இறைவனை அடையும் வழிகள் – நோன்பு

2779

ஆ.நோன்பு

                 இறைவனிடத்தில் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளில் அடுத்து வருவது நோன்பு. இந்நோன்பினை வடமொழியில் கிரியை என்பர். இதற்கு முன்பு கண்ட சீலம் அல்லது சரியை நெறியை ஆண்டான் அடிமை என்ற தொண்டு நெரியாய்க் கண்டோம். இனிவரும் நோன்பு அல்லது கிரியை நெறியைத் தமிழர் நெறியான சித்தாந்த சைவம் மகன்மைநெறி என்று குறிப்பிடுவதை இனி காண்போம். தொண்டு நெறியான சீலத்தை அரும்பு என்றும் நோன்பு நெறியை மலராகவும் சைவம் குறிப்பிடும். சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் நான்கு வாழ்வியல் நெறிக்கும் எடுத்துக்காட்டாக சைவ சமயக் குரவர்களான நால்வர் பெருமக்களைச் சைவம் குறிப்பிடும். அதில் சீலத்திற்குத் திருநாவுக்கரசு சுவாமிகளையும் நோன்பிற்குத் தமிழ்ஞானசம்பந்தரான திருஞானசம்பந்தரையும் குறிப்பிடும். தன் தந்தை தனக்காகச் செய்த உதவியை எண்ணி ஒரு மகன் தன் தந்தையை அன்பினால் போற்றி வணங்கி கண்ணிணிaர்ணிணி மல்கியதையே நோன்பு நெறி அல்லது மகன்மை நெறி என்கிறோம்.

                 சீலத்தில் இயற்றிய தொண்டுநெறி இறைவனுக்கும் அவன் வாழ்கின்ற இடங்களான வழிபாட்டு இடங்களுக்கும் அவன் அடியார்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் குருவுக்கும் இறைவன் செய்துள்ள உதவிக்கு நன்றியினால் செய்த புறச்செயல்களாய் அமைந்தன. அதாவது உடலிலுள்ள வெளிக்கருவிகளால் ஆன      செயல்களாய் அமைந்தன. நோன்பு நெறியில் உடலால் வெளியே செய்யக் கூடிய வழிபாட்டு முறைமைகள் மட்டுமல்லாது உள்ளத்தால் செய்யக்கூடிய  வழிபாட்டு முறைமைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. எனவே நோன்பு என்ற வாழ்வியல் முறைமையில் இறைவனின் உருவத்திருமேனியையோ அல்லது அருவுருவத் திருமேனியையோ மந்திரம், செயல் முறைகள், இறைத்தன்மை (மந்திரம், கிரியை, பாவனை) என்பனவற்றால் அகத்திலும் புறத்திலும் அன்பு செய்து வழிபடல் தொடர்பானவை கூறப்படுகின்றன.

                 சைவகர்கள் பொதுவாக விநாயகன், முருகன், அம்பாள் என்கின்ற இறைவனின் வெவ்வேறு வடிவத்திருமேனிகளை வைத்து வழிபடினும் திருவருட்பயன் போன்ற மெய்கண்ட சாத்திரங்கள் நடராசர், அம்மையப்பர் போன்ற திருமேனிகளை வைத்து வழிபடுவதே சிறப்பு என்று குறிப்பிடுகின்றது. தவிர சிவலிங்கம், சிவத்தீ (சிவாக்னி) போன்ற இறைவனின் (அருவுருவத் திருமேனிகளை) அருகிலிருந்து அன்பினால் தீண்டி வழிபடுதல் அல்லது பூசனை செய்தலையும் நோன்பிலே சொல்லப்படுகின்றது. தமிழர் வாழ்வியல் நெறியான சித்தாந்த சைவம் நோன்பு என்கின்ற அகப்புறப் பூசனையை அல்லது வழிபாட்டினை இரண்டாகக் குறிப்பிடுகின்றது. முதலாவது இல்லப் பூசனை (ஆன்மார்த்த பூசனை). மற்றது ஆலயப் பொது பூசனைகள் (பரார்த்த பூசனை). ஆலய பூசனைகளைப் பிறகு காண்போம். இல்லத்திலே செய்யக் கூடிய இல்லப்பூசனை அல்லது நோன்பினை இனி காண்போம்.

                 இல்லத்திலே இறைவனுக்கு அகத்திலேயும் புறத்திலேயும் செய்யக்கூடிய நோன்பினுக்குப் பூசனைகளுக்குச் சிவாகமப்படி முறையாகச் செய்யவேண்டும் என்கின்ற கட்டுப்பாடு இல்லையானாலும் சைவமரபு அடிப்படை வழுவாமல் பூசனை செய்வது சிறப்பு என்று நம் மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவ்வகையில் சைவர்கள் நோன்பு இயற்றுவதற்கு உண்மைச் சிவநெறி ஆசிரியர்களை அணுகி எளிய சிவபூசனை முறைகளை அறிய வேண்டும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. இதனையே தீக்கை பெறுதல் என்று சைவத்தில் குறிப்பிடுவர். இதனையே வடபுலத்தினர் உபநயனம் என்கின்றனர்.

                 தீக்கை என்றால் தீயின் கை இடல் என்று பொருள்படும். அதாவது சமய ஆசிரியர் சிவபூசனை அல்லது சிவநோன்பு செய்ய இருக்கின்ற அன்பரின் உயிரைச் சிவம் என்கின்ற பெருஞ்சுடரில் இட்டு, அவர் நம் அறியாமையைப் போக்கித் திருப்பித் தருவதாகப் பாவனை அல்லது உருவகம் செய்வார். தவிர தீக்கையின் போது தீக்கைப் பெருகின்றவருக்குச் சிவநெறி ஆசிரியர் சிவபெருமானை அகத்திலும் புறத்திலும் நாள்தோறும் தவறாது எண்ணிப் பூசனை அல்லது நோன்பு இயற்றும் முறைமையினையும்         சொல்லித் தருவார். சிவதீக்கைப் பெறுகின்ற ஒருவர் இன்றிலிருந்து நான் இறக்கும் வரைத் தவறாது சிவபூசனை அல்லது சிவ நோன்பினைச் செய்வேன் என்று உறுதி பூணுவார்.

                 சைவர்கள் சிவதீக்கையே பெறவேண்டும். நான்கு வயதிலிருந்து ஏழு வயதிற்குள்ளாகத் தீக்கை பெறவேண்டும் என்று நம்முன்னோர் வகுத்து வைத்துள்ளனர். பிள்ளைகளும் தாங்களும் தீக்கைப் பெற்றிருப்பதை உறுதி செய்வது பொறுப்புள்ள சைவர்களின் இன்றியமையாத கடமையாகும். தீக்கைப் பெற்ற பின்பு அதன்படியாகப் பிள்ளைகள் நோன்பினைப் பின்பற்றுகின்றார்களா என்று கண்காணிக்க வேண்டியதும் பெற்றோர்களின் கடமையாகும். அதற்குப் பெற்றோர்கள் முதலில் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். தீக்கையில் சிவநெறி ஆசிரியர் சைவர்களுக்குறிய  மூல மந்திரமான, “நமசிவய” என்கின்ற திருவைந்தெழுத்தையும், சிவனின் உருவத்திருமேனிக்கும் அருவுருவத்திருமேனிக்கும் பூசனை செய்கின்றபோது செய்ய வேண்டிய செயல் முறைகளையும் பூசனை அல்லது நோன்பு செய்ய இருக்கின்ற இறைவன் திருமேனியை எப்படிச் சிவமாகவே எண்ணுவது என்கின்ற பாவனை பற்றிய அறிவினையும் போதிப்பார்.

                 தமிழ்ச் சைவநெறியைச் சார்ந்தவர்கள் தமிழ்வேதமான திமுறைகளை ஓதி,  “நமசிவய” என்ற திருவைந்தெழுத்தினைச் சிவநெறி ஆசிரியரிடமிருந்து கேட்டும் சொல்லியும் தீக்கை பெற வேண்டும் என்பதனைப் பெறிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர் வரலாற்றில், அவருக்கு வைதீக முறைப்படி உபநயனம் செய்ய வேதியர்கள் முயல்கின்றனர். அப்போது தமிழ்ஞானசம்பந்தர் அவர்களை நிறுத்தி, அவர்களுக்கு வேத மந்திரங்களையெல்லாம் ஓதிக்காட்டி, அதில் அவர்களுக்குள்ள ஐயங்களையெல்லாம் போக்கி, அவர்கள் அறியாமையை நீக்கி, மந்திரங்களுக்கு எல்லாம் முதலாய் இருப்பது, “நமசிவய” எனும் திருவைந்தெழுத்தே என்பதனைச் “செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” என்று பதிகம் பாடி உணர்த்தினார். எனவே சைவர்கள் சைவ முறைப்படியே தீக்கைப் பெற வேண்டும் என்பது சைவர்கள் அறியவேண்டியது.

                 சைவர்கள் பெற வேண்டிய தீக்கை முறைகளைப் படிம முறையில் முறையே சமய தீக்கை, சிறப்புத் தீக்கை (சிவ தீக்கை), ஞான தீக்கை (நிர்வாண தீக்கை), ஆசான் திருமஞ்சன தீக்கை (ஆசாரிய அபிடேகத் தீக்கை) என்று வகுத்து வைத்துள்ளனர் நம்முன்னோர். சீலமான தொண்டுநெறியில் நிற்பவர்களுக்குச் சமய தீக்கை கூறப்பட்டுள்ளது. நோன்பான அகப்பூசனையும் புறப்பூசனையும் செய்யும் நெறியாளர்களுக்கும் யோகியர்களுக்கும் சிறப்புத் தீக்கை எனும் சிவ தீக்கை கூறப்பட்டுள்ளது. புறவழிபாடு இல்லாது அகத்திலே இறைவனை அறிவால் வழிபடும் ஞானியர் பெருமக்களுக்கு ஞான தீக்கை கூறப்பட்டுள்ளது. பிறருக்குத் தீக்கை செய்து வைக்கின்ற ஆசான் நிலையைப் பெறுகின்றவர்க்குச் செய்வது ஆசான் திருமஞ்சன தீக்கை என்று கூறப்பட்டுள்ளது. இச்சைவ சமய நெறிப்படி தீக்கை பெற்றவர்களே பிறருக்குச் சைவ தீக்கைகளைச் செய்துவிக்கவும் சைவ ஆலயங்களிலே பூசனை இயற்றவும் தகுதியுடையவர்கள் ஆவர். இவர்களே தங்களைச் சிவபூசனை ஆசான்கள் அல்லது சிவாச்சாரியர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் தகுதியினை உடையவர்கள் என்று “சைவ சமய நெறி” எனும் நூல் குறிப்பிடுகின்றது.

                 சமைந்து அல்லது பக்குவமுற்று இருக்கின்ற ஞானிகளுக்கும் மெய்யடியார்களுக்கும் சீவன்முத்தர்கள் என்ற நாயன்மார்களுக்கும் இறைவனே மனிதரைப் போன்று வேடம் தாங்கி வந்தோ அல்லது தன் திருக்காட்சியினை அருளியோ, அல்லது அறிவுக்கறிவாய் நின்று உணர்த்தியோ தீக்கை அளித்திருக்கிறான் என்று அடியார் பெருமக்கள் வரலாறுகள் கூறுகின்றன. நம் போன்ற சராசரி மானுடர்களுக்கு உண்மையான சைவநெறி ஆசான்கள் தீக்கை அளிப்பர். அதையும் இறைவனே நமக்குக் கூட்டுவிப்பான் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

                 இனி தீக்கை பெறுகின்ற வழிகளைக் காண்போம். முதலாவது நயனதீக்கை. அதாவது மீன்கள் தம்முட்டைகளைக் கண்களால் பார்ப்பதனால் பொரியச் செய்வது போல ஆசான் தீக்கை பெறும் அன்பருக்குத் தம் அருட்கண் பார்வையால் தீக்கை அளிப்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து ஸ்பரிச தீக்கை எனும் தீண்டல் தீக்கை. ஆசான் தீக்கை  பெறும் அன்பரைத் தீண்டுதலினால் தீக்கை அளிப்பது. அன்பரின் தலையைத் திருவடியால் தொடுதலோ அல்லது கையால் தீண்டுதலோ என்று கூறப்பட்டுள்ளது. இவ்வகைத் தீக்கையினைத் திருநாவுக்கரசு சுவாமிகளுக்கும் மாணிக்கவாசப் பெருமானுக்கும் இறைவனே தம் திருவடிகளைச் சூட்டி அருளினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது வாசக தீக்கை. இவ்வகைத் தீக்கையில் ஆசான் தீக்கை பெறும் அன்பருக்கு “நமசிவய” என்கின்ற மந்திரத்தையோ, தமிழ்வேதமான திருமுறைப் பாடலையோ போதித்துத் தீக்கை செய்துவிப்பார். திருப்புகழ் அருளிய அருணகிரிப் பெருமானுக்குத் தமிழ்க்கடவுள்  சிவபெருமான் “சும்மாயிரு சொல்லற” என்ற வாசகத்தை முருகனாக வந்து அருளினார். பட்டினத்து அடிகளுக்கு, “காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே” என்று மருதவாணராக இறைவன் வாசக தீக்கை அருளினார். “தோடு, கூற்று, பித்தா” என்கின்ற திருமுறைத் தொடர்களே வாசக தீக்கை அளிப்பதற்குத் தகுதியுடையன என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. வாசக தீக்கையில் போதிக்கப்படும் வாசகத்தின் பொருள் தீக்கை பெறுகின்ற அன்பருக்கு விளங்கும் மொழியில் இருப்பது இன்றியமையாதது.

                 அடுத்தது மானச தீக்கை என்பதாகும். தீக்கை அளிக்கும் ஆசானைத் தீக்கை பெறுகின்றவர் தாமாகவே உளமாற எண்ணி அவர் கூறியுள்ள போதனைகளை அல்லது திருவாக்கினைப் போதனையாக ஏற்றுத் தீக்கை வைத்துக் கொள்ளுதல். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற அடியார்களையும் பெரியபுராணம் கூறும் 63 சமய ஆசான்களையும் மனதால் எண்ணி மானச தீக்கை பெறலாம். அடுத்து கூறப்படுவது சாத்திர தீக்கை. இவ்வித தீக்கையில் ஆசான் சிவஞானசித்தியார், சிவஞானபோதம், உண்மை விளக்கம், திருவருட்பயன், திருமந்திரம், போன்ற மெய்கண்ட சாத்திர நூல்களிலிருந்து ஒரு பாடலைத் தீக்கை பெறும் அன்பருக்குப் போதித்துத் தீக்கை செய்து வைப்பர்.

                 அடுத்து கூறப்படுவது செறிவுத் தீக்கை அல்லது யோக தீக்கை. இத்தீக்கை முறையில் ஆசான் தீக்கை பெறும் அன்பரின் மனதில் யோக சித்தியினால் புகுந்து போதனை செய்வார். இதனை யோகமுறை கைகூடிய ஆசான்களே நிகழ்த்த வல்லவர்கள். இதை விடுத்து தீக்கை பெறும் முறைகளில் இன்று பலரும் அறிந்த வேள்வித் தீ தீக்கை கூறப்பட்டுள்ளது. இதனை அவுத்திரி தீக்கை என்று வடமொழியில் கூறுவர். சைவ முறைப்படி தீக்கை விரும்பும் அன்பர்கள் சிவவேள்வியின் வழியே தீக்கை பெற வேண்டும். இவ்வேள்வியில் வளர்க்கப்படும் தீ,  சிவத்தீயாய் எண்ணி வளர்க்கப்பட வேண்டும்.  வடமொழியில் கூறப்படும் சிவாக்னியாக இருத்தலை உறுதிசெய்தல் வேண்டும். சிவத்தீ வளர்க்கப்படும் போது சைவ ஆசான் “நமசிவய” என்கின்ற திருவைந்தெழுத்தையும் தமிழ்வேதமான திருமுறைகளையும் ஓதி சிவத்தீயை வளர்த்துத் தீக்கை பெறும் அன்பரின் உயிரைச் சிவத்தீயில் வைத்துத் தூய்மை செய்து மீண்டும் அன்பரின் உடலில் வைப்பது போன்று உருவகம் அல்லது பாவனை செய்வார். இவ்வகைத் தீக்கையே இன்று பரவலாய் வழக்கில் உள்ளது.

                 இறைவனுக்கு அகத்திலேயும் புறத்திலேயும் பூசனை இயற்றுதலைப் பற்றிக் கூறும் இந்நோன்பு வாழ்வியல் முறைமையில் ஞான தீக்கை பெறுதல் முறையைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இதில் சைவ ஆசான் தீக்கை பெறும் அன்பரின் அறிவுக்கு அறிவாய் நின்று போதிப்பார். இது சித்தர் நெறியில் நிற்கின்ற ஞானிகளுக்கு அளிக்கப்படும் முறையாகும். இதைத் தவிர மற்ற தீக்கை முறைகளைச் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களின் வழி அறிக. மேற்கூறப்பட்ட அனைத்துத் தீக்கை முறைகளும் இறைவனை முறையாக வழிபடும் முறைகளையும் பூசனை இயற்றும் முறைகளையும் போதிக்கக் கூறப்பட்டிருப்பினும் நோன்பு நெறியின் வழி இறைவனிடத்திலே ஓர் உறவையும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வினை வருவிப்பதற்கும் உண்மையான அன்பே முகான்மையானது என்று நாயன்மார்கள் உணர்த்தியுள்ளனர்.

                 இறைவனிடத்திலே ஓர் உறவினை ஏற்படுத்தி அவ்வுறவினால் வரும் உணர்வினை அல்லது அன்பினை வரவழைக்கத் தமிழர் சமயமான சைவநெறி அகத்திலும் புறத்திலும் செய்ய வேண்டிய பூசனைகளைக் குறிப்பிடுகின்றது. அதனை நோன்பு அல்லது கிரியை என்பதனைக் கண்டோம். பூசனை இயற்றும் முறைகளை அறிய சைவநெறி ஆசான்களிடம் தீக்கை பெறவேண்டும் என்றும் கண்டோம். இனி பூசனை அகத்திலும் புறத்திலும் இயற்றுவதற்கு முன்பு தெளிய வேண்டிய சில அடிப்படையான உண்மைகளைச் சைவம் நினைவூட்டுவதைக் காண்போம். பூசனை இயற்றுவதற்கு முன்பு ஒருவர் மனதில் எண்ண வேண்டிய ஐந்து உண்மைகளைச் சைவநெறி ஐந்து சுத்திகள் அல்லது பஞ்ச சுத்திகள் என்று குறிப்பிடுகின்றது.

                 அகத்திலும் புறத்திலும் பூசனை இயற்ற விரும்பும் ஒருவர் முதலில் தத்துவ சுத்தி என்பதில் தெளிவு  பெறவேண்டும். அதாவது 36 மெய்கள் என்று சொல்லப்படும் 36 தத்துவங்கள் நான் அல்ல என்று அறிதல் வேண்டும். அதாவது எடுத்துக்காட்டாக என் கண், என் காது, என் மூக்கு, என் வாய், என் மனம், என் புத்தி, என் சித்தம் போன்றவை எல்லாம் நான் அல்ல. அவற்றைச் செலுத்துவது உயிர். எனவே நான் என்பது உயிர். அது தானாகச் செயல்படாது. இறைவன் செயல் படுத்தச் செயல்படுகிறது என்ற தெளிவினைப் பெறுதல் வேண்டும்.

                 அகத்திலும் புறத்திலும் பூசனை இயற்ற விரும்பும் ஒருவர் பூசனை இயற்றும் முன்பு இந்நோன்பு      நெறியில் தெளிய வேண்டியது ஆன்ம சுத்தி என்கின்ற உயிர் சுத்தி ஆகும். அதாவது உயிரானது இறைவனின் திருவருளாலும் பெருங்கருணையாலும் எல்லாவற்றையும் அறிகின்றது என்று அறியும் தெளிவேயாகும்.

                 பூசனை இயற்றுவதற்கு முன்பு இந்நோன்பு நெறியில் அடுத்துத் தெளிய வேண்டியது, பொருள் சுத்தி அல்லது திரவிய சுத்தி என்பதாகும். அதாவது உயிர் பெறும் அனுபவமான காணுதல், கேட்டல், உண்டல், உயிர்த்தல் போன்றவையெல்லாம் இறைவன் கொடுத்த தனு, கரண, புவன, போகத்தால் நுகரப் பெறுகின்றன என்று தெளிதல். அதாவது இறைவன் தமது பெருங்கருணையால் நமக்களித்த உடல், உட்கருவிகள், புறக்கருவிகள். உலகங்கள், நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றின் துணைக்கொண்டே வாழ்வில் எல்லவற்றையும் நுகர்கின்றோம் என்று தெளிவடைதல்.

                 அடுத்து, பூசனை இயற்றுவதற்கு முன்பு, பூசனையில் சொல்லப்பட இருக்கின்ற “நமசிவய” என்ற திருவைந்தெழுத்து மந்திரத்தின் பொருளை அறிதல். அதாவது “ந” என்பது இறைவனின் நடப்பாற்றல். அதாவது நம் உயிர் முழு சமைந்த நிலை அடையும் வரையிலும் இறைவன் நிலையில்லாத இவ்வுலகத்தினை நிலைத்த இன்பம் உடையதைப்போன்று காட்டி, நிலைத்த இன்பமுடைய தம் திருவடியை மறைப்பான் என்று பொருளறிதல் ஆகும். பிறகு “ம” என்பது மலம். அது ஆணவம், கன்மம், மாயை என்ற உட்கூறுகளை உடையது. ஆணவம் எப்போதும் உயிரைப் பிடித்துக் கொண்டு உயிருக்கு அறியாமையை ஏற்படுத்தி உயிரைக் கீழ்படுத்திக் கொண்டிருக்கிறது. கன்மம் என்பது உயிர் சமைந்த நிலைக்கு வர இறைவன் அதற்கு நற்செயல் ஆற்றுதல் தீயசெயல்கள் ஆற்றுதல் என்பதனைச் சேர்ப்பித்திருக்கிறான் என்று அறிதல். மாயை என்பது அறிவிற்கு மயக்கத்தை ஏற்படுத்தினாலும் இருட்டில் சிறு விளக்கைப் போன்று இருண்ட உலகில் உயிர் தெளிவடைய இறைவனால் கொடுக்கப்பட்டது என்று அறிதல்.

                 மேலும் திருவைந்தெழுத்து மந்திரத்தில், “சி” என்பது சிவம் அல்லது இறைவன் “வ” என்பது வனப்பாற்றல் அல்லது இறைவனின் பேரருள். “ய” என்பது யாக்கை அல்லது உயிர் என்று தெளிதல். சுருங்கக் கூறின் பூசனை இயற்றும் முன் சொல்ல இருக்கின்ற “நமசிவய” என்ற மந்திரத்தில் இறைவனையும், அவன் திருவருளையும், உயிரையும், அவன் உயிர்களுக்குச் செய்யும் மறைப்பருளையும், உயிரைப் பற்றிரியுள்ள மலத்தினையும் நினைவு கூறி அவனை வழிபட இருக்கின்றோம் என்று தெளிதல் வேண்டியதைச் சைவம் குறிப்பிடுகின்றது.

                 நோன்பு நெறியில் பூசனை இயற்ற விரும்புவர் அடுத்து தெளிய வேண்டியது இலிங்கச் சுத்தி என்ற இறைச்சுத்தி. பூசனை அகத்திலும் புறத்திலும் இயற்ற விரும்பும் அன்பர், இறைவன் நம் உயிருடன் கலப்பினால் ஒன்றாய் இருந்தும் உயிரை உள்ளிருந்து செலுத்தும் வகையால் உடனாயும், இருப்பினும் பொருளால் உயிர் வேறு இறைவன் வேறு என்று நின்று மறைவாய் அருளுகிறான் என்று தெளிதல் வேண்டும். தவிர, இப்படி ஒன்றாய், உடனாய், வேறாய் உயிரையும் உலகையும் மறைவாய் நின்று செலுத்தும் இறைவன், பூசனை செய்ய இருக்கின்றவர் வழிபடப் போகின்ற சிவலிங்கத் திருமேனியிலும் நடராசர் திருமேனியிலும் வந்து நின்று அருளுவான் என்று தெளிவாய் உணர்தல் வேண்டும் என்று சைவநெறி குறிப்பிடுகின்றது.

                 இறுதியாக பூசனை செய்யுமுன் அனுட்டானம் என்கின்ற சில நடைமுறைளைச் செய்ய வேண்டும் என்று நோன்பில் சிவாகம விதிகள் குறிப்பிடுகின்றன. முதலில் பூசனைக்குப் பயன்படுத்த இருக்கின்ற நீரினைத் திருவைந்தெழுத்தைச் சொல்லி சுத்தி   செய்தல், இடத்தினைச் சுத்தி செய்தல், முகத்தினைக் கழுவி சுத்தி செய்தல்,   திருவைந்தெழுத்து மந்திரம் சொல்லி மந்திர சுத்தி செய்தல், திருநீறு அணிதல், உருத்திராக்கம் என்கின்ற கணிகைமணியைக் கணித்தல், அங்க சுத்தி என்பதில் இறைவனை உடலில் உள்ள ஆதாரங்களில் வைத்து நினைத்தல் போன்றவை சொல்லப்பட்டிருக்கின்றன. பல நடைமுறைகள்  சொல்லப்பட்டிருப்பினும் உயிர் ஈடேற்றப் பூசனையில் எளிய முறையில் உடலைத் தூய்மை செய்து, திருவைந்தெழுத்தினை ஓதி, திருநீறு அணிந்து உள்ளன்போடு இயற்றுகின்ற பூசனைக்கும் இறைவன் எழுந்தருளுவான் என்பதைக் கையில் இறைச்சியும், வாய் உமிழ்நீர் கலந்த நீரையும், தம் தலையில் சூடிய பூவையும், அன்போடு இறைவனுக்கு அளித்துப் பூசித்த கண்ணப்பருக்கும் சிவாகம விதிப்படி பூசனை இயற்றிய சிவகோச்சாரியாருக்கும் இறைவன் பேதமின்றி அருள்புரிந்தான் என்பதைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார்.

                 நோன்பு அல்லது கிரியை நெறியில் புறப்பூசனையையும் அகப்பூசனையையும் இயற்றுவது வலியுருத்தப்பட்டுள்ளமையைக் கண்டோம். அவ்விரு வகைப் பூசனைகளையும் இயற்றுவதற்கு முன்பு தெளிய வேண்டிய சில கருத்துக்களை ஐந்து சுத்திகளாகவும் அனுட்டானம் என்ற பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகளையும் கண்டோம். இனி புறப்பூசனை இயற்றும் போது  பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை இந்நோன்பு நெறியில் காண்போம்.

                 பூசனை இயற்றுவதற்கு முன்பு உடலைத் தூய்மை செய்து, தூய ஆடையினை அணிந்து, திருநீற்றினை நெற்றியில் பூசி, அன்று பூத்த மலர்களைப் பறித்தல் வேண்டும். மலர்பறித்தலிலும் கூட மலர்பறித்தல் விதிகள் என்று சைவம் பல விதிகளை நுட்பமாக அமைத்துத் தந்துள்ளது. அவற்றில் சில அதிகாலையில் மலர் பறிப்பது சிறந்தது. காரணம் அதிகாலையில் மலர்களில் உள்ள தேனைப் பருக வரும் வண்டினங்கள் அவற்றை இன்னும் எச்சில் படுத்தாமல் இருக்கும். தவிர அதிகாலையில் பனி படர்ந்து இருத்தலினால் மலர்களிலுள்ள புழுதி கழுவப்பெற்றும் புதிய புழுதி இன்னும் படராமலும் இருக்கும். தவிர பனி நீர்த்துளிகளால் மலர்கள் பொலிவுடனும் செழிப்புடனும் இருக்கும். மேலும் அப்பொழுதுதான் மலர்ந்த மலர்களில் அதன் மணம் இன்னும் நிரம்ப இருக்கும். மலர் பறிக்கின்றபோது பேசாமல், மனதில் திருமுறைகளை ஓதிக்கொண்டோ அல்லது திருவைந்தெழுத்தினை ஓதிக்கொண்டோ பறித்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டிதான் அதிகாலையில் விடிவதற்குமுன்பே இருளில் பூப்பறிப்பதற்கு ஒரு முனிவர் புலிக்கால்களையும் கூர்மையான கண்களையுடைய புலிக்கண்களையும் இறைவனிடத்தில் வேண்டிப் பெற்றார் என்ற செய்தி “சிதம்பர மான்மியம்” என்ற நூலில் வருகிறது. தவிர, மலர் பறிக்கும் போது இறைவனை மனதில் எண்ணியவாறு பறித்தல் வேண்டும் என்பதனை, “இணையார் திருவடி என் தலைமேல் வைத்தலுமே, துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன், அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற, புணையாளன் சீர்பாடி பூவல்லி கொய்யாமோ” என்று மாணிக்கத் தமிழில் திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் குறிப்பிடுகின்றார். இதற்காகத் தான் தமிழர்கள் தங்கள் வீட்டைச் சுற்றி மலர்ச் செடிகளை நடும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார்கள்.

                இறைவனுக்கு எத்தகைய மலர்களையெல்லாம் போடலாம் என்பதைத் தெய்வச் சேக்கிழார் சைவப் பெட்டகமான பெரியபுராணத்தில், எறிபத்த நாயனார் வரலாற்றில் தெளிவுற விளக்கியுள்ளார். தவிர இறைவனுக்குப் போட இருக்கின்ற மலர்கள் எத்தகைய தூய்மையானவையாக இருக்க வேண்டும் என்பதற்காக மலர்க்கூடையை இடறிய அரசனின் பட்டத்து யானையின் தும்பிக்கையைத் துணித்துப் பேறு பெற்றார் எறிபத்த நாயனார். கீழே சிந்திய மலர்களை, உதிர்ந்த மலர்களை இறைவனுக்கு அணிவித்தல் கூடாது என்பதனை இதன் வழி அறியலாம். மலர் இல்லாத சூழலில் வில்வம் போன்ற பச்சிலைகளையும் கொண்டு இறைவனை அர்ச்சிக்கலாம் என்று சைவ மலர்விதி நூல்கள் கூறுகின்றன.

                 பூசனைக்கு முன்பு மலரைத் தவிர குங்கிலியம், சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற நறும்புகைப் பொருள்களைத் தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். நல்ல விளக்கினைத் தயார் செய்தல் வேண்டும். இறைவனைத் திருமஞ்சனம் அல்லது திருநீராட்டுவதற்குத் தேவையான நீர், பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம் திருநீறு போன்றவற்றைத் தயார் செய்து கொள்ளல் வேண்டும். பதினாறு வகையான திருமஞ்சனப் பொருள்கள் இல்லாத நிலையிலும் நேரம் குறைவாக உள்ள சூழலிலும் வெறும் பாலையும் நீரையும் தயார்  செய்து கொள்ளலாம். வசதியில்லாதவர்கள் வெறும் நீரை மட்டும் கொண்டு திருமஞ்சனம் இல்லத்திலே இயற்றலாம். தவிர இறைவனுக்கு நம்மால் இயன்ற திருவமுதினை அளிக்க பொங்கலோ, முந்திரிப் பழமோ அல்லது கற்கண்டோ, பழங்களோ தயார் செய்து கொள்ளலாம். வீட்டில் இறைவனை வீற்றிருக்கச் செய்திருக்கின்ற சாமிமேடையோ, வழிபாட்டு அறையோ தூய்மையாக இருத்தலும் பொருத்தமான இடமாய் இருப்பதும் கருத்தில் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வெளியே சாக்கடை ஓரங்களிலும் குப்பை வைக்கும் இடங்களுக்கு அருகிலும் வீட்டினுள் படிக்கட்டுகளுக்கு அடியிலும், பழைய பொருட்கள் வைக்கும் அறைகளிலும் இறைவனுக்கு இடமளிப்பது முறையற்றது என்று சைவம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பூசனை இயற்றுவதற்கு முன்பு இருக்க வேண்டிய சூழலையும் உளப்பாங்கினையும் அழகுத் தமிழில் திருநாவுக்கரசு சுவாமிகள், “விடிவதுமே வெண்ணிணிaற்றை மெய்யிற் பூசி, வெளுத்தமைந்த கீளொடு கோவணமும் தற்றுச் செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும் செல்கதிக்கு வழிகாட்டும் சிவனே என்றும் ….. கடிமலர் தூய்த்தொழும் அடியார்   நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே” என்று குறிப்பிடுகின்றார்.

                 பூசனை இயற்றுவதற்கு முன் ஆற்றவேண்டிய திருமஞ்சனத்தை அல்லது இறைவனைத் திருநீராட்டுதலை நாள்தொறும் இல்லத்தில் இயற்ற முடியாதவர்கள் வாரத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் செய்யலாம். அல்லது குறிப்பிட்ட சில சிறப்புத் தினங்களான விழாக்காலங்களிலோ மற்றைய தினங்களிலோ கூடுமான அளவு தவறாமல் செய்யலாம் என்று சைவம் குறிப்பிடுகின்றது. இறைவனுக்கு நீராட்டு செய்கின்ற போது உள்ளன்போடு பச்சிளங்குழந்தையை நீராட்டுவதைப் போன்று எண்ணிணிச் செய்தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்கள், உடல் நலத்திற்கு நன்மை பயக்கக்கூடிய மூலிகை அல்லது மருத்துவத்தன்மையுடைய பொருட்களையே இறைவனை நீராட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே திருவருளோடு கூடிய திருநீராட்டுப் பொருள்களை தங்கள் உடம்பில் அணிந்து கொண்டார்கள். எடுத்துக்காட்டாகத் திருநீறு, சந்தனம் போன்றவை. திருமஞ்சனம் செய்த பால், இளநீர், கருப்பஞ்சாறு போன்றவற்றை உட்கொண்டார்கள். எனவே திருநீராட்டுப் பொருள்களைத் திருநீராட்டிற்குப் பிறகு நல்கதியை நல்குவதாய், பிணி தீர்ப்பாய் என்று உட்கொண்டும் அணிந்தும் அடுத்து இறைவனை அழகு செய்தல் வேண்டும் என்று சைவம் குறிப்பிடுகிறது. நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் பல்வேறு மலர்களாலும், திறுநீற்றாலும், சந்தனத்தாலும், வண்ண ஆடைகளாலும், அணிகலன்களாலும் நம் தகுதிக்கு இயன்ற அளவு அழகு செய்தல் வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தம் அன்புக் குழந்தையை ஈன்ற தாய் நாள்தொறும் வெவ்வேறு வகையாய் அன்போடு அலங்கரித்துக் கண்டு மகிழ்வதைப்போல் விருப்புடன் அதனைச் செய்திடல் வேண்டும் என்று  சொல்லப்பெற்றிருக்கின்றது.

                 திருநீலநக்க நாயனார் தாமும் தம் மனைவியுமாக இறைவனை அழகு செய்து நாளும் கண்டு மகிழ்ந்தனர் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

                 நோன்பு நெறியில் அகப்பூசனையும் புறப்பூசனையும் இயற்றுவதைப் பற்றிச் சித்தாந்த சைவம் குறிப்பிடுவதைக் கண்டோம். அதில் இல்லவழிபாடு செய்வதற்கு முன்பு   செய்ய வேண்டிய தயார் நிலயினைக் கண்டோம். இறைவனிடத்திலே உறவையும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வையும் வருவிக்க இனி பூசனை இயற்றுதலைக் கண்டோம். இறைவனுக்கு அன்போடு பூசனை செய்வதன் வழி இறைவனின் அன்பிற்கு ஆளாகலாம் என்பதைப் பெரிய புராணம் என்கின்ற சைவப்பெட்டகத்தில் சேக்கிழார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார். உயிர்கள் இறைவனைப் பூசனை செய்து அடையலாம் என்பதனைக் காட்டுவதற்காகவே காலகாலனாகிய ஏகம்பநாதர் வீற்றிருக்கின்ற காஞ்சிமாநகரிலே, கம்பை ஆற்றின்கரையிலே மாமரத்தின் அடியினிலே உமை அம்மை அன்போடு அமர்ந்து பூசனை செய்து ஏகம்பநாதரை வரவழைத்து, உயிர்கள் இன்புற்று வாழ அறம் வளர்த்தாள் என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இறைவன் உண்மையான பூசனைக்கு ஆட்படுவான் என்பதனை, “எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும், உண்மையாவது பூசனை என உரைத்தருள, அண்ணலார் தமை அருச்சனை புரிய ஆதரித்தாள், பெண்ணில் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து” என்று குறிப்பிடுகிறார் சேக்கிழார். எனவே இறைவனை அடைகின்ற பல வழிமுறைகளைக் கணக்கில்லாத சிவாகமங்களில் கூறியிருக்கின்ற இறைவன், உண்மையான பூசனையை மகிழ்ந்து ஏற்கிறான் என்று அறிகிறோம். எனவே பூசனையில் இன்றியமையாதது உள்ளன்பும் நாம் செய்கின்ற செயல்களில் விளக்கமும்.

                 இறைவனுக்குத் திருநீராட்டு முடிந்தவுடன் தூய்மையான ஆடை அணிகளை அணிவித்து மலர்மாலைகளையும் சூட்டி அழகு செய்ய வேண்டும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. பின்பு திருநீறு, சந்தனம், குங்குமம் அணிவித்து மங்கலமூட்ட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது. பின்பு விளக்கினை ஏற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விளக்கினை ஏற்றும்போது, “இல்லக விளக்கது இருள் கெடுப்பது, சொல்லக விளக்கது சோதி உள்ளது, பல்லக விளக்கது பலரும் காண்பது, நல்லக விளக்கது நமசிவாயவே” என்று திருநாவுக்கரசு சுவாமிகளின் தமிழ் மந்திரத்தைச் சொல்லி ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றுவதன் வழி ஒளி வடிவாய் இருக்கின்ற இறைவனை எண்ணுகிறோம். இறைவனை நாம் தொடங்க இருக்கின்ற பூசனைக்கு எழுந்தருளச் செய்கின்றோம். இறைவன் திருவருளை எண்ணுகின்றோம். இறைவன் எழுந்தருளியதாய் மகிழ்கின்றோம். இதனை, “விளக்கினை ஏற்றி வெளியை அறிமின், விளக்கின் முன்னே வேதனை மாறும், விளக்கை விளக்கும் விளக்குடையார்கள், விளக்கை விளக்கும் விளக்கவர்தாமே” என்று தமிழ் ஆகம நூலான திருமந்திரத்தில் திருமூலநாயனார் குறிப்பிடுகின்றார்.

                 நறுமணமுள்ள ஊதுபத்திகளையும் அல்லது குங்கிலியம் எனப்படும் சாம்பிராணியையும் பற்ற வைத்து நாம் பூசனை செய்ய இருக்கின்ற இடம் முழுவதும் பக்தி மணம் கமழச் செய்தல் வேண்டும். நல்ல நறுமணம் கூடிய தூப வகைகள் நமக்கு அமைதியான மனநிலையையும் இறைச் சிந்தனையையும் உண்டாக்குவதோடு காற்றைத் தூய்மை செய்கின்ற ஆற்றலையும் உடையவை என்று நம் முன்னோர்கள் கண்டுள்ளனர். பின்பு இறைவனுக்கு ஒரு கிண்ணத்தில் தூய நீரும், இயன்ற அளவு பொங்கலோ, பழங்களோ, திருவமுதாக வைக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் திருவைந்தெழுத்து மந்திரம் சொல்லி தூய்மை செய்யப்பட்ட நீரில் சிறிது மலர்களை இட்டு இறைவன் திருமுன் வைக்க வேண்டும். இறைவனை மலரிட்டு வழிபடுவதற்கு உதிரிப் பூக்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பூசனையத் தொடங்கு முன் நம் உடல், பொருள் ஆவி மூன்றினையும் இறைவன் திருவடியில் கிடத்தித் தூய்மை  செய்வதற்கு நிகராக இறைவனுக்குக் காளாஞ்சியை வைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் உடைக்கப்பட்டத் தேங்காய் கடினமான நம் அறியாமை உடைந்து வெண்மையான தூய அறிவோடு இறைவன் திருவடியில் கிடத்தப்படுவதாயும், நரம்புகளோடு கூடிய நம் உடம்பு வெற்றிலையாய்த் தேங்காய்க்குள் கிடத்தப்பட்டுள்ளதாயும், நம் இரு கைகளும் இரு கால்களும் இரண்டு வாழைப்பழங்களாக அவ்வெற்றிலையின் மேல் வைக்கப்பட்டுள்ளதாயும், நம் அனைத்துச் செல்வங்களும் பாக்கு வடிவிலே அங்கு அக்காளாஞ்சியில் வைக்கப் பட்டுள்ளதாகவும் எண்ணி காளாஞ்சியை இறைவன் திருவடியில் வைக்க வேண்டும். எனவேதான் நம் கைகளாகவும் கால்களாகவும் எண்ணி வைக்கப்படுகின்ற வாழைப்பழங்களில் ஊதுபத்திகள் செருகி வைப்பது சரியானதொன்று அல்ல என்று குறிப்பிடப்படுகின்றது. தவிர உடைக்கின்ற தேங்காய்கள் கோணலாக உடைவதும் நேராக உடைவதும் உண்மைச் சைவ அளவில் பெரும் பங்காற்றுவதில்லை. அறிவு தெளிவு பெற்றது என்பதே இதன் உண்மை விளக்கம். தேங்காய் உடைவதை வைத்துக் கொண்டு உண்மையற்ற விளக்கங்களைக் கூறுவது உண்மைச் சைவத்திற்கு ஏற்புடையது அன்று. சிதறுகாய் அடிப்பதுவும் இதனையே குறிப்பிடுகின்றது. ஒரு தேங்காயைச் சிதறச் செய்தாலும் பல தேங்காய்களைச் சிதறச் செய்தாலும் உணர வேண்டியது இவ்வுண்மையே!

                 இறைவனுக்குக் காளாஞ்சியைத் தயார் செய்த பின்பு பூசனைக்குரிய இதர  பொருட்களான கற்பூரத்தட்டு, மணி, தீபம், போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சைவர்கள் நந்தியெம்பருமான் பதிக்கப்பட்ட மணியை வைத்திருக்க வேண்டும். அம்மணியைப் பூசனையைத் துவங்கும் முன் சந்தன குங்குமமிட்டு இறைவன் திருமுன்பு இறைவனை நோக்கியவாறு வைத்தல் வேண்டும். இப்பொழுது பூசனையைத் தொடங்கு முன் உள்ளன்போடு, மீண்டும் ஒருமுறை, “எல்லாம் வல்ல இறைவா! அடியேன் செய்கின்ற இந்த எளிய பூசனையை ஏற்று எழுந்தருள்வாயாக! என்று வேண்டல் வேண்டும்.

                 பூசனையில் முதலில் செய்யப்பட வேண்டியது குருவணக்கம். கயிலாயத்தில் இறைவனிடத்தில் பாடங்கேட்டவர்களில் சனகாதி முனிவர்கள், சிவயோக மாமுனிவர், தில்லை மன்று தொழுத பதஞ்சலி என்ற பாம்புக்கால் முனிவர், வியாக்ரதபாதர் என்ற புலிக்கால் முனிவர், திருமூலர் என்ற எண்மரோடு, உமையம்மையும் நந்தியெம்பெருமானும் அடங்குவரென்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. எனவே நந்தியெம்பெருமான் பதிக்கப்பட்ட மணியை எடுத்து இறைவன் முன் வைத்து, சுத்தி செய்யப்பட்டு கிண்ணத்தில் வைத்துள்ள பூவிலிருந்து சில பூக்களை மணிநந்தியின் மேல் வைத்துப், “பூழியர் கோன் வெப்பொழித்தப் புகலியர்கோன் கழல்போற்றி, ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி, வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி, ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி” என்ற நால்வர் துதியினைக் குருவணக்கத்திற்கு ஓத வேண்டும். பின்பு மணியை வலக் கையால் எடுத்து இடக்கையினுக்கு மாற்றிக்கொண்டு, அதனை ஒலிக்க வேண்டும். மணியின் அதிர்வு “ஓம்” என்று ஒலிப்பதனால் அது இறைவன் ஓங்காரம் என்கின்ற ஓசை வடிவமாக இருக்கின்றான் என்பதை உணர்த்துகிறது என்பர். அதனாலேயே பூசனையில் மணியினை ஒலிக்கச் செய்கின்றோம்.

                 பூசனையில் அடுத்து மணியினை ஒலித்தவாறே தூபத்தினை அல்லது சாம்பிராணியை எடுத்து வைத்து சுத்தி செய்யப்பட்ட கிண்ணத்துப் பூக்களிலிருந்து சில பூக்களை எடுத்து வைத்துத் தூபத்தினைச் சுற்றி இறைவன் திருவடியில் அம்மலர்களை இட வேண்டும். இது இறைவனுக்கு அத்தூபத்தினை அளிப்பதாய்ப் பாவனை செய்வதாகும். தூபத்தினக் கையில் ஏந்தி, ஓம் வடிவத்திலே இறைவனது இடது திருக்கையிலிருந்து  தொடங்கி மேலாகத் திருத்தலைவரை உயர்த்தித் திருவடியில் காட்டித் தூபக்காலைக் கீழே வைக்க வேண்டும். இப்படிக் காட்டும் போது திருநாவுக்கரசு சுவாமிகளின் தமிழ்மந்திரமான , “சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்” என்ற பாடலை ஓதல் வேண்டும். குங்கிலியம் அல்லது சாம்பிராணிப் புகை நிறைய கிளம்பி நம் கண்களுக்குத் தெளிவாகக் காட்சிப்படாமல் இறைவன் திருவுருவத்தினை மறைப்பது போன்று நாம் பக்குவம் அடையும் வரை இறைவன் தன்னை மறைத்து நமக்கு மறைப்பாற்றலைச் செய்கின்றான் என்பதனை நமக்கு நினைவு படுத்திக் கொள்வதே     தூபம் காட்டுவதன் பொருள். உயிர்கள் பக்குவமடைகின்ற வரையிலும் இவ்வுலகத்தினை உண்மைபோல் காட்டி தன்னை மறைத்தும் பக்குவமடைந்தவுடன் தன்னைக் காட்டி இவ்வுலகை இறைவன் மறைப்பான் என்று சித்தாந்த சைவக் கூறும் உண்மையினை இங்கு தூபத்தின் வழி நினைவு கூறுகின்றோம்.

                 பூசைனையில் அடுத்து மணியினை ஒலித்தவாறே ஒற்றைத் தீபத்தினை எற்றி வைத்து, சுத்தி செய்த மலர்கள் சிலவற்றை எடுத்துத் தீபத்தினைச் சுற்றி, இறைவன் திருவடியில் இடல் வேண்டும். இறைவனுக்குத் தீபம் அளிப்பதே இதன் பொருள். முன்பு ஓம் வடிவிலே தூபம் காட்டியது போன்று தீபத்தையும் அப்படியே காட்டுதல் வேண்டும். தீபம் காட்டும்போது, “ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே” என்ற திருவிசைப்பா தமிழ் மந்திரத்தை ஓதியவாறே காட்ட வேண்டும். இறைவன் ஒளிவடிவாய் நின்று உயிர்களுக்கு அருளுகின்றான் என்று நமக்கு நினைவுப் படுத்திக் கொள்வதே தீபம் காட்டுவதன் நோக்கம்.

                 தீபம் காட்டியவுடன் மணியை ஒலித்துக்கொண்டே நீர்க்கிண்ணத்தில் உள்ள மலரினை எடுத்து இறைவனுக்கு வைத்துள்ள பொங்கலையோ, பழங்களையோ அல்லது பலகாரங்களையோ சுற்றி இறைவன் திருவாயருகே காட்டிப் பின் திருவடியில் இடவேண்டும். இது இறைவனுக்கு உணவளிப்பதாய்ப் பாவனை செய்வதாகும். இறைவன் செய்கின்ற பேருதவிக்குக் கைமாறு செய்ய இயலாது என்று எண்ணியவாறு இதனைச்     செய்ய வேண்டும். இறைவனுக்கு உணவு தேவையில்லை என்றாலும் நம் மன நிறைவிற்கே இறைவன் படைத்த பொருட்களை அவனுக்கே உணவாக அளிக்கின்றோம். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தான் சமைத்த உணவை ஊட்டுகின்றபோது அக்குழந்தை தன் தாய் சமைத்த உணவையே தன் பிஞ்சுக்கைகளால் அன்போடு அள்ளி அத்தாய்க்கு ஊட்டுகின்றபோது தான் சமைத்த உணவுதானே என்று பாராமல் அத்தாய் அவ்வுணவை மகிழ்ந்து எற்றுக்கொள்வதுபோல் இறைவனும் ஏற்றுக்கொள்கிறான் என்று சித்தாந்த சைவ சான்றோர் இதற்கு நிறைவு கூறுவர். இறைவனுக்குத் திருவமுது அளிக்கும் போது, “தனிவெள் விடைமேல் … இனிய கறியும் திருவமுதும் … நோக்களித்தார்” என்ற பெரியபுராணப்பாடலை ஓதிக்கொண்டே செய்தல் வேண்டும். வழிபாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கிரியைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட தமிழ்மந்திரங்களை ஓதுதல் சிறப்பு. இயலாதவர்கள் “நமசிவய” திருவைந்தெழுத்து மந்திரத்தைக் கூறியும் மேற்கண்ட கிரியைகளைச் செய்யலாம். எனினும் திருமுறைகள் இறப்பு வீடுகளில் மட்டும் பாடுவதற்கு உரியது, வழிபாட்டிற்கு உரியது அன்று என்று மயங்கிக் கிடக்கும் போலிச்சைவர்களின் கண்களைத் திறக்கவும் தமிழர் சைவ நெறி சிறக்கவும் திருமுறைகளைப் பயின்று வழிபடுதல் முகான்மையானது.

                அடுத்து மணியை ஒலித்துக்கொண்டே கற்பூரத்தினை ஏற்றி வைக்க வேண்டும். முன்பு செய்தது போலவே நீர்க்கிண்ணத்திலிருந்து  மலரினை எடுத்துக் கற்பூரத்தினைச் சுற்றி இறைவன் திருவடியில் அம்மலர்களை இடவேண்டும். இதுவும் கற்பூரத்தினை அளிக்கின்றேன் என்பதன் குறிப்பே! முன்பு குறிப்பிட்டது போன்று கற்பூரத்தினை ஓம் வடிவிலே காட்டி இரக்க வேண்டும். இவ்வேளையில் சேக்கிழார் சுவாமிகள் அருளிய, “கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி” என்ற தமிழ் மந்திரத்தை ஓதுதல் வேண்டும். இத்தமிழ் மந்திரங்களைப் பூசனையின் போது பண்ணிசையோடு தாளத்திற்குப் பாடுவது போன்று அல்லாமல் மந்திரம் கணிக்கின்ற முறையில் சொல்வது இன்னும் பக்தியைக் கூட்டும். கற்பூரத்தினைக் காட்டுகின்றபோது அதில் கற்பூர ஒளி இறைவன் திருமேனியைக் காட்டுவது போல, பக்குவமுற்ற உயிர்களுக்கு இறைவன் வெளிப்பட்டு அருளுவான் என்பதனை நமக்கு நினைவுறுத்தவே கற்பூரம் காட்டுகின்றோம்.

                 தமிழர் நெறியான சித்தாந்த சைவம் கூறும் நோன்பு அல்லது கிரியை நெறியில் வீட்டில் செய்யக் கூடிய புறப்பூசனையில் இறைவனுக்கு திருநீராட்டு, அழகு செய்மாலை, திருநீறு, சந்தனம், மணியொலி, தூபம், தீபம், திருவமுது, கற்பூரம் போன்றவற்றையெல்லாம் இயற்றுதல் வேண்டும் என்று கண்டோம். இதனைச் சேக்கிழார், “வாசத் திருமஞ்சனம் பள்ளித், தாமம் சாந்தம்  மணித்தூபம், தேசிற் பெருகும் செழுந்தீபம், முதலாயினவும் திருவமுதும், ஈசர்க்கேற்ற பரிசினால் அர்ச்சித் தருள எந்நாளும், பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார் சிலம்பின் ஒலி அளித்தார்” என சேரமான் பெருமாள் நாயனார் புராணத்தில் குறிப்பு இயற்றிய இப்பூசனைக்குச் சிவபெருமான் ஒவ்வொரு நாளும் தமது சிலம்பொலியினைக் கேட்பித்து அருள் செய்தார் என சைவ நெறிப் பெட்டகமான பெரியபுராணம் குறிப்பிடுகிறது. எனவே இல்ல வழிப்பாட்டினைச் செய்யும் சைவ அன்பர்கள் சிவ வடிவங்களான அம்பாள், முருகன், விநாயகன் போன்ற பெருந்தெய்வங்களோடு சிறு தெய்வங்களான மதுரைவீரன், முனியாண்டி, சங்கிலி கறுப்பன், கறுப்பண்ண சுவாமி போன்ற சிறுதெய்வங்களையும் குடும்பத்தில் இறந்த பெரியவர்களின் படங்களையும் ஒன்றாய் வைத்து அசைவ உணவு வகைகள், மதுபானங்கள், சுருட்டு, போன்றவற்றைப் படைத்து வழிபாடு செய்வது தவறு என்று சைவநெறி குறிப்பிடுகின்றது. சைவர்கள் சிறுதெய்வ வழிப்பாட்டினைக் கொள்ளக்கூடாது என்பதனைத் திருநாவுக்கரசு சுவாமிகள், “சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோமல்லோம். சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்” என்று தமிழ்மந்திரமான மறுமாற்றத்    திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். சைவர்கள் இறந்த நம் முன்னோர்களையும் குலத்தெய்வங்களையும் சிறுதெய்வங்களையும் அவர்கள் ஆற்றியுள்ள உதவிகளுக்காக வணக்கம் தெரிவிக்க வேண்டுமே தவிர அவர்களைப் பரம்பொருளான சிவத்திற்கு நிகராக இல்லத்தில் வழிபாடு செய்யக்கூடாது என்று சைவ சான்றோர் கூறுவர். இறைவனுக்கும் உயிர் வகையினருக்கும் வேறுபாடு தெரியாமல் மேற்கூறிய சைவத்திற்கு மாறான வழிபாடுகளை இல்லத்திலே செய்வதனால்தான் நம் இளைய தலைமுறையினர் உண்மையான உயர்வான நம் சைவ நெறியின் மீது நம்பிக்கை இழப்பதும் அதை புறக்கணிப்பதும் போன்ற விளைவுகள் பெருகிவருகின்றன. தவிர நம் கடவுளர்களே அசைவம், மதுபானம், சுருட்டு, அரிவாள், சாட்டை, பிரம்பு போன்றவற்றைக் கொள்வது போன்ற தோற்றத்தை அளிப்பதனால் நம் இளைய தலைமுறையினரிடம் இவை தவறு என்பதுபோய் நற்செயலாய்க் காட்சியளிக்கின்றன.

                இல்லத்தில் செய்யும் புறப்பூசனையில் கற்பூரத்தினை அடுத்து இடம்பெறுவது மலர்வழிபாடு.இப்பொழுது மணி ஒலித்தலை நிறுத்திவிட வேண்டும். “நமசிவய” என்று சொல்லி நீர்த்தெளித்து சுத்தி செய்யபட்ட உதிரிப்பூக்களைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தாண்டக வேந்தர் என்று போற்றப்பெரும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய “போற்றித் திருத்தாண்டகம்” என்கின்ற நூற்று எட்டுத் தீந்தமிழ் போற்றியை இறைவனுக்குச் சொல்லி, இறைவன் திருவடியில் மலரிட வேண்டும். “கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி,” என்று தொடங்கி, “திருமூலட்டானனே போற்றி போற்றி” என்று பத்தாவது கண்ணியின் கடைசி வரியில் முடிக்க வேண்டும். நூற்று எட்டு போற்றி சொல்ல காலம் போதாதவர்கள் முதற் கண்ணிணியையும் கடைசிக் கண்ணிணியையுமாவது சொல்லல் வேண்டும். ஒவ்வொறு முறையும் போற்றி என்று வரும்போது இறைவன் திருவடியில் மலரிட வேண்டும். தட்டிலிருந்து மலரினைக் கையினால் எடுத்து நம் நெஞ்சினருகே கொண்டு சென்று பின்பு கையினைப் புரட்டி வீசுவதைப் போல் அல்லாமல் மென்மையாய் அன்போடும் பணிவோடும் இறைவன் திருவடிகளில் மலர்களைச் சேர்ப்பித்தல் வேண்டும். நம் உள்ள அன்பினை மலர்களாக சேர்ப்பிக்கின்றோம் என்பதே மலர்களை நெஞ்சினருகே கொண்டு செல்வதன் குறிப்பு. இறைவனுக்குச் சொல்கின்ற தமிழ்மந்திரங்களான போற்றியின் பொருளை அறிந்து சொல்வதனால் போற்றியில் சொல்லப்பட்டிருக்கின்ற இறைவனின் பெருமைகளும், அவன் நமக்கு அளிக்கும் திருவருளும், அவன் நமக்குக் கைமாறு கருதாமல் செய்கின்ற உதவிகளும் அவனிடத்திலே நமக்கு ஈர்ப்பையும் அன்பினையும் பணிவினையும் குழைவினையும், உருக்கத்தினையும் ஏற்படுத்தும். சொல்கின்ற மந்திரங்களின் பொருள் விளங்காது வெறும் எண்ணிணிக்கையையும் ஒப்புவித்தலையும் மட்டுமே குறிப்பாக வைத்துக்கொண்டு ஈடுபாடின்றி செய்யும் பூசனை இறைவனிடத்திலே உறவையும் உணர்வையும் வளர்க்காது. மேலும் இப்படி வீட்டிலே பூசனையில் போற்றி சொல்கின்றபோது முழு கவனத்துடன் இயற்ற வேண்டும். வாயில் வெற்றிலைப் பாக்கு தரித்துக்கொண்டோ, வீட்டிலுள்ளவர்களிடம் எதையாவது கேட்டுக்கொண்டோ, இறைவனைப் பார்க்காது வேறெதனையோ சிந்தித்துக்கொண்டோ செய்தல் கூடாது. இதனைக், “கையொன்று செய்ய, விழியொன்று நாடக், கருத்தொன்று எண்ணப்  பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப், புலால் கமழும் மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க, விரும்பும் யான் செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே” என்று பட்டினத்து அடிகள் அகங்குழைந்து குறிப்பிடுகின்றார்.

                 இறைவனைத் தங்களது இனிய தமிழால் பாடி வருவித்து, அவன் திருவருளி€ப் பெற்று, அவன் திருவடி நீழலைக் கண்டும் காட்டியும் இருக்கின்றார்கள், நம் தமிழ் மந்திரங்களை அருளிய இருபத்தேழு திருமுறை ஆசிரியர்கள். அற்புதங்களை நிகழ்த்திய இறைத்தமிழ் மந்திரங்களை, போற்றிகளைத் தமிழ்மொழியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் வழிபாட்டில் வைத்துக் கொள்ளாதது தமிழ் சார்ந்த சைவர்களுக்குப் பெறும் இழுக்குதான். சைவர்கள் தமிழ்மந்திரங்களின் மீது நம்பிக்கையில்லாமல் இருப்பதும் அவற்றை இறைவழிப்பாட்டில் பயன்படுத்தாமல் இருப்பதும் நம் சைவ சமயக் குரவர்களான நால்வர் பெருமக்களின் திருவாக்குகளையும் இதர இருபத்து மூன்று திருமுறை ஆசிரியர்கள் மீதும் நம்பிக்கையற்று இருப்பதைப் போன்றது. “நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் அறிவித்ததை மறந்தவர்களாகி விடுவோம். “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்ற திருமூலரின் மூவாயிரம் தமிழைத் தள்ளிவைத்தவர்களாகி விடுவோம். “தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை” என்று இறைவனைத் தமிழிலிலேயே பாடி அவன் திருவடி நீழலை அடைந்த மாணிக்கவாசகரின் துணைக்கொண்டு பூசனையில் போற்றியைத் தமிழிலே சொல்ல வேண்டும்.

                 இறைவனை அடைவிக்கும் நோன்புநெறியான கிரியையில் இல்லப்பூசனையில் மலர்வழிப்பாட்டினை அடுத்துத் தொடர்ந்து பாமாலை வழிபாடு. இத்தனைத் தோத்திரம் ஓதுதல் அல்லது பஞ்சபுராணம் ஓதுதல் என்று குறிப்பிடுவர். பஞ்சபுராணம் ஓதும் போது இரு கைகளையும் குவித்து வணங்கியவாறு ஓதுதல் வேண்டும். பஞ்சபுராணம் என்பது பன்னிரண்டு திருமுறைகளான தமிழ் வேதத்தின் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்பனவாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவர் முதலிகள் என்று அழைக்கப்பெறும் அடியார்கள் அருளிய தமிழ்மந்திரங்களிலிருந்து தேவாரமாக ஒரு பாடலும், மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்திலிருந்து ஒரு பாடலும், ஒன்பது பேர் அருளிய ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பாவிலிருந்து ஒரு பாடலும், ஒன்பதாம் திருமுறையிலேயே சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டிலிருந்து ஒரு பாடலும், சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரிய புராணத்திலிருந்து ஒரு பாடலுமாக ஐந்து பாடல்களை உள்ளன்போடு ஓதுதல் வேண்டும்.

                 கருணையே வடிவமான இறைவன் அருளாளர்கள் உளமுருகிப் பாடிய திருமுறைகளுக்கு ஓடோடி வந்திருக்கின்றான். அடியார்கள் தன்னை வழிபட்டு உய்வதற்கு அவனே தமிழ் மந்திரங்களாகிய திருமுறைகளை அடியார்கள் மூலம் அருளினான். திருஞானசம்பந்தருக்கு மூன்று வயதில் ஞானப்பாலூட்டி “தோடுடைய செவியன்” என்று ஓத வைத்தான். எழுபத்து ஒன்பது வயது திருநாவுக்கரசருக்கு வயிற்றுவலியினைக் கொடுத்து “கூற்றாயினவாறு” என்று பாடவைத்து “திருநாவுக்கரசு” என்று பெயர் சூட்டினான். திருமணத்தில் அடிமை ஓலையினைக் காட்டி ஆளாகக் கொண்டு சுந்தரரைப் “பித்தா” என்று பாடவைத்தான். சுந்தரருக்குத் “தில்லைவாழ் அந்த்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக்கொடுத்து அறுபத்து மூன்று சைவ அடியார்களை அடையாளம் காட்டினான். குருந்த மரத்தினடியில் வீற்றிருந்து தன் திருவடியினைச் சூட்டி, சிவஞானபோதத்தினை ஓதுவித்து மாணிக்கவாசக சுவாமிகளைப் பாட வைத்தான். எனவேதான் இறைவனே வந்து அருளிய தமிழ் மந்திரங்களைத் தலைமேற்கொண்டு பூசனையில் ஓதுகின்றோம். தவிர இறைவன் தமிழ்மந்திரங்களான திருமுறைகளுக்கு மனமிரங்குபவன் என்பதைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தனுக்கு, உலகவர் முன் தாளம் ஈந்து, அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளன்” என்று நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார். எனவேதான் இறைவன் அருளிய, மனமகிழ்ந்து கேட்கின்ற தமிழ்மந்திரங்களான திருமுறைகளில் காலம் கருதி ஐந்தினை மட்டும் பூசனையில் ஓதுகின்றோம். தவிர அடியார்கள் ஊன்கலந்து உயிர்கலந்து நெக்குருகிக் கண்aர் மல்க பாடல்களைப் பாடும்போது நம் உள்ளமும் குழைந்து ஓங்குகின்றது. இல்லப் பூசனையில் ஐந்து பாடல்களை ஓத இயலாதவர்கள் ஒரு தேவாரப் பாடலையேனும் ஒரு பெரியபுராணப் பாடலையேனும் ஓதுதல் வேண்டும்.

                 பஞ்சபுராணம் ஓதிய பின்பு சில மலர்களை எடுத்து கூப்பிய கரங்களுக்குள் வைத்தவாறு எட்டு போற்றிகளைச் சொல்ல வேண்டும். இதனை எண்மலர்கள் சாற்றுதல் என்பர். இவ்வேளையின் போது மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய சிவபுராணத்திலுள்ள, “ஈசன் அடிபோற்றி, எந்தை அடிபோற்றி, தேசன் அடிபோற்றி, சிவன் சேவடி போற்றி, நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி, மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி, சீரார் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி, ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி” என்று எட்டுப் போற்றிகளைச் சொல்லிக் குவித்துக் கரங்களிலுள்ள மலர்களை இறைவன் திருவடியில் இடவேண்டும். பிறகு மறுபடியும் கற்பூரத் தட்டினில் கற்பூரத்தினை ஏற்றி இறைவன் திருமுன்பு வைக்க வேண்டும். சுத்தி செய்த மலர்களிலிருந்து சில மலர்களை எடுத்துக் கற்பூரத்தினைச் சுற்றி இறைவன் திருவடியில் இட வேண்டும். பிறகு கற்பூரத் தட்டினை ஏந்தி ஓம் வடிவில் முன்பு காட்டியது போன்று காட்ட வேண்டும். இதனைச் செய்யும் போது, “உலகெலாம் உணர்ந்து” என்ற பெரிய புராணத்தில் தமிழ் மந்திரத்தை ஓத வேண்டும். இறைவன் சோதியாய்த் தோன்றி நாம் வழிபடும் உருவத்திருமேனியில் நின்று அருள்புரிகிறான் என்பதே இக்கிரியையின் பொருள். தமிழர் நெறியான சைவநெறியில் அடியார் வணக்கம் முகான்மை பெறுவதனால், “என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்……மன்றுளார் அடியார் அவர் வான்புகழ், நின்றது எங்கும் நிலவி உலகெலாம்” என்று பெரிய புராண தமிழ் வேதத்தை ஓத வேண்டும். பின்பு இறைவனை வணங்கி நின்று வேண்டுதல் செய்தல் வேண்டும். உலகில் நல்ல மழை பெய்ய வேண்டும், நிறைய வளங்கள் சுரக்க வேண்டும், மன்னன் நல்லாட்சி செய்ய வேண்டும், ஒரு குறைவின்றி உயிர்கள் வாழ வேண்டும், அறம், பொருள், இன்பம், வீடு என்ற அறங்கள் சிறக்க வேண்டும், நல் சிவ வேள்விகளும் சிவ பூசனைகளும் பெருக வேண்டும். மேன்மையுடைய தமிழர் நெறியான சைவநெறி உலகெங்கும் வழங்க வேண்டும் என்று வேண்டுதல் செய்தல் வேண்டும். இனை, “வான்முகில் வழாது பெய்க, மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” என்று கச்சியப்பரின் கந்தபுராணம் பாடலைக் கூறலாம். அல்லது, “வையம் நீடுக, மாமழை மன்னுக, மெய்விரும்பிய அன்பர் விளங்குக, சைவ நன்னெறி தான்தழைத்தோங்குக, தெய்வ வெண்திருநீறு சிறக்கவே” என்ற பெரியபுராணத் தமிழ் மந்திரத்தை ஓதலாம். தான் மட்டுமின்றி உலக உயிர்கள் அனத்தும் இன்புற்றிருக்க வேண்டும் என்று பூசனையில் எண்ணுவதே உண்மையான வேண்டுதல் என்பதனைச் சைவம் குறிப்பிடுகின்றது. பூசனையில் தொடர்ந்து கற்பூரத்தினைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு திருநீறு அணிதல் வேண்டும். பிறகு சிறிது நேரம் அமர்ந்து இறைவனை மனதில் எண்ணுவதையோ (தியானம்) அல்லது திருமுறைகளை ஓதிப்பாடுதலையோ செய்தல் வேண்டும்.

                 இறைவனிடத்திலே உறவையும் உணர்வையும் வருவிக்க சைவம் கூறும் நோன்பு என்ற கிரியை  நெறியில் புறப்பூசனையாக இல்லத்தில் செய்ய வேண்டியவற்றை தவறாது செய்தல் வேண்டும். இப்பூசனையை இல்லத்தலைவர்களாகவும் இல்லத்தலைவிகளாகவும் உள்ள தாய் தந்தையரும், கணவன் மனைவியரும் தவறாது இயற்றி அவற்றைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தரல் வேண்டும். இல்லப் பூசனையை இயன்றவரை குடும்பத்திலுள்ள அனைவரையும் பங்குபெறச் செய்து இயற்றுதல் வேண்டும். இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும். நம் காலத்திற்குப் பிறகு நம் பிள்ளைகள் அதனைச் செய்வதற்கு இன்றே அடித்தளம் இடவேண்டும். நம் பிள்ளைகள் பூசனை இயற்றுவதற்கு உடனிருந்து கற்றுத்தர வேண்டும். பூசனையில் இடம்பெறும் கிரியைகளின் உட்பொருளினை அவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். நம் சைவ நெறியின் உண்மைகளை அவர்களுக்கு விளக்க வேண்டும். தெரியாவிட்டால் நூல்களின் மூலமோ அல்லது கற்றுத் தெரிந்த உண்மைநெறி ஆசிரியர்களிடமும் கேட்டுத் தெளிதல் வேண்டும். சைவநெறிப் பட்டறைகளுக்கோ, முகாம்களுக்கோ,  சொற்பொழிவுகளுக்கோ குடும்பத்தோடு சென்று அவற்றை அறிந்து கற்றுத்தர வேண்டும். சமய ஒலி நாடாக்களையோ குறுந்தகடுகளையோ வீட்டில் போட்டு அவற்றில் தெளிவு பெற வேண்டும். நோன்பு நெறியில் சிறக்க வேண்டும்.

                 தமிழர் வாழ்வியல் நெறியாகிய சைவ சமயத்தில் கிரியை எனும் நோன்பு நெறியில் தனிமனித உயிர் ஈடேற்றத்திற்கு இல்லத்தில் செய்யக்கூடிய வழிப்பாட்டினில் நாம் வழக்கமாக வீட்டில் செய்யக் கூடிய புறவழிப்பாட்டினைச் சென்ற கட்டுரையில் கண்டோம். இனி தனிமனித உயிர் ஈடேற்றத்திற்காக மனதில் அல்லது அகத்தில் ஆற்றக் கூடிய அகப்பூசனையைக் காணவிருக்கின்றோம்.

                 இல்லத்தில் இயற்றுகின்ற புறப்பூசனையிலும் சரி, அகப்பூசனையிலும் சரி, நம்மை அறியாமல் செய்துவிடுகின்ற குற்றங்களை இறைவன் மன்னித்தருளுவான் என்று தமிழ்மந்திரமான திருமுறைகள் குறிப்பிடுகின்றன. அன்போடு இயற்றுகின்ற பூசனைகளில் நம்மை அறியாமல் ஏற்படும் குற்றங்களை இறைவன் குணமாகக் கொள்வான் என்பதனை, “நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக்கரையன், நாளைப்போவானும், கற்ற சூதனற், சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணப்புல்லனென்றிவர்கள் குற்றம் செய்யினும், குணமெனக்கொள்ளும் கொள்கை கண்டு நின் குரைகழலைடந்தேன், பொற்றிரள் மணிக்கமலங்கள் மலரும் பொய்கை சூழ், திருப்புன்கூர் உளானே “என்று சுந்தரத் தமிழிலிலே இறைவனைப் பாடித் “தம்பிரான் தோழர்” என்ற சிறப்பினைப் பெற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுகின்றார்கள். எனவே சைவ அனபர்கள் இல்லத்தில் பூசனை இயற்றும்போது குற்றம் நேர்ந்த்துவிடுமோ என அஞ்சுவது விடுத்துத் துணிவுடன் பூசனை இயற்றலாம்.

                 வீட்டில் தங்காது வெளியில் தங்க நேரும் சூழலில் நீண்ட தூரம் அமர்ந்து பயணம் செய்யும் சூழல்களிலும் பூசனையைத் தவறாது நிகழ்த்துவதற்கு இவ்வகப்பூசனைப் பெரிதும் பயன் தரும். தவிர வனங்களிலும் குகைகளிலும் இருக்கின்ற துறவிகள் அகப்பூசனையைப் பெரிதும் ஆற்றுவர். தவிர இல்லத்தில் இருக்கின்றவர்கள் கூட மனவடக்கத்திற்கு அகப்பூசனை இயற்றலாம்.

                 அகப்பூசனையைப் பற்றிச் சைவப்பெட்டகமான பெரியபுராணத்தில் இரண்டு நாயன்மார்களின் வாழ்வியல் முறைமையின் வழி அருமையாகக் கூறியுள்ளார் சேக்கிழார் பெருமான். அகத்தில் இறைவனுக்குத் திருக்கோயில் எழுப்பி, கோயில் குட முழுக்கை மனதிலேயே நிகழ்ப்பித்து, அகத்திலேயே பூசனைகளெல்லாம் பலகாலம் நிகழ்த்திய பூசல நாயனாரை நாம் பின் பற்றுவதற்கு அழகுறக் காட்டுகின்றார் சேக்கிழார். தவிர நாளும் அகத்தில் இறைவனுக்குப் பூசனை இயற்றிய வாயிலார் நாயனார் வரலாற்றினையும் தீந்தமிழில் தெளிவுற விளக்கியுள்ளார் சேக்கிழார். “மறவாமையான் அமத்த மனக்கோயில் உள்ளிருத்தி, உறவாதி தனையுணரும் ஒளிவிளக்குச் சுடரேற்றி, இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி, அறவாணர்க் கன்பென்னும் அமுதமைத்து அர்ச்சனை செய்வார்” என்று வாயிலார் நாயனார் இயற்றிய அகப்பூசனையைச் சேக்கிழார் குறிப்பிடுவார். இப்படி அவர் தவறாது நீண்டநாள் அகப்பூசனை செய்ததினால் இறைவன் திருவடியை அடைந்தார் என்பதனை, “அகமலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும் நிகழவரும் அன்பினால் நிறைவழிபாடு ஒழியாமே திகழ நெடுநாட் செய்து சிவபெருமான் அடிநிழற்கீழ்ப் புகலமைத்துத் தொழுதிருந்தார் புண்ணிய மெய்த்தொண்டனார்” என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

                 எனவே அகப்பூசனை இறைவனை அடைவிக்கும் அரிய நோன்பு நெறி. இல்லத்தில் இயற்றுகின்ற புறப்பூசனையில் என்னவெல்லாம் சொல்லப்பட்டனவோ அவற்றையெல்லாமப்படியே அகப்பூசனையில் செய்யலாம். அகத்திலே இறைவன் திருமுன்பு இருப்பது போன்று பாவனை செய்துகொள்ளவேண்டும். பின்பு அகத்திலே இறைவனுக்குத் திருவிளக்கு ஏற்றுவது போன்றும், திருநீராட்டுவது போன்றும், இறைவனுக்கு ஆடை அணிகளை அணிவிப்பது போன்றும் மனக்காட்சியில் காணவேண்டும். பின்பு புறப்பூசனையில் செய்தது போன்றே மனத்திலேயே இறைவனுக்குத் தூப தீபம் காட்டுதல், கற்பூரம் காட்டுதல், திருவமுது சேர்ப்பித்தல், மலர் வழிபாடு செய்தல், பஞ்சபுராணம் ஓதுதல், அடியார் வணக்கம் செய்தல், உலக நன்மைக்காக இறைவனை வேண்டல், கற்பூரம் காட்டுதல், கண்களில் கற்பூரத்தினை ஒற்றிக்கொள்ளுதல், திருநீறு அணிதல் போன்ற இவை அனைத்தையுமே மனக் காட்சியில் கண்டு, அவற்றை இயற்றுவதாய் எண்ணவேண்டும். இதுவே அகப்பூசனையாகும்.

                 இவ்வகப்பூசனையை எங்கும் இயற்றலாம். வானூர்தியில் பயணம் செய்யும்போது அமர்ந்தபடியே கண்களை மூடி இயற்றலாம். மகிழ்வுந்து எனும் காரில் அமர்ந்தபடியே கண்களை மூடி பூசனை இயற்றலாம். காடுகளிலோ, குகைகளிலோ அல்லது தங்கும் விடுதிகளிலோ தங்க வேண்டிய சூழலில் பூசனைக்குரிய நேரத்தில் கண்களை மூடி பூசனை இயற்றலாம். அலுவலகத்தில் அமர்ந்தபடியே கண்களை மூடி இருந்த இடத்திலேயே பணச் செலவில்லாமல் அகப்பூசனையைச் செய்யாலாம். இதனையே திருநாவுக்கரசு சுவாமிகளும், “காயமே கோயிலாக கடிமனம் அடைமையாக, வாய்மையே தூய்மையாக, மனமணி இலிங்கமாக, நேயமே நெய்யும்பாலா நிறையநீர் அமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே” என்றார். எனவே அகப்பூசனை இயற்றுவதற்கு உடம்பினைத் தீயப்பழக்க வழக்கங்களிலிருந்து காப்பாற்றித் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், மனம் இறைவனுக்கு நாம்   தொண்டு செய்யும் அடிமை என்று எண்ண வேண்டும், இறைவன் மீது அளவற்ற அன்பு வேண்டும், உண்மை உடையவர்களாக இருக்க வேண்டும், உயிரைச் சிவமாக எண்ண வெண்டும். இப்படி நம்மை மனத்தில் மாசு அற்றவர்களாக வைத்துக் கொண்டோமேயானால் நாம் இயற்றும் அகப்பூசனைக்கு இறைவன் அகப்படுவான். சைவம் காட்டும் நோன்பு நெறியில் அகப்பூசைக் கைக்கூடியவர்களாகத் திகழ்வோம்.

                 வாழ்வியல் நெறியாகிய சித்தாந்த சைவம், இறைவனிடத்தில் உறவையும் உணர்வையும் வரவழைக்க நோன்பு நெறியாகிய கிரியையில் இல்ல வழிப்பாட்டினையும் அகப்பூசனையையும் பற்றிக் கூறியுள்ளமையைக் கண்டோம். இனி இந்நோன்பு நெறியில் ஆற்ற வேண்டிய ஆலய வழிப்பாட்டினையும் இயற்றப்படுகின்ற ஆலயப் பூசனையைப் பற்றியும் காண்போம்.

                 “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற ஒளவைபிராட்டியின் அமுத மொழியும் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற முதுமொழியும் “நாடு நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின், பாடிப்பணிமின் பணிந்தபின், கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வேனே” என்ற திருமூலரின் தமிழ் மந்திர மொழியும் ஆலய வழிபாட்டின் முகான்மையையும் நமக்குப் புலப்படுத்துகின்றன. இவ்வரிய நோன்பு நெறியினைச் சிரமேற்கொண்டு சீலமிகு சிவனடியார்கள் சிவத்தை அடைந்தார்கள். மூன்றே வயது நிரம்பிய திருஞானசம்பந்தர் தம் பிஞ்சுக்கால்களால் நடந்து ஆலந்தொறும் வழிபட்டார். எழுபத்து ஒன்பது வயதுடைய திருநாவுக்கரசு சுவாமிகள் மூப்பின் காரணமாகக் கால்கள் தளர்வுற்ற … … … இறைவனுக்குத் தோழனாக இருந்த சுந்தரரை இறைவன் திருமழபாடித் திருக்கோவிலுக்கு வந்து வழிபடும்படி அழைத்தார். உண்மைச் சைவ நெறி இப்படியிருக்கத் திருக்கோயில் வழிபாடும் திருவுருவ வழிபாடும் தேவையில்லாதவொன்று எனவும் அது முதிர்ச்சியற்றோர் செய்யும் வழிபாடு எனவும் கூறி மக்களைத் திசைத்திருப்புவதுவும் தவறான படிப்பினைகளைக் கற்பிப்பதுவும் தமிழர் நெறியான சித்தாந்த சைவத்துக்குப் புறம்பானதும் சிவக்குற்றமும் ஆகும். திருக்கோயில் வழிபாட்டினை வலியுறுத்தித் “திருப்பதிக் கோவை” எனும் திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடியுள்ளமையை உண்மைச் சைவர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

                 விநாயகன், முருகன், அம்பாள், நடராசர் போன்ற ஓர் உருவத் திருமேனியையோ அல்லது சிவலிங்கம், சிவத்தீ போன்ற ஓர் அருவுருவத் திருமேனியையோ அகத்திலும் புறத்திலும் வைத்து வழிபடச் சொல்லும் இந்நோன்பு என்னும் கிரியை நெறியில் இனி ஆலய வழிப்பாட்டினைக் காண்போம். ஆலய வழிப்பாட்டினுக்குச் செல்லுமுன் முன்பு குறிப்பிட்டது போன்று முதலில் இல்ல வழிபாட்டினைச் செய்துவிடல் வேண்டும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. இல்லப் பூசனையை முடித்தவுடன் ஆலயத்திற்குச் செல்வதற்கு ஏற்ற உடைகளை அணிந்து, நெற்றியில் திருநீறு அணிந்து, இயன்றவரை குடும்பத்தாரோடு செல்லல் வேண்டும். ஆலயத்திற்கு ஏற்ற ஆடை என்பது துவைத்துச் சுத்தம் செய்யப்பட்ட ஆடை.

                     நம் தமிழர் உயரிய பண்பாட்டினைக் காட்டும் ஆடை. ஆலயத்திற்கு வரும் மற்றவரின் சிந்தனையைச் சிதறடிக்காது திருக்கோயிலுக்குச் செல்லும் போதாயினும் வேட்டி, சேலை, பாவாடை, தாவணி போன்றவற்றை அணிய முற்பட வேண்டும். இல்லையேல் தமிழர் உயரிய பண்பாட்டு உடையினை அருங்காட்சியகத்திலே பார்க்கவேண்டி நேரிடும். மேலும் இன்றைய நம் தமிழர்த் திருமண நிகழ்வுகளில் மணமகனுக்கு வேட்டி அணிவிக்க ஆள்தேடுவதும் மணமகளுக்குச் சேலை அணிவிக்க ஆள்தேடுவதுமான அவல நிலை ஏற்படும். மேலும் அணிவித்த வேட்டியும் சேலையும் அவிழ்ந்து கொண்டு விடுமோ என்று இடுப்பில் இடைக்கச்சைகளையும் கயிறுகளையும் கட்டிக் கொண்டு மூச்சு விடத் திணறிக்கொண்டும் திருமணம் முடியும் வரைஅஞ்சித் தடுமாறியிருக்கும் சூழலும் ஏற்படும்.

                 ஆலயத்திற்கு அணிந்து செல்லும் ஆடை அரைகுறையாகவும் மிகுந்த ஆடம்பரமாகவும் மற்றவர் கவனத்தை ஈர்க்காதவாறும் இருத்தல் நலம். ஓசைகள் எழுப்பி மற்றவர் சிவசிந்தையைச் சிதைக்கும் வளையல்கள், கொலுசுகள் போன்றவற்றைத் தவிர்த்தல் நலம். காற்சட்டை, அரைக்காற்சட்டை, குட்டைப் பாவாடைகள், இரவில் உறங்க உடுக்கும் உடைகள், ஓய்வு எடுக்க அணியும் “மேக்ஸ’” போன்றவற்றைத் தவிர்க்கலாம். இவ்வகை உடைகள் தாம் வழிபடுவதற்கு ஏதுவாய் அமையாது போவது மட்டுமல்லாமல் பிறருக்கும் இடையூராக இருக்கும். தவிர பெண்கள் தலைவிரி கோலத்தோடுக் கூந்தலை முடியாமல் செல்வது கூடாது எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆலயத்திற்குச் செல்கையில் கரிய நிற ஆடைகளைத் தவிர்ப்பதும் கூறப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எப்படி ஆலயத்திற்குச் செல்கிறார்கள் என்பதைக் கவனித்து அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது கருத்தில் கொள்ள வேண்டியது.

                 ஆலயத்திற்குச் செல்லுமுன் நம்மால் இயன்ற பூசனைப் பொருட்களைக் கொண்டு செல்லவேண்டும். இறைவன் திருவமுதுக்குத் தேவையான பழங்களோ, அரிசியையோ, பாலோ, கருப்பஞ்சாற்றையோ, முந்திரிப் பழமோ போன்றவற்றைக் கொண்டு செல்லலாம். தவிர இறைவனை அழகு செய்வதற்காக ஆடை அணிகள், மலர் மாலைகள் போன்றவற்றைக் கொண்டு செல்லலாம். இறைவனுக்குத் திருநீராட்டுக்காக பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், பன்னீர் போன்றவை எடுத்துச் செல்லலாம். பூசனைக்காக எண்ணெய், நெய், ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி, வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு, தேங்காய், மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்களையும் கொண்டு செல்ல வேண்டும். இறைவனுக்குத் திருவமுது செய்ய அரிவாட்டாய நாயனார் மாங்காய்ப் பிஞ்சு, செந்நெல்லரிசி, செங்கீரை ஆகியவற்றைத் திருக்கோயிலிக்குக் கொண்டு சென்றார் என்பதனை, “மின்னு செஞ்சடை வேதியர்க்காமென்று, செந்நெல் இன்னமுதோடு, செங்கீரையும், மன்னு பைந்துணர் மாவடுவுங் கொணர்ந்தன்ன என்றும் அமுது செய்விப்பரால்” என சைவப்பெட்டகமான பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார். தவிர மூர்த்தி நாயனார் என்பார் இறைவனுக்குச் சந்தனக்காப்பிட தினமும் சந்தனம் கொடுத்துவந்தார் எனவும், சந்தனத்தட்டுப்பாடு  ஏற்பட்டபோது தம் முழங்கையையே சந்தனக் கல்லிலே உராய்ந்து செயற்கரிய செயலைச் செய்தார் என்றும் குறிப்பிடுகின்றார். எனவே ஆலயத்திற்குச் செல்லும்போது வெறுங்கையோடு செல்லாமல் குறைந்த அளவு கொஞ்சம் மலர்களையேனும் பறித்துச் செல்வது நலம். இயன்ற அளவு மலர்ச்செடிகளை நாமே வீட்டில் நட்டு அவற்றின் பூக்களைப் பறித்துச் செல்வது சிறப்பு
என்று ஓதப்பெற்றிருக்கிறது. எனவேதான் திருநாவுக்கரசு சுவாமிகளின் தமக்கையார் திலவதியார் நந்தவனம் அமைத்துத் திருப்பணி செய்தார். தவிர, “காவினையிட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால்…. இருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றும் நாமடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்” என இறைவன் திருநீலகண்டத்து மீது உறுதியிட்டுக் கூறுகிறார் சம்பந்தர். ஆலயத்திற்குச் செல்லுகையில் இடையில் நின்று பொருட்கள் வாங்குதல், வீண் கதை பேசுதல், வழியில் வேடிக்கைப் பார்த்தல் போன்றவை செய்யாது வாயில் “நமசிவய” மந்திரத்தையோ, திருமுறைப் பாடல்களையோ ஓதிகொண்டு செல்லல் வேண்டும். வாகனங்களில் சென்றால் திருமுறைக் குறுந்தகடுகளையோ ஒலிப்பதிவு நாடாக்களையோ கேட்டுக்கொண்டு இறை சிந்தனையுடன் செல்லல் வேண்டும்.