128. உயிர் சிவலிங்கம் ஆதல்

1473

128. உயிர் சிவலிங்கம் ஆதல்

பெருமான் உயிர்களுக்கு இறங்கி வந்து அருள் புரிகின்ற நிலைகளில் வடிவநிலைகள் (உருவத் திருமேனிகள்) பெருமானின் ஆற்றல் அல்லது சத்தி என்று கொள்ளப்படும். பெருமானின் வடிம் அற்ற நிலைகள் (அருவத் திருமேனிகள்) சிவத்தின் கூறாகக் கொள்ளப்படும். இவ்வாறு சிவக்கூறும் சத்திக் கூறும் சமமாக விரவியதே சதாசிவலிங்கம் என்பார் திருமூலர். பருமை (தூலம்), நுண்மை (சூக்குமம்) என்னும் இருவகைப் பொருள்களில் பருமை எல்லாம் சத்திக் கூறாகவும் நுண்மை எல்லாம் சிவக்கூறாகவும் குறிப்பிடுவர் என்றும் திருமூலர் குறிப்பிடுவார். இதனால் சதாசிவலிங்கமே பெருமான் பல்வேறு வடிவநிலைகளில் நின்று அருளுவதற்கு மூலமாகிறது என்பார் திருமூலர். இதனாலேயே சதாசிவலிங்க வழிபாடு பொதுநிலை வழிபாட்டை நீங்கி, சிறப்புநிலை வழிபாட்டிற்கு உரிய சிறப்பினை உடையது என்று மெய்கண்ட நூல்களும் திருமந்திரமும் குறிப்பிடுகின்றன.

சிவபெருமான் இட்டப் பணிகளைச் செய்யும் வானவர்களும் கூட தங்களைப் பற்றியுள்ள பற்றுக்கள் நீங்கச் சதாசிவலிங்கத்தினை வழிபடுவதனால், சதாசிவனாய் நிற்கும் சிவலிங்க வழிபாடே சித்தாந்த சைவர்களுக்குச் சிறந்த வழிபடு வடிவம் என்று திருமூலர் குறிப்பிடுவார். இதனை உணர்ந்தே நம் பண்டைத் தமிழர், சிவன் திருக்கோயில்களை நிறுவி அதன் கருவறையில் சதாசிவலிங்கத் திருவடிவினை அமைத்து வழிபட்டனர். இதனாலேயே இருநூற்று எழுபத்து நான்கு திருமுறைப் பாடல்கள் இடம்பெற்றத் திருக்கோயில்களும் சதாசிவலிங்கத்தையே கருவறையில் கொண்டுள்ளன. இச்சிவலிங்கத் திருவடிவினை வழிபட்டே இருபத்து ஏழு திருமுறை ஆசிரியர்களும் இறைவனின் திருவடியை அடைந்தனர். நாயன்மார்களுக்கும் சதாசிவலிங்கத் திருவடிவில் திருக்கோயிலில் வீற்றிருந்தே பெருமான் அருளினான் என்பதனைத் தெளியாமையினாலேதான் இன்றைய தமிழ்ச் சைவர்களின் திருக்கோயில்களிலும் இல்லங்களிலும் சதாசிவலிங்கத் திருவடிவு வழிபாடு அருகி வருகின்றது எனலாம்.

சதாசிவலிங்கத் திருவடிவினுக்கு ஐந்து முகங்கள் உண்டு என்று திருமூலர் குறிப்பிடுவார். அவை மேற்கு நோக்கிய முகம் (சத்தியோசாதம்) வெண்மை நிறம், வடக்கு நோக்கிய முகம் (வாம தேவம்) சிவப்பு நிறம், தெற்கு நோக்கிய முகம் (அகோரம்) கருப்பு நிறம், கிழக்கு நோக்கிய முகம் (தற்புருடம்) பொன் நிறம், நடு நோக்கிய முகம் (ஈசானம்) பளிங்கு நிறம் என்பன என்பார் திருமூலர். சதாசிவலிங்கத்தின் ஐந்து முகங்கள் உச்சி, முகம், நெஞ்சு, குறி, திருவடி என்னும் உறுப்புக்களாகவும் சொல்லப்படும். இவை மந்திர வடிவில் இருக்கின்றன என்பார் திருமூலர். இதனாலேயே சதாசிவலிங்க வழிபாட்டில் வாய் மந்திரங்களைச் சொல்ல, மனம் அவற்றிற்கு ஏற்ப பாவனையைக் கொள்ள, கை செயல் முறைகளைச் செய்ய(கிரியை முறைகள்), இறைவனை மந்திரம், கிரியை, பாவனை என்னும் மூன்றாலும் வழிபடும் சிறப்பு நிகழும் என்பார். சிவ பூசனை இயற்றுகின்றவர்கள், எத்தனை முறை தங்கள் முன்னே இருக்கின்ற சதாசிவலிங்கத்தில் பெருமானை வருமாறு அழைப்பினும் அத்தனை முறையும் அவன் ஐந்து முகங்களுடன் வந்து ஒளி வடிவில் அச்சதாசிலிங்கத் திருமேனியில் நிற்பான் என்கின்றார் திருமூலர். இதனை,

“மானந்தி எத்தனை காலம் அழைப்பினும்,
தானந்தி அஞ்சில் தனிச்சுடராய் நிற்கும்,
கானந்தி உந்தி கடந்து கமலத்தின்,
மேனந்தி ஒன்பதின் மேவி நின்றானே”

என்று குறிப்பிடுவார் திருமூலர்.

சிவச்செறிவாளர்களுக்கு (சிவயோகிகள்) உடலில் உள்ள ஆறு நிலைக்களங்களைக் (ஆதாரங்கள்) கடந்து, ஏழாம் நிலைக்களமாகிய ஆயிரம் இதழ் தாமரையிடத்திலும் அதற்குமேல் எட்டாம் நிலைக்களமாகிய நிலைக்களம் அற்ற இடத்திலும் (நிராதாரம்) அதனையும் கடந்து ஒன்பதாவதாகிய மீ நிலையிலும் பெருமான் சதாசிவலிங்கமாய் மந்திர வடிவில் நிற்பான் என்கின்றார் திருமூலர். சிவப்பூசகர்களும் சிவச்செறிவாளர்களும் இறைவனை மந்திர வடிவில் அகத்தில் காண்பதற்குச் சதாசிவலிங்க வழிபாடே அடிப்படையாகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அக வழிபாடு செய்பவர்களுக்கு அவரது உடம்பே சதாசிவமாயும் சதாசிவலிங்கமாயும் நிற்கும். மந்திர ஆற்றலினால் இன்னும் அது மந்திர சிவமாகவும் சிவனின் இன்ப உணர்வை அளிக்க வல்லதாயும் நிற்கும் என்பதனை,

“தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்,
தன்மேனி தானும் சதாசிவமாய் நிற்கும்,
தன்மேனி தற்சிவன் தற்சிவ ஆனந்தமாம்,
தன்மேனி தானாகும் தற்பரன் தானே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சிவன்” என்ற அகரமாயும் சத்தி” என்ற உகரமாயும் நிற்க இவ்விரண்டும் கூடி “ஓம்” என்ற ஓங்காரமாய் நிற்கும். இந்த ஓங்காரம், உலகம் முழுதும் பரவி உள்ளத்தில் இருந்து எழுகின்ற எல்லா எழுத்துக்களுமாக ஒலிக்கும் என்கின்றார் திருமூலர். ஓங்காரத்துள் சிவமும் சத்தியும் முறையே அகாரமும், உகாரமுமாய் நிற்பதனால், இவ்விருவரது வடிவமும் ஆகிய சதாசிவலிங்கம் ஓங்காரமாய் நிற்றலும் அவ்வோங்காரத்தின் வெளிப்படை ஐந்து முகங்களாய் மந்திர வடிவில் நிற்கும் என்பர். மந்திரங்கள் உயிருக்குச் சிவ உணர்வை எழுப்பிச் சிவனை அடைவிப்பதனால் அவ்வுணர்வே சிவனுக்கு வடிவம் என்கின்றார். இவ்வுணர்வை உயிர் பெறுவதனால் உயிர், “உயிர் இலிங்கம்” (ஆத்தும லிங்கம்) ஆதலைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை,

“அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்,
உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்,
அகார உகாரம் இரண்டும் அறியில்,
அகாரம் உகாரம் இலிங்கம் அதாமே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

இதனால் மந்திர வடிவில் நின்று சிவ உணர்வை ஏற்படுத்தி உயிரைச் சிவலிங்கமாக மாற்றும் ஓங்காரத்தின் விரிவாக்கங்களான, “நமசிவய” என்ற திருவைந்து எழுத்து மந்திரமும், பிற சிவ மந்திரங்களும் சிவ உணர்வை ஏற்படுத்தும் திருமுறைகளும் ஓதுதல் இன்றியமையாதது என்று புலப்படும்.

மனம் உலக இன்பத்தையே பெரிதும் விரும்பி நாடுகின்ற நிலையினை மந்திரத்தின் துணைக் கொண்டு, சிவ உணர்வால் அதைவிட்டு விலகினேன். உலக இன்பத்தினை விலக்கிச் சிவ உணர்வு தலைப்பட சிவனது திருவருள் புகுந்து செயலாற்றத் தொடங்கியமையால் என்னையும் என தலைவனையும் மட்டுமே மனம் எண்ணியது. அவ்வாறு எண்ணியதால் சிவன் எனது உடலையே கோயிலாகக் கொள்ளவும் என் உயிர் சிவலிங்கம் ஆகியது என்பார் திருமூலர். சிவனைப் போன்று பிற வானவர்களும் தெய்வங்களும் உயிரைத் தங்களுக்கு வடிவாய்க் கொள்ள இயலாதவர் என்பதனால் சதாசிவலிங்கமே உயிர் சிவலிங்கமாதற்கு வழிபடுதற்குரியதாகும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சதாசிவலிங்கம் மட்டுமே உயிரை இடமாகக் கொண்டு உயிரைச் சிவலிங்கமாக ஆக்கக்கூடும் என்பதனை உணராது உலகத்தவர் மற்ற வானவர்களையும் தெய்வங்களையும் நினைத்து, வழிபட்டு, தாங்கள் கொண்ட கடவுளை, “அவன் ஓர் இடத்தில் நின்றான், இருந்தான்” என்று பல்வேறு வடிவங்களில் பல இடங்களில் சென்று வழிபடுபவார்கள். ஆனால் நான், சிவபெருமான், “என் உயிராகிய வடிவத்தில் இருக்கின்றான்” என்று நிலையாக நின்று நாளும் வழிபடுவேன் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனால் சிவநெறியில் நிற்பவருக்கே உயிர் சிவலிங்கம் ஆதல் எனும் பேறு கிட்டப்பெறும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

நாத விந்து என்ற ஒலி ஒளியாயும் சிவ சத்தியுமாயும் ஓங்கார மந்திர வடிவாயும் நின்று உயிர்களுக்குச் சிவ உணர்வை ஏற்படுத்தி, உயிர்களின் உடம்பையே கோயிலாகக் கொண்டு உயிரைச் சிவலிங்கமாய்ச் சிறக்கச் செய்யும் உயரிய வடிவம் சதாசிவலிங்கம். எல்லா வடிவங்களுக்கும் மூலமான, முழுமுதற் பொருளான சதாசிவலிங்க வடிவின் சிறப்பினை உணர்ந்து,சதாசிவலிங்கத்தினை உறைப்புடன் சித்தாந்த சைவர்கள் வழிபட வேண்டும் என்பது திருமூலரின் குறிப்பு. சதாசிவலிங்கத் திருவடிவினுக்குப் பூசனைகள் இயற்றி, மந்திரங்களும் திருமுறைகளும் சொல்லி, அவற்றிற்குரிய பாவனைகளை இயற்றி அன்போடு வழிபட்டுப் பின் அவ்வடிவினை அகத்தில் இருத்தி, மந்திர ஆற்றலால் சிவ உணர்வினை எய்தி, நம் உயிரில் இறைவன் தங்க திருவருள் பதிய, உயிரைச் சிவலிங்கமாய்ப் பெறும் பேற்றினைப் பெற்று அவனின் திருவடி நீழலில் அமர்வோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!