அறத்தை நன்கு உணர்ந்தவர்களாகவும் தன்னைவிட அறிவிற் சிறந்தவர்களாகவும் உள்ளவர்களைப் பெரியோர்களாகக் கொண்டு அவர்களுடன் நட்பு கொள்ளும் வகையினை ஆராய்ந்து அறிந்து அவர்களை வாழ்க்கையில் வழிகாட்டல்களாகக் கொள்ளுதல் இன்றியமையாதது என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். பிறவித் துன்பத்தைப் போக்கவும் இனி பிறவித் துன்பம் வராமல் இருக்கவும் வழி சொல்லக் கூடியவர்களையே உலகம் பெரியோர்களாகப் போற்றுகின்றது. இவர்களே உலகிற்குக் கண்களைப் போன்றவர்கள். உலகிற்கு வழிகாட்டிகள். அறவாழ்க்கைக்கும் இறைவாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டு முன்னோடிகள். இத்தகைய சான்றோர்களை, அருளாளர்களை, அடியவர்களை வாழ்க்கையில் பற்றுக்கோடாகத் துணையாகக் கொள்வது பெறத் தகுந்த பேறுகளில் மிகச் சிறந்தது என்று பேராசான் திருவள்ளுவர் மேலும் குறிப்பிடுவார். நல்லறிவும் நற்பண்புகளும் உடைய பெரியோரின் துணையின்றி வாழல் பல்வேறு தீமைகள் வந்து அண்டுவதற்கு வழிவகுத்து விடும் என்றும் பேராசான் திருவள்ளுவர் அறிவுறுத்துவார். இத்தகைய அரிய, பெரியாரைத் துணை கோடல் எனும் பண்பின் சிறப்புப் பற்றித் தமிழ்ச் சிவாகமம் அருளிய திருமூலரும் குறிப்பிடுகின்றார்.
சிவபெருமானிடத்தில் கொண்ட அன்பின் காரணமாக அவனை அடைய விரும்பி அவன் வெளிப்படும் இடங்களான திருக்கோயில்கள் தோறும் சென்று அவனை வழிபட்டும் புகழ்ந்து பாடியும் வந்ததாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். பின்பு அவன் உறையும் திருக்கோயில்கள் தோறும் சென்று வழிபட்டு அவனைப் புகழ்ந்து பாடி அவனை அடைவதனையே குறிக்கோளாகக் கொண்ட மெய்யன்பர்களிடத்திலே அவன் உறைகின்றான் என்பதனை அறிந்து அவர்கள் நடுவிலே இருந்து அவர்களுக்குப் பாத்திரம் ஆகும் வழியினை மேற்கொண்டேன் என்பதனை, “ஓடவல்லார் தமரோடு நடாவுவன், பாடவல்லார் ஒலி பார்மிசை வாழ்குவன், தேட வல்லார் ஒலி பார்மிசை வாழ்குவன், கூட வல்லார் அடி கூடுவன் யானே” என்று குறிப்பிடுகின்றார். இறைவனை அடைவதற்கு இறைவனையே நாடித் தேடி அன்பு பாராட்டும் பெரியவர்களான அடியவர்களைத் துணைக் கொண்டேன் என்கின்றார். அவ்வடியவர்களின் அடியொட்டி வாழ்ந்தேன் எனவும் அவர்களைப் பற்றுக் கோடாக வாழ்வில் துணைக் கொண்டேன் எனவும் குறிப்பிடுகின்றார்.
இறை அன்பில் சிறந்த அடியார்களைப் பணிந்து அவர்களுக்கு உறவாகி அவர்களைப் போற்றி, அவர்களைத் துணையாகக் கொள்ளல் அடியார்கள் வரலாற்றில் எங்கும் காணக் கிடக்கின்றது. இறைவனைத் தம் தோழராகக் கொள்ளும் பேற்றினைப் பெற்ற சுந்தரரும் கூட தமது திருத்தொண்டர்த் தொகையில் இறைவனே தாம் அடியார்க்கு அடிமையாகும் திறத்தைத், “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று உணர்த்தியமையால், தாமும் அடியார்க்கு அடியவன் எனும் கொள்கையை அப்பதிகம் முழுமைக்கும் ஒவ்வொரு அடியார்க்குமாக அறுபத்து மூன்று தனி அடியார்களுக்கும் ஒன்பது வகையான திருக்கூட்ட அடியார்களுக்கும் (தொகை அடியார்கள்) தாம் அடியவன் என்று பாடி அருளினார்.
உண்மையான இறை அன்பும் இறை அறிவும் உடைய பெரியோர் வானவர்களுக்கும் தலைவனான சிவ பெருமானை அடையும் வழிகளை எல்லாம் ஆராய்ந்து அதன்படி வாழ்ந்தும் பின்பற்றியும் அவனை அடையும் திறம் உடையவர்கள். இவ்வுலகிலே வாழும் காலத்திலேயே சிவபெருமானைப் போன்று தூயராய், உண்மையராய், பற்று அற்றவர்களாய், அன்பின் பிழம்பாய், பிறரின் அறியாமையைப் போக்குகின்றவர்களாய் விளங்குவர். தாமும் நற்பண்புகளும் நன்னெறியும் உடையவர்களாக உறைப்புடன் நின்று பிறரையும் அவ்வாறு நிற்கச் செய்வர். நாளும் உலகிற்கு நன்மை பயக்கும் நற்செயல்களைச் செய்யும் பெரியார்களுடன் கூடுதலே பேரின்பம் எய்துதற்கு வழியாய் அமையும் என்பதனை, “அறிவார் அமரர் தலைவனை நாடிச், செறிவார் பெறுவர் சிவ தத்துவத்தை, நெறிதான் மிக நின்றருள் செய்யும், பெரியாருடன் கூடல் பேரின்பமாமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
நல்லறிவும் நன்னெறியும் இறையன்பும் உடைய பெரியாரைத் துணைக் கொண்டதனால் இறை இன்பம் கிட்டியமையைத் திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். சமணர்கள் அவரைக் கல்லோடு பிணித்துக் கடலில் போட்டக் கொடுமையிலிருந்து மீள்வதற்கு அவர் பாடிய அருட்பதிகமான, “சொற்றுணை வேதியன்” எனும் பதிகத்தில் இறைவனின் திருவருள் தமக்கு வந்து கிட்டுவதற்குத் தாம் பெரியாரைத் துணைக் கொண்டமையைக் குறிப்பிடுகின்றார். இறை அறிவிலும் இறை அன்பிலும் சிறந்து உலகப் பற்றுக்களை விட்ட பெரியவர்கள் பின்பற்றிய வீட்டு நெறியை அடியேனும் பின்பற்றி அவர்கள் நின்ற நெறியிலேயே நின்று அவர்களில் ஒருவராக அவர்களுடன் இறைவனை அகக் கண்களால் காண முயன்றேன். “நமசிவய” என்று அவர்கள் ஒலித்த மந்திரத்தை அடியேனும் ஒலித்தவாறு இறைவனைக் காண முற்பட்டேன். எனக்கும் இறைவன் அவனின் அருள் வடிவினைக் காட்டினான் என்று குறிப்பிடுகின்றார். இதனை, “வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள், கூடினார் அந்நெறி கூடச் சென்றலும், ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும், நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே” என்று குறிப்பிடுவார்.
முற்று அறிவினனாயும் இயற்கை அறிவினனாயும் உள்ள சிவ பெருமானுக்கு அடியவர் ஆனமையினால் மெய் அன்பர்களான பெரியோர் உலகம் முழுவதும் போற்றுகின்ற புகழை உடையவர்களாய் இருப்பர் என்கின்றார் திருமூலர். சிவ பெருமானின் அழகிய திருவடியை அல்லாமல் பிறிது ஒன்றையும் அடைய விருப்பம் இல்லாதவர்கள் இப்பெரியோர்கள். இவர்களிடத்துப் பணிந்து அவர்களைப் பற்றுக் கோடாகக் கொண்டு அவர்கள் நின்ற நெறியினில் நின்று அறிவுத் தெளிவும் உள்ளத் தெளிவும் அடைகின்றவர்களுக்குச் சிவபெருமான் அருளுடையவன் ஆவான். இதனால் சிவபெருமானின் திருவருளைப் பெறும் பேறு கிடைக்கப் பெற்று அவனோடு ஒன்றுதலாகிய சிவப் பேற்றினைப் பெறுதலும் கூடும் என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.
“அருமை வல்லான் கலை ஞானத்துள் தோன்றும், பெருமை வல்லோன் பிறவிச் சுழி நீந்தும், உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும், திருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். எல்லாம் வல்லவனாகிய சிவபெருமானைப் பற்றிய உண்மைகளை உணர்த்தும் நூல்களைக் கற்று அவ்வறிவினால் இறைநெறி வழுவாது வாழும் சிறப்பினை உடைய பெரியோர் காலத்தை வென்று பிறவிக் கடலைக் கடந்து சிவபெருமானின் திருவடியை அடையும் திறத்தை உடையவர்கள். இறைநெறி நூல்களின் நல்லறிவினைக் கைவரப் பெறும் ஆற்றலும் அறிவும் அருளும் உடையவர்கள் சிவத்தைக் கைவரப் பெற்று, உலகம் உள்ளளவும் புகழோடு வாழ்வர். எனவே சிவம் ஒன்றையே பெற வேண்டும் என்ற திருநெறி ஒழுக்கத்தில் சிறந்த சிவ அருட்செல்வர்கள் ஆகிய பெரியார்களோடு சேர்ந்து இருக்கின்றேன் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
மணிவாசகரும் தம் கோயில் மூத்த திருப்பதிகத்தில் இதனை மெய்ப்பிக்கின்றார். “பொற்சபையில் ஆடுகின்ற பெருமானே, எம்மை ஆளாக உடைய உமை அம்மை தனது சிறப்பு நிலையில் உன்னிடத்திலே அடங்கித் தோன்றுவாள். உடையவளாகிய உமை அம்மையின் இடத்திலே பொது நிலையில் நீ அடங்கித் தோன்றுவாய். அடியேன் உள்ளத்தில் நீங்கள் இருவரும் இருப்பது உண்மையானால், என் எண்ணம் நிறைவேறும் படி எனக்கு முன்னே நின்று, அடியேனாகிய யான், உனது அடியார் நடுவில் இருக்கின்ற திருவருளைச் செய்வாயாக” என்று வேண்டுவார். அடியார்களான பெரியோரின் துணிக் கோடலையே மணிவாசகரும் வேண்டி நிற்கின்றார். இறைவனிடத்திலே தமது வேண்டுதலை முன் வைக்கும் வள்ளல் பெருமானும், “உனது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்” என்று அடியார் இணக்கமான பெரியாரைத் துணை கோடலையே நைந்து கேட்பார்.
நல்லறத்தையும் நல்லறிவையும் நற்பண்புகளையும் திருநெறி ஒழுக்கத்தினையும் கற்றுத் தெளிந்த பெரியோர்களான சான்றோர்களையும் நல் அடியார்களையும் வாழ்க்கையில் துணையாகக் கொள்வோம். அவர்கள் வாழ்ந்து காட்டிய நல் ஒழுக்க நெறிகளையும் படிப்பினைகளையும் வாழ்வில் கண்ணாகப் போற்றிக் கடைபிடிப்போம். அவர்கள் அடைந்த பேரின்பப் பெருவாழ்வினை அவர்களைப் போன்று நாமும் அடைவோம்! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!