காரணமாய் அமைவது நற்பண்புகளும் இறை அச்சமும் அன்பும் இல்லாமையால் தான். சமய அறிவு இல்லாமையால் “நான்” என்கின்ற முனைப்பும் அறியாமையும் ஏற்படுகிறது.

எனவே இறைவழிபாட்டோடு நின்றுவிடாமல் இறைக்கல்வியைக் கற்கவும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கவும் இல்லறத்தார் தவறுதல் கூடாது. மனைவிக்கு இறைநெறியை அல்லது வீட்டுநெறியைச் சொல்லிக் கொடுப்பவரைத்தான் தமிழர்கள் “வீட்டுக்காரர்” என்றார்கள். கணவனை வீட்டுநெறிக்கு ஆளாக்குகின்ற இல்லாளைத் தான் “வீட்டுக்காரி” என்றார்கள் நம் முன்னோர். எனவே தான்          பெரியபுராணத்தில் இயற்பகையாரின் மனைவி தன் கணவரைத் தம் உயிருக்குத் துணையான, “ஆன்ம நேயர்” என்று சொல்லி, அவர் தம்மை அடியாருக்குக்           கொடுத்துவிட்டதை, உறுதியாகத் தன் நன்மைக்கே என்று, வந்த அடியாருடன் போவதற்கு இணங்கினார்.

இல்லறத்தார் பிள்ளைகளுக்குச் சமய கல்வியைப் பெற்றுத் தந்து அவர்களைப் பண்புடையவர்களாய் ஆளாக்க வேண்டும். இதுதான் அவர்களைக் கல்விக் கேள்விகளிலும் பிறவற்றிலும் சிறக்கச் செய்து, நன்மக்களாய் மாற்றும். இத்தகைய நற்செயல் ஏழு பிறவிக்கும் தீயவற்றைப் பெற்றோருக்குத் தராது என்பதை,

” எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்கா   பண்புடை மக்கள் பெறின் ” என்று வான்புகழ் வள்ளுவர் கூறி மகிழ்வார்.  நற்பண்புகள் உடையவராயும் தம் குடும்பத்தினரை நற்பண்புகள் உடையவர்களாயும் தேற்றியதனால் தான் சிறுத்தொண்டர் பிள்ளைக்கறி சமைத்து வீடுபேறு அடையவும், அடியாருக்கு அமுது படைத்து அப்பூதி அடிகள் வீடுபேறு அடையவும், அவரவர் மனைவியும் மக்களும் பெருந்துணையாய் நின்றனர். அமர்நீதி அடிகளோ தம் žர்மிகு குடும்பத்தினரோடு இறைவன் திருவடியை அடையும் பேறு   பெற்றார்.

வருவிருந்தைப் பேணுதலும் சைவம் காட்டும் இல்லறத்தில் இன்றியமையாததாகக் கிடக்கிறது. விருந்து என்பதை இதுவரை நமக்கு அறிமுகமில்லாதவர் என உரையாசிரியர்கள் கூறுகின்றனர். எனவே பசியோடு வருகின்ற அறிமுகமில்லாத  எவரையும் இன்முகத்தோடு அழைத்து உணவளிப்பதையும் வேண்டுவன அளிப்பதையும் žர்மிகு சைவநெறி குறிப்பிடுகின்றது. இதற்கென “விருந்தோம்பல்” எனும் அதிகாரத்தையே வள்ளுவப் பெருந்தகை பாடியுள்ளார். திருமூலர் திருமந்திரம் “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு ” என்கிறது. “ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என வள்ளல்    பெருமானும், “அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே”  என தாயுமானரும், “மன்னுயிர் ஒம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப, தன்னுயிர் அஞ்சும் வினை”  என திருவள்ளுவரும் இதனையே  குறிப்பிடுகின்றனர். எனவேதான் பெரிய புராணத்திலும் இல்லறத்தில் அன்பு பூண்டு வாழ்வது இறைவன் திருவடி என்கின்ற நிலையினைத் தருவிக்கும் என்று பாடுகிறார்.

கண்களுக்குத் தெரியாத கடவுளிடம் அன்புகாட்டுவதற்கு அல்லது பத்தி      செய்வதற்குக் கண்களுக்குத் தெரிந்த குடும்பத்தினரிடம் முதலில் அன்பு செய்து, அதை அன்பு செய்யப் பழகும் பயிற்சிக் களமாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. இறைவன் உயிர்களுக்குச் செய்துள்ள நன்றியினை எண்ணி அவனிடம் அன்பு பாராட்டுவது போன்று இல்ல உறுப்பினர்கள் செய்யும் நன்றியினை எண்ணி அன்பு பாராட்டப் பழகிக்கொள்ள வேண்டும் என்று சைவம் குறிப்பிடுகிறது. கணவனிடத்திலே மனைவியும், மனைவியினிடத்திலே கணவனும் அவரவர் பிறருக்குச் செய்யும் நன்றியை எண்ணிப் பார்த்தால் அன்பு வளரும் என்கிறது. இல்லத்தில் பிள்ளைகளைப் பாதுகாப்பதும், உணவு சமைப்பதும் வீட்டு வேலைகளைச் செய்வதும் இதர பணிவிடைகளைச் செய்வதும் கணவனுக்காக மனைவி செய்யும் எவ்வளவு பெரிய நன்றி! அதே போன்று கணவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்குமாகக் கடினப்பட்டு உழைப்பதும் அவர்களைக் கண்ணை இமை காப்பது போன்று காப்பதும் எவ்வளவு பெரிய உதவி! இவற்றை எண்ணிப் பார்த்தால் இல்லத்தில் அன்பு வளரும் என்று சைவம் குறிப்பிடுகிறது.

 பிள்ளைகளும் அப்படித்தான்! பெற்றோர் தங்களுக்காகப் படுகின்ற சிரமங்களை, செய்கின்ற அர்ப்பணிப்புகளை எண்ணிப்பார்த்தால் அன்பு வளரும் என்கிறது. இதே போன்று தான் அண்ணன், அக்காள், தம்பி, தங்கை, மாமியார், மருமகள் என்று அனைவரும் ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் நன்றியினை எண்ணிப்பார்த்தால் அன்பு வளரும் என்று சைவம் குறிப்பிடுகிறது.

ஐந்து பிரிவினரைக் காத்தல்     சமயச் சின்னங்களை அணிந்துகொள்வதும், பூசனைகளை நிறைவேற்றுவதும் மட்டுமே சைவநெறி என்று சிலர் மயங்கிக் கிடக்கின்றனர். குறிப்பாக இல்லறவாசிகள் மேற்கூறியவற்றை விடுத்து, ஐந்து கடமைகளைச் செய்வதற்கு உடையவர்களாகச் சைவம் குறிப்பிடுகிறது. இதனையே உலகப் பேராசான், ” தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு  ஐம்புலத்தாறு ஒம்பல் தலை” என்கிறார்.

இல்லறத்தார் தென்புலத்தாரைப் பின்பற்றுதலை வாழ்வியல் நெறியாக நம் தமிழர் நெறி, குறிப்பிடுகின்றது. நம் முன்னோர், அறவோர், சான்றோர், அடியார்     பெருமக்கள் போன்றோரை நன்றியினால் வணங்கி, அவர்கள் நின்ற நெறியில் நின்று, அவர்கள் பெயரால் பல அரிய செயல்களைச் செய்வதைச் சைவம் வலியுறுத்துகிறது. தெய்வச் சேக்கிழார் பெரியபுராணத்தில், தமக்குச் சமகாலத்தவராகிய திருநாவுக்கரசு பெருமான் பெயராலே அப்பூதி அடிகள் பல அறப்பணிகளைச்        செய்தார் என்று குறிப்பிடுகிறார். இது போன்று இல்லறத்தார் நம் மூதாதையரையும் சான்றோரையும் பெரியாரைத் துணைக் கோடலாகக் கொண்டு அவர்கள் பெயரால் நற்பணிகளைச் செய்தல் வேண்டும்.

இருபத்தேழு அடியவர்கள், அடியவர்களுக்கு உணவும், வேண்டியனவும்       கொடுத்தே இறையின்பத்திலே கூடினார்கள். கோயிலில் அடியவர் நலனிற்காக அறப்பணிகள் செய்வதும் வெளியே மக்கள் நலனிற்காக தம் வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கிச் செலவிடுவதும் சைவம் காட்டும் இல்லறநெறியாகும். இதனையே சமயத்தொண்டு, சமுதாயத் தொண்டு, சமய வாழ்க்கை என்றார்கள். இதை எண்ணியே தமக்கு இரண்டு நாட்களுக்கு மேல் உணவில்லையே என்பதையும் மறந்து இளையான் குடிமாற நாயனார் இரவுவரை வரும் விருந்துக்காகக் காத்திருந்து நன்றாற்றி இறையின்பத்தைக் கூடினார் என்பார்      பெரியபுராணத்தில் சேக்கிழார்.

சைவம் காட்டும் இல்லறத்தில் ஒக்கல் என்கின்ற உறவினரைக் கடைத்தேற்றுவதும் பெருங்கடமையாகச் சைவம் குறிப்பிடுகிறது. திருமணமாகிய இல்லறத்தார், இன்னும் திருமணமாகாதத் தம்பி தங்கைகள், வறுமையில் வாடும் திருமணமாகிவிட்ட உடன்பிறந்தார், பெற்றோர், உறவுமுறைகளைப் பேணிக்காத்தல் இன்றியமையாதது என்கிறது. பெற்றோரை நம் முன்னறி             தெய்வங்களாக எண்ணி, அவர்களின் இறுதி காலம் வரை வைத்துக் காப்பாற்றுவதும், அவர்களிடம் அன்பு செய்வதும், வேண்டியன கொடுத்து அவர்களை மகிழ்விப்பதும் இல்லறத்தார் கடமை. தவிர தம்பித் தங்கைகள் கல்வியில் கரை தேற்றுவதும், திருமணம் செய்து வைப்பதும், வாழ்வில் முன்னேற அடித்தளம் அமைத்துக் கொடுப்பதும் இல்லறத்தார்  கடமை. இல்லறத்தார் தனிக்குடித்தனம் போக நேரிட்டாலும் தன் உடன்பிறந்தவர்களுக்குரிய கடைமையை ஆற்றுவதிலிருந்து  தவறாமையைச் சைவம் வலியுறுத்துகின்றது.  தவிர மனைவியின் குடும்பம் அல்லது கணவனின் குடும்பத்தினைப் பேணிக்காப்பதில் இருதரப்பினரும் முனைப்பு காட்டுவதுவும் சைவம் காட்டும் இல்லறமே!

இவ்வளவையும் இல்லறத்தார்க்குக் கூறிய சைவம், தன்னை மேம்படுத்திக்   கொள்ளவும் மறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்துகின்றது. தான் முதலில் அறிவிலும், பொருளாதாரத்திலும், இறைவழிபாட்டிலும் மேம்பட்டிருந்தால்தான் மேற்கூறிய அனைத்துக் கடமைகளையும் ஆற்றி முடிக்க இயலும் என்கிறது. இறைக்கல்வியை முழுமையாகப் பெறுவதற்கும் வாழ்வில் சிக்கல்கள் இன்றி வாழ்வதற்கும் உலகியல் தேவையான பொருள் செல்வம் தேவை என்பதை,          “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாகியாங்கு” என்று திருவள்ளுவர் குறிப்பிடுவார். ஒளவை பிராட்டியும், “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றார். எனவே பொருட்செல்வத்தை மூலதனமாகக் கொண்டு அருட்செல்வத்தைத் தேடும் கடப்பாடுடையவர்களாக இல்லறத்தாரைச் சுட்டுகிறது சைவம். “தம்மையும் நோக்கிக் கண்டு, தகவெனும் வேலியிட்டுச் செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே” என்பார் திருநாவுக்கரசு பெருமான். “யான் எனது” என்ற ஆணவம் நீங்கவும், மனம், வாக்கு, காயத்தினால் தூய்மை  பெறவும், காமம், வெகுளி, மயக்கம் என்பவை நீங்கவும்    தூய்மையான மனமுடையவர்களாய் ஒவ்வொரு இல்லறத்தாரும் ஆக வேண்டும் என்பதை, “மனத்தின் கண் மாசிலன் ஆதல்” என்று வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவார்.

இதுகாறும் கண்டதன் வழி வெறும் சமயச் சின்னங்களை மட்டும் அணிந்து   கொண்டு தேவாரத் திருவாசங்களை மட்டும் ஓதிக்கொண்டு, வெறும் கிரியைகளை மட்டும் செய்து கொண்டுவிட்டு இல்லறத்தை நல்லறமாக நடத்துகிறேன் என்று      சொல்வது சைவம் காட்டும் இல்லறம் அல்ல! மேற்கூறியவற்றோடு இல்லறத்தாருக்குரிய நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வதே சைவம் காட்டும் இல்லறம்.  அதுவே நம்மைச் சிவத்தின் திருவடியில் சேர்ப்பிக்கும்.

– திருச்சிற்றம்பலம் –