26.விளங்கு ஒளியாய்
செந்தமிழ்ச் சைவர்களின் வழிபடு பரம்பொருளாய் விளங்குவது சிவம் எனும் செம்பொருள். செம்பொருளான அச்சிவத்தை அதன் பொது நிலையில் பிள்ளையார், முருகன், அம்மை, சிவன் என்று வடிவ நிலையில் வழிபடுவர். பொதுநிலை சிவத்தை வடிவம் அற்ற நிலையில் அறிவின் தெளிவாக வைத்து வழிபடுவர். பொதுவில் வரும் சிவத்தை வடிவமும் வடிவம் அற்ற நிலையில்(அருவுருவம்) சிவலிங்கம் எனும் சிவக்கொழுந்தாகவும் சிவம் நின்று அருள் புரியும் உலகப் பொருள்களாகவும் காண்பர். இதனையே வானாகவும் மண்ணாகவும் நீராகவும் வளியாகவும் தீயாகவும் ஊனாகவும் உயிராகவும் எண்ணுதல் என்பர். இவற்றில் சிவம் எனும் செம்பொருளைத் தீயாகவும் ஒளியாகவும் காண்பது முதன்மைப் பெறுகின்றது. தீயையும் விளக்கையும் அதன் ஒளியையும் தமிழ்ச் சைவர்கள் சிவத்திற்குக் குறியீடாக, அடையாளமாகக் காணினும் அவை வெறும் சடப்பொருள்களே அன்றி, அவையே சிவம் அல்ல எனும் தெளிவினை உடையவர்கள் தமிழ்ச் சைவர்கள்.
உயிர்களைப் பற்றியுள்ள அறியாமை எனும் இருளைப் போக்கி அறிவு ஒளி எனும் விளக்கத்தைக் கொடுக்கும் சிவத்தை உலக இருளைப் போக்கும் விளக்கைக் கொண்டு அருளாளர்கள் தெளிவுபடுத்தினர். உலக இருளைப் போக்கும் விளக்கு ஒளி குன்றக் கூடியதும் அணையக் கூடியதும் ஆனது. சிவம் எனும் செம்பொருளான விளக்கு என்பதோ ஒளி என்றும் குன்றாது நிற்பது. இதனையே மணிவாசகர் விளங்கு ஒளியாய் என்று சிந்தையைக் கோயிலாக்கும் திருவாசகத்தின் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். சிவம் எனும் மேலான சுடர், என்றும் தனது சிறப்பினை, இயல்பினை இழக்காது என்பதனைச் சுந்தர மூர்த்தி அடிகளும், “நொந்தா ஒண் சுடரே நுனையே நினைந்திருந்தேன்” என்று குறிப்பிடுகின்றார்.
பேர் அறிவுப் பெருஞ்சுடராக விளங்கும் அப்பெருமான் நல் உள்ளங்களில் அறிவு ஒளியாகத் தோன்றுவான் என்பதனை, திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். இல்லங்களில் ஏற்றி வைக்கப்படும் விளக்குகள் புற இருளைப் போக்கக் கூடியவை. பல்லோர் இல்லங்களிலும் ஏற்றி வைக்கப்படும் விளக்கானது பலராலும் எளிதாகக் காணக்கூடியது. நாம் சொல்கின்ற உண்மையான, தூய சொல்லில் நிற்பவனாகிய, ‘நமசிவய’ என்ற பெயர் கொண்ட அப்பெருமான் நல்லவர்களின் உள்ளங்களில் என்றும் தனது ஒளி குன்றாத அறிவொளியாகச் சிவஒளியாகத் தோன்றுவான் என்பதனை,
“இல்லக விளக்கது இருள் கெடுப்பது,
சொல்லக விளக்கது சோதி உள்ளது,
பல்லக விளக்கது பலரும் காண்பது,
நல்லக விளக்கது நமசிவாயவே”
என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுகின்றார்.
உளத்தூய்மையோடு அன்பு மிக்கவர்களாய் உள்ளவர்கள் பெருமானை வாழ்த்தி வணங்க, அவன் உள்ளத்தில் உறையும் குன்றாதச் சோதியாய், ஒளியாய்த் தோன்றுவான் என்பதனை, “வாழ்த்த வல்லார் மனத்துள் உறு சோதியை” என்று திருமூலர் குறிப்பிடுவார். இதனையே, “ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே..அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே” என்று திருவிசைப்பாவில் திருமாளிகைத் தேவர் குறிப்பிடுகின்றார். பெருமானை அருள் பேரொளியாக அகத்திலே கண்டு வழிபட்டவர் வடலூர் இராமலிங்க அடிகள். திருவாசகத்தை அருளிய மாணிக்க வாசகப் பெருமானைத் தன் சிரத்தின் மேல் வைத்துப் போற்றிய வள்ளல் பெருமான், மணிவாசகர் குறிப்பிட்ட, ‘அருட்பெருஞ்சோதி’ எனும் குறிப்பையே தமது மூச்சாகக் கொண்டு, ‘அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை’ என்று பெருமானை வாழ்த்தி மகிழ்ந்தார்.
விளங்கு ஒளியாய், அணையா விளக்காய், பெருஞ்சுடராய், அறிவுப் பேர் ஒளியாய், உயிர்களின் கற்பனைக்கும் சொல்லுக்கும் உணர்வுக்கும் எட்டாத பொருளாய் உள்ள அப்பெருமானைப் பாமரரும் சற்று அறியும் வகையிலே ஒளி குன்றக் கூடிய, புறத்தில் காணும் சுடர்களாகிய கதிரவன், மதி, தீ ஆகியவற்றின் அளவிலே காட்டி நின்றனர். நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற பஞ்ச பூதங்களிலும் கதியிலும் மதியிலும் உயிரிலும் பெருமான் எட்டு வடிவங்களில் (அட்ட மூர்த்தம்) நின்று அருளுவதாய்க் குறிப்பிட்டார்கள். பின்னாளில் ஒருபோதும் இறைவனாக ஆக முடியாத அந்த எட்டுப் பொருள்களையுமே பெருமானாக எண்ணிப் பலர் மயக்குற்றனர்.
பெருமான் குன்றாத ஒளியுடைய பேர் அறிவுப் பொருளாய் இருக்கின்றான் என்பதனை உணர்த்த அணையக்கூடிய நல்ல விளக்கு, குத்து விளக்கு, அகல் விளக்கு, கற்பூரம் போன்றவற்றை ஏற்றி அவற்றை இறைவடிவாக எண்ணி மகிழ்ந்தனர் நம் முன்னோர். அத்தகைய விளக்குகளை உடல் நலத்திற்கு நன்மை பயக்கக் கூடிய பல்வேறு மருத்துவ நன்மைகள் உடைய ஆவின் நெய், இலுப்பை, எள், தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளை நிரப்பி ஏற்றிப் பயன் அடைந்தனர். இவ்வாறான விளக்குகளைத் தங்கம், வெள்ளி, வெண்கலம், களி மண் ஆகியவற்றால் செய்து ஏற்றினால் சொல்லப்படும் மந்திர ஆற்றல் அவ்விளக்குகளில் நின்று பயன் அளிக்கும் என்று அறிந்திருந்தனர். அரிசியினால் மாவிளக்குகள் ஏற்றி அவற்றை உண்டும் சிற்றுயிர்களுக்கு அளித்தும் மகிழ்ந்தார்கள்.
மருத்துவ நலமும் வெளிச்சமும் விளக்குகள் ஏற்றுவதனால் ஒருபுறம் இருக்க, பேர் அறிவாய் நம் உள்ளே நம் அறிவை விளக்கும் விளக்காய்ப் பெருமான் உள்ளான் என்பதனை விளக்குகள் உணர்த்துகின்றன என்ற உணர்வு மங்கி வருகின்றது. இன்ன பொருளால் ஆன விளக்கு ஏற்றினால் இன்ன பயன் என்றும் இன்ன எண்ணெய்யைக் கொண்டு விளக்கு ஏற்றினால் இன்ன பயன் என்றும் தவறான வழிகாட்டுதலால் இன்று பலரும் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர். திருமணம் ஆவதற்கு ஒரு விளக்கு, குழந்தை பெறுவதற்கு ஒரு விளக்கு, குடும்பச் சிக்கல்கள் தீருவதற்கு ஒரு விளக்கு, செல்வம் வருவதற்கு ஒரு விளக்கு என்று இன்று பலரும் அறியாமையில் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சிவனுக்கு ஒரு விளக்கு, தென்முகக் கடவுளுக்கு (தட்சிணாமூர்த்தி) ஒரு விளக்கு, அம்மைக்கு ஒரு விளக்கு, துர்க்கைக்கு ஒரு விளக்கு, திருமகளுக்கு (இலக்குமி) ஒரு விளக்கு, மாரியம்மனுக்கு ஒரு விளக்கு, வியாழனான கோளுக்கு ஒரு விளக்கு, சனிக் கோளுக்கு ஒரு விளக்கு, நிழற்கோள்களான இராகு, கேதுவுக்கு ஒரு விளக்கு, இறந்தவர்களுக்கு ஒரு விளக்கு என்று விளக்கின் வகைகளும் விலைகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. தவிர என்ன எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் விரைவில் இறைவன் வெளிப்படுவான் என்ற மயக்குச் செய்தி ஒருபுறம் இருக்க, எந்தெந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் இறைவன் வருவான், மற்ற நேரங்களில் விளக்கு ஏற்றினால் தீய ஆற்றல்கள் வரும் என்ற அச்சுறுத்தல்களும் இன்று மலிந்து கிடக்கின்றன.
உள்ள இருளைப் போக்குவதற்கு என்ன செய்தால் வெளியே ஒளியாகத் தோன்றும் விளக்கினைப் போன்று அகத்திலே விளங்கு ஒளியாகத் தோன்றும் பெருமான் விளங்கித் தோன்றுவான் என்பதனைச் சிந்தித்தல் இன்றியமையாதது ஆகும். இதனாலேயே தமிழ்ச் சைவர்கள் தங்களின் திருக்கோயில் வழிபாட்டிலும் இல்ல வழிபாட்டிலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் விளக்கு ஏற்றுவதனை முதன்மைப் படுத்தினர். மணப்பெண்ணின் கையில் நல்ல விளக்கினை ஏந்தச் செய்வதும் திருமண மேடையில் நாத்தியை நாத்தி விளக்கு ஏந்தச் செய்வதும் பூசனை அறையில் நல்ல விளக்கு ஏற்றுவதுவும் இறந்தவர் தலைமாட்டில் விளக்கு ஏற்றுவதும் பொது நிகழ்ச்சிகளில் குத்துவிளக்கு ஏற்றுவதும் இது பற்றியேயாம்.
பெருமான் விளங்கு ஒளியாய் இருக்கின்றான், அவனைப் புறத்தில் விளக்கின் ஒளி வடிவாய்க் காண்கின்றோம் எனும் உண்மையைச் சிந்தியாமல் இறப்பு வீட்டில், குழந்தை பிறந்த வீட்டில், பெண் பிள்ளைகள் பூப்பெய்திய இல்லத்தில், பெண்கள் விலக்கு கொண்டிருக்கும் இல்லத்தில் விளக்கு ஏற்றினால் குற்றம் ஏற்படும் தீமை ஏற்படும் என்பது சித்தாந்த சைவ உண்மைக்குப் புறப்பானதாகும் என்பதனைச் சிந்தித்தல் வேண்டும். பூசனைகளில் காட்டப் பெறும் கற்பூரச் சுடரும் இதர தீபங்களும் விளங்கு ஒளியாய் உள்ள பெருமானின் சிறப்பு இயல்புகளையே உணர்த்தி நிற்கின்றன. பரஞ்சுடராய், அறிவொளியாய், அருட்சுடராய் விளங்கு ஒளியாய் உள்ள பெருமானை உணர்த்தும் உண்மையை உணர்ந்து விளக்கு ஏற்றுவோம், விளங்கு ஒளியாய் உள்ள பெருமானின் திருவருளைப் பெறுவோம்!
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!