120. திருவருளே சிவஅறிவினை நல்கும்
பொருள்களாகிய உலகச் செல்வங்கள் கள்வர், கொலைஞர், பொய்காரர், ஏமாற்றுப் பேர்வழி போன்ற இழிந்த இயல்பு உடையவர்கள் இடத்திலும் இருப்பதனால் அது நற்செல்வம் அல்ல எனவும் உயர்ந்த பண்புகள் நிறைந்தவர் இடத்திலே மட்டும் உளதாகிய அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வம் என்பதனை, “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம், பூரியார் கண்ணும் உள” என்பார் ஐயன் திருவள்ளுவர்.
பிற உயிர்களிடத்து அன்பும் பரிவும் காட்டி வாழும் வாழ்க்கையே பின்பு இறையன்பாக முதிர்ந்து, பிறகு அதன் பயனாக உயிர்களின் மீது இறைவன் காட்டுகின்ற பரிவாக அல்லது திருவருளாக விளையும் என்பதனை அருளாளர் பெருமக்கள் வாழ்ந்து காட்டிச் சென்றனர். இவ்வாறு உயிர்களின் மீது பெருமான் காட்டுகின்ற பரிவு அல்லது திருவருளைத் துணைக்கொண்டாலே அன்றி, இறைவனை அறியும் அறிவாகிய, இறைவனை நுகரும் உணர்வாகிய திறத்தைப் பெற இயலாது என்று திருமூலர்
குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவருளைத் துணைக்கொள்ளாமல் தனது சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) எனும் நன்னெறி நான்கின் திறத்தாலும் உறுதிப்பாட்டாலும் இறையறிவைப் பெற இயலும் என்பது இயலாத ஒன்று என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனையே,
“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”
என்று மணிவாசகர் குறிப்பிடுவார். ஒருவர் அறநெறியோடு நின்று நற்செல்வம் ஈட்டுவதனை இறைவனின் திருவருளே உள்நின்று உணர்த்துகின்றது என்கின்றார் திருமூலர். ஒருவருக்கு இறைவன், உயிர், உலகம் என்ற முப்பொருளின் உண்மையை ஐயத்திற்கு இடம் இல்லாமல் அவற்றின் உண்மை நிலையை உணர்வதற்கும் அவற்றைப் பிழையுற உணராமல் இருப்பதற்கும் வேண்டுவதாகிய மெய்யறிவு கிட்ட வேண்டுமானால் பெருமானின் திருவருள் வேண்டும் என்கின்றார் திருமூலர்.
ஒருவர் பெருந்தன்மை என்று சொல்லப்படுகின்ற அருளே வடிவாகிய சிவமாம் தன்மை பெறவும் இறை உலகினை அடைந்து, இறைவன் இட்ட பணிகளைச் செய்யும் இதர தெய்வங்களாய் இருக்கவும் பெருமான் அருள் செய்தாலே மட்டும் இயலும் என்பதனைப்,
“பிரான்அருள் உண்டுஎனில் உண்டுநற் செல்வம்,
பிரான்அருள் உண்டுஎனில் உண்டுநன் ஞானம்,
பிரான் அருளில்பெரும் தன்மையும் உண்டு,
பிரான் அருளில்பெரும் தெய்வமும் ஆமே”
என்று குறிப்பிடுகின்றார் திருமூலர்.
இதனையே தமது அற்புதத் திருவந்தாதியில் ஒன்பதாவது பாடலில், “பெருமானின் திருவருளே எல்லா உலகையும் ஆள்விக்கின்றது. ஈசனின் திருவருளே அனைத்து உயிர்களின் பிறப்பையும் அறுக்கின்றது. பெருமானின் திருவருளாலேயே மெய்ப்பொருளை உணரும் திறத்தைப் பெற்றேன், பெருமானின் திருவருளே எனக்கு எங்கும் எப்பொழுதும் எல்லாமாய் வந்து அருள் செய்கின்றது” என்று காரைக்கால் அம்மையார் குறிப்பிடுகின்றார்.
முன்பு காலத்திலே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்று தமிழர் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகள் இருந்தன என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இந்தியப் பெருங்கண்டம் முழுமைக்கும் விரவி இருந்த இந்தத் தமிழ் வழங்கும் நாடுகளிலே அன்பும் அருளுமே ஈடு இணையில்லாத உயர்பொருளாகவும் வழிபாட்டின் அடிப்படையாகவும் இறைக்கொள்கையாகவும் பேணப்பட்டு வந்துள்ளது என்று திருமூலர் குறிப்பிடுவதாய் மகாவித்துவான் அருணை வடிவேலனார் குறிப்பிடுகின்றார். உயிர்கள் தங்களிடத்தே கொண்டுள்ள அன்பே இறை அருளாய் விளையும் என்ற சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவ நெறியினை அறிந்திராத பிறநாட்டவர் தமிழ் மண்டலங்கள் ஐந்திலும் நுழைந்து, இதனினும் மேலான, மிகப் பரந்த அறிவினை, இறைக்கொள்கையினை உணர்த்துவதாகப் பிதற்றி அன்பிற்கும் அருளுக்கும் சற்றும் ஏற்புடையது அல்லாத பல கொள்கைகளைத் திணித்துத் திரிவர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
உயிர்களின் அன்பின் நிலைக்கு ஏற்ப, உயிர்களின் செவ்விக்கு ஏற்ப, சிவபெருமான் உயிர்களுக்கு அருளுடையவனாய், இறையறிவினை நல்குகின்றான் என்பதனை அறியாது அயல் நாட்டவரின் வழக்குகளை ஏற்று அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றவர் இறை அருளையும் இறைவனின் திருவடியை அடைதற்குத் துணைநிற்கின்ற இறையறிவையும் பெறமாட்டார்கள் என்பதனைத்,
“தமிழ்மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்,
உமிழ்வது போல உலகர் திரிவார்,
அவிழும் மனமும் ஆதி அறிவும்,
தமிழ்மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே”
என்று திருமூலர் சாடுகின்றார்.
உலக வாழ்க்கையில் விருப்பினால் ஆற்றும் நற்செயல்களும் வெறுப்புக் கொண்டு ஆற்றும் தீய செயல்களுமே நம் அன்பு வளர்வதற்கும் அன்பு அருகிப் போவதற்கும் ஏதுவாகின்றன. ‘நல்வினை’, ‘தீவினை’ என்ற இவ்விருவினைகளின் அதன் விளைவுமே இறைவனிடத்திலும் பிற உயிர்களிடத்திலும் அன்பை வருவித்துப் பின் அருளை வருவிப்பதற்குத் துணையாக உள்ளன என்பதனை இவ்வுலகில் வாழும்போதே அறிகின்றவர் மிகச் சிலரே என்கின்றார் திருமூலர். அத்தகைய மெய்யறிவாளர்களை அறிந்து அவர்கள் நின்ற வழியினைப் பின்பற்றினால் இறைவனின் திருவருளை அடைதற்குத் தடையாய் உள்ள அவ்விரு வினைகளையும் போக்கிக் கொள்ளலாம் என்பதனைப்,
“புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்,
நண்ணும் பொழுதுஅறிவார் சில ஞானிகள்,
எண்ணி இரண்டையும் வேர்அறுத்து அப்புறத்து,
அண்ணல் இருந்திடம் ஆய்ந்து கொள்ளீரே”
என்கின்றார் திருமூலர். உண்மையான அன்பே அருளை விளைவிக்கும் என்பதனை,
‘அன்பு ஈனும் குழவி அருள்’
என்று ஐயன் திருவள்ளுவரும் குறிப்பிடுவார்.
சிவனிடத்தும் அவன் வாழும் உயிர்களிடத்தும் வைக்கின்ற அன்பாலே இருவினைகள் கெட இறைவனின் திருவருள் தலைப்படவும் சிலர் அப்பெருமானின் திருவடியை வேண்டாது தேவர் உலகத்தில் உள்ள தேவர் பதவியையும் சிற்சிறு ஆற்றல்களையும் வேண்டுவர் என்கின்றார். அதனையும் அவர்கள் வேண்டியவாறே பெருமான் தனது பெரும் பரிவால் அளிப்பான் என்கின்றார் திருமூலர். இதனால் சிலர் மாந்த உடலுடன் நின்றே தெய்வங்களோடு ஒத்த ஆற்றல் பெற்று விளங்குவர் என்றாலும் சிவனது அருளால் முழுமையாகவும் சிறப்பாகவும் இருவினை நீக்கம் பெறப் பெறாமையால் சிவனது திருவருள் அவர்க்கு உண்மையாகக் கூடிற்று என்று கூறுதல் இயலாது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
சீலம், நோன்பு, செறிவு என்ற தவ முயற்சிகளினால் சிலர் சிவ உலகை அடையும் பேற்றினைப் பெறினும் சிவஅருளையும் சிவஅறிவையும் பெறுதற்கு இறைஉலக உடலோடு நின்று அங்கே அரிய தவத்தினை ஆற்றியே ஆக வேண்டும் என்கின்றார் திருமூலர். எத்தகையோரும் இறை அன்பை முன் இருத்திப் பெருமானின் திருவருளைப் பெற்றப் பின்பே, அத்திருவருளின் துணையோடு சிவனடியை உணர்வர் என்பதனை,
“அவ் வுலகத்தே பிறக்கில் உடலொடும்,
அவ் வுலகத்தே அரும்தவம் நாடுவர்,
அவ் வுலகத்தே அரன்அடி கூடுவர்,
அவ் வுலகத்தே அருள்பெறு வாரே”
என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
உலகில் உள்ள பல நாட்டவரிடத்தும் நாம் வாழும் நாட்டில் உள்ள பல இனத்தவரிடத்தும் எனக்கு உற்றாராய் இருக்கின்ற மனைவி, மக்கள், உறவினர் நண்பர் போன்றவரிடத்தும் பிற உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி, அளவளாவி, சிவபெருமான் எங்கு உளான் என்று தேட வேண்டும் என்கின்றார் திருமூலர். முதலில் நம் தேடலுக்கு அவன் அகப்படமாட்டான் என்கின்றார் திருமூலர். எனினும் நம் அன்பு முற்றிய காலத்து அவனே அவனின் பேர் அருளின் கரணியமாகத் தன்னைக் காட்டுவான் என்கின்றார். அப்படி அவன் அன்பெனும் பிடியில் அகப்பட்டபோது, “சிவபெருமான் கிடைத்தான்” என்று மகிழ்ந்து அவனோடு சேர வேண்டும் என்கின்றார். சேர்ந்த பின் உங்கள் உயிர், வேறு ஒன்றைப் பற்றாது அவன் திருவடியையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுமாறு இவ்வுடம்பு அழியும் வரை அவனிடத்தில் அன்பு செய்யுங்கள். அப்படிப் பற்றிக் கொண்டு அன்பு செய்தால், பரிவின் கடலாகிய அப்பெருமான் உங்களுக்குத் தனது அருளினைக் கொடுத்துத் தன் திருவடியில் சேர அருள்புரிவான் என்கின்றார் திருமூலர்.
“அன்பு செய்வாரைச் சிவன் அறியும்”
என்ற அருளாளர்களின் வாக்கிற்கேற்ப நாள்தொறும் பெருமானுக்கு அன்பு செய்வோம்.
அவன் வாழும் இடமாகிய உலக உயிர்களுக்கு அன்பு செய்து, அன்பின் பிழம்பாய்த் திகழ்ந்து, பெருமானின் திருவருள் வரப்பெற்று அவனின் திருவடிநீழலில் அமர்ந்த மெய்யடியார்களின் அடியொற்றி வாழ்வோம். நாமும் அவனின் திருவருளுக்கு ஆளாவோம்.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!