சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம், சைவர்கள் வழிபடவேண்டிய முழுமுதல் பொருளாகச் சிவனைக் குறிப்பிடுகின்றது. இருபத்தெட்டு சிவ ஆகமங்களும் பன்னிரண்டு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும் சைவ புராணங்களும் சிவனையே முழுமுதல் பொருளாகக் குறிப்பிடுகின்றன. சிவநெறிக்குப் புறம்பான சமயங்களும் வழிபாடுகளும் தமிழ்நாட்டில் தலை தூக்கித் தங்கள் கொள்கைகளைத் தமிழர்களிடையே திணிக்க முற்பட்டபோது, சிவ வழிபாடு செய்தால் பொருட்செல்வம் நிலைக்காது என்றும் துன்பம் தொடர்ந்து வரும் என்றும் அச்சமூட்டினர் தமிழ்நாட்டில் அண்டிப் பிழைக்க வந்தோர். தமிழர்களுக்கே உரிய சிவநெறி வழிபாட்டினை வீட்டில் மேற்கொண்டால் இறப்பு நேரிடும் என்றனர். சிவன் ஈவு இரக்கம் அற்ற கொடூரமான கடவுள் என்றும் கடுஞ்சினங்கொண்ட கடவுள் என்றும் தமிழர் நெஞ்சங்களில் பதிக்கப்பெற்றுத் தமிழர்கள் சிவ வழிபாட்டினைக் கண்டு அஞ்சும்படியான சூழல் ஏற்பட்டது. நம் கை விரல்களைக் கொண்டு நம் கண்களையே குருடாக்கும் செயலைத் தமிழர்கள் உணரா வண்ணம் திறம்படச் செய்து வெற்றியும் கண்டனர். சீர்மிகு செந்தமிழரும் அதை நம்பி ஏமார்ந்தனர். சிவ வழிபாட்டினைத் தங்கள் அன்றாட வாழ்விலிருந்து விலக்கி வைத்தனர்.
ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட தமிழ்ப் பக்தி இலக்கியங்களின் எழுச்சி இம்மயக்கத்தினை உடைத்து எறிந்தது. காரைக்கால் அம்மையார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர், தெய்வச் சேக்கிழார் போன்ற பெருமக்கள், தமிழர் மனத்தில் இருந்த மாயையைப் போக்கி, உண்மை தமிழ்ச் சைவத்தைப் பல அருள்நிகழ்ச்சிகள் நிகழ்த்தியதன் மூலம் நிலைநிறுத்தினர். சிவபெருமான் பேர் அருளாளன், பெருங்கருணையாளன், அடியவர்களுக்காக ஓடோடிவருபவன், அடியார் பிழை பொறுக்கும் பெரியோன் என்று நிகழ்த்திக் காட்டினர். இவ்வரிய உண்மையையே மூவாயிரம் தமிழ் பாடிய திருமூலரும் நம் மனத்தில் வித்திடுகின்றார்.
“சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப், புனஞ்செய்த நெஞ்சிடைப் போற்ற வல்லார்க்குப் பனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே, இனஞ்செய்த மான்போல் இணங்கி நின்றானே,” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். திருப்பாற்கடலைக் கடைந்தால் நெடுநாள் வாழலாம் என்ற பேர் ஆவலில் சிவபெருமானை மறந்து, மயக்குற்றுத், திருமாலைத் தலைமயாகக்கொண்டு தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தனர். சிவபெருமானை மறந்த பிழையின் பொருட்டாகக் கடும் வெப்பமிக்க நஞ்சு கடலில் வெளிப்பட்டது. நஞ்சின் காற்றுப்பட்டுத் திருமால் கரியவானாகிப் போனான். அத்தகைய நஞ்சின் வெப்பம் தாழாது திருமால் உள்ளிட்ட தேவர்கள் பெருமானிடம் சென்று அடைக்கலம் புகுந்து தங்களைக் காப்பாற்றும்படிக் கேட்டனர். தங்கள் பிழையை மன்னித்து அருளும்படி வேண்டினர். பிழை பொறுக்கும் பெரியோன் ஆகிய அப்பெருமான் உடனே அவர்களின் பிழையைப் பொறுத்து அக்கொடிய நஞ்சினை உண்டு கண்டத்து அடக்கி அவர்களுக்கு வாழ்வு அளித்தான் என்கிறார் திருமூலர். அத்தகைய முதல்வனைப் பிழை பொறுக்கும் பெரியோனைப் பிழை உணர்ந்து திருந்திய மனத்துடன் தொழ வல்ல தொண்டர்க்கு, உலக உயிர்களையெல்லாம் படைத்து, வளர்த்து, அருள் செய்கின்ற கன்னியாகிய உமை அம்மையை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான், அப்பொழுதே தன் இனத்தை நாடும் மான் போன்று அவர்களுடன் இணக்கம் ஆகி நின்று அருளுவான் என்கின்றார்.
தங்கள் குற்றங்களை எண்ணி பார்த்துத் திருந்திய மனத்துடன் பெருமானிடம் அரற்றிப் புலப்புகின்றவர்களைப் பெருமான் உடனே மன்னித்துவிடுவான் என்றும் தன்னை வழிபடும் குற்றமற்ற அடியார்கள் கூட்டத்தில் உடனே சேர்த்து மகிழ்வான் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். பெருமான் பிழை பொறுக்கும் பெரியோன் என்பதினாலேயே தாம் பிழை செய்ததாகப் பெருமானுக்குத் தோழராக வாழ்ந்த சுந்தர மூர்த்தி அடிகள், “பிழையுளன பொறுத்திடுவர், என்று அடியேன் பிழைத்தக்கால், பழியதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்,” என்று பெருமானிடத்திலே வாதிடுவார். அடியவர்களிடத்தில் உள்ள பிழையைப் பொறுப்பது நம் பெருமானின் இயல்பு எனும் துணிவினால் அவர் பிழை செய்ததாகவும் அதனைப் பொறுக்காது இறைவன் தனக்கு ஏற்படும் பழியைப் பற்றி நினையாது அவர் கண்ணைப் பறித்ததாகவும் முறையிட்டு, இழந்த கண்களை உரிமையோடு பெற்றார் சுந்தரர் என்பதனைத் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார்.
பெருமான் பிழை பொறுக்கும் பெரியோன் என்பதனை, “வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின், பெருமையினால் பொறுப்பவனே….. உடையாய் அடியேன் உன் அடைக்கலமே,” என்பார் மணிவாசகர். தீமைகளையே செய்கின்ற என் கீழ்மையான இயல்பினை உன் பெருங் குணத்தால் பொறுப்பவனே, என்னை உன் உடமை பொருளாகக் கொண்டவனே, அடியேன் உன் திருவருளை நாடும் கதியற்றவன் என்று உருகிப் பாடுவார்.
எழுபது வயது வரையிலும் சமண சமயத்தினை அடந்து அந்நெறியில் நின்ற பிழையைப் பெருமான் பொறுத்துத் தன்னை ஆளாக்கிக் கொண்டான் எனுன் அரிய செய்தியினைத் திருநாவுக்கரசரும் குறிப்பிடுவார். தவிர பெருமானிடத்திலே வரங்களைப் பெற்ற இராவணன், பெருமான் வீற்றிருக்கின்ற திருக்கயிலை மலையையே பெயர்க்கும் பெரிய பிழையைச் செய்ய முயன்றான். இராவணனின் அறியாமையைப் போக்கி அவனுக்கு நல்லறிவு கொடுப்பதற்காப் பெருமான் தன் திருவடிப் பெருவிரலால் தரையைச் சற்றே அமிழ்த்த, கயிலையைப் பெயர்த்த இராவணன் அம்மலையின் கீழ் அகப்பட்டு அழுது துன்புற்றான் என்பார். தன் தவற்றை உணர்ந்து, உள்ளன்போடு பெருமானைப் போற்றிப் பாடவும் அவன் பிழையைப் பொறுத்துப் பெருமான் அவனுக்கு அருள் புரிந்தார் என்றும் திருநாவுக்கரசு அடிகள் நமக்குச் சொல்லிக்காட்டுவார். நீண்ட காலம் சமணத்திலிருந்த தன் பிழையையும் பெருமான் அமர்ந்திருக்கின்ற திருக்கயிலையைப் பெயர்த்த இராவணனின் பிழையையும் மன்னிக்கும் பெரியோன் பெருமான் என்பதனை நமக்கு உணர்த்த தமது ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாடலில் இராவணன் செய்த தவற்றையும் பெருமான் அவனுடைய பிழையைப் பொறுத்ததையும் குறிப்பிடுவார்.
பெருமான் பிழை பொறுக்கும் பெரியோன் என்று திருமூலர் குறிப்பிடும் கருத்தினைத் திருநாவுக்கரசு அடிகள் மேலும் ஒரு செய்தியின் வழி தவறாமல் தம் பதிகங்களில் குறிப்பிடுவார். பெருமானின் பேராற்றலை உணராது திருமாலும் நான்முகனும் தம்முள் செறுக்குற்றுத் தாங்களே பெரியவர்கள் என்று வெள்ளைப் பன்றியாகவும் அன்னப்பறவையாகவும் பெருமானின் அடிமுடியைத் தேடிய அறியாமையைக் குறிப்பிடுவார். திருமாலும் நான்முகனும் செய்த இப்பெரிய பிழையினைப் பெருமான் பொறுத்து அவர்களுக்கு இலிங்க வடிவமாய் வெளிப்பட்டு அருள் புரிந்தமையைத் திருநாவுக்கரசு அடிகள் தமது ஒவ்வொரு திருப்பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் தவறாது குறிப்பிட்டுக் காட்டுவார்.
பெருமான் பிழை பொறுக்கும் பெரியோன் என்று திருமூலர் குறிப்பிடுவதனைப் பட்டினத்து அடிகளும் குறிப்பிடுவார். “கல்லாப்பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி, நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும், எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே,” என்பார். வாழுங்காலத்து இறைநெறியைக் கற்காத பிழையையும் பெருமானைக் கருதி வாழாத பிழையையும் அவனை எண்ணி திருமுறைகளை உள்ளம் கசிந்து உருகி நில்லாத பிழையையும் நடந்தாலும் நின்றாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும் எதைச் செய்தாலும் அவனை நினைத்துச் செய்யாத பிழையையும் “நமசிவய” என்ற செந்தமிழ் மந்திரத்தைச் சொல்லாத பிழையையும் அவனை நாள்தொறும் போற்றிப் பாடாத பிழையையும் நாள்தோறும் அவனை வழிபடாத பிழையையும் வேறு எந்தப் பிழையைச் செய்திருப்பினும் எப்பொழுது உளம் திருந்தி இனி அப்பிழைகளை எல்லாம் செய்யமாட்டேன் இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று அவன் திருவடியைப் பற்றுகின்றோமோ அப்பொழுதே பெருமான் நம் பிழைகளை எல்லாம் பொறுத்து நம்மை ஆளாகக் கொள்வான் என்கின்றார் பட்டினத்து அடிகள். எனவே நம் பிழைகளை உணர்ந்து மனம் திருந்துவோம், பெருமானிடத்தில் நம் பிழைகளை முன் வைப்போம்! பிழை பொறுக்கும் அப்பெருமான் நம் பிழைகளையும் பொறுத்து அருள் புரிவானாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!